பகுத்தறிவு

தலை விதி
20.11.1932 - குடிஅரசிலிருந்து...

கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப்படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப் படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்,

ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப்படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும். இந்தப் பொறுமை உபதேசமும், சாந்த உபதேசமும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழைகளாகவும், முற்போக்கற்ற வர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது.

திருடனுக்கும் கடவுள்

திருடப் போகிற ஒரு திருடன்தான் திருடப் புறப்படு முன் தனக்கு நல்ல திருட்டுக் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து விட்டு புறப்படுகிறான். நல்ல திருட்டு கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு பாகத்தைக் கடவுளுக்கும் அதன் திருப்பணி களுக்கும் செலவு செய்து கடவுள் உணர்ச்சியை அனுபவிக்கிறான். இது போலவே ஒரு கொலை காரனும் தான். விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலையடைந்த உடன் கடவுளுக்குப் பூசை அபிஷேக முதலியன செய்து நன்றி செலுத்து கிறான். இதுபோலவே சொத்துக்களை வைத்திருக்கும் உடமைதனும் தனது சொத்துக்களை திருடர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்தித்து நன்றி செலுத்துகிறான். இது போலவே கடவுள் நம்பிக்கை உள்ள சில சோம்பேறிகளும் செல்வவான்களும்  கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள் வியாபாரத்தை நடத்துகின்றார்கள்.

ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்க குறைவுக்கும் அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள். அவை இதைத் தவிர வேறு எதற்காவது பயன்படுகிறதா என்று பாருங்கள்.

பெண்கள் அடிமைத்தனம் நீங்குமா?
17.07.1932 - குடிஅரசிலிருந்து...

இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப் பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களை இப் பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக்கொள்ள தயாரில்லை. முற்போக்குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாராயிருக்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல் கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று சொல்லுவது போல கண வனுடைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது. இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரிகம், இந்நா கரிகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்போகும் அவர்களுடைய பதிவிரதாதர்மம் அழிந்து போகும். இதனால் இந்திய நாகரிகமே மூழ்கி விடும். ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும் என்று பிற்போக்கான அபிப்பிராய முடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆண்கள் இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக்கவலை இல்லை. அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல் தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது. சென்றால் அவர்களுடைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால், பெண்கள் இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத் தக்கதேயாகும். அன்றியும் அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கவும் வேண்டும்.

சில தினங்களுக்கு முன் லண்டனில், விசியம் கிளப்பில், பம்பாய் சர்வகலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை கிறித்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல் என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார் அப்பொழுது அவர்,

பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன் உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தியிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்தில் மிகவும் சம்மந்தமும், பற்றுதலும் உண்டு. அவர்கள் குடும்பத்திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார் களானால் இந்திய சமுக வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறித்தவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும். இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே உண்டாகும். என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாக்கல் அவர்கள் நாகரிகம் பெற்ற மேல் நாட்டுப் பெண் மணியாயிருந்தும் இவ்வாறு பேசியிருப்பதைக் கண்டு உண்மையில் நாம் வருந்தாம லிருக்க முடிய வில்லை. ஆனால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையைப்பற்றி இந்த அம்மாளுக்கு இவ் வளவுக் கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு சூழ்ச்சியிருக்க வேண்டு மென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச் சூழ்ச்சி, உயர்தரக் கல்வியுடன் கிறித்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும் என்ப தேயாகும். ஆகவே இது கிறித்துவ மதத்தை இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரச்சாரத்தைத் தவிர வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம்.

கிறித்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி சிறிதுவ மதக்கல்வி உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம் என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய வைதிகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால் இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம். பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது என்ற அபிப்பிராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள் அடிமைகளாகத்தான் - அதாவது ஆண் களுடைய உதவியை நம்பித்தான் வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச் சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே தாங்கள் விரும்பியக் கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்கும், விருப்பத்திற்கும் இசைந்த எத்தொழில்களையும் தடையின்றிச் செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.

அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது என்பதே நமதபிப்பிராயம். மதத்தைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிற ஆண் மக்களே இன்று அடிமை புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். மதம் என்பதுதான் மக்களிடத்தில் அடிமை புத்தியையும் பயங்கொள்ளித்தனத்தையும், தன்னம்பிக்கை யின்மையையும், மூட நம்பிக்கைகளையும் உண்டாக்கக் காரணமாயிருக்கிறது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பிரசாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில் பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண் டும் என்னும் அபிப்பிராயத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை அறியலாம். நமது பெண் மக்கள் மனதில் இன்று அடிமை புத்தியும், கோழைத்தனமும், மூட நம்பிக் கைகளும் குருட்டுப் பழக்க வழக்கங்களில் விடாபிடி வாதமும் நிறைந்திருப்பதற்குக்  காரணம் மதமே என்பதை யார் மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாது.

பெண்களும் ஆண்களைப் போல் உடல் வலிமை யிலும் சிறப்படைய வேண்டும், தேகப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களை பெற்றிருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறிகொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது, படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்களுக்கும் இருக்க வேண்டும். என்பதே நாகரிகம் பெற்ற மக்களின் அபிப்பிராயம். பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழு மனத்தோடு ஆதரிக்கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க பெண் மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை என்று சொல்வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?

ஆனால் தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமானதென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப் பழக்கக் கூடிய கல்விதான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதே யொழிய வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும்.

ஆகையால் தற்காலத்திலுள்ள கல்வி முறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய முறை யிலும், சிறிதும் மதநம்பிக்கைகளும், கோழைத்தனமும், அடிமை புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித்  திட்டத்தை ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும், சமத்துவ மான கல்வியளிக்க ஏற்பாடு செய்வதே மக்கள் முன் னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.

மார்ச்சு 10 அன்னையார்  பிறந்த நாள் சிந்தனை

அன்னை மணியம்மையார் அழைப்பு

கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகப் பொன் விழாவில், 26-.4.-1975 அன்று பெண்கள் மாநாட்டைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் அவர்கள் ஆற்றிய உரை இது. (விடுதலை 23.-5.-1975)

நான் எங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லுவது உங்களில் பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. எனினும் உங்களில் பெரும் பாலானவர்களுக்குக் கூடியவரை புரியும் வண்ணமும், மனத்தில் பதியும் வண்ணமும் நிதானமாகவும், நிறுத்தியும் பேச முடிந்தவரை முயற்சிக்கிறேன். புரியாத சில விஷயங்களைப் பற்றி எல்லாம் எங்க ளோடு வந்துள்ள நண்பர் விளக்கி மொழிபெயர்த்துச் சொல்லுவார்.

தலைவர் அவர்களே! பெரியோர்களே! வைக்கம் சத்தியாக்கி ரகத்தில் அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்களுடன் பங்கு கொண்டு தொண்டாற்றிய புதூர் நீலகண்டன் (நம்பூத்திரி) அவர்களே! உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியையும், வணக்கத் தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாகவே இருந்தன. இங்கு உரை யாற்றிய அம்மையார்கள் அனைவரும் தெளிந்த கருத்துடனேயே உரையாற்றினார்கள். இங்குப் பேசிய கருத்துகளில் பல எங்கள் கழகக் கருத்துகளுக்கு ஏற்றதாகவும் இருக்கின்றன. ஒரு சில எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவும் இருக்கின்றன.

அதனால் நமக்குள் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இருக்கக் கூடாது என்பதுதான். ஏன் என்றால் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லுவதன் மூலம் அவரவர்களிடையே இருந்து வருகின்ற குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆற்றிக் கொள்ளவும் அல்லது ஏற்றுக் கொள்ளவும் உரிமை இருக்கின்ற காரணத்தினால் அதுதான் முறையாகும். ஆகவே, இந்தக் கருத்துகள் உடன்பாடாக இருந்தாலும் இல்லை என்றாலும் அவரவர்களுடைய கொள்கைகளை எடுத்துச் சொல் வதற்கு அவரவர்களுக்கு உரிமை இருக்கிறது என்ற காரணத்தினால் இங்குச் சொன்னவைகளை நாங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியுமோ, அவற்றை மிக மிகப் பெருந்தன்மையுடனும், மிகவும் கவுரவத்தோடும் ஏற்றுக் கொள்கின்றோம்.

எங்கள் கருத்துகளில் பெரும்பான்மையானவை உங்களுக்குப் பிடிக்காதவையாகவும் இருக்கலாம். பிடித்தமான சிலவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் மற்றவற்றைத் தள்ளிவிடவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும் நான் முதலிலேயே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டில் செய்த தொண்டின் சிறப்பினைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். இங்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நினைவாக இப்போது ஒரு வார காலமாக வைக்கம் சத்தியாக்கிரகப் பொன்விழாவினைக் கொண்டாடுகின்றீர்கள்.

இந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்துவதில் எங்கள் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள் முக்கியக் காரணமாக இருந்து வந்தவர் என்ற காரணத்தினால் அவர் இல்லாத நிலையிலும் எங்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்குகொள்ள அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். எங்கள் தலைவரைத் தமிழ்நாட்டு மக்கள் தந்தையென்றும், பெரியார் என்றும் இன்னும் சொல்லப் போனால் இந்தச் சத்தியாக்கிரகம் காரணமாக வைக்கம் வீரர் என்றும் பெருமையாக அழைத்து மகிழ்வார்கள். உங்களுக்குப் பெரியார் என்றால் அவ்வளவாகப் புரியாது. அதனால்தான் நாயக்கர் என்றும், ஸ்ரீமான் ஈ.வி. இராமசாமி நாயக்கர் என்றும் அன்போடும், மரியாதை யோடும் அழைக்கின்றீர்கள்.

சாதி ஒழிய வேண்டும்

சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். சாதிப் பெயரை உபயோகப்படுத்தக் கூடாது என்ற கொள்கையும் கொண்டவர்கள் நாங்கள். அப்படியிருக்க இங்கு ஈ.வி. இராமசாமி நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் போட்டு உள் ளீர்கள். அது குற்றம் என்று நான் கருதவில்லை; சொல்லவும் இல்லை; நாயக்கர் என்றுதான் அக்காலத்தில் அவரை மரியாதையாக அழைப் பார்கள். ஒரு காலத்திலே அப்படிக் குறிப்பிடுவதில் அவருக்குப் பெருமை இருந்தது. அதனால் மக்களுக்கு நன்றாகப் புரியும்படியான நிலையும் இருந்தது என்ற காரணத்தினாலும், இந்தப் பகுதிக்குத் தந்தை பெரியார் அவர்கள் இந்தச் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளில் அதிகம் வராத காரணத்தினாலும் பழைமையாகக் கூறி வந்த ஈ.வி. இராமசாமி நாயக்கர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களே தவிர வேறில்லை.  இதை நாங்களும் பெருமையாக எடுத்துக் கொள்கின்றோம். எனது உடல் நிலை நீண்ட நேரம் பேசுவதற்கு இடம் தராத காரணத்தினால்தான் எங்கள் கருத்துகளில் இரண்டொன்றை மட்டும் சுருக்கமாக எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன். எங்கள் இயக்கப் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்கள் எங்கள் கருத்துகளைச் சற்று விளக்கமாக உங்களுக்கு எடுத்துச் சொல்லுவார். எனவே நானோ, எங்கள் பொதுச் செயலாளர் திரு. வீரமணி அவர்களோ பேசுகின்ற பொழுது நாயக்கர், ஈ.வி. இராமசாமி என்ற பதங்களை உபயோகப்படுத்தாமல் தலைவர் என்றோ, தந்தை பெரியார் என்றோ, அய்யா என்றோ தான் அழைப்போம். இனி அப்படிச் சொல்லுவதன் மூலம் தான் அந்தச் சொற்கள் உங்களுக்குத் தெளிவாக விளங்கும் என்றே கருதுகின்றேன்.

50 ஆண்டுகளுக்கு முன்.....

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியினை நாம் இன்று நினைவு கூருகின்றோம். அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் நாடு இருந்தது, சமுதாயக் கொடுமைகள் இருந்தன என்பதனை இன்றைக்கு எண்ணிப் பார்க்க நம்மால் இயலாது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் வந்து இருக்கக்கூடிய சகோதரர், சகோதரிகளில் வயது 50-க்கும் மேலானவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு மிகவும் சொற்பமாகவே 50 ஆண்டுகளுக்கு மேலானவர்களைக் காண முடிகின்றதே தவிர, மற்றவர்கள் எல்லாம் குறைந்த வயதுடையவர்களும், இளைஞர் களுமே ஆவார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை சுவார சியமாக - உற்சாகமாக எடுத்துச் சொல்லுகின்ற பொழுது கேட்கும் அவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா என்று நம்மால் சொல்ல முடியாது. ஏன் என்றால் இந்த வைக்கம் கிளர்ச்சி மிகவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். சரித்திரத்தைப் படிப்பது போல ஏதோ ஒரு பொழுதுபோக்காக இன்றுள்ள இளை ஞர்களுக்கு அது மனத்தில் படுமே தவிர அன்று இருந்த உணர்ச்சி நிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் - நேரில் அன்று இருந்து பார்த்தவர்கள் போல் - பங்கு கொண்டவர்கள் போல் - நம்மால் சொல்லவும் முடியாது; சொன்னால் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பக்குவமான நிலையிலும் இன்று இல்லை.

நாடும் வளர்ந்து இருக்கின்றது. மக்களுடைய அறிவும் வளர்ந்து இருக்கின்றது. அதுவும் அல்லாமல் அன்று சமுதாயத்தில் சாதியின் பெயரால் நடந்து வந்த கொடுமைகள்; ஒரு சாரார் தொட்டாலோ, பார்த்தாலோ மனிதன் தீட்டாகி விடுவான் என்ற நிலைகள்; ஒரு குறிப்பிட்ட சாதியினரைத் தவிர, மற்றவர்கள் கடவுளைத் தொட்டால் கடவுள் தீட்டாகிவிடும், இறந்துவிடும் என்ற நிலைகள்; சாதியின் பெயரால் ஒருவன் உயர்வாகவும், ஒருவன் தாழ்வாகவும் கருதப்படுகின்ற அந்த நிலைகள்; இவையெல்லாம் ஓரளவுக்கு மறைந்து மனிதர்கள் எல்லாம் அறிவு வளர்ச்சி அடைந்துவரும் இந்தக் காலத்தே 50 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் இருந்து வந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லும்பொழுது ரொம்பச் சாதா ரணமாகத்தான் மனத்தில் படும் என்றாலும், நாம் அவற்றைச் சொல்லாமல் இருக்க முடியாது.

நம் முன்னோடிகள் அன்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத் தொல்லைகள், கொடுமைகள் அனுபவித்து இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணுகின்ற பொழுது நாம் இன்னும் பூரணமாய்ப் பக்குவம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ ஓரளவுக்குக் கொடுமைகள் ஒழிக்கப் பட்டன என்பது தவிர, வெகு நாளாக இருந்துவந்த கொடுமைகள், அனாச்சாரங்கள் பூரணமாய் ஒழிந்தபாடில்லை. இன்று சமுதாயத்தில் இழிந்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். சாதியின் பெயரால் உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டும் இருக்கின்ற வரையில் மனித சமுதாயத்தில் நாம் எத்தகைய முன்னேற்றத்தையும் காணவே முடியாது.

கொள்கைகள் இரண்டு...

எங்கள் இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் இரண்டு. ஒன்று சாதி முறை அடியோடு ஒழிக்கப்பட்டு மக்கள் எல்லாம் சமத்துவம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பது. மற்றொன்று, பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஆண்களைப் போலவே சகல உரிமைகளையும் ஆணுக்குச் சமமாக அடைய வேண்டும் என்பது. இந்த இரண்டும்தான் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இரண்டு கண்களைப் போன்ற முக்கியமான கொள்கைகள். இதையேதான் தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாள் முழுதும் எடுத்துச் சொல்லி அதற்காகப் பாடுபட்டும் வந்தார்கள். பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். அவர் இயற்கை எய்திய காலம் வரைக்கும் இந்தக் கொள்கையினையே மக்களிடம் வலியுறுத்திப் பிரச்சாரம் செய்தும் வந்தவர்கள் ஆவார்.

அப்படிப்பட்ட கொள்கையினை நாம் இன்று கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப் பிறகும் அந்த இயக்கத்தினர்களாகிய நாங்களும், அந்தக் கொள்கையினையே நாட்டுமக்களிடம் எடுத்துச் சொல்லி வருகின்றோம். அதன் காரணமாகவேதான் எங்களை இந்த விழா விற்கு அழைத்தபோதுகூடப் பெரியார் அவர்கள் இல்லாத நிலையில் நாங்கள் கலந்து கொள்கின்றோம் என்றால், அந்தக் கொள்கைக்கு ஒரு மதிப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே ஆகும்.

தந்தை பெரியார் அவர்கள் அந்தக் காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பகுதி மக்களின் சமுதாய இழிவினைப் போக்கப் பாடுபட்டிருக்கிறார்கள்; பிரச்சாரம் செய்து அவர்களின் மனத்தை மாற்றி இவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்தார்கள். அந்த இடத்தை நாமும் பார்த்து இன்னும் இந்த மக்களுக்கு நம்மாலே தொண்டு செய்ய முடியுமா? அல்லது இந்த மக்கள் மனநிலை எவ்வாறு இருக்கின்றது? மாற்றம் அடைந்து இருக்கின்றதா? அல்லது பழைய நிலையில்தான் இருக்கின்றதா? என்பதை எல்லாம் தெரிந்து கொள் வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகப் பயன்படும் என்று கருதித்தான் வந்தோம், பார்த்தோம், மகிழ்ந்தோம்.

இங்கு கலந்துகொண்ட சகோதரிகள் அனைவரும் வெகு அழகாகக் கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். எங்கள் நாட்டிலே இருக்கின்ற பெண்கள்கூட இவ்வளவு திறமையாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான். எங்கள் நாட்டைக் குறையாகச் சொல்லு கின்றேன் என்று கருத வேண்டாம். காரணம், இங்குள்ள அளவுக்குப் பெண்கள் சமுதாயம் கல்வி, அறிவு, துணிச்சல் உள்ளவர்களாக அங்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நாட்டில் மட்டும் நீங்கள் ஒரு விதத்தில் எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கின்றீர்கள். ஆனால், சமுதாயத் துறையில் மட்டும் மாற்றங்களை வரவேற்காமல் கொஞ்சம் விடாப்பிடியாகவே இருக் கின்றீர்கள். கேரள மக்கள் அதிலும் பெரும்பாலானவர்கள் நன்றாகக் கல்வி பயின்றவர்கள்.

எவ்வளவோ அறிவு பெற்று இருக்கின்றீர்கள். மற்ற மாநிலத் தினர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது கேரள நாட்டுப் பெண்களா கிய உங்களின் அறிவிலும், திறனிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும் உங்களை மிஞ்ச ஒருவராலும் முடியாது. அந்த அளவுக்கு இருந்தும் இன்னும் உங்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள் - சாதியின் பெயரில் இருந்துவரும் பிடிப்புகள் தளர்ச்சி காணாமலே இருக் கின்றன. அதிலும் நீங்கள் கொடுமைகளை மிகவும்  அனுபவித்த வர்கள். எங்கள் நாட்டில் அவ்வளவு அதிகமாகக் கொடுமைகள் இல்லை. அப்படி இருந்தும்கூட நீங்கள் அந்தப் பிடியில் இருந்து நீங்கிக் கொள்ள முற்படவில்லை என்றுதான் கூற முடியும்.

இந்து மதம் ஏற்கிறதா?

இன்னும் சில விஷயங்களை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவற்றில் இரண்டொன்றை மட்டும் சுருக்கமாகக் கூறுகின்றேன். ஆணும், பெண்ணும் சமம் என்பது எங்கள் இயக்கத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். தந்தை பெரியார் அவர்கள் ஆணும், பெண்ணும் உங்கள் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ஸ்திரீயும் - புருஷனும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆதாரங்களைக் காட்டி அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி வருவார்கள்.

நமது இந்து சமுதாயத்தில் அத்தகைய முறை ஏற்றுக் கொள்ளப் படுவதும் இல்லை; கைக்கொள்ளப்படுவதும் இல்லை; ஒப்புக் கொள்ளப்படுவதும் இல்லை. எனக்கு முன்பு பேசிய தோழர் சங்கர நாராயணன்கூட சொன்னார்; சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சமமாக இருக்க முடியாது என்று. அது மிக மிகத் தவறு. அப்படி ஒரு நிலை இனியும் இந்த நாட்டில் இருக்கவே முடியாது - இருக்கவும் கூடாது. எனவே, சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் சம அந்தஸ்து உடையவர்களாக எல்லாத் துறைகளிலும் ஆக வேண்டும். அதற் காகப் பெண்கள் சமுதாயம் பாடுபட வேண்டும்.

இந்த முயற்சிக்குப் பெண்கள்தான் முழுமூச்சாகப் பாடுபட வேண்டும். ஆண்கள் பாடுபடுவார்கள் என்று நினைத்தால், அதைவிட மிக மிகப் பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியாது. நீங்கள் எல்லாம் படித்த தாய்மார்கள். அறிவுள்ள பெண்மணிகள். இந்த உபகண்டத்திலேயே பெண்ணடிமை போக்கவும், பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் யார் பாடுபட்டார்கள் என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் விடுதலைக்காக எவ்வளவோ பாடுபட்டார்கள். பெண்கள் அடிமை நீக்கத்திற்காகவே சுயமரியாதைத் திருமணம் என்ற முறையினைப் புகுத்தி தமிழ்நாட்டில் வைதீக முறைகளிலே நடைபெற்ற திருமணங்களை மதிப்பிழக்கச் செய்து, நாடெங்கும் சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் பரவ வழி வகைகளைச் செய்தார்.

இதன் மூலமாகப் பெண்கள் ஓரளவு விழிப்படைந்து உள் ளார்கள். அவர்களுக்கும் ஓரளவு உரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண் என்றால் எஜமானன், பெண் என்றால் அடிமை - வேலைக்காரி என்ற எண்ணம் தகர்க்கப்பட்டு வருகின்றது. தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு இடையறாது பரப்பப் பட்டு வந்த அந்தச் சுயமரியாதைத் திருமண முறையானது மக்களில் பெரும்பாலானவர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு இன்று அது சட்ட பூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நடைபெற்று வரு கின்றது. அவை எல்லாம் நான் முன்பு சொன்னதைப்போலத் தந்தை பெரியார் அவர்களின் இடையறாத தொண்டின் மூலம், பிரச்சாரத்தின் மூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.

சிலர் சொல்லுகின்றார்கள்; சோஷியல் சர்வீஸ் என்று. சோஷியல் சர்வீஸ் என்பது சாதாரணமாக நம்மவர்கள் மத்தியில் என்ன என்றால் சமுதாயத்திற்கு உதவி செய்வது என்பதுதான். அதாவது தாழ்த்தப்பட்டுக் கிடக்கின்ற மக்கள் வசிக்கின்ற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களை எல்லாம் சுத்தம் செய்வதும், அந்தத் தாய் மார்களுக்கும், குழந்தைகளுக்கும் சுத்தத்தைப் பற்றி எல்லாம் எடுத் துச் சொல்வதும், கல்வியின் நன்மையினைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதும், அந்த மக்களுக்கும், குழந்தைகளுக்கும் சோப்பு, எண்ணெய், சீயக்காய் முதலியவற்றைக் கொடுத்து அவர்களை இரண்டு நாளைக்கு சுத்தமாக இருக்கச் செய்துவிட்டு அதனைப் பெரிதாகப் படம் பிடித்துப் பத்திரிகையில் போட்டு நாங்கள்தான் பெரிய சோஷியல் சர்வீஸ் செய்தோம் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும்தான் இந்த சோஷியல் சர்வீஸ் என்ற பதம் உபயோ கப்படுகின்றதே தவிர, மற்றப்படி மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்கின்ற முறையில் அந்தப் பதம் உபயோகப்படுவதே இல்லை.

பெரியார் சொன்னது சமூகப் புரட்சியே!

தந்தை பெரியார் அவர்கள் அப்படிப்பட்ட நிலையை சோஷியல் சர்வீஸ் என்று சொல்லாமல், சோஷியல் ரெவல்யூஷன்; அதாவது சமுதாயத்தை ஒரு புரட்சிகரமாக மாற்றி அமைக்கவேண்டும் என்று சொன்னார்கள்; சீர்திருத்தப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லுவதற்குப் பல வேறுபாடுகள், கருத்துகள் உண்டு. நான் முன்னே சொன்ன அந்த நிகழ்ச்சியை (சோஷியல் சர்வீஸ் என்ற பெயரால்  செய்யப்படுகின்ற காரியத்தை) ஒருநாளும் தந்தை பெரியார் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

அது தானாகவே, மனிதனுக்கு அறிவு வந்தால் - கல்வியைக் கொடுத்தால் - தக்கபடி நாம் அவர்களைப் பக்குவப்படுத்தி விட்டால் - அது தானாகவே இயற்கையாகவே நடக்க வேண்டிய நிகழ்ச்சியே தவிர, ஒருவர் போய் அவர்களைக் கழுவிக் குளிப்பாட்டி, எண்ணெய் தடவிச் சீவிவிட்டுச் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதன் மூலம் ஒரு சமுதாயத்தைத் திருத்திவிட முடியாது. மக்கள் மனத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி அறிவு வளர்ச்சி யினை அளித்து உண்மையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றால், சாதியின் பெயரால் - மதத்தின் பெயரால் - கடவுளின் பெயரால் அவர்களுக்கு இருந்து வருகின்ற இழிவுகள், கொடுமைகள் எல்லாம் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மக் களுக்கு விளக்கம் கொடுத்து அவர்கள் புரிந்துகொள்ளும்படி விழிப் படையும்படி செய்ய வேண்டும். இத்தகைய தொண்டினைத்தான் தந்தை பெரியார் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்கள். அப்படிப்பட்ட காரியம் தமிழ்நாட்டில் நடக்கின்ற அளவுக்கு இங்கெல்லாம் நாம் பார்க்க முடியாது. இங்கு ஓர் அளவுக்குத் திருந்தி இருக்கின்றீர்கள். அதிலும் பெண்கள் சமுதாயத்தைப் பொறுத்தவரையிலே அதிகமான சீர்திருத்தத்தை இங்குப் புகுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களைப் பார்க்கும்போது அது நன்றாகத் தெரிகின்றது. எங்கள் தமிழகத்திலே, பெண்கள் இப்படிச் சாதாரணமாக, சிம்பிளாக ஒரு நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள். ஆனால், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ, அப்படிச் சாதாரணமாக இந்த நாட்டில் பெண்கள் இருக்கின்றார்கள். ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தி யாசம் இல்லாத வகையில்கூடப் பெண்கள் உடை அணிய வேண் டும் என்பது எங்களுடைய கொள்கை. உங்கள் கேரள நாட்டில் அப்படித்தான் இருந்து வருகின்றார்கள். ஆனால், இப்போது சிறிது மாறிக்கொண்டும் வருகின்றார்கள். ஆகவே, உங்கள் கேரள நாட்டுப் பெண்கள் எங்கள் நாட்டுப் பெண்களைப்போல் அல்லாமல் பொரு ளாதாரத்திலும், கல்வி அறிவிலும் மிகவும் முன்னேறி இருக் கின்றார்கள். பொருளாதாரச் சீர்திருத்தமானது வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று முன்பு பேசிய அம்மையார் அவர்கள் குறிப் பிட்டார்கள். மற்றக் கருத்துகளை எல்லாம் சொல்லும்பொழுது மிகவும் இனிமையாக இருந்தது; நியாயமாகவும் இருந்தது; ஒப்புக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இந்தக் கருத்தினைச் சொல்லும் போது மட்டும் அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத கருத் தாகத் தான் இருந்தது.

பொருளாதார மாற்றம் மட்டும் போதுமா?

அதற்குக் காரணம் இன்னது என்று நான் விளக்கம் கூற விரும்பாவிட்டாலும், அம்மையாரின் கருத்து அது. அவர்களுடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் (கம்யூனிஸ்ட்கள்) அப்படித்தான் சொல்லுவது வழக்கம். இந்த முறையில்தான் அவர்கள் பேசி இருக்கின்றார்களே தவிர, வேறு இல்லை. பொருளாதாரச் சுதந்திரம் வந்துவிட்டால் நம்முடைய நிலை எல்லாம் எப்படி மாறிவிடும் என்று சொல்ல முடியும்? இன்று இதே நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். எப்படி வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டது? பொருளா தாரத்திலே மிகவும் பணக்காரராக இருந்த நமது வக்கீல் மாதவன் அவர்களால் தொடங்கப்பட்டதுதான் வைக்கம் சத்தியாக்கிரகம். இவ்வளவு பெரிய அளவுக்கு ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச் சியாக அது அமைந்துவிட்டது.

மாதவன் அவர்கள் மிகவும் படித்தவர்; பெரிய பணக்காரக் குடும் பத்தில் பிறந்தவர்தான். ஆனால், தாழ்த்தப்பட்டவர்; ஈழவ சமுதாயத் தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் எவ்வளவு பணக்காரராக, படிப்பாளியாக இருந்தபோதிலும் சமுதாயத்தில் முன்னதாக வைத்து அன்று கருதப்படவே இல்லை. இதன் காரணமாக ஏற்பட்டதுதானே வைக்கம் சத்தியாக்கிரகமே. இதனை ஒரு சிறு உதாரணத்துக்காகச் சொல்ல வந்தேனே தவிர, மற்றப்படி வேறில்லை.

நாம் எப்படித்தான் பொருளாதாரத்தில் உயர்ந்த போதிலும் நமது இழிவு மாறவே மாறாது. நமது இழிவுக்கும், மடமைக்கும் காரணமான கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள வற்றை மாற்றிக் கொண்டால் ஒழிய, நாம் உயர்வு அடையவே முடியாது. ஒருவன் சமுதாயத்தில் உயர்ந்தவனாகவும், ஒருவன் தாழ்ந்தவனாகவும் இருக்கின்றவரையில் மனித சமுதாயம் எப்படிப் பேதமற்று உயர்வடைய முடியும்? மனுதர்ம சாஸ்திரமே இதற்கு இடம் கொடுக்காது. பெண்களைப் பற்றிக்கூடச் சொன்னார்கள். மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக எழுதி வைத்து இருக்கின்றார்கள் என்பது பற்றி உங்களுக்கு இரண்டு நிகழ்ச்சிகளை மட்டும் படித்துக் காட்ட விரும்புகின்றேன்.

நான் முதலிலேயே குறிப்பிட்டதுபோல நமது உரிமைக்காக - நமது விடுதலைக்காக - நாம்தான் முன்வந்து பாடுபட வேண்டும். நாம் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டு நமது விடுதலைக்கும், முன் னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும். இன்னும் அரசியல் துறையினை எடுத்துக் கொண்டாலும் சரி, பெண்கள் எல்லாத் துறைகளிலும் சமபங்கு பெற வேண்டும். இன்றைக்கு அரசியல்வாதிகளாகட்டும், பெண்கள் தயவு இல்லாமல் அரசியல் வாழ்வை வாழவே முடியாது. இன்றைக்குச் சட்டசபைக்கு ஆண்கள் செல்ல வேண்டுமானாலும், மற்ற மற்றப் பதவிகளுக்குப் போக வேண்டுமானாலும், ஆண்களுக்கு இருக்கின்ற அளவுக்குச் சரிசமமான உரிமை பெண்களுக்கும் உண்டு. பெண்களும் ஓட்டுப் போட்டால்தான் ஆண்கள் சட்டசபைக் குச் செல்ல முடியுமே தவிர, ஆண்கள் மட்டும் ஓட்டுப் போட்டுக் கொண்டு தங்கள் ஓட்டு மூலம் சட்டசபைக்குச் செல்ல முடியாது. மற்றும் தேர்தல் சமயத்தில் பெண்கள் ஓட்டினை வாங்க அரசியல் வாதிகள் வீடுவீடாக ஏறி இறங்குகின்றார்கள்; கெஞ்சுகின்றார்கள். எப்படியாவது ஓட்டு வேட்டையாடிச் சட்டசபைக்கோ, பார்லிமென் டுக்கோ சென்று விடுகின்றார்கள். மக்கள் தொகையில் சமமாக உள்ள பெண்கள் சமுதாயத்துக்குச் சம அந்தஸ்து அளிக்க முன்வருகின் றார்களா என்றால் இல்லை. மாநாட்டில் உரையாற்றிய  ரோசம்மா பொன்னூஸ் அம்மையார் அவர்கள் கூடச் சொன்னார்கள்? இந்தக் கேரளச் சட்டசபையில் இரண்டே பெண்கள்தாம் உறுப்பினர்களாக உள்ளனர் என்று இது நமக்கு எவ்வளவு கேவலம்? படித்த மக்கள் அதிகமாக உள்ள கேரளத்தில் - அதுவும் படித்த பெண்கள் மிகுதி யாக உள்ள கேரளத்தில் - இரண்டு பெண்கள்தான் சட்டசபையில் இருக்கின்றார்கள் என்றால், பெண்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக அரசியல்வாதிகள் மதிக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

சட்டசபைகளிலும், பதவிகளிலும் 100-க்கு 50 விகிதம் பெண் களுக்குக் கிடைக்க வேண்டும் என்று பெண்கள் போராட வேண்டும். இன்றைக்குச் சமுதாயத்தில் ஒரு சாராருக்கு மட்டும் கற்பைப் பற்றி வலியுறுத்தப்படுகின்றது. அது தவறு. இருசாராருக்கும் இருந்தால்தான் நாட்டிலே நல்ல நிலையில் வாழ முடியும். ஆண் எப்படி வேண்டு மானாலும் நடக்கலாம். எத்தனை பேர்களுடன் வேண்டுமானாலும் சம்பந்தம் வைத்துக் கொள்ளலாம். ஆனால், பெண்கள் மட்டும் ஒரு புருஷனுடன் மட்டும்தான் வாழ வேண்டும் என்றால் என்ன நியாயமான நீதி இது? இன்றைக்கு நாட்டிலே எத்தனையோ குழந்தைகள் அனாதைகள் என்ற பெயரால் இருக்கின்றார்கள். இது யாருடைய குற்றம்? புருஷனுடைய குற்றமே தவிர, பெண்கள் குற்றம் என்று சொல்ல முடியாது. சமுதாயத்தின் குற்றம் அல்லவா? நான்கூட இப்போது என்னுடன் இரண்டு அனாதைக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றேன். இவர்களுக்கு யார் தகப்பன்? யார் தாய்? என்று தெரியாத ஒரு நிலை.

இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் அரசாங்கமாவது ஏதாவது பாதுகாப்புக் கொடுக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. ஏமாந்த பெண்கள் யாராவது வீதியிலே திரிவார்களேயானால், அவர்களை மட்டும் பிடித்து ஜெயிலில் தள்ளித் தண்டனை கொடுத்துக் குழந் தைகளை யாரிடமாவது கொடுத்து விடுகின்றார்கள். சிறைவாசம் முடிந்தவுடன் சத்தம் இல்லாமல் வெளியில் மீண்டும் வந்து விடு கின்றார்களே தவிர, மூலகாரணமாக இருந்த ஆணைக் கண்டு பிடித்துத் தண்டிப்பதோ அல்லது அதற்குப் பரிகாரம் தேடுவதோ இல்லை. இப்படிப்பட்டவர்கள் இருவரையும் கண்டுபிடித்து இருவ ருக்கும் தண்டனை அளிக்க வேண்டும் அல்லது இரண்டு பேர் களையும் ஒன்று சேர்த்து சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக ஆக்கவேண்டும். இது ஒரு நல்ல அரசின் கடமையாகும். இத்தகைய கொடுமைகளைச் சமுதாயத்தில் வளரவிடக் கூடாது.
உண்மையான தொண்டு என்பது எது?

இந்தக் காரியங்களை எல்லாம் எங்கள் இயக்கம் செய்து வரு கின்றது. அதுதான் சமுதாய சீர்திருத்தத் தொண்டு ஆகும். இரண்டு நாள்களாக உங்கள் நகரில் தங்கி இருக்கும்போது பல தோழர்கள் வந்து, உங்கள் இயக்கத் தொண்டு என்ன? என்ன என்ன செய்து வருகின்றீர்கள்? சோஷியல் சர்வீஸ், சமுதாயத் தொண்டு என்ன என்ன செய்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். பள்ளிக் கூடங்களை நடத்துவதோ; குழந்தைகளை எடுத்து வளர்ப்பதோ அது மட்டும் அல்ல சமுதாயத் தொண்டு. சமுதாயத்தில் இருக்கின்ற எல்லாவித மான குறைபாடுகளையும், கொடுமைகளையும் களைவதுதான் எங்களது முழுமையான சமுதாயத் தொண்டே தவிர, அந்தச் சமு தாயத் தொண்டின் ஓர் அங்கமாகத்தான் பள்ளிக்கூடம் நடத்துவதும், அனாதைக் குழந்தைகளைப் பாதுகாப்பதும் ஆகிய காரியத்தைச் செய்து வருகின்றோமே தவிர, வேறு இல்லை. இன்றைக்கு சோஷியல் சர்வீஸ், சமுதாயத் தொண்டு என்ற பெயரால் அனேகர் பள்ளிக்கூடம் நடத்துவதும், அனாதைக் குழந்தை விடுதி நடத்து வதும் ஆகிய காரியங்களைச் செய்கின்றார்கள். அது அனேகருக்கு வருவாய்க்கு உரிய செயலாகக்கூட அமைந்து விடுகின்றது. அத னால் பலர் அந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். ஆனால், அது உண்மையான சமுதாயத் தொண்டு ஆகாது.

ஆகவே, நாம் செய்கின்ற பணிகள் மனித சமுதாய முன்னேற் றத்துக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அடுத்தாற்போல, நான் முன்பு குறிப்பிட்டதுபோல் 50 சதவிகிதம் நமக்குப் பதவிகளிலே, உத்தியோகங்களிலே அரசாங்கம் ரிசர்வேஷன் செய்ய வேண்டும். மற்றும் பெண்கள் இன்றைக்கு ஆடம்பரத்தில் ரொம்பவும் மோகமாக இருக்கின்றார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும். உடுக்கும் துணி, அணியும் நகை முதலியவற்றில் பெண்கள் பைத்தியமாக இருக்கின் றார்கள். இங்கு அவைகள் கொஞ்சம் குறைவு. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது பல உள்ளன. உங்களது உணவு, உடை முதலியவற்றை மற்ற நாட்டு மக்கள் மிகவும் பின்பற்ற வேண்டும். உங்கள் உணவு மிகவும் எளிய உணவு; உங்களுடைய உடை மிகவும் ஆடம்பரம் இல்லாத சாதாரண உடை. அதேநேரத்தில் மிகவும் சுத்த மான உடை. ஆடம்பரம் அற்ற வாழ்வு. இத்தகைய பழக்கங்களை மற்றப் பகுதி மக்களும் பின்பற்றினால்கூட நாம் ஓரளவுக்கு முன்னேறி விடலாம்.

எங்கள் நாட்டு வழக்கங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இரண்டொன்றைச் சொல்லுகின்றேன். படித்த பெண்கள் சமுதாயத்துக்குப் பயன்படாதவர்களாகவே இருக் கின்றார்கள். அவர்கள் படித்தவுடனே தங்கள் குடும்பம், பிள்ளை - குட்டி, இவைகளில் கவனம் செலுத்துகின்றார்கள். தங்கள் குடும்ப நலனைப் பற்றியே அக்கறை செலுத்துகின்றார்களே ஒழிய, சமு தாயத்துக்குப் பயன்படுவதே இல்லை. படித்த பெண்கள் மக்கள் சமுதாயத் தொண்டுக்குப் பயன்பட வேண்டும். குடும்பத்தில் வீட்டு வேலை செய்பவர்களாக மட்டும் இருந்துவிட்டால் போதாது. அது சாதாரணமாக எல்லோரும் செய்யக்கூடிய வேலை. சமையல்கூட ஆண்கள்தான் நன்றாகச் சமைக்கிறார்கள். சாஸ்திரத்தில் கூட நல்ல சமையலுக்கு நளபாகம் என்றுதான் பெயர் கொடுக்கப்பட்டு உள்ளதே ஒழிய, பெண்களைக் குறிக்கும்படி இல்லை. எனவே, பெண்களை அடிமையாக வைத்துக் கொள்வதற்குச் சமையல் காரியாக வைத்துள்ளார்களே தவிர வேறு இல்லை. அதனால் அது கேவலம் என்று நான் கூறவில்லை. அந்தத் தொழில் ஒரு மனித சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும்தான் உரிய தொழில் என்று இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட முறைகளைப் பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டும். சிந்தித்து ஒழிக்கவும் முற்பட வேண்டும்.


மனு தர்மம் என்ன சொல்லுகிறது?

அந்தக் காலத்தில் வேண்டுமானால் மனுதர்மத்தைக் கடவுளின் வாக்காக எடுத்துக் கொண்டு மதித்தோம். ஏன் என்றால் சாஸ்திரத்திலே அப்படிச் சொல்லி இருக்கின்றபோது - கடவுளே அப்படிச் சொல்லி இருக்கின்றபோது - மதமே அப்படிச் சொல்லி இருக்கின்றபோது - அதை மீறி நடக்கக் கூடாது என்கிற பயம். அவ்வளவாக அறிவு நமக்கு இல்லாத ஒரு காலத்திலே அதனை நாம் ஒத்துக்கொண்டு அடிமையாக இருந்து வந்தோம். இன்று நாம் தெளிவு பெற்ற மக்களாக ஆகிவிட்டோம். மற்ற நாடுகளைப் பார்க்கும் நாமும் மற்ற நாட்டு மக்களைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எப்படி எல்லாம் நாம் முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதற்கான முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு வருகின்றோம். இப்படி  இருக்கச் சாஸ்திரத்தில் - மனுதர்மத்தில் பெண்களை எவ்வளவு கேவலமாக எழுதி வைத்திருக்கின்றார்கள். இங்கு முன்பு பேசிய திரு. சங்கரநாரயாணன் அவர்கள் பேசினார். மனுதர்மத்தில் கூறப்படுகின்றது: கணவன் எவ்வளவு துராச்சாரம் உடையவனாக இருந்தாலும், அன்னிய ஸ்திரி லோலனாக இருந்தாலும், அதாவது பல பெண்கள் இடத்திலே அவன் சம்பந்தம் வைத்து இருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையானவள் அவனைத் தெய்வத்தைப்போல் பூசிக்க வேண்டியது.

இன்றைக்கு எந்தப் பெண்ணாவது இப்படிப்பட்ட புருஷனோடு வாழ்வதற்கு மனம் ஒப்புவாளா? என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். இதுதான் மனுதர்ம சாஸ்திரத்தில் எழுதப்பட்டு இருக்கின்ற முறை. அதனை ஒரு காலத்தில் நமக்கு மனம் ஒப்பினாலும், ஒப்பாவிட்டாலும் நம்மைக் கற்பு தவறியவள்; பதிவிராதத்தன்மை அற்றவள்; துர்க்குணம் உடையவள்என்று எங்கு சொல்லி விடுவார்களோ என்ற ஒரு பயத்தின் காரணமாகத் தொல்லைகளை எல்லாம் - கொடுமைகளை எல்லாம் - ஏற்றுக்கொண்டு வாழ்ந்த காலமும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு பிரச்சினையினை எந்த ஸ்திரியும் இந்தக் காலத்தில் ஒப்புக்கொள்ளவே மாட்டாள். நான் மேலே கூறியது மனுதர்மத்தில் அத்தியாயம் 5, ஸ்லோகம் 154, மனுதர்மத்தில் பார்த்துக் கொள்ளலாம். அடுத்தாற்போல இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அதே மனுதர்மத்தில் சொல்லப்படுகின்றது: பால்யத்தில் பெண்ணானவள் தகப்பன் ஆக்கினையிலும், யவ்வனத்தில் புருஷனுடைய ஆக்கினையிலும், கணவன் இறந்த பின்னால் பிள்ளைகளுடைய ஆக்கினையிலும் பெண்கள் இருக்க வேண்டியதே அல்லாமல் தனது சுவாதீனமாக ஒருபொழுதும் இருக்கக் கூடாது என்றால் நம்மை என்ன மரக்கட்டைகள் அல்லது கற்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படிக் கூறப்பட்டு இருக்கின்றதா? நம்மால் ஒன்றும் செய்ய முடியாது; நமக்கு அறிவே இல்லை என்ற எண்ணம் தவிர, நம்மைப் பற்றி எவ்வளவு கேவலமாகச் சாஸ்திரங்கள் என்ற பெயரில் கூறப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சாஸ்திரங்களைப் பெண்கள் ஒருபோதும் மதிக்கவே கூடாது; ஒழித்துக்கட்ட முன்வர வேண்டும். குழந்தைகள் தாய் இல்லாமல் இருக்க முடியாது;  தாய்மை அடைவது பெண்களுக்குத்தான் உண்டு. இந்தக் காலத்தில் இந்த வார்த்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. இது விஞ்ஞானக் காலம் விஞ்ஞான அறிவு எவ்வளவோ வளர்ந்து உள்ளது. உலகில் இன்று குழந்தைக்குத் தாயும் வேண்டியது இல்லை; தகப்பனும் வேண்டியது இல்லை. தாயோ, தந்தையோ இல்லாத குழந்தைகள் பெறுவதற்கு டெஸ்ட் ட்யூப் மூலம் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ள காலத்தில் நாம் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்தில் இருந்து விடுபடாமல் இருந்து வருகின்றோம்.

20-10-1929- குடிஅரசிலிருந்து...

மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத் தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகை களும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத் தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டுபிள்ளை குழந்தை களுடன் வெளிநாட்டிற்குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங் களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக் கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத் தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்திஇல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூழ்ச்சி?

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப்பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர்களைச் சுயநலக் காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடைய வர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என்புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர் களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டு பிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர் களா வார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக் காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர் களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.

அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப் பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட்டான். செல்வ மிருக்குமானால் அரசனுக்குப் பயப்படமாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய் வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகிய தான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக் கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத்திற்கே பயன்படும் படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும் பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத் திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும்.

ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங் களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.


கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமேயாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப்பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

- தந்தை பெரியார்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுளும் மதமும்

11.08.1929 - குடிஅரசிலிருந்து...

மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங் களுக்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்புக் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாகக் குறிப்பிட்டு இருந்தோம். இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம்.

கம்பியிமில்லாத் தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சையன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை ஒரு தெய்வீக சக்தி என்றும் பழைய காலத்து ரிஷிகள் பேசிக் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் ஞானதிருஷ்டி சம்பாஷனை என்றுமே சொல்லித் தீருவோம்.

ஆதலால் மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். இப்போதும் பகுத்தறிவு குறைந்த மக்களிடமே தான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே கடவுள் வருவதைக்கூடப் பார்க்கின்றோம். காட்டுமிராண்டிப் பக்குவமுடையவர் களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவைகளும், புராணங்கள் என்பவைகளும் மதிப்புப் பெற்று இருப்பதையும் பார்க்கின்றோம்.

கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டி ருந்தவர்கள்கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப் பட்டுக்கொண்டு தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு சையன்சின் மூலம் அக் கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப்படுகின்றார்கள்.

இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சையன்ஸ்க்குப் பொருத்த மில்லாததை ஏற்க மறுக்கக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய் வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும் நாட்டியங் களையும் யந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு மிக்க பாமரஜனங்களுக்குகூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சரியமொன்று மில்லை.

எனவே ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஒரு அளவுக்காவது இருந்துதான் தீரும் என்றே சொல்லுவோம்.

ஏனெனில், மனிதன்தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனாதலால் தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டபட மாட்டானாகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோது அவனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் செயலும் வந்துதான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல.

பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும் சிலர் உண்மை அறிந்திருந் தாலும் சுயநலமோ, மூடப்பிடிவாதமோ காரணமாகத் தங்களுக்கே புரியாதவற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டு இருப்பார்கள்.

ஏனெனில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாக இருப்பதால்தான், எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவர குறைந்துகொண்டு தான் போகும் என்பதில் சந்தேக மில்லை.

அதற்காக வருத்தப்படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்லுவதிலோ, பயனில்லை, ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப்பிடிவாதமும் ஒழிந்த காலத்தில் தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.


10.08.1930, 17.08.1930 - குடிஅரசிலிருந்து..
உலகத்தில் மேனாட்டா ரெல்லாம் 100க்கு 100பேர் கல்வியறிவுடை யவராக இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு 7 பேர்தான். அடுத்த கணக்கில் அது 10 ஆகலாம். ஆனால் இந்த 100க்கு 7 பேர் என்றதும் பொய் கணக்கே. எப்படி என்றால் தீண்டாத வகுப்பாரில் 1000க்கு 5 பேர்தான்.
நாயுடு செட்டியார், முதலியார், கவுண்டர் முதலியதாகிய ஜாதிப்படி பார்த்தால் 100க்கு ஒன்றரை, 2 அல்லது இரண்டரை யாகத்தான் இருக்கும். இன்னும் நம் சகோதரிகள் கணக்கு 1000க்கு 1 அல்லது ஒன்றரை தான் இருக்கும், இதெல்லாம் எப்படி 100க்கு 7 வீதம் சராசரி கணக்கானது என்றால், அது 100க்கு 100 வீதம் படித்த பார்ப்பனர் கணக்கை நம்முடன் சேர்த்து கணக்குப் போட்டதால் வந்த விகிதமாகும்.

வண்ணார், பரியாரியார், இன்னும் மற்ற வகுப்பாரில் படித்தவர்கள் 100க்கு 2 பேர் கூட இருக்க முடியாது. இம்மாதிரி 100க்கு 7 பேர் படித்திருக்கும் நம்மிடையோ கல்வி பரவாததற்கு வெள்ளைக்காரர்கள் தான் காரணம் என்று நமது தேசியவாதிகள் சொல்லுகிறார்கள். ஆனால் பார்ப்பனர் மட்டும் 100க்கு 100பேர் படித்ததற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் படித்து வாழவே நம்நாட்டில் தேசியமும் பொது நல சவுகரியங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* ஜாதிக்கென்று தொழில் செய்வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்.

* தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாதவனைத் தொடுவதும் அவனை மோட்சத்திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா என்று கேட்கிறேன். ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும் கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும், செத்தபிறகு அனுபவிப்பதான மோட்சமும் வேண்டுமா என்று கேட்கிறேன்.

*  ஒரு மனிதன் தன் செல்வத்தை அல்லது முக்கியமான பொருளை எங்கே இழந்து விட்டானோ அந்த இடத்தில் தேடினால்தானே கிடைக்கும். பொருளை இழந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் போய்த் தேடினால் கிடைக்குமா? அதுபோலத்தான் நம்முடைய மக்கள் தங்களுடைய மானத்தை - சுயமரியாதையை எந்த இடத்தில் இழந்து விட்டார்களோ அந்த இடத்தில் தேடிதான் கண்டுபிடிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்யாண விடுதலை

17.08.1930- குடிஅரசிலிருந்து..

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத் தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்குத் தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாக கவனித்தால், நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்கக் கொடுமையும், இயற்கைக்கு விரோத மான நிர்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப் பிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது.

சென்ற வருஷம் செங்கல்பட்டு மகாநாட்டில் பெண் களுக்கும், ஆண்களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப் பட்டவுடனும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்த உடனும் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டுத் தீர்மானத் திற்குப் பிறகு வெளி நாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ருஷியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் ஜாதிக்கும் இஷ்டமில்லையா னால் உடனே காரணம் சொல் லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ப தாக சட்டம் கொண்டு வரப் பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்டசபையில் சட்டம் நிறை வேற்றிவிட்டார்கள். மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றது. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாமலிருந்து வருகின்ற தானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண் ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு என்பதாய் கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளி யாவதை பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்குப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க் கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப் பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்ற மடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாத வரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நமது சீர்திருத்தவாதிகள் பலர், ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதை பற்றி மாத்திரம் குடி முழுகிப் போய் விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடு கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தேசித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்குச் சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படி பேசுகின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

நிற்க ஒரு பெண்ஜாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கிறோம் அதென்னவெனில் கல்யாணம் என்பது மனிதன் இன்பத்திற்கும் திருப்திக்குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்டமில்லாத ஒற்றுமைக்கு இசையாத கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்த காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண்ஜாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடையக் கடமை என்ன என்று கேட்கின்றோம்.

அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிபட்ட ஒரு புருஷன் அமைந்து விட்டால் அப்பெண்ணின் கதி என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீக மாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது.

ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும் தான் செய்ய வேண்டிவரும், அன்றியும் இது சமயம் ஒற்று மைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களை உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண் களை திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லி கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும் முன்பின் அறிமுகமில்லாமல் செய்யப்பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந் தாலும் மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியு மாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம். அப்படிபட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண் டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.

மனித ஜீவகோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ கல்யாணம் என்பதாக செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும் என்று கருதி துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டி ருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் அற்ற தன்மையு மேயாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்.

குழவிக்கல்லுக்கு கோடி ரூபாய்

24.08.1930-  குடிஅரசிலிருந்து...

ஒருபக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் நாட்டைவிட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்திலிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி,

வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்குக் கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜ் யத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக்கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இலாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப் படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்த மடைய வில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும், பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.


கடவுள் இருந்தால்...

09.11.1930 - குடிஅரசிலிருந்து...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார் அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவை இல்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதை பார்க்கின்றோம். ஆனால் கடவுள் அனு கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதை பார்க்கின்றோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாய நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

Banner
Banner