பகுத்தறிவு

20-10-1929- குடிஅரசிலிருந்து...

மாசி மாதம் வந்தால் சிவராத்திரி என்று கண்டபடி கிழங்கு வகைகளையும் தானியவகை களையும் பலகார வகைகளையும் ஒரே நாளில் செய்து அளவுக்கு மேல் தின்று குழந்தைகளையும் தின்னச் செய்து அஜீரணத் தையும் வயிற்று வலியையும் உண்டாக்கிக் கொள்வதோடு இதனால் ஏற்படும் செலவு எவ்வளவு என்பதை யாராவது யோசித்துப் பார்க்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இப்படியே ஒவ்வொரு மாதமும் உற்சவமும், பண்டிகை களும், விரதங்களும், சடங்குகளும் ஏற்பட்டு மொத்தத் தில் வருஷத்தில் எவ்வளவு கோடி ரூபாய்கள் செலவு, எவ்வளவு வியாதிகள் வரவு, எவ்வளவு உயிர்கள் போக்கு என்பவைகளை யார் கவனிக்கின்றார்கள்? இந்தப் பணம் எல்லாம் தேசிய பணமல்லவா? ஏழைத் தேசம், தரித்திர தேசம், அடிக்கடி பஞ்சம் வரும் தேசம், வேலையில்லாமல் தொழிலில்லாமல் கூலிக்காரர்கள் கும்பல் கும்பலாய் பட்டினி கிடந்து மடிவதுடன் பெண்டுபிள்ளை குழந்தை களுடன் வெளிநாட்டிற்குக் கூலியாக கப்பலேறும் தேசம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற நாம் எத்தனை நாட்களை, எத்தனை ரூபாய்களை எத்தனை ஊக்கங் களை இந்த பாழும் அர்த்தமற்ற பொய்யான ஒரு காசுக் கும் உதவாததான நமக்கு இழிவையும் அவமானத் தையும் தருவதான பண்டிகைக்கும் உற்சவத்திற்கும் பூஜைக்கும் சடங்குக்குமாக ஒவ்வொரு வரும் செலவு செய்கின்றோம் என்பதை கவனித்தால் இந்த நாடு பணமில்லாத நாடா அல்லது புத்திஇல்லாத நாடா என்பது நன்றாய் விளங்கும்.
இது யார் சூழ்ச்சி?

எனவே, இப்படிக்கெல்லாம் சொல்வதைப்பார்த்தால் இந்த பண்டிகை களையும் உற்சவம் முதலியவைகளையும் ஏற்படுத்தியவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்களா என்கின்ற கேள்வி பிறக்கலாம். நான் அவர்களை அறிவில்லாதவர் என்று சொல்ல இஷ்டப்படமாட்டேன். மற்ற படியோ, என்றால் பெரும்பாலும் அவர்களைச் சுயநலக் காரர்களும், தந்திரக்காரர்களும் அதிகார ஆசை உடைய வர்களுமாயிருக்க வேண்டுமென்றே சொல்வேன்.  என்புத்திக்குட்பட்ட வரையில் இந்த பண்டிகை உற்சவம் முதலியவைகள் எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர் களும் ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்து கண்டு பிடித்து செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம். உலகத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமைக்கும் கொடுமைக்கும் புரோகிதர்களும் அரசர்களுமே சேர்ந்து கூட்டுப் பொறுப்பாளர் களா வார்கள். சாதாரணமாக உலக சரித்திரத்தில் கொடுமைக் காரர்களும் சூழ்ச்சிகாரர்களாய் இருந்தவர்களே புரோகிதர்கள் என்கின்ற உயர்ந்த ஜாதிக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களும் மூர்க்கர் களுமாயிருந்தவர்களே அரசர்களாகவும் ஏற்பட்டு இருக்கிறார்கள். இவ்விருவரும் ஜனங்களை ஏய்த்து ஆதிக்கம் செலுத்த வகை கண்டு பிடிக்கவேண்டிய அவசியமுடையவர்கள்.

அந்தப்படி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வாழ வேண்டுமானால் அந்த மக்களை அறிவினாலும் செல்வத்தினாலும் தாழ்மைப்படுத்தி வைத்திருந்தால் தான் முடியும். ஒரு மனிதன் அறிவுடையவனா யிருப் பானானால் புரோகிதர்களுக்கு ஏமாற மாட்டான். செல்வ மிருக்குமானால் அரசனுக்குப் பயப்படமாட்டான். ஆகையால் அறிவும் செல்வமும் இல்லாமல் செய் வதற்கே கோயில் உற்சவம் பண்டிகை சடங்கு ஆகிய தான செலவுக்கு ஏற்றவழிகளை ஏற்படுத்தி இருக் கிறார்கள். மக்கள் சம்பாதிக்கும் பணங்களில் கணக்குப் பார்த்தால் பெரும்பாகமும் இவைகளுக்கே செலவு செய்யும்படியாகவும் மற்றும் மேல் கொண்டு மீதி ஆவதெல்லாம் இவர்கள் சமுகத்திற்கே பயன்படும் படியாகவும் மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு குடும் பமும் அதாவது நூற்றுக்குத் தொண்ணூறு குடும்பங்கள் இவைகளின் பயனாய் கடன்காரர்களாக இருக்கவுமே இருந்து வரப்படுகின்றது. எனவே, நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில் பூஜை ஆகியவைகள் ஒழிந்தாக வேண்டும்.

இவைகளை வைத்துக் கொண்டு மலைகளை எல்லாம் தங்கமும் வைரமுமாக ஆக்கினாலும் சமுத் திரங்களை யெல்லாம் பாலும் நெய்யும் தேனுமாக ஆக்கினாலும் மேல்கண்ட உற்சவம், சடங்கு, கோவில் பூஜை, பண்டிகை ஆகியவைகளே சாப்பிட்டு விடும்.

ஆதலால் இனி மேலாவது இம்மாதிரியான காரியங் களுக்கு அடிமையாகி வீண் செலவு செய்யக் கூடாது என்பதே எனது ஆசை.


கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமேயாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப்பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.

- தந்தை பெரியார்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுளும் மதமும்

11.08.1929 - குடிஅரசிலிருந்து...

மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங் களுக்கும் காரணம் கண்டு பிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்புக் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாகக் குறிப்பிட்டு இருந்தோம். இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம்.

கம்பியிமில்லாத் தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சையன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை ஒரு தெய்வீக சக்தி என்றும் பழைய காலத்து ரிஷிகள் பேசிக் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் ஞானதிருஷ்டி சம்பாஷனை என்றுமே சொல்லித் தீருவோம்.

ஆதலால் மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். இப்போதும் பகுத்தறிவு குறைந்த மக்களிடமே தான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே கடவுள் வருவதைக்கூடப் பார்க்கின்றோம். காட்டுமிராண்டிப் பக்குவமுடையவர் களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவைகளும், புராணங்கள் என்பவைகளும் மதிப்புப் பெற்று இருப்பதையும் பார்க்கின்றோம்.

கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டி ருந்தவர்கள்கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப் பட்டுக்கொண்டு தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு சையன்சின் மூலம் அக் கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப்படுகின்றார்கள்.

இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சையன்ஸ்க்குப் பொருத்த மில்லாததை ஏற்க மறுக்கக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய் வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும் நாட்டியங் களையும் யந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு மிக்க பாமரஜனங்களுக்குகூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சரியமொன்று மில்லை.

எனவே ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஒரு அளவுக்காவது இருந்துதான் தீரும் என்றே சொல்லுவோம்.

ஏனெனில், மனிதன்தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனாதலால் தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டபட மாட்டானாகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போனபோது அவனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் செயலும் வந்துதான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல.

பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும் சிலர் உண்மை அறிந்திருந் தாலும் சுயநலமோ, மூடப்பிடிவாதமோ காரணமாகத் தங்களுக்கே புரியாதவற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டு இருப்பார்கள்.

ஏனெனில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாக இருப்பதால்தான், எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவர குறைந்துகொண்டு தான் போகும் என்பதில் சந்தேக மில்லை.

அதற்காக வருத்தப்படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்லுவதிலோ, பயனில்லை, ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப்பிடிவாதமும் ஒழிந்த காலத்தில் தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.


10.08.1930, 17.08.1930 - குடிஅரசிலிருந்து..
உலகத்தில் மேனாட்டா ரெல்லாம் 100க்கு 100பேர் கல்வியறிவுடை யவராக இருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு 7 பேர்தான். அடுத்த கணக்கில் அது 10 ஆகலாம். ஆனால் இந்த 100க்கு 7 பேர் என்றதும் பொய் கணக்கே. எப்படி என்றால் தீண்டாத வகுப்பாரில் 1000க்கு 5 பேர்தான்.
நாயுடு செட்டியார், முதலியார், கவுண்டர் முதலியதாகிய ஜாதிப்படி பார்த்தால் 100க்கு ஒன்றரை, 2 அல்லது இரண்டரை யாகத்தான் இருக்கும். இன்னும் நம் சகோதரிகள் கணக்கு 1000க்கு 1 அல்லது ஒன்றரை தான் இருக்கும், இதெல்லாம் எப்படி 100க்கு 7 வீதம் சராசரி கணக்கானது என்றால், அது 100க்கு 100 வீதம் படித்த பார்ப்பனர் கணக்கை நம்முடன் சேர்த்து கணக்குப் போட்டதால் வந்த விகிதமாகும்.

வண்ணார், பரியாரியார், இன்னும் மற்ற வகுப்பாரில் படித்தவர்கள் 100க்கு 2 பேர் கூட இருக்க முடியாது. இம்மாதிரி 100க்கு 7 பேர் படித்திருக்கும் நம்மிடையோ கல்வி பரவாததற்கு வெள்ளைக்காரர்கள் தான் காரணம் என்று நமது தேசியவாதிகள் சொல்லுகிறார்கள். ஆனால் பார்ப்பனர் மட்டும் 100க்கு 100பேர் படித்ததற்கு யார் காரணம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் படித்து வாழவே நம்நாட்டில் தேசியமும் பொது நல சவுகரியங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* ஜாதிக்கென்று தொழில் செய்வதால்தானே, ஈன ஜாதி, இழிஜாதி என்று சொல்ல வாய்ப்பேற்படுகிறது. அந்த மாதிரி ஈன ஜாதி, இழி ஜாதி என்று சொல்வதற்கான வேலையை நீ செய்யாதே! நீ செய்து தொலைத்தாலும் உன் மக்களைச் செய்ய விடாதே. எல்லாத் தொழிலையும் எல்லோரும் செய்ய வேண்டிய நிலை ஏற்படட்டும்.

* தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாதவனைத் தொடுவதும் அவனை மோட்சத்திற்கு அனுப்ப என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா என்று கேட்கிறேன். ஒரு மனிதனுக்குச் சாப்பாடும், உடையும், இடமும் கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும், செத்தபிறகு அனுபவிப்பதான மோட்சமும் வேண்டுமா என்று கேட்கிறேன்.

*  ஒரு மனிதன் தன் செல்வத்தை அல்லது முக்கியமான பொருளை எங்கே இழந்து விட்டானோ அந்த இடத்தில் தேடினால்தானே கிடைக்கும். பொருளை இழந்த இடத்தைவிட்டு வேறு இடத்தில் போய்த் தேடினால் கிடைக்குமா? அதுபோலத்தான் நம்முடைய மக்கள் தங்களுடைய மானத்தை - சுயமரியாதையை எந்த இடத்தில் இழந்து விட்டார்களோ அந்த இடத்தில் தேடிதான் கண்டுபிடிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்யாண விடுதலை

17.08.1930- குடிஅரசிலிருந்து..

ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ் வடிமைத் தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்குத் தெய்வீக கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்றப் போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கின்றோம்.

பொதுவாக கவனித்தால், நமது நாடு மாத்திரமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்கக் கொடுமையும், இயற்கைக்கு விரோத மான நிர்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என்பதை நடு நிலைமையுள்ள எவரும் மறுக்க முடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது.

இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீப காலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அனேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக் கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப் பிடியாய் பழைய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது.

சென்ற வருஷம் செங்கல்பட்டு மகாநாட்டில் பெண் களுக்கும், ஆண்களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப் பட்டவுடனும் சமீபத்தில் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்த உடனும் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்தவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால் செங்கல்பட்டுத் தீர்மானத் திற்குப் பிறகு வெளி நாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ருஷியாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம் போல் பாவிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனியில் புருஷனுக்கும் பெண் ஜாதிக்கும் இஷ்டமில்லையா னால் உடனே காரணம் சொல் லாமலே கல்யாணத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ப தாக சட்டம் கொண்டு வரப் பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். சமீபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்டசபையில் சட்டம் நிறை வேற்றிவிட்டார்கள். மற்ற மேல் நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றது. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாமலிருந்து வருகின்ற தானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிக்கைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண் ஜாதிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு என்பதாய் கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளி யாவதை பார்த்து வருகின்றோம்.

சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்குப் பல கொலைகள் நடந்ததாகவும் பார்க் கின்றோம். தெய்வீக சம்பந்தமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப் பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்ற மடைய வேண்டுமானால் அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண ரத்துக்கு இடமளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும். அப்படிக்கில்லாத வரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

நமது சீர்திருத்தவாதிகள் பலர், ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொள்வதை பற்றி மாத்திரம் குடி முழுகிப் போய் விட்டதாகக் கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படி கூச்சல் போடு கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தேசித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்குச் சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படி பேசுகின்றார்களா என்பதும் விளங்கவில்லை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

நிற்க ஒரு பெண்ஜாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கிறோம் அதென்னவெனில் கல்யாணம் என்பது மனிதன் இன்பத்திற்கும் திருப்திக்குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்டமில்லாத ஒற்றுமைக்கு இசையாத கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்த காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண்ஜாதியாக நேர்ந்து விட்டால் அப்போது புருஷனுடையக் கடமை என்ன என்று கேட்கின்றோம்.

அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிபட்ட ஒரு புருஷன் அமைந்து விட்டால் அப்பெண்ணின் கதி என்ன என்று தான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீக மாகவோ, பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது.

ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பது போன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாணம் ஆன புருஷர்களுக்கும், பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும் தான் செய்ய வேண்டிவரும், அன்றியும் இது சமயம் ஒற்று மைக்கும் திருப்திக்கும் இன்பத்திற்கும் உதவாத பெண்களை உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண் களை திரும்பவும் மணம் செய்து கொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால் தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லி கொண்டு புருஷர்களுக்கும் பெண்களுக்கும் சம்மதமும் முன்பின் அறிமுகமில்லாமல் செய்யப்பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும். மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம். ஆதலால் அது ஒரு புறமிருந் தாலும் மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியு மாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம். அப்படிபட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண் டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும்.

மனித ஜீவகோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ கல்யாணம் என்பதாக செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும் என்று கருதி துன்பத்தையும் அதிருப்தியையும் அனுபவித்துக் கொண்டி ருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும் மனிதத் தன்மையும் சுயமரியாதையும் அற்ற தன்மையு மேயாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்.

குழவிக்கல்லுக்கு கோடி ரூபாய்

24.08.1930-  குடிஅரசிலிருந்து...

ஒருபக்கம் நமது மக்கள் கஞ்சிக்கில்லாமல் அலையவும் நாட்டைவிட்டு லட்சக்கணக்கான பேர்கள் கஞ்சிக்காக வெளி நாடுகளுக்கு ஓடவும் பார்த்துக் கொண்டே நமது கடவுள்கள் குழவிக் கல்லுகள் அவதாரத்திலிருந்து கொண்டு இவ்வளவு பெரிய கோவிலுடனும், இத்தனைக் கோடி ரூபாய்கள் நகையுடனும், இத்தனை வேளை பூசையுடனும், இத்தனை தாசி, வேசி,

வைப்பாட்டி, பெண்டாட்டிகளுடனும் இருந்து கொண்டு பல்லக்கு ரதம், தேர், ஆனை, குதிரை, ஆடு, மாடு, மயில், குரங்கு, கழுகு வாகனத்தில் சவாரி செய்து கொண்டு ஊர்வலம் வந்துகொண்டே இருக்குமா? இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? அல்லது இவ்வளவு பணம் நமது நாட்டை விட்டு வெளிநாட்டுக்குக் கொள்ளை போய் கொண்டு இருப்பதற்கு நமது மக்களே அனுகூலமாய் இருப்பார்கள் என்று கருதுகின்றீர்களா?

இந்தியாவானது எத்தனையோ காலத்திற்கு முன் சுயராஜ் யத்துடன் உலகத்திலுள்ள நாடுகளில் எல்லாம் மேன்மையாக இருந்து கொண்டிருக்கும். ஆகையால் அதைப் பற்றி அதாவது வாள் கொண்டு இலாம் மதப் பிரசாரம் செய்ததைப் பற்றியும் நமது கோயில்களை இடித்து சாமிகளை ஊனப் படுத்தினார்கள் என்பதைப் பற்றியும் நான் சிறிதும் வருத்த மடைய வில்லை. அன்றியும் அதுவேதான் அம் மாதிரியாகச் செய்வதுதான் மற்ற எல்லா மதத்தினுடையவும், பிரசார தர்மமாகவும் இருந்திருக்கின்றது. இன்றும் இருக்கின்றது.


கடவுள் இருந்தால்...

09.11.1930 - குடிஅரசிலிருந்து...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார் அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவை இல்லாமலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதை பார்க்கின்றோம். ஆனால் கடவுள் அனு கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதை பார்க்கின்றோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏறுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா அல்லது மனிதனுடன் கடவுள் ஏறுக்கு மாறாய நடந்து போட்டி போடுகிறாரா அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

கிருஷ்ணன், அர்ஜூனன் சம்வாதம்

- சித்திரபுத்திரன் -

09.11.1930- குடிஅரசிலிருந்து..

அர்ஜுனன்: - சகே சீனாம் நிகே சீனாம் காகதி புருஷோத்தமா?

கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ்சயா! இதன் பொருள்.

அர்ஜுனன்: - ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல் மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக்கின்ற) விதவைகளுக்கு என்ன கதி?

கிருஷ்ணன் :- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.

அர்ஜுனன்: -  ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவுளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படி செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடிபட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப் பற்றி உனக்குச் சிறிதும் அவமானமில்லையா?

கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப் பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொரு வரும் இதனைக் கொண்டாட வேண்டுமே யொழிய குற்றம் சொல்லக்கூடாதென்றும், குற்றம் சொன்னால் பாவமென்றும், நரகமென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் கவலை?

அர்ஜுனன்: -  கிருஷ்ணா! அதுதான் போகட்டும், நம்ப முடியாத அநேகப் பொய்யையும் புளுகையும் சொல்லி நீ சின்னக் குழந்தையாயிருக்கும் போது பெரிய முலையை உறிஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும் மலையைச் சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும் 10 ஆயிரம் பெண்களை ஏக காலத்தில் கலந்தாய் என்றும் இப்படி எல்லாம் எழுதி இருக்கின்றார்களே இந்த புளுகுகளை எவன் நம்புவான்?

கிருஷ்ணன் :- ஓ! அர்ஜுனா! அதைப் பற்றியும் நீ கவலைப்படாதே. ஏனென்றால் அந்தப் படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம் எவன் நம்ப வில் லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்கா விட்டா லும் அவன் நரகத்துக்குப் போகவேண்டும் என்றும் எழுதி மக்களை மிரட்டி பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆதலால் எவனும் தைரியமாய், தான் இவற்றை நம்புவ தில்லை என்று வெளியில் சொல்லவரமாட்டான்?

அர்ஜுனன்: -  அதென்ன கிருஷ்ணா! பாவம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே,

கிருஷ்ணன்:- அந்தபடி புரியாமலிருக்கின்றதாகவே பார்த்துதான் சொல்லி இருக்கின்றார்கள்.

அர்ஜுனன்: -  அதென்ன புரியாததைச் சொன்னால் என்ன பயன்.

கிருஷ்ணன்: - ஒருவனுக்குத் தெரியாததையும் புரியா ததையும் சொன்னால் தான் மனிதர்கள் பயப்படுவார்கள். புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால் தான் அது செய்தால் பாவம், இது செய்தால் பாவம், நினைத்தால் பாவம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கின்றார்கள்.

அர்ஜுனன்: - இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?

கிருஷ்ணன்:- முடிந்தவரையில் முடியட்டும்.

அர்ஜுனன்: - இந்த புரட்டு வெளியாய் விட்டால் அப்புறம் என்ன செய்வது?

கிருஷ்ணன் : - அப்புறம் வேறு புரட்டை உண்டாக்கிக் கொள்ள அவர்களுக்குத் தெரியும்.

அர்ஜுனன்: -  அதென்ன புரட்டு?

கிருஷ்ணன் : - அரசியல் புரட்டு.

அர்ஜுனன்: - அதுவும் வெளியாகிவிட்டால்?

கிருஷ்ணன் : - அதற்குள் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்குச் சுலபத்தில் வெளியாய் விடவா போகின்றது?

அர்ஜுனன்: - சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்டவெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே, சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?

கிருஷ்ணன்:- அவர்களால் சுலபத்தில் முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு புரட்டின் மேல் தங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்து கொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள். அந்தப்படி மீறி அவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடு வந்தாலும் வரட்டும் என்று துணிந்து கட்டுப்பாடாய் வேலை செய்தாலும் கூட அது தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் தான் செல்லும். இந்தியாவில் மற்ற பாகங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

அர்ஜுனன்: - எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துதான்.

கிருஷ்ணன்:- அந்த காலத்தில் பார்த்துக் கொள் ளலாம். நடந்தவரை நடக்கட்டும்.

ஆலயங் கட்டியவர்கள் கதி

10.08.1930, 17.08.1930- குடிஅரசிலிருந்து...

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்திரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக்கிறானா? அந்த கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக் காரன் தான் சொத்துக்கு கொடுக்கிறான். அந்த சாதிரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டுகிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக்கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்குகிறார்கள்.

அந்த குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட்டாதே என்று தான் யோக்கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகாருண்யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது.

முதல் மனிதன் அயோக்கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக்காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று. இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுபவங்கள் லட்சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில்லாமற் போய் விட்டது.

தான் மோட்ச மார்க்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.இந்தியாவில் ஏழை மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மையையும் ஒழிக்கச் சம்மதிக்கவில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. -தந்தை பெரியார்

Banner
Banner