பகுத்தறிவு

- இரா.கண்ணிமை -

நேற்றையத் தொடர்ச்சி....

சிவனைப் பற்றி - ஆராய்ச்சியில் ஜைனமதத்தில் காணும் சில செய்திகள்: இக்காலத்திலுள்ள ஜைன பக்தர்களைப்போல் - முற்காலத்தில் இருந்த ஜைனர்கள் சிவனை தெய்வமாய்த் தொழுதார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏன் எனில் ஜைனர் வணங்கும் சிவனுக்கும் - சைவர் வணங்கும் சிவனுக்கும் உள்ள வேறுபாட்டை கீழ்வரும் சமஸ்கிருத சுலோகத்தால் - ஒரு ஜைனன் - சைவ மதத்தைக் கண்டிப்பதைக் காணலாம்.

சுலோகம்

தத்தம்யேன புரத்ரயம் சரபுவா தீவ்ராச்சி ஷாவஹ்கினா
யோவந்ருத்யதி மத்தவத் பித்ருவனே யாத்வ யாத்ந் கோவாகுஹ
சோயம் கிம்மம சங்கரோ பயத்ருசாரோ ஷார்த்தி மோஹக்ஷயம்
க்ருத்வாய ஸ்துர் ஸர்வ வித்தனுப்ருதாம் ஷேமங்கர சங்கர

பொருள்: சுடுகாட்டிலிருந்தெழும் கடும் ஜூவாலை வீசும் அக்னியால் எவன் திரிபுர சம்மாரம் செய்தானோ  - (விஷ்ணு மாயைக்குட்பட்ட பக்தன் என்று அறியாமையால் சுட்டெரித்தான் என்று பொருள்)

பித்தன்போல், எவன் சுடுகாட்டில் ஆடுகிறானோ அவன் என் வணக்கத்திற்குரியவன் அல்ல என்பதாம்.
சுலோகம்

ஈசாகிம் சின்ன லிங்கோய திவிகதபய
சூலபாணி கதம்ஸ்யாத்
நாதகிம பை க்ஷசாரி யாதிரி  ஸகதம்
ஸாங்கன ஸாத்ம ஜங்ச
ஆர்த்ராக கிம்த்வஜன்மா ஸகல விவதி
கிம்வேந்தி நாத்மாந்த்ராயம்
ஸம்க்ஷோபாத் ஸ்ம்யருக்தம் பசுபதிம பசு
கோத்ரதீ பானு பாஸ்தே!

பொருள்: முறிந்தலிங்கம் (ஆண் குறி) கடவுளாகுமோ? தீரவீரனானால் சூலம் கரம் தாங்குவதேன்? உலகிற்கே இறைவனானால் பிச்சையேற்று (யாசித்து) உண்பதேன்? மனைவி மக்களுடன் கூடியிருப்பவன் துறவி (யதிதி) யாவதெப்படி? பிறப்பு இறப்பு அற்றவன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தான் என்றால் அர்த்தம் என்ன? தனக்கு எதிர்காலத்தில் வரவிருக்கும் இடையூறை அறியும் வகையற்றவன் தெய்வம் என்றால் எப்படி? - என்பதாம்.
- ஜைனர் வணங்கும் சிவனின் அடையாளங்கள்-

சுலோகம்

மயாநாஸ்தி ஜடாக பாலமுகுடம் சந்த்ரோர்ண மூர்த்தாவி கட்வாங்கம் நசவாசுகிர் நசதனு சூலம் நசோகீரம் முகம் காமோ யாஸ்ய நகாமினி நசவ் ருஷோகீதம் நந்ருத்யம்புன யோஸ்பர்ன பாது நிரஞ்சனோ நிருபம்  ஸர்வத்ரஸீக்ஷம சிவ.

பொருள்: மாயையற்றவனும், யாசகம் எடுக்கும் பாத்திரம், ஜடை தலையோடு இல்லாதவனும், கிரீடம், இளம்பிறை, தண் ணீர், கட்வாங்கம், வாசுகி, வில் சூலாயுதம், கடுகுமுகம், காமம், அழகிய பெண், ரிஷபம், பாட்டு, கூத்து முதலியன இல்லாதவனும் ஆனவனே - எங்களைக் காக்க வந்தவன் சிவன் என்பதாம்.

ஜைனர்கள் - ஜீவதேவனை வழிபட்டு வணங்குகிறார்கள். ஜீனன் என்றால் உலகத்தைக் கடந்த முழுமுதற் கடவுள் என்று அர்த்தமாம். இதனால் சைவர் வணங்கும் சிவன் மனிதன் என்றும், ஜைனர் வணங்கும் சிவன் இதற்கு முற்றும் வேறு பட்டவர் என்றும் விளக்குகிறது.

சிவனின் முக்கிய தலங்கள்

திருவண்ணாமலை, திருக்காளாஸ்திரி, திருவொற்றியூர், திருவிடைமருதூர், திருவாரூர், திருவாலங்காடு, திருக்கழுக் குன்றம், திருக்கோணமலை (இலங்கைத் தீவில் உள்ளது), சீர்காழி, சிதம்பரம், காசி, காஞ்சிபுரம் முதலியனவாம்.

ஜைன மதத்திலுள்ள சுலோகத்தில் இரண்டு சிவன்கள் உண்டு என்றும், சைவம் வணங்கும் சிவனுக்கும், ஜைனர் வணங்கும் சிவனுக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்றும் சொல்லப்பட்டிருப்பது போல் -  ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ள சிவஞான சித்தியாரின் சைவ சித்தாந்த நூலிலும் விளக்கப்பட்டிருக்கிறது.

பிர்மா முதல் மற்றுமுள்ள எல்லா தேவர்களும் அரன் உருவுக்கு சமத்துவமாவதெப்படி என்றால் அவர்கள் அனைவரும் தங்கள் தாங்கள் அலுவல்களை நடத்துவதே காரணம். இவ்வாறு இத்தேவர்களே அலுவல்களை நடத்திக் கொள்வதானால் அரன் என்னும்மற்றொருதெய் வம் வேண்டியதில் லையே?பிர்மாவும்,விஷ் ணுவும்பிரபஞ்சபர கிருதிக்குமேல் எழ முடியாமலும், ருத்திரனும், மகேஸ்வரனும் அசுத்தா மாயைக்கு மேல் எழ முடியாமலும் உள்ளவர்கள். ஆதலால் அனைத்தையும் காண வல்லவருமான ஒருவன் மிகமிக அவசியம் என்ப தாம். (சிவஞான சித்தியார் - சைவ சித்தாந்த நூல் சுபக்கம் 53ஆம் பக்கம்)

இதன் உண்மையை விளக்கும் கவி - திருவாசகத்தில் உள்ளது. சிவஞான சித்தியாரின் சுபக்கம் என்னும் நூலில் 32 ஆம் பக்கம் பார்க்கவும்.
- கவி -
மூவரும் முப்பத்தி மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான் - மாலேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.

பொருள்: பிர்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கண்டிராத சிவபெருமான் வந்துதித்த வரலாற்றை பார்த்தோம் என்பதாம்.

இத்தனை சுலோகங்களின் பொருளையும் கூர்ந்து பார்க் கையில், அரன் என்னும் வார்த்தை (பதம்) மும்மூர்த்திகளில் ஒருவனான சிவனைச் சுட்டிக்காண்பிப்பதற்காக அல்ல. சிவனையல்லாது வேறொரு தெய்வத்தையே காட்டுவதாக தெரிகிறது. அது எது? இந்த சிவன் தனிமுதற்கடவுளான தேவன் அல்ல, என்னும் நிலையை உறுதிப்படுத்துகிறது. இதுவன்றி இம்மும்மூர்த்திகளுக்கும் உலக மனிதரைப் போலவே ஜாதி வேற்றுமை உண்டென்றும், இத்தேவர்களின் ஜாதி வகுப்பின்படியே, மனித ஜாதியார் அவர்களை வணங்க வேண்டுமாம். இது மகாபாரதத்தில் உள்ளது.

“Siva was the god of the upper classes, Brahamanas and Kshatriya and Manu in mentioning the caste of the gods. Make out that Siva is Brahman, Vishnu kshatriya and Brahama Vaisya and Indra Sudra and their worship by the respective castes are Recommended’ (Sivagnana Siddiyar - Subakkam 48. Found in Mahabarat).

இதன் பொருள்:

சிவன் பிராமண சத்திரியரான மேல் குல மக்களுக்கு தெய்வம். மேலும் மனுவென்பார் ஜாதி வரலாற்றை சொல்லும் போது சிவனை பிராமண ஜாதி என்றும், விஷ்ணுவை சத்திரய குலமென்றும், பிர்மாவை வைசிய குலமென்றும், இந்திரன் சூத்திர குலமென்றும் வகுத்துப் பிரித்து அந்தந்த குலத்தார் அந்தந்த குலக்கடவுள்களையே வணங்க கட்டளை விதித்திருக்கிறது - (சிவஞான சித்தியார் சுபக்கம் 48ஆம் பக்கம்). முழு விவரங்களை மகாபாரதத்தில் காணலாம்.

ஒரு விருத்தம்

கிருபையழகு கண்டே நெறிகெட்டு விரகங் கொண்டு
உரை செய்யும்படி நினைத்திடிலெங்கள் உள்ள மிகு
பயங்கொள்ளும் வேலை செய்தான் சிவன்.

பொருள்: “சிவன் - துரோணாச்சாரி மனைவியாகிய கிரு பையை பார்த்தவுடனேயே அவள் மேல் ஆசை கொண்டு அடாத செயலைச் செய்தானே! அய்யோ அந்த காரியத்தைச் சொல்ல நினைத்தால் மனம் திடுக்கிட்டு அச்சத்தைக் கொடுக்கிறதே!” என்பதாம். இக்கதையை சமஸ்கிருத பாரதத்தில் அறியலாம். இதை ஆதிபருவம் வாரணாவதச்சுருக்கம் 41 முதல் 44 ஆம் பாடல் வரை, பாரதத்தில் பார்க்கலாம். மேலும் கந்த புராணம் கயமுகனுற்பத்தி படலம் 160 முதல் 174 ஆம் பாடல் வரையும், உத்திரப்படலம் 30, 33, 34, 37, 38, 40, 43, 45, 53, 66, 89, 91, 92, 94ஆம் பாடல்களையும் பார்க்கவும்.
(தொடரும்)

- சித்திரபுத்திரன் -
19.10.1930 -  குடிஅரசிலிருந்து...

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லு வதைவிட பாரபட்சமுடையவரென்று சொல்வதற்கே மிக மிக இட மிருக்கின்றன.

அவரை கருணையுடையவரென்று  சொல்லுவதைவிட கருணை யற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லு வதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப்பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ்டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றாரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன. அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமை யடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக்கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதைவிட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லுவதைவிட அப்படிப் பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட  அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத்தக்கது என்று கருதுவதற்கு  வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.


28.9.1930 - குடிஅரசிலிருந்து...
கடவுள் உண்டா? இல்லையா? என்று கேட்பதும்,

கடவுளை ஒப்புக் கொள்ளுகிறாயா இல்லையா என்று கேட்பதும், கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒரு வருக்குகொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்?

ஒருவர் பணக்காரனாகவும் ஒருவர் ஏழையாகவும் ஏன் இருக்க வேண்டும்?

ஒருவர் கூன், குருடு, நொண்டி, குஷ்ட ரோகி முதலியவனாயும், ஒருவன் நல்ல திட சரீரியாகவும் ஏன் இருக்க வேண்டும்?

ஒருவனுக்கு ஏன் பத்துப் பிள்ளை? ஒருவனுக்கு ஏன் நாலு பிள்ளை? ஒருவனுக்கு ஏன் பிள்ளை இல்லை? என்றும்

இருவர் ஒரே காலத்தில் தனித்தனியாக வியாபாரம் ஆரம்பித்தால் ஒருவர் நஷ்டமும், ஒருவர் லாபமும் ஏன் அடையவேண்டும்? என்பது போன்ற கேள்விகள் கேட்டு அதன் மூலம் மேல்கண்ட குணங்கள் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று உண்டு என்று மெய்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். இம்மாதிரி கேள்விக்காரர்களைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் ஆராய்ச்சி சக்தி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை.

இப்படிப்பட்ட கேள்வி கேட்பவர்களை ஒரே ஒரு பதிலால் வாயை அடைக்க வேண்டுமானால் இம்மாதிரியாக தோற்றங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசங்கள் காணப் படுவதாலேயே (மேல் கண்ட குணமுடைய) கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்று சொல்லி விடலாம்.

எப்படியெனில் சர்வசக்தியுடைய கடவுள் ஒருவர் இருந்து சர்வத்திலும் புகுந்து சர்வத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராயிருந்தால் சர்வத்தையும் ஒன்று போலவே சிருஷ்டித்திருக்கலாமல்லவா? வேறு வேறாகக் காணப் படுவதாலேயே சர்வசக்தியும் சர்வ வியாபகமும், சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்பதுதான் பதிலாகும்.

ஏனெனில், நொண்டிக்கும், முடவனுக்கும், நல்ல வனுக்கும், கஷ்டப்படு பவனுக்கும், கஷ்டப்படுத்துகிற வனுக்கும் கடவுளே காரணதனாயிருந்தால் கடவுளை சர்வ தயாபரத்துவமுடையவனென்றும் பாரபட்சமில்லாத சர்வசமத்துவ குணமுடைய வனென்றும் எப்படிச் சொல்ல முடியும்? இந்தப்படி பகுத்தறிவைக் கொண்டு சொல்லக் கூடிய சமாதானங்கள் ஒரு புறமிருக்க ஆராய்ச்சியைக் கொண்டு அறியக் கூடிய சமாதானங்களைப் பற்றி சற்று கவனிப்போம். ஒரே கையால் கை நிறைய அரிசியை அள்ளி அள்ளி வேறாய் வைத்து ஒவ்வொரு தடவை அள்ளி அரிசியைத் தனித் தனியாய் எண்ணிப் பார்த்தால் அவற்றுள் ஒன்றுக்கொன்று எண்ணிக்கை வித்தியாசமிருப் பானேன்? அதே மனிதன் அதே கையால் அதே நிமிஷத்தில் அதே குவிய லிலிருந்து அள்ளினவைகள் ஏன் வித்தியாசப்படுகின்றது? ஒரே பூமியில், ஒரே வினாடியில் விதைக்கும் ஒரே மாதிரி விதைகள் சில முளைத்தும், சில முளைக்காமலும் முளைத்தனவைகளில் சில வளராமல் கூளையாகவும், சில அதிக உயரமாகவும், சில அதிகமான மணிகள் கொண்ட கதிராகவும் சில குறைவான மணிகள் (தானியங்கள்) கொண்ட கதிராகவும் சில முளைத்து நன்றாய் தளைத்தும் ஒரு மணி கூட இல்லாத வெறும் கதிராகவும் இருக்கக் காரணம் என்ன? ஒருவினாடியில் ஒருபூமியில் நட்ட செடிகள் ஒன்று பல கிளைகளுடனும், ஒன்று சுவல்ப்ப கிளைகளும் வளரு வதும் ஒன்று பதினாயி ரக்கணக்காக காய்ப்பதும், ஒன்று நூற்றுக்கணக்காக காய்ப்பதும், ஒன்று பூ விட்டு எல்லாம் கருகி உதிர்ந்து விடுவதும் ஒன்று பூ விடாமலும் பிஞ்சு விடாமலும் வறடாயிருப்பதும் என்ன காரணம்? கடவுள் ஒருவர் இருந்தால் இவைகள் எல்லாம் அதனதன் இனத்தில் ஏன் ஒன்றுபோல் இருக்கக் கூடாது?

ஒரு சமயம் கடவுளே இந்தப்படி செய்திருப்பார் என்று சொல்வதானால் அம்மரம் செடி தானியம் முதலியன வைகள் இப்படி பலன் அடைவதற்குக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு என்ன சமாதானமோ அதுதான் மனிதர்களைப் பற்றிய சம்பந்தமான கேள்விகளுக்கும் சமாதானம் என்பது தானாகவே புலப்படும்.

இஸ்லாமியர்களுக்கு...

24.8.1930 - குடிஅரசிலிருந்து..

இஸ்லாமிய மதத்தைப் பற்றி மக்கள் அசூசைப்படலாம், பொறாமைப்படலாம். அவர்களைப் பற்றி இழிவாய் நாம் எழுதி வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் காரியத்தில் அவர்கள் எந்த விதத்திலும் நம்மை விட இளைத்தவர்கள் அல்லாமலும் அநேக விதத்தில் மேலான வர்களாகவும் இருக் கிறார்கள்.

இதற்கு காரணம் அவர்கள் மதக் கொள்கையேயாகும். அதாவது சமத்து வமும், சகோதரத்துவமுமாகும். அந்த இரண்டும் இந்துக்களிடம் சுத்தசுத்தமாய் கிடையாது. ஒரு மகமதியச் சிறுவனை ஒரு இந்து பெரியவன் அடித்தால் அந்த ஊர் மகமதியர் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள்.

ஆனால் ஒரு இந்து பெரியவனை ஒரு மகமதிய சிறுவன் அடித்தால் ஒரு இந்துவும் திரும்பிப் பாரான். முதலில் அடிபடுகிறவன் என்ன ஜாதி, என்ன வகுப்பு என்று தன் பக்கத்தில் இருக்கும் இந்து கவனிப்பான். பிறகு நமக்கு என்ன அவன் எப்படியோ போகட்டும் என்பான். மற்றும் தனது சினே கிதர்களையும், இதரர்களையும், குழந்தை களையும் ஊர் வம்புக்கு ஏன் போகிறீர்கள் என்று சொல்லி வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவை சாத்துவான்.

இந்த குணம் தான் இந்துவுக்கு இந்து மதம் கற்பிக்கிறது. ஆகவே மதக் கொள் கைகளின் உயர்வு, தாழ்வுகளை பலனில் இருந்து பார்த்தறி கின்றதா? அல்லது நாமே எழுதி வைத்துக்  கொண்டதிலிருந்து அறிகின்றதா?

இஸ்லாமானவர்களுக்கும் சிறிது சொல்லவேண்டி இருக்கிறது. அவர்களது பழக்க வழக்கங்களிலும் இந்துக்களில் இருப்பது போலவே பல கெடுதல்கள் இருக்கின்றன.

இந்துக் கோயில்களில் தப்புக் கொட் டுவது போலவும் இந்து சாமிகள் உற்சவம் செய்வது போலவும் வேஷம் முதலிய ஆபாசங்கள் இருக்கின்றன. சில இடங்களில் புரோகிதர்கள் ஆதிக்கமும் இருக்கின்றது. இதற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்? வேண்டுமானால் அவைகள் எங்கள் மார்க்க கொள்கைகள் அல்ல என்றும் சகவாச தோஷத்தினால் மத்தியில் வந்து புகுந்த தவறுதல்கள் என்றும் சொல்லலாம். அது போதிய சமாதான மாகுமா? எப்படியாவது அவைகளை எல்லாம் ஒழித்தாக வேண்டும். முஸ்லீம் பணக் காரர்களும் இந்தப் பணமெல்லாம் ஆண்டவன் நமக்குக் கொடுத்தான்; ஆதலால் நமக்கு மோட்சம் தேடிக் கொள்ள நாம் யாத்தி ரைக்கும் நேர்ச்சைக்கும் சிலவு செய்தால் போதும் என்று இந்துக்களைப் போலவே சுயநலக்காரர்களாய் இருக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள் ளுகிறேன்.

ஒரு முஸ்லீம் பணக்காரன் ஒரு முஸ்லீ மாவது பட்டினியாகவும் தொழில் இல்லா மலும் படிப்பு இல்லாமலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்றே சொல்லுவேன். அதுதான் யோக்கியமான பணக்காரனின் லட்சியமாகும். இந்த குணங்கள் இல்லாத பணக்காரன் கொள் ளைக்காரனுக்குச் சமானமானவனே யா வான்.

தவிரவும் பணக்கார முஸ்லீம்களும் பொது ஜன சேவைக்காரர்களும் தங்கள் மதம் உயர்ந்த மதம் என்று சொல்லிக் கொண்டி ருப்பதால் மாத்திரம் போதாது. கஷ்டப் படுகின்ற இழிவுபடுத்தப்பட்ட மக்களைத் தங்கள் மார்க்கத்தில் சேர்த்து அவர்களை மேன்மைபடுத்த முயற்சி செய்யவேண்டும். தாங்கள் அனுபவிக்கும் சமத்துவ இன்பத் தையும், சகோதர இன்பத்தையும் மற்றவையில்லாத - கஷ்டப்படுகின்ற மக்கள் யாவரும்  அனுபவிக்கும் படி பார்க்க வேண்டும். யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்கின்ற கொள்கை ஒவ்வொரு யோக்கி யமான மனிதனுக்கும் தலையாய தாகும். அதை விட்டவர்கள் சுயநலக்காரர்களே யாவார்கள்.

இந்துமதம் ஒழியும் வரை வெள்ளைக்காரன் ஆட்சி வேண்டும்

10-8-1930, குடிஅரசிலிருந்து....

நம்மைப் பார்ப்பனராதிக்கத்தினிடமும், பண்டார சந்நிதிகளாதிக்கத்தினிடமும், பணக்கார ஆதிக்கத்தினிடமும்  விட்டு விட்டு  இந்தச் சர்க்கார் போய் விடுகிறோமென்று சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்கள் போக வேண்டாமென்று தான் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமேயொழிய போகச் செய்யும் சத்தியாகிரகத்தில் ஒருக்காலும் சேர்ந்துக் கொள்ளமுடியாது.

இந்தக் கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கை யில் கொண்டு போய் போடுவதை விட பிராம ணர்கள் என்பவர்களின் வயிற்றிற்போய் சேரும் படி அரைத்துக் குடிக்க செய்து விட்டால் அதிகப் புண்ணியமென்பதாகக் கருதி பார்ப்பனர்களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக் காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு  இந்த அக் கிரகாரங்களையும் கட்டிக் கொடுத்து நூறு வேலி (500 ஏக்கர்)

நஞ்சை நிலமும் கொடுத்ததாக  சொல்லப்படுவதுடன் ஏதோ ஒரு பார்ப்பனன் என்பவன் தீண்டாதான் ஒருவனுக்குத் தன் வீட்டிலழைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் அவனை இந்தவூர் பார்ப்பனர்கள் எல்லாம் சேர்ந்து ஜாதியை விட்டு விலக்கி கங்கையில் போய் நானஞ் செய்து விட்டு வரும்படி ஊரை விட்டு விரட்டினதாகவும் அந்த பார்ப்பனன் கங்கையைத் தன் வீட்டுப் புழக்கடையிலே வருவித்துக் காட்டினதாகவும் பிறகு அவனைச் சேர்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆகவே எப்படிப் பார்த்தாலும் இந்த தலப் பெருமையின் படி ஒன்று இங்குள்ளவர்கள் எலும்பைத் தூளாக்கிக் கரைத்துக் குடித்தவர்களாயிருக்க வேண்டும். அல்லது பறையனை  வீட்டில் வைத்து சாப்பாடு போட்டதின் பயனாய் கங்கை  இந்த கிராமத்துக்கு வரத்தகுந்த  அவ்வளவு நன்மையடைந்ததாகயிருக்க வேண்டும். அப்படியிருக்க இதை நம்புகிற பார்ப்பனர்கள் எப்படி வீதியில் பறையன் நடந்து விடுவான் என்று தடி எடுத்துக் கொண்டு தெருவில் நிற்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இது மூர்க்கத் தனமா? அல்லது ஆச்சாரமா?  அந்த வீதியில் எல்லா மிருகங்களும் செல்வதைப் பார்க்கிறோம்.

இந்துக்களில் ஒரு சாரார் தவிர மற்றவர்கள்  எல்லாரும்  செல்வதையும் பார்க்கிறோம். மற்றத் தெருக்களில் நடக்கும் போது எவ்வளவோ அசிங்கங்களை மிதித்துக் கொண்டேதான் காலைக் கழுவாமல் அத் தெருவில் யாவரும் நடப்பதைப் பார்க்கிறோம். அந்தத் தெருவிலுள்ள பார்ப்பனர்களுக்கு அவர்கள் வயலில் வேலை செய்து நெல் விளைத்துக் கொடுத்த அவர்களது மதத்தைச் சேர்ந்த மக்கள் போகக் கூடாதென்றும் அவர்களுடைய மதத்திற்கெதிராயிருந்து அவர் களது கோயில்களையும்,

சாமிகளையும் சாதிரங் களையும் உடைத்து இடித்து கொளுத்திய மகமதி யர்களைத் தாராளமாகப் போக விட்டுக் கொண் டும் இருக்கிறார்க ளென்றால், இதானது மதத்தை யும் சாஸ்த்திரத்தையும் ஆதாரமாகக் கொண்டு தடுக்கப்படுகிறதாவென்று ஆலோசித்துப் பாருங்கள். பறையன் சக்தியற்றவனாக யிருக் கிறான்.

படிப்பில், செல்வத்தில், சுயமரியாதையில் கேவலமாக அழுத்தப்பட்டிருக்கிறான். மகம தியன் சகல சவுகரியத்துடனும் வீரியத்துடனும் சுய மரியாதையுடனுமிருக்கிறான். பறையனை வேண் டாம் என்று சொன்னால் பறையன் பயந்து கொள்வான். யோக்கியப் பொறுப்பற்ற சர்க்காரும் அதற்கு இடங்கொடுத்துக் காவலாளை அனுப்பிக் கொடுக்கும். மகமதியனோ தெருவில் நடக்க வேண்டாமென்று சொல்லிவிட்டால் உடனே உதை கொடுப்பான்.

வேண்டாம் என்று சொல் பவர்களின் பெண்டு பிள்ளைகளையும் கட்டிய ணைவதோடு மாத்திரம் நில்லாமல் தூக்கிக் கொண்டு போய் விடுவான் அப்போது சர்க்காரும் வாலை யொடுக்கிக் கொள்ளும். ஆகவே தீண்டா மையும் தெருவில் நடக்காமையும் எதிலே இருக் கின்றதென்று யோசித்துப் பாருங்கள். இந்து மதத் திலும் சுயமரியாதையற்றத் தன்மையிலுந்தானே தீண்டாமை இருந்து  வருகின்றது. இந்த கிராமத்தில் மகமதியர்களின் எண்ணிக்கை எவ்வளவு சுருக்கம்?

தாழ்த்தப் பட்டவர்களுடைய எண் ணிக்கை எவ்வளவு அதிகம்? அப்படி இருந்தும் மகமதியர்களுக்குச் சுதந்திரமும், இந்துக்களுக்குத் தடையும் ஏற்பட்டிருப்பது மதம் காரணமா? அல்லவா? அப்படிப்பட்ட மதம் எதற்காகயிருக்க வேண்டுமென்றால் மக்களுக்கு வெறும் கோபம் வருகிறதேயொழிய மற்றபடி எவ்வித சமாதான மும் சொல்லுகிறவர்களைக் காணோம். இப்படிப் பட்டவர் களை நாம் மூடர் களென்றும், மூர்க் கர்களென்றும், அயோக்கியர்கள் என்றும் சொல் லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?

சகோதரர்களே! கண்டிப்பாக நான் ஒன்று சொல்லுகிறேன். இந்து மதம் என்பது ஒழிகின்ற வரையில் குறைந்தது வெள்ளைக்காரன் ஆட்சி யாவது இருந்து தான் ஆக வேண்டும்.

வீண் செலவால் தரித்திரம்

17-8-1930, குடிஅரசிலிருந்து....

பயனில்லாத வழியில் மதத்தின் பேரால் நமது பணத்தையெல்லாம் பாழாக்குகிறோம். ஒரு மனிதன் தினம் 8 அணா சம்பாதித்து 4 அணா மிச்சம் பிடித்தால் அவன் அதை பிதிர்களுக்கும், சடங்குகளுக்கும், சாமிகளுக்கும், பொங்கல்களுக்கும் செலவு செய்யவே வழி காட்டப்படு கிறான். அவன் ஒரு வாரத்தில் சேர்த்ததைக் குடியில் செலவு செய்கிறான். ஒரு மாதத்தின் மீதத்தைப் பண்டிகையில் செலவு செய்கிறான். ஒரு வருஷ மீதத்தைத் திதியில் செலவு செய்கிறான்.

10 வருஷ மீதத்தைக் கலியாணம் கருமாதியில் செலவு செய்து விடுகிறான். இவையன்றியும் சில்லரைச் சடங்குகளும், சில்லரைத் தேவதை களும் உற்சவங்களும் நம் செல்வத்தை விழுங்கிவிடுகின்றன. மேற்கொண்டு கடனும் வாங்கச் செய்கின்றன. இவைகளே நாம் நிரந்தர கடனாளியாகவும் தரித்திரவான்களாகவும் இருப்பதற்குக் காரணங்களாகும். இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. படிப்புக்குப் போதுமான பணம் இல்லையா? நமது தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள்.

உற்சவங்கள் காரணமாய் வருடம் 40 ஆயிரம், 50 ஆயிரம், லட்சம் ரூ வரை வருஷ வருமானமுடைய 30, 40 கோயில்கள் இருக்கின்றன. சமயங்கள் காரணமாய் வருடத்தில் 5 லட்சம், 10 லட்சம் வரும்படியை உடைய பல மடங்கள் இருக்கின்றன. கணக்குப் போட்டால் எவ்வளவு ரூபா மொத்த மதிப்பு ஆகிறது. உற்சவ செலவும்  ஜனங்கள் போக்குவரத்து, ரயில் முதலிய செலவும் சேர்த்து எல்லாம் பார்த்தால் எந்த காரணத்தினாலும் 1 கோடிக்கு குறையாது.

திருச்சிராபள்ளி ரங்கநாதர், தென்னாற்காடு நடராஜர், மதுரை மீனாட்சி, ராமனாதபுரம் ராமலிங்கம் ஆகிய சாமிகளும், மற்றும் வட ஆற்காடு ஜில்லா அருணாசலம், செங்கற்பட்டு வரதராஜ உடையவர்; சென்னப் பட்டினம் கபாலீசர், சித்தூர் வெங்கிடாசலபதி ஆகிய சாமிகளின் உற்சவங்கள் கணக்கு எவ்வளவு திருப்பதி கோயிலில் 20 வட்ச ரூபாய் காணிக்கை; ஏழரைக் கோடி ரூபாய் சொத்து, நகை, பாண்டுகள், வாகனங்கள், கட்டிடங்கள் இவற்றை எல்லாம் விற்றுக் கணக்குப் போட்டுப் பார்த்து 100க்கு 6 வட்டி வீதம் 40 லட்சம் ரூ வட்டி அடையலாம்.

இந்த ஜனங்கள் காணிக்கைகள் உண்டியலில் கொடுத்தல் போக வர செலவு எல்லாம் 60 லட்சம் ரூபாய் ஆகும். அவ்வளவும் நம் மக்கள் வீண் செலவு  செய்து விடுகிறார்கள். திருப் பதிக்குப் போய் மொட்டை அடித்துக் கொள்ளுகிறவர்களின் செலவு எல்லாம் சேர்த்து மொத்தத்தில் 1 கோடி ரூபாய் ஆகிறது. இது போலவே இந்த இரண்டு ஜில்லாவிற்கு மாத்திரம் மேற்படி 2 கோடி ரூபாயாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? மற்ற சாமிகள் பணத்தாலும் எவ்வளவு கல்வி பரப்ப முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஜில்லாவிலுள்ள மடங்கள் என்ன போதிக்கின்றன? என்ன அறிவை வளர்க்கின்றன?

தலைக்கு  நாள் ஒன்றுக்கு, 2, 5, 10, 15 ரூபாய் வரை, சராசரி சம்பாதிக்கக் கூடிய மக்களையுடைய அய்ரோப்பிய தேசங்கள் இருக்கின்றன. நம் தேசத்தில் ஒருவன் சராசரி ஒன்றரை அணாதான் சம்பாதிக்கிறான். இது கூட இரண் டரை அணா செலவு செய்யக் கற்ற பிறகுதான். இத்த னைக்கும் நாம் ஒரு செல்வக் கடவுளைக் கும்பிடுகிறோம். விளக்கமாறு, முறம், அம்மிக் குழவி, சாணிச் சட்டி உள்பட எல்லாம் லட்சுமி என்கிறோம். அப்படிக் கும்பிடும் நாம் இன்னும் ஏழையாகவே இருக்கிறோம்.

நம் மக்கள் சிங்கப்பூர், கொளும்பு, நெட்டால், தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களுக்குக் கூலி ஆட்களாகப் போகிறார்கள். இத்தனை லட்சுமிக் கடவுள்கள் இருந்தும் இந்தத் தரித்திர நிலைமையில் தான் இருக்கின்றோம். இதற்கு நம் சோம்பேறித்தனமும் நம் மக்கள் பணம் அனாவசியச் செலவு செய்யப்படுவதுமே காரணம். பணக்காரன் தொழில் துறையில் பணம் செலவு செய்வதில்லை. பணம் சேர்ந்தவன், கடவுள் தந்தார் என்கிறான். ஏழையானவன் கடவுள் நமக்குக் கொடுக்க வில்லை என்று நினைக்கிறான். ஏழை மக்கள் கடவுள் கொடுக்கவில்லை என்கின்றார்களே யொழிய அப்படிப்பட்ட கடவுளை ஒரு கை பார்ப்போம் என்று நினைப்பதில்லை. எதற்கும் கடவுள் செய்வான் என்ற கொள்கையே இருக்கிறது.

செல்வமானது கல்விக்கும் தொழிலுக்கும் உபயோக மாகும்படி செலவு செய்யப்படாமல் பணக்காரர்களால் சாமிக்கும், கோயில்களுக்கும் சடங்கிற்கும் போய்விடுகிறது. சாமிக்கு 3 வேளை 6 வேளை பூசை செய்தல் தாசி மேளம் ஏற்படுத்தல் மரக்கட்டைகளின் மேல் பொம்மைகளை ஏற்றி தேர் என்று சொல்லி இப்படியாக 5,000,10,000 பேர் இழுப்பதில் பணத்தைப் பாழ் செய்கிறார்கள். இது மோட்சமாம்! இப்படியெல்லாம் ஏழை மனிதன் தலையில் கை வைத்து மேனாட்டார் சாமிக்குக் கொடுப்பதில்லை. அவர்கள் குழவிக் கல்லை நட்டு கும்பிடுவது மில்லை. ஒரு மேல் நாட்டான் தன் சொத்தைத் தர்மம் செய்ய எண்ணினால் மருத்துவ ஆபத்திரி கல்வி அபிவிருத்திக்குக் கொடுப்பான். ஒரு கண் ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான்.

குஷ்டரோக ஆஸ்பத்திரிக்குக் கொடுப்பான். தொத்து வியாதிகள் வராமல் தடுக்கக் கூடிய ஆஸ்பத்திரிக்காகவும் கொடுப்பான். இத்துட னில்லாமல் அவன் தன் நாட்டையும் படிக்க வைத்தப் பின் நம் நாட்டிலுள்ள ஏழைகளும், அனாதை களும் உயர்த்தப்படுவதற்காக மிஷன் பாடசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறான். தொழிற்சாலை வைக்கிறான். நாமும் அதில் பங்கு அனுபவிக்கிறோம். நம் பிள்ளை களையும் அவர்களுடைய பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பு கிறோம். அவர்களது ஆஸ்பத்திரிகளுக்கும் செல்லுகிறோம். நாமோ தவறான வழியாகக் குழவிக் கல்லின் தலையில் நம் செல்வத்தைப் பாழாக்குகிறோம். நம்மிடம் அறிவு இல்லை. ஆகையினால் செல்வ விருத்தியும் இல்லை.

Banner
Banner