பகுத்தறிவு

19.10.1930 -  குடிஅரசிலிருந்து...

உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப்படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்ச முடையவரென்று சொல்வதற்கே மிக மிக இடமிருக்கின்றன.

அவரை கருணையுடையவரென்று  சொல்லு வதைவிட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று சொல்லுவதைவிட அநீதிவான் என்று சொல்லுவதற்கே  தாராளமான ஆதாரங்கள் அதிகமிருக்கின்றன.

அவரால் உலகுக்கு நன்மை ஏற்படுகின்றது என்று சொல்லுவதைவிட அவரால் அதிக தீமையே ஏற்படுகின்றது என்று சொல்லுவதற்குப் போதுமான ஆதாரமிருக்கின்றது.

அவர் அறிவாளி என்று சொல்லுவதைவிட மூடர் என்று சொல்லுவதற்கே போதுமான ருஜுவு இருக்கின்றது.

(அதுவே முடிந்த முடிவானால்) அப்படிப் பட்டவரை யோக்கியர் என்று சொல்லுவதைவிட அயோக்கியர் என்று சொல்லுவதற்கே திருஷ் டாந்தங்கள் பல இருக்கின்றன.

அவர் ஜீவன்களுக்கு நன்மையை செய்கின்றா ரென்பதைவிட தீமையைச் செய்கின்றார் என்ப தற்குப் போதிய காரணங்கள் இருக்கின்றன.

அவரால் நன்மையடைந்தவர்களைவிட தீமை யடைந்தவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று சொல்லத்தகுந்த அத்தாட்சிகள் மிகுந்து கிடக் கின்றன.

அவர் நாகரிகமுடையவரென்று சொல்லுவதை விட அவர் காட்டுமிராண்டி என்று சொல்லுவதற்கே அளவுக்கு மீறிய அனுபவங்கள் காணப்படுகின்றன.

அவர் இருந்தால் நல்லது என்று சொல்லு வதைவிட அப்படிப்பட்டவர் ஒருவர் இல்லாமல் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன.

அப்படி ஒருவர் இருக்கிறார் என்று எண்ணிக் கொண்டு வாழ்க்கையை நடத்துவதைவிட  அப்படி ஒருவர் இல்லை என்று வாழ்க்கை நடத்துவதே மனித சுதந்திரத்திற்கு அதிகமான நன்மை பயக்கத் தக்கது என்று கருதுவதற்கு  வேண்டிய அவசியங்கள் பல இருக்கின்றன.

அறிஞர்களே, ஆராய்ந்து பாருங்கள்.

 

கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார்?

வினா:- கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார் தெரியுமோ? அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார்கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்குமென்றுதான்.

விடை:- என்ன அக்கிரமம் என்றா கேட்கின்றீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது?

விடை:- அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கைவீட்டில் அனுமார் படம் வைத்திருக் கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

வினா: - பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

விடை:- கடவுள் இருக்கிறார். போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக்கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்.

 

14.12.1930-  குடிஅரசிலிருந்து...

இப்படி இருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்கும் 90பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும் அதுவும் காரண்டி இல்லாத  அடிமை யாய் இருந்து வேலை செய்வது என்பதும்; அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும். ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரிதவிக்க ஆரம்பித்தால்தான்  தங்களுக்குப் பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள்தனமாய் பாடுபடு வதும் தங்களைப் போன்ற பிறரால் ஏய்க்கப் படுவதும் ஏன்? என்கின்ற காரணத்தை உணர முடியும். உணர்ந்து சம நிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.

அதை விட்டு விட்டு முதலாளி தொழிலாளி நிலைமையும், மிராசுதாரர் உழவன் நிலை மையும் உலக வாழ்க்கையின் சவுகரியத்திற்கு அவசியம் என்பதாகச் சொல்லி அதுவும் கடவுள் செயலால் முன் ஜென்மத்தின் கர்ம பயனால் தலைவிதியால் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டு அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே எவ்வளவுக் கூலி வாங்கிக் கொடுத் தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மை யானவர்களின்  கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது. எப்படி எனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக் கொண்டு  எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ அது போலவே முதலாளி தொழிலாளி முதலிய பாகுபாடுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்திரமும் பயன்படாமலேயே போய்விடு வதோடு கீழ்நிலை மேல்நிலை என்பதும் மாற்ற முடியாததாகிவிடும். ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராசுதாரன் என்பவைகளும் ஒருவித வருணாசிரம தர்மமே தவிர வேரல்ல. ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.

நமது நாட்டில் பிறவியிலேயே  பல படிகள் இருப்பதாலும் அதனாலேயே நாம் சதா கஷ்டப்படுவதாலும் தொழில், வாழ்க்கையில், உள்ள படிகளை நாம் கவனிக்கவே நேரமும், ஞாபகமும் இல்லாதவர்களாய் இருக்கின்றோம். மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப் படிகளையும் தொழில் படிகளையும் கடந்தவனாகத் தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலையென்று சொல்லப் படுவதாகும்.

நிற்க, இவற்றிற்கெல்லாம் முக்கியமாக இன்னொரு விஷயமுண்டு. அதைச் சரியாக உணர்ந்து கவனித்தோமானால் மேல்கண்ட கஷ்டங்களைப் பற்றிய கவலைகள் கூட நாம் அதிகம் பட வேண்டிய அவசியமிராது. அதென்ன வெனில், யோசனை யில்லாமல் கண்ட கண்டபடி ஜனத்தொகையை விருத்தி செய்வதாகும். பிள்ளைகளைப் பெருவதாகும். 2 ஏக்கரா பூமி உள்ளவன் 100 மாடுகளை வாங்கி வளர்ப்பானேயானால் எப்படி அவனால் அந்த மாடுகள் போதிய தீனி கிடைத்து ரட்சிக்கப்பட முடியாதோ அதுபோலவே மனித சமுகமும் தேவைக்கும் தன்னால் தாங்குவதற்கும்  அதா வது காப்பாற்றக் கூடியதற்கும் அதிகமாகவும் தேசத்தின் கால நிலைமைக்கு மேலாகவும் பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட்டு தனது ஆகாரத்தில் பங்கு கொடுத்து கடைசியில் இருவருக்கும் போதுமான ஆகாரமில்லாமலும், போதுமான ஆதரிப்பு இல்லாமலும் கஷ்டப் பட்டுக் கொண்டிருப்பதை ஒழிக்காமல் வீணாய் எண்ணிக்கையை அதிகப்படுத்தவதில் என்ன பயன்? என்பது முக்கியமாய் கவனிக்கத் தக்கதாகும்.

இந்திய நாட்டு நிலைமை நமக்குத் தெரிய சுமார் 40, 50 வருஷ காலமாகவே மக்களுக்கு வேலையில்லாமல் வெளிநாடுகளுக்குக் கூலி யாகச் செல்வதே வழக்கமாக இருந்து வந்திருக் கின்றது. இது மாத்திரமல்லாமல் அடிக்கடி பஞ்சமும் கொள்ளை நோயும் வந்திருக்கிறது. இது இந்த நாட்டு சுயமரியாதைக்கே மிகவும் கேடானதாகும். அளவுக்கும், சக்திக்கும் மீறி பிள்ளைகளைப் பெறுவதால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசிக்க  வேண்டும்.

உலகம் விர்த்தியாக வேண்டாமா என்கின்ற சொல் சுத்த முட்டாள் தனமானதும் சிறிதும் பொருளற்றதுமான  சொல்லே ஒழிய அது ஒரு கவனிக்கத்தகுந்த சொல் அல்லவென்பதே நமது அபிப்பிராயம். சம்போக விஷயங்களில் கவலையற்றும், முரட்டுத்தனமாயும், அளவுக்கு மீறியும் நடந்து கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போலவே  தான் குழந்தைகள் ஏற்படுவதும் என்பதே தவிர அதற்கும் இதற்கும் சிறிதும் வித்தியாசமே இல்லை. சமபோக உணர்ச்சி இந்த உலகத்தில் உள்ள ஜீவஜந்துக்களில் மனிதனைத் தவிர, வேறு எந்த ஜீவனுக்கும் குழந்தை பெறுவதற்காக என்கின்ற எண்ணத்தின் மீது தோன்றுவதே கிடையாது. மனிதன் பகுத்தறிவுக்காரன் என் கின்ற ஆணவத்தால் அவனுக்கு ஏற்படும் அநேக முட்டாள்தனமான செய்கைகளைப் போல் குழந்தை பெறவேண்டும் என்கின்ற முட்டாள்தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி; பிறகு அது ஒரு சொத்தாகி பிறகு மோட்சத்திற்கு உதவும் காரியமாகவுமாகி கடைசியாய் வீண் கஷ்டமும் தொந்தரவும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுத்ததைக் கொடுப்பதைத் தவிர, வேறு ஒரு பயனும் இல்லாததாய் முடிந்து விடுகிறது.

மேலும் பிள்ளை பெறுவதினாலேயே மொத்த ஜன சங்கியையில் பகுதியான பெண்கள் சமுகம் அடிமையாகி அநேக ஆபத்துகளுக்கும் வியாதிக்கும் உள்ளாகி அற்ப ஆயுளுடன் கஷ்டமும் படவேண்டிய தாகி அவர்களது வாழ்வே மிக்க பரிதவிக்கத்தக்க வாழ்வாக முடிகின்றது. பெண் அடிமைக்குக் காரணம் அவர்கள் பிள்ளை பெறுவதும், அதிலும் அதிகமான பிள்ளைகளைப் பெறு வதும் அதனால் உடல் நலிந்து பலவீனமு டையவர்களாவதும் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று கருது வதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமை யாவதுமான காரியங்களுக்கு ஆளாக வேண்டி யவர்களுமாகிறார்கள். பெண்கள் விஷயம் இப்படி இருப்பதோடு பொதுவில் வேலையில்லா கஷ்டத்தை நீக்கவும் மக்கள் கவலையும் தொல்லையும் கஷ்டமும் இல்லாமல் இருக் கவும் பிள்ளைப்பேற்றைக் குறைப்பது என்பது ஒரு தக்க வழியாகும்.

தொடரும்...

02. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

சிருங்கேரி மடாதிபதி உயர்திரு ஸ்ரீஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் அவர்களிடமிருந்து நமக்கு வந்த ‘ஸ்ரீமுக’ அழைப்பை இவ்விதழில் வேறு ஒரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம் (2.3.1930 குடிஅரசில் இந்த செய்தி உள்ளது)  திரு மடாதிபதி அவர்கள் அந்த ஸ்ரீமுகம் நமக்கு அனுப்பியதற் காகவும் மற்றும் அதில் நம்முடையவும் நமது மனைவியாருடையவும் ஒரு சிறு தொண்டை மிகுதி யும் பாராட்டித் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்த தற்காகவும் நாம் நம் சார்பாகவும் நமது மனைவி யாரின் சார்பாகவும் நமது மனப்பூர்த்தியான நன்றி யறிதலை தெரிவித்துக் கொள்ளக் கடமைபட்டி ருக்கின்றோம்.

நிற்க, அந்த ‘ஸ்ரீமுக’த்தில் “சனாதன தர்மத்தைக் கெடுக்காமல் கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமைகளைச் செய்து சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்” என்கின்ற நிபந்தனைகள் கண்டு அதற்கு விரோதமில்லாமல் சில சுதந்திரங்கள் அளிக்கப்படும் என்கின்ற வாசகங்கள் காணப்படு கின்றபடியால் நாம் அங்கு செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கின்ற விஷயம் நமக்கு சந்தேகமாகவே இருக்கின்றது.

ஆயினும் பொறுப்புள்ள ஒரு பதவியை வகிப்பவரும், பல கொள்கைகளுக்கு அபிப்பிராய கர்த்தாவாய் இருப்பவரும், பல மக்களால் வணங்கி கொண்டாடி மதிக்கத்தக்கவராக இருப்பவருமான ஒரு பெரியாரின் அழைப்பை மதித்து அதற்கு இணங்கி அங்கு சென்று வரவேண்டியது மிக்க நியாயமாகுமென்றே நமக்குத் தோன்றுகின்றது, ஆயினும் நமது நண்பர்களின் விருப்பத்தை அறிந்து சென்று வரலாமென்றே கருதியிருக்கின்றோம்.

தந்தை பெரியாரின் பொன்மொழிகள்

1.  புராணங்களுக்கு மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணம் என்னவென்றால் அவைகள் எவ்வளவு ஆபாசமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் எழுதி இருந்தாலும் முதலிலும் கடைசியிலும் இப்புராணத்தைப் படித்தோருக்கு மோட்சம், படிக்க வைத்தோருக்கு மோட்சம், கேட்டோருக்கு மோட்சம், கேட்டவரைக் கண்டோருக்கு மோட்சம், கண்டவரைக்  கண்டால் மோட்சம் கிடைப்பதுடன் வாழ்கையில் பணமும் பொருளும் சேருமென்றும் செத்த பிறகு இராஜாவாய் பிரபுவாய் மறுஜென்மம் எடுக்கப்படும் என்னும் எழுதி வைத்ததே காரணமாகும்.

2. எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக் கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.

3. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லுவதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாத்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான். ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.

 

14.12.1930-  குடிஅரசிலிருந்து...

மற்றும் பாஷைகள் ஆதியில் எழுத்துகள் கூட இல்லாமல் சப்த ரூபமாய் இருந்ததும், பிறகு எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டதும் அவை கூரிய ஆணி களால் ஏடுகளில் எழுதப்பட்டதும் பிறகு காகிதம் ஏற்பட்டதும், அதில் நாணலில் எழுதினதும், உருக்குத் தகடுகளில் எழுதினதும், பிறகு பௌண்டன் பேனாவில் எழுதினதும், டைப்பில் அடிப்பதும், அச்சடிப்பதும் அந்த அச்சும் மணிக்கு 100 பிரதிகளாக இருந்து இப்போது 10000 பிரதிகள் வீதம் அச்சடிக்கும் படியானதும். அதுவும் 12 ஜ் 8க்குமாயிருந்த அகல காகிதத்தில் மாத்திரமிருந்து இப்போது 60 ஜ் 40க்குமாக அச்சடிக்கக் கூடியதானதுமான  காரியங்கள் படிப் படியாய் விருத்தி ஆகியிருக் கின்றதைப் பார்த்துக் கொண்டும் அதன் பலன் களை அனுபவித்துக் கொண்டும் ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் அதைச் செய்து கொண்டும் இருக்கின்றோம். இவையெல்லாம் யந்திர பலன்கள் அல்லவா? என்றும் இவற்றில் எது தள்ளுவதற்குரியது? என்றும் கேட் கின்றோம்.

இது தவிர மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். சங்கராச்சாரி மடாதிபதி என்று சொல்லப்படும் ஆட்கள் ரயில் ஏறுவது நீச்சத்தனம் என்றும், மாட்டுவண்டி, குதிரை வண்டி ஆகியவைகளில் ஏறுவது ஜீவஇம்சை என்றும் கருதிக் கொண்டும் மரக்கட்டையில் பல்லக்கு செய்து அதற்குத் தந்தம், வெள்ளி, தங்கம் முதலிய தகடுகள் போட்டு அதன்மீது, தான் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்டு 1க்கு 4பேர் வீதம் 4தண்டுக்கு 16பேர் ம்கு ம்கு என்று முக்கிக் கொண்டு மணிக்கு 4மைல் வீதம் தூக்கி ஓடுவதை பார்க்கிறோம். இது யந்திர சம்பந்தமில்லாதது என்று வைத்துக் கொண்டாலும் (கண்டிப்பாய் பார்த்தோமா னால் பல்லக்கு என்பதும் ஒரு யந்திரமேயாகும்) இந்த வாழ்வு காட்டு மிராண்டி உலக வாழ்வா? அல்லது நாகரிக உலக வாழ்வா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் தூக்குவதை விட்டு மாடோ, கழுதையோ, குதிரையோ, ஒட்டகமோ, யானையோ, சுமப்பதாக வைத்துக் கொண்டாலும், அதுவும் அதற்கு சற்று அடுத்த காட்டு மிராண்டி வாழ்வா அல்லது நாகரிக ஜீவகாருண்ய வாழ்வா என்றும் கேட்கின்றோம்.

ஆகவே இவைகளிலிருந்து இயந்திரம் மனி தனுக்கு அவசியமென்றும் சவுகரியமான தென்றும், ஜீவகாருண்ய முடைய தென்றும் முற்போக்குக்கும் நாகரிகத்திற்கும் ஏற்ற தென்றும் இயற்கை உணர்ச்சி யில் பட்ட தென்றும் அறிவு ஆராய்ச்சியின் பய னென்றும் ஒப்புக் கொண் டுதானாக வேண்டும்.

ஆனால்...

ஆனால், முற்சொல்லப்பட்ட அதாவது யந்திரங்கள் பெருகுவதால் தொழிலாளி களுக்கு வேலையில்லாமல் போய் ஜீவனத்திற்கு கஷ்டப்பட வேண்டிய தாகுமே என்பதற்கு சமாதானம் சொல்லியாக வேண்டும். இதற்கு பதிலாக நாம் அவர்களைக் கேட்பதென்ன வென்றால்

தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடையக் கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது? என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.

பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப் படுபவன், சுகப்படுபவன், வேலைசெய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறு கிறவன் ஏமாற்றுகிறான் என்பன போன்ற பிரிவுகள் மனித வாழ்க்கையில் இருக்கும் படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமுமுண்டா? என்பது நமது இரண்டாவது கேள்வியாகும்.

மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் சவுகரியம்  அல்லது தேவையின் அவசியம் என்பதற்காகவா? அல்லது முதலாளி, மிராசுதாரன் ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம் பாதிக்கவோ பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத் திற்காகவா என்பது மூன்றாவது கேள்வியாகும்.

இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோ மானால் வேலை என்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன் கொடுமைப் படுத்துவதுதான் இந்த முறைகள் என்பதும் விளங்கிவிடும்.

இவை ஒருபுறமிருக்க வேலைகளின் கூலிகளை உயர்த்தி, வேலை நேரத்தைக் குறைத்து, முதலாளிகளின் லாபத்தையும் குறைத்து, ஒரு வரையறை ஏற்படுத்தி; உள்ள நேரத்தையும் கூலியையும் எல்லா வேலைக் காரர்களுக்கும் பங்கு வரும்படியான ஒரு திட்டம் போடுவோமேயானால் அதாவது மோட்டார் பஸ்காரர்கள்  யூனியன் வைத்து வருகின்ற பிரயாணிகள் சத்தத்தை உயர்த்திக் கிடைத்த வாடகையை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வதுபோல் செய்தால் வேலையில்லாத்  திண்டாட்டம் தானாகவே ஒருவாறு ஒழிக்கப் பட்டு விடுமா? இல்லையா? என்று கேட்கின் றோம்.

நிற்க, இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே பிறருக்கு அடிமையாய் உழைப்பதற் காகவே மனிதன் பிறந்திருக்கிறானேயொழிய சுகப்படு வதற்கில்லையென்றும் ஆதலால் அவன் வேலைசெய்வதற்காக ஒரு தொழில் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டுமென்று தான் ஏற்படுகின்றது. இதுவும் தான் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழுநேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படு கின்றது.

இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வைவிட மிக மோசமான வாழ்வேயாகும். எப்படி எனில்  அவற்றிற்காவது (ஒரு காரண்டி) உத்திரவாதம் இருக்கின்றது. அதாவது அதன் எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கின்றான். மனித வேலைக் காரனுக்கோ உத்தரவாதமே கிடையாது. இன் னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவை களில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக்கின்றது.

தொடரும்...

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை

- சித்திரபுத்திரன் -

21-12-1930 - குடிஅரசிலிருந்து....

அர்ஜுனன் : சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்குகின்றாயா?

கிருஷ்ணன் : என்ன அது, சொல்லு பார்ப்போம்.

அர்ஜுனன் : அதாவது புராணங்களில் அக்கிரமமான, வஞ்சகமான, புரட்டான காரியங்கள் செய்ய வேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகின்றதே, இதன் தத்துவமென்ன?

கிருஷ்ணன்: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாத்திரங்கள் எல்லாம் பொய் புரட்டு சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும், இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்குப் பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும் அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்யப் பயப்பட மாட்டார்கள் என்றும், அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியாதைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காக பார்ப்பனர்களைத் தங்கள் காரியதராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டும் இருக்கின்றார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர் களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப்பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.

அர்ஜுனன் : இன்னம் ஒரு சந்தேகம்

கிருஷ்ணன் : என்ன சொல்லு.

அர்ஜுனன் :  கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்.

கிரு : ஆம்!

அர்ஜுனன் : அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவாகனம், கும்பாபிஷேகம் முதலியவைகள் செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும், கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?

கிரு: அதன் இரகசியம் என்னவென்றால் மனிதனுக்குள் கடவுளை ஆவா கனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப் பிட்டுவிடுவான்; அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால் தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்கு தனக்கு வேண்டியதை யெல்லாம் நைவேத்தியம் செய்யச்செய்து தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி செய்ய வேண்டியது குறுக்கே இருப்பவர்களுக்கு அதாவது பூசாரிகளுக்கு அவசிய மாயிற்று அந்த பூசாரிகளுக்கே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்து விடும். கடவுள் மஹிமைகளும் ஒழிந்து விடும்.

அர்ஜுனன் : சரி இவைகள் எல்லாம் எனக்கு ஒரு மாதிரி விளக்க மாயிற்று. இன்னும் சில விஷயங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவை களை சாவகாசமாய் பேசுவோம்.

கிரு: சரி

இவர்களில் யார் பதிவிரதைகள்?

1. சீதா, புருஷன் பந்தோபதினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை.

2. மீனாட்சி, புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்ய வில்லை.

3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை.

4. இரஞ்சிதம், தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை.

5. சரஸ்வதி, மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப் பயந்து யாருக்கும் இணங்கவில்லை.

6. மேனகை, தான் கேட்டளவு பணம் கொடுக்கவில்லை என்று கருதி யாருக்கும் சம்மதிக்கவில்லை.

7. கோகிலா தன் காதலனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு விரோதமே என்று கருதி வேறு யாருக்கும் ஒப்பவில்லை. இவர்களில் யார் பதிவிரதைகள்.

Banner
Banner