எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தோல். தோல்தான் நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு! பலரும் தோலை ஒரு உறுப்பு என்றே கருதுவதில்லை. நாம் இங்கே தோலை முதன்மைப் படுத்திச் சிறப்பு தகுதி அளித்துப் பெருமைப்படுத்தக் காரணம் இருக்கிறது. தோல் நம் உடலின் சதையை மூடிக்கொண்டிருக்கும் வெறும் போர்வை மட்டு மல்ல; பல்வேறு விதமான தனித்த இயக்கம் கொண்ட உறுப்பு.

சராசரி அளவுள்ள மனிதனுக்கு ஒன்றரை முதல் இரண்டு சதுர மீட்டர்வரை விரிந்து பரந்துள்ள தோல்தான் புறச் சூழலுக்கும் நமது உடலுக்குமான எல்லைக் காப்பு அரண்.  புறச் சூழலில் நிலவும் கெட்ட காற்று, மாசு, நீர் அனைத்தும் உடலினுள் புகுந்துவிடாமல் தடுத்து நிறுத்திவைப்பது தோல் தான். வெளியில் வெப்பம், உடலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக நிலவும்போது, உள்ளிருக்கும் நீரை, மேல் தோலுக்கு அனுப்பிக் குளிர்வூட்டி உடல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. புறச் சூழலில் குளிரும் மிகையான ஈரப்பதமும் நிலவுமானால் உள் ளிருந்து வெப்பம் மேல் தோலுக்கு வந்து புறக் குளிர் உள்ளே புகுந்துவிடாமல் பாதுகாக்கிறது தோல்.

வெப்பமோ குளிரோ புறச் சூழலுக்கு ஏற்ற எதிர் சீதோஷ்ணத்தைத் தோலின் மேற்பரப்பு உருவாக்கிக் கொள்கிறது. அடித் தோலில் படர்ந்திருக்கும் கொழுப்பு, மேல் தோலில் உருவாக்கப்பட்ட வெப்பம் அல்லது குளிரைப் புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் நிலைநிறுத்த உதவுகிறது.

இது தோலின் முதன்மைப் பணி. அது நமது உடலியக்கத்தில் ஆற்றும் பல்வேறு பணிகள் குறித்து அடுத்தடுத்துப் பார்க்கலாம். தோலைப் பராமரிக்க நாம் செய்வது என்ன?

அன்றாடம் குளிக்கிறோம். குளித்தல் என்பது புறத்தில் நம் தோலில் படியும் அழுக்கை நீக்கும் நட வடிக்கை என்றே நம்மில் பலரும் கருதிக்கொண்டி ருக்கிறோம். ஏதோ பாத்திரத்தின் பற்றைத் துலக்குவது போல, உடல் நுரைக்க சோப்பு போட்டுத் தேய்க்கிறோம். மேலும் மேலும் நுரைப்பதற்கென்று நைலான் நாறு போட்டும், வெட்டிவேர் நாறு போட்டும் தேய்க்கிறவர்கள் உண்டு. இன்னும் சிலரோ போனமா, குளிச்சோமா, வந்தோமான்னு இருக்கணும் என்று சோப்பு வாசனை காட்டுவதற் காகவே குளிப்பதும் உண்டு.

உண்மையில் நமது உடலில் புறத்தில் இருந்து தோல் மீது படியும் அழுக்கைவிட, உள்ளிருந்து வியர்வை வடிவத்திலும் இறந்த செல்கள் வடிவத்திலும் படியும் அழுக்குதான் அதிகம்.

அழுக்கை நீக்குவதற்காகத்தான் குளிப்பது என்றால், புறத் தூசி படியாத வண்ணம் ஏ.சி. காரில் பயணித்து, ஏ.சி. அறையில் அமர்ந்து, உடல் அழுக்காகாத, வியர்வை வடியாத வேலையைச் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து உண்டு களைத்து, உறங்கி எழுபவருக்கு குளியல் தேவையில்லை. கறுத்த எண்ணெய்யும், கெட்டியான மசகு கிரீசும் படிய வேலை செய்பவர்களும், வியர்வைச் சொட்டச் சொட்ட ஓடியாடி வேலை செய்பவர்களும் மட்டும் குளித்தால் போதுமானது.

நமது தோலைப் பராமரிப்பது ஒரு பெரிய உறுப்பைப் பராமரிப்பது மட்டுமே அல்ல. தோலின் வாயிலாக நமது உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிக்கவும், தோலின் மூல உறுப்புகளைப் பாதுகாக்கவும் செய்கிறோம். தோலைப் பாதுகாப்பது குளியலில் இருந்தே தொடங்குகிறது.

ரசாயனக் கலப்பில்லாத கைக்கு எட்டும் தொலைவில் கிடைக்கிற இயற்கைப் பராமரிப்பு முறைகள் நிறைய உண்டு. முதலில் குளியல் என்பது அழுக்கு நீக்குதல் மட்டுமே அல்ல. அது குளிர் வித்தலின் மூலமாக உடலுக்குப் புத்துணர்வு தருவது என்ற அடிப்படை உண்மையையும், நிதானமான குளியலே அந்த நாளை நமக்குப் புதிதாக்கித் தரும் என்பதையும் புரிந்துகொண்டால் நம்முடைய அடுத்த குளியலிலேயே கண்கள் கூடுதல் ஒளி பெறும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner