எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுண்டைக்காயின் கசப்புத் தன்மை காரணமாக, அதன் பெயரைக் கேட்ட வுடனே, காய்ந்த சுண்டை வற்றலைப் போல் பெரும்பாலோரின் முகமும் சுண்டிவிடுகிறது. கசக்கும் சுண்டைக்கு முகம் சுளிக்காமல் உணவில் இடமளிக்க, இனிக்கும் வாழ்வு நிச்சயம்!

காய்கள் சுண்டி விடும் தன்மை கொண்டவை என்பதால், சுண்டை என்ற பெயர் உருவாகியிருக்கலாம். மலைச் சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது. சுண்டை. சுண்டையின் வகைகளில், மலைச் சுண்டை அதிகக் கசப்புச் சுவை கொண் டது, வீட்டுத் தோட்டங்களில் வளரும் பால் சுண்டைக்குக் கசப்புத் தன்மை சிறிது குறைவு. காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் உண்டு.

அடையாளம்: ஓரளவு வளரும் பெருஞ்செடி வகை. அகன்று விரிந்த இலைகளில் சிறிய பிளவுகள் தென்படும். வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டி ருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். முட்கள் கொண்ட தாவரம். சுண்டையின் தாவரவியல் பெயர் சொலானம் டார்வம்.

உலர்ந்த சுண்டைக் காய்களைப் பிளந்து, உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம்.

குடல் பகுதிகளில் இருக்கும் கிருமி களை அழித்து, செரிமானப் பாதையைப் பாதுகாக்கும் சுண்டை. கழிச்சல் நோயைக் கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலைப் பொடியாக்கி, மோரில் கலந்து சாப்பிடலாம். மந்தமான வயிற்றின் செயல்பாடுகளை விரைவு படுத்தவும் இது உதவுகிறது. சுண்டையின் கசப்புச் சுவையை ஈடுகட்ட, பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டலாம்.

மருந்தாக: இதன் காய்களுக்கு நுண் ணுயிர்க்கொல்லி செய்கை இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.

சுண்டையிலுள்ள டார்வனால், டார்வோசைட் போன்ற தாவர வேதிப் பொருட்கள், சில வகையான வைரஸ் களுக்கு எதிராகச் செயல்பட உதவு கின்றன. அதிக அளவு அமிலச் சுரப்பு களிலிருந்து வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் சளி திரவத்தை  சுரக்கச் செய்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் இதன் இலைச் சாறு தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீட்டு மருத்துவம்: முதிர்ந்த சுண்டை யின் பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி குறையும். முதிராத சுண்டையைச் சமைத்துச் சாப்பிட சளி, இருமல் மறையும். பசியைத் தூண்டுவதற்கான சித்த மருந்துகளில் சுண்டைக்காய் சேர்க்கப்படுகிறது.

சுண்டை வற்றல் சூரணம் எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை இவற்றை லேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக் கொண்டு, அய்ந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்தினால் கழிச்சலும் ஆசனவாய் எரிச்சலும் குறையும். நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம்.

தயிரோடு சேர்ந்து உலர்ந்து கொண் டிருந்த சுண்டை வற்றலை வீடுகளில் பார்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. சுண்டைக்காய் புளிக் குழம்பின் ருசியில் மயங்கிய கடந்த தலைமுறைக்கு, செரி மான நோய்களின் எண்ணிக்கை குறை வாக இருந்தது. வயிற்றுக்குள் குறுகுறு வென நடனமாடும் புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியைச் சுத்தம் செய்ய, சுண்டையைவிடச் சிறந்த உணவு இல்லை என்பதை இந்தத் தலைமுறையும் புரிந்து கொண்டால் செரிமான நோய்கள் தலை காட்டாது. சாப்பிட்டுப் பாருங்கள்.

உங்களுக்கு தெரியுமா?

* அவரை உணவு அதிக ஆயுளைக் கொடுப்பதாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. சோயா பீன்ஸ் சாப்பிடும் ஜப்பானியர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் பட்டாணி சாப்பிட்டால் அதிக காலம் வாழமுடியும் என்று நம்புகிறார்கள். மத்தியத் தரைக்கடல் நாட்டவர்கள் துவரம் பருப்பு, காராமணி, கொண்டைக்கடலையைச் சாப்பிட்டு நீண்டகாலம் உயிர் வாழ்கின்றனர்.

* புற்றுநோய் கிருமிகளை இஞ்சி கொல்வதாக மிச்சிகன் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது. கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளை போல இஞ்சி கூடுதல் பலனளிப்பதாகச் சொல்லப்படுகிறது.

முக வாதம் வரக் காரணம் என்ன?

முகத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தசைகள் மொத்தமும் திடீரென்று பலவீனமடைந்து செயலிழப்பதை முக வாதம் என்கிறோம். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், எந்த வயதிலும் வரலாம். இது திடீரென்று வருவதால், மூளைக்குள்தான் ஏதோ பிரச்சினை ஆகி விட்டது என்றும், பக்கவாதம்  வந்துவிடுமோ என்றும் பலரும் பலவாறு பயப்படுவது வழக்கம். ஆனால் அப் படியல்ல. இது நரம்பு தொடர்பான பிரச்சினை. நிரந்தரப் பிரச்சினையும் அல்ல, தற்காலிகமான பிரச்சினைதான். இதற்காகப் பயப்படவோ கலவரப் படவோ தேவையில் லை.

எது முக வாதம்?

மூளையிலிருந்து முகத்துக்கு ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு முக நரம்பு வருகிறது. முக எலும்பின் குறுகிய துளை வழியாக இது முகத்துக்கு வருகிறது. அந்தந்தப் பகுதிக்கு வரும் முக நரம்புகள் அங்குள்ள தசைகளின் இயக்கத் துக்குத் துணைபோகின்றன. இந்த நரம்பு ஏதாவது ஒரு காரணத்தால் பாதிக்கப்படுமானால், அது நிர்வகிக்கும் முகத்தின் தசைகள் இயங்காமல் போகும். அப்போது முகத்தின் அந்தப் பக்கத்தில் மட்டும் முக வாதம் ஏற்படும்.

காரணம் என்ன?

பலரும் தவறாக எண்ணுவதுபோல் இது உயர் ரத்த அழுத்தம் காரணமாக வருவதில்லை. பெரும்பாலும் இது வைரஸ் கிருமிகளின் பாதிப்பால்தான் வருகிறது. நெஞ்சுச்சளியை ஏற்படுத்தும் அடினோ வைரஸ், ஃபுளு வைரஸ், சிற்றம்மை வைரஸ், ரூபெல்லா வைரஸ், அம்மைக்கட்டு வைரஸ் எனப் பலதரப்பட்ட வைரஸ்கள் இதற்குக் காரணமாகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று முக நரம்பைப் பாதிக்கும்போது, அந்த நரம்பில் அழற்சி ஏற்பட்டு வீங்கிக்கொள்கிறது. அப்போது நரம்பின் செயல்பாடு தற்காலிகமாக நின்றுவிடுகிறது. அதனால் முக வாதம் வருகிறது. சிலருக்கு இன்ன காரணம் எனத் தெரியாமலே இது வருவதும் உண்டு.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?

 

பொதுவாக, அடிக்கடி சளி ஏற்படும் நபர்களுக்கும், குளிர்ச்சியான சூழலில் குடியிருப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும், முதியோருக்கும் இது ஏற்படுகிற வாய்ப்பு அதிகம். கர்ப்பிணிகளுக்கு மூன்றாவது மும் மாதங்களிலும், பிரசவத்துக்குப் பிறகு முதல் வாரத்திலும் இது ஏற்படுவது வழக்கம்.

அறிகுறிகள் என்ன?

திடீரென்று முகத்தில் ஒரு பக்கம் செயல்படாமல் போகும். வாயைத் திறந்தால் கோணலாகும். சிரிக்க முடியாது. பாதிப்புள்ள முகத்தில் கண்ணை மூடுவதற்குச் சிரமம் ஏற்படும். கண்ணில் நீர் வடியும் அல்லது கண் உலர்ந்துவிடும். வாயின் ஓர் ஓரத்தில் எச்சில் வடியும். சிலருக்குத் தலைவலிக்கும். இன்னும் சிலருக்குத் தாடை வலிக்கும். காதுக்குப் பின்புறம்கூட வலி ஏற்படலாம்.

பெரும்பாலும் ஒரு சில வாரங்களில் இந்த அறிகுறிகள் எல்லாம் குறைந்துவிடும். ஆனால், பாதிப்பு முழுமையாகக் குணமாக 6 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். மிகச் சிலருக்கு மட்டும் முக நரம்பு முழுவதுமாகச் சிதைந்துபோகும். அப்போது, பாதிக்கப்பட்ட பக்கத்தில் கண்ணை மூடுவதில் சிரமம் தொடரக் கூடும். கண் மிகவும் உலர்ந்துவிடும். கண்ணின் கார்னியாவில் புண் ஏற்பட்டு, பார்வையிலும் பிரச்சினை உண்டாகலாம்.

என்ன பரிசோதனைகள்?

முக வாதத்துக்கு எனச் சிறப்புப் பரிசோதனைகள் எதுவும் இல்லை. வழக்கமான உடலின் பொதுத் தகுதியைக் கணிக்கும் ரத்தப் பரிசோதனைகளும் நீரிழிவுக்கான ரத்தப் பரிசோதனைகளும்தாம் முதலில் தேவைப்படும். பாதிப்பின் தீவிரம் குறையவில்லை என்றால், முகத்தசைகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிய இஎம்ஜி பரிசோதனை தேவைப்படும். வேறு ஏதேனும் காரணங்களால் முக நரம்பு அழுத்தப் படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மூளையை சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும் உண்டு.

என்ன சிகிச்சை?

முக நரம்பு வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுவதுதான் பொதுவான சிகிச்சை. வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியானால், மாத்திரையைக் கொடுப்பது உண்டு. வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்துக்குத் தரப்படும். உடலில் நீரிழிவு போன்ற துணை நோய்கள் இருந்தால், அவற்றுக்கும் சிகிச்சை தேவைப்படும்.

நரம்புகளுக்கு ஊட்டம் தருவதற்கு வைட்டமின் பி6, பி12, துத்தநாகம் ஆகியவை கலந்த மாத்திரைகளும் ஊசிகளும் உதவும். கண் உலர்ந்துவிடாமலிருக்கக் கண்ணை ஈரமாக்கும் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். பகலில் கண்ணுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குத் திரை போட்டுக்கொள்வதும் நல்லது.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது, கண்ணுக்கும் முகத் தசைகளுக்குமான பயிற்சிகளைத் தொடர்ந்து பொறுமையுடன் மேற்கொள்வதுதான். இவை மிகவும் எளிய பயிற்சிகள்தான் என்பதால், இவற்றை மேற்கொள்வதில் சிரமம் இருக்காது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner