எழுத்துரு அளவு Larger Font Smaller Font


விபத்தில் சிக்கி, அதிக எண்ணிக்கையில் எலும்புகள் முறிந்து விட்டால் அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்ற நிலை இருக்கிறது. பொதுமக்களிடம் மட்டுமல்லாமல், மருத்துவர்களிடமும் இந்த எண்ணமே இருக்கிறது. ஆனால், அறுவை சிகிச்சை எல்லா நேரங் களிலும் அவசியம் இல்லை. மருத்துவத்தில் வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெற்றி கரமான ஒரு மருத்துவ நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்திருக்கிறது. 80 வயது மூதாட்டி ஒருவரை அப்படி காப்பாற்றிய சம்பவத்தைப் பற்றி கூறினார் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயப்பிரகாஷ்.  இது மக்களுக்கும், மருத்துவர்களுக்குமே ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சாலை விபத்து ஒன்றில் சிக்கிய மூதாட்டி ஒருவரை சமீபத்தில் எங்களிடம் கொண்டு வந்தனர். முதலுதவி கொடுத்த பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றோம். அப்பெண்மணியின் உடலை ஸ்கேன் எடுத்தபோது கழுத்துப் பகுதியில் இருந்த எலும்புகளில் மட்டும் 5 முறிவுகள் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. 7 விலா எலும்புகள், தோள்பட்டை எலும்புகள், காலர் எலும்புகளும் முறிந்திருந்தது. மொத்தம் 20 எலும்புகளுக்குமேல் நொறுங்கியிருந்தன. முதுகுத்தண்டு அழுத்தம் அடைந்து, முதுகு எலும்புக்குள் ரத்தம் கசிய ஆரம்பித் திருந்தது. நுரையீரலும் வெடிப்பு ஏற்பட்டு அதற்குள்ளும் ரத்தப்போக்கு இருந்தது பெரிய சவாலாக இருந்தது. இதுபோன்ற சிக்கலான நிலையில் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும். இவர் மிகவும் வயதான பெண்மணி, அவருடைய எல்லா எலும்பு களும் வலுவற்ற நிலையில் வேறு இருந்தது. அதனால், இவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணப்படுத்தும் வழிகளை யோசித்தோம்.

இயற்கையாகவே நம் உடலுக்கு தானாக குணமடையும் சக்தி இருக்கிறது. உடலின் காயங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே ஆறிவிடும். மருத்துவத்தில் இதுதெளிவுடன் செயலின்மை  ஒரு சிகிச்சைமுறை ஆகும். அதன்படி கழுத்தெலும்புக்கு ஒரு பிடிப்பான காலர் மாட்டி விட்டோம். முழு உடலையும் அசைவில்லாமல் பெல்ட் போட்டு படுத்த நிலையில், மூன்று வாரங்கள் வைத்திருந்தோம். நன்றாக ஆறும்வரை பொறுமையுடன் காத்திருந்தோம். இப்படியே அசையாமல் மூன்று வாரம் வைத்தபிறகு, ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அனைத்து எலும்புகளும் சேர்ந்திருந்தது. நுரையீரலில் இருந்த ரத்தக்கசிவு மற்றும் முதுகெலும்புகளில் இருந்த ரத்தமும் மறைந்து விட்டது. பின்னர் நோயாளிக்கு பிஸியோதெரபி சிகிச்சை கொடுத்ததில் ஓரளவு நடக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். பெரும்பாலும் ஹோமியோபதி, நேச்சுரோபதி போன்ற மாற்று மருத்துவத்தில் மட்டுமே இதுபோன்ற அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சைகளைச் செய்வதுண்டு. அலோபதி மருத்துவத்தில் எடுத்த உடனே அறுவை சிகிச்சை செய்வதும் நடக்கிறது. அந்த எண்ணத்தை இரண்டு தரப்பிலுமே மாற்றுவதாக அமைந்தது இந்த சம்பவம். இது எல்லோருக்கும் நம்பிக்கையும், பாடமும் அளிக்கும் ஒரு சிகிச்சையாகவும் இருக்கும் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி!

மூக்கடைப்புக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று பாலிப் என்கிற சதை வளர்ச்சி. மூக்கினுள் விரல் நுழையும் பகுதியில், ஒரு சவ்வுப் படலம் உள்ளது. இதில் ஒவ்வாமை காரணமாகவோ காளான் கிருமிகளின் பாதிப்பினாலோ இங்கு சதை வளர்கிறது. மூக்கில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர் களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் இது வரக்கூடிய சாத்தியம் அதிகம். பார்ப்பதற்கு இது ஓர் உரித்த திராட்சைக் கொத்துபோலிருக்கும்.

இது அருகிலுள்ள சைனஸ் துளைகளை அடைத்துக்கொள்வதால், சைனஸ் அறைகளில் நீர் கோத்துக்கொள்கிறது. இதன் தொடர்ச்சியாக பாலிப், மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படி பாலிப்பும் சைனஸ் பாதிப்பும் போட்டி போட்டுக்கொண்டு தொல்லை கொடுக்கும்போது, மூக்கு அடைத்துக் கொள்வதால், இவர்கள் வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாசனையை முகரும் திறன் குறையும். பெரும்பாலும் இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ஆஸ்துமா பிரச் சினைக்கு ஆளாவதும் உண்டு.

அறுவை சிகிச்சையே வழி

இந்தப் பிரச்சினைக்கு அறுவைசிகிச்சை மூலம் பாலிப்பை அகற்றுவதே சிறந்த வழி. இந்த அறுவைசிகிச்சையைத் திறம்பட மேற்கொள்ளும் மருத்து வரிடம் செல்ல வேண்டியது முக்கியம். மூக்குப் பகுதியை சி.டி. ஸ்கேன் எடுத்து, அதன் வேர் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு, எண்டோஸ்கோப்பி முறையில் அதை வேரோடு அகற்றுவதே தீர்வைத் தரும்.

என்றாலும், பாலிப் மீண்டும் வராது என்று உறுதி கூற முடியாது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஒவ்வாமை. அடுத்தது, காளான் பாதிப்பு. ஒவ்வாமை காரணமாக பாலிப் வளர்ந்திருந்தால், அந்த ஒவ்வாமை எது என்பதைச் சரியாகக் கணித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வாமையை அறிந்து கொள்ள உதவும் சில பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும். பிறகு, அந்த ஒவ்வாமை துளியும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது இயலாதபோது, ஸ்டீராய்டு மருந்துகள் மூலமே ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த வேண்டிவரும்.

காளான் கிருமிகள்

அடுத்ததாக, காளான் கிருமிகளால் பாலிப் ஏற்படும்போது அதை அறுவைசிகிச்சை செய்து அகற்றினாலும், மறுபடியும் அது வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இந்தக் காளான் பாதிப்பில் ரைனோஸ்போரிடியோசிஸ் என்று ஒரு வகை உள்ளது. இது கால்நடைகள் மூலம் நமக்கு வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, கால்நடைகளைக் குளிப்பாட்டும் குளத்திலோ நீர்நிலைகளிலோ நாமும் குளிக்கும் போது, இந்தக் காளான் கிருமிகள் நம் மூக்கினுள் நுழைந்துகொள்கின்றன. இது பூஞ்சை வகையைச் சேர்ந்தது என்பதால், மூக்கில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்திக்கொண்டு நன்கு வளரத் தொடங்கு கின்றன. இது பார்ப்பதற்குப் புற்றுநோய் போலிருக்கும். இந்தச் சதையைத் தொட்டாலோ, அதை எடுக்க முயற்சி செய்தாலோ ரத்தம் கொட்டும். எனவே, இதை ஆபரேஷன் செய்து எடுப்பதற்கு நோயாளிகள் பயப்படுவார்கள்.

இந்த நோய்க்கு இப்போது பலதரப்பட்ட நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. குறிப்பாக, இந்தச் சதையை ஆபரேஷன் செய்து அகற்றிய பிறகு, காட்டரைசேஷன் எனும் மின்சூட்டுச் சிகிச்சையில் அதன் வேர்களை அழிக்க வேண்டும். லேசர் சிகிச்சையும் இதற்கு நல்ல பலன் கொடுக்கும்.

ரைனோஸ்போரிடியோசிஸ் பாதிப்பை ஆரம்பத் திலேயே கவனித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். இந்தக் கிருமிகள் தொற்றியிருப்பவர் களுக்கு ஆரம்பத்தில் மூக்கில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். லேசாக ரத்தம் கொட்டும். ஆனால், இந்த அரிப்பு என்னும் அறிகுறி பொதுவான ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இருக்கும் என்பதால், இந்த நோயைச் சரியாக கணிக்க முடியாமல் போய்விடும். அடுத்ததாக, லேசாக ரத்தம் கொட்டுவதை சில்லு மூக்கு உடைந்துவிட்டது என்று பலர் அலட்சியப் படுத்திவிடுவார்கள். நல்ல அனுபவமுள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவரால் மட்டுமே ஆரம் பத்தில் இதை கணிக்க முடியும். தவிர, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலும் தெரிந்துவிடும்.

கண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத் துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி பானம் குறித்து பார்க்கலாம்.

கொத்துமல்லி சாறு தலா 50 மில்லி எடுத்து, 10 மில்லி தேன் சேர்த்து கலந்து குடித்துவர கண் எரிச்சல் சரியாகும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். ரத்த அழுத்தத்தை குறைத்து சமன்படுத்துகிறது. இதய ஓட்டம் சீராகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை வெளி யேற்றும்.

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்வதால் மாரடைப்பு, கைகால் வலி போன்ற பிரச்சினைகள் சரியாகிறது. மனம், சுவைக்காக உணவில் சேர்க்கப் படுகிறது. கொத்துமல்லி சாறை மேல்பற்றாக போடும்போது உடல் எரிச்சல் குணமாகும். கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்வதால் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்சினையால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. கால் வலி ஏற்படும். அடிபட்டால் அதிகமாக ரத்தம் வெளியேறும். அன்னாசி சாறுடன் சீரகப்பொடி சேர்த்து கலந்து குடித்துவர நரம்பு முடிச்சு விரைவில் குணமாகும்.

வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து!

போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைப் போலவே, வைட்ட மின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து சமீபகாலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.  குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், அவர்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தி, குறை இல்லாத பார்வைத்திறன் ஆகியன இச்சத்தின் மூலமே கிடைக்கிறது. மேலும், குழந்தைகள் உயரமாக வளர்வதற்கும் வைட்டமின் ஏ உதவுகிறது. குழந்தைப் பருவத்தில் வருகிற பார்வை குறைபாட்டை நீக்குவதற்கு வைட்டமின்-ஏ உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ குறைபாடு உள்ளதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே வைட்ட மின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களைக் கொண்ட பெற்றோர் இது போன்ற சொட்டு மருந்து முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை பெற்றும் சொட்டு மருந்து கொடுக்கலாம். இதற்கான கால வரையறை 6 மாதம் முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12 மாதம் உள்ள குழந்தைகளுக்கு மாதத்துக்கு ஒரு முறை, ஒரு லட்சம் யூனிட் தர வேண்டும். 12 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு தடவை 2 லட்சம் யூனிட் வரை வைட்டமின்-ஏ டிராப் கொடுத்து வர வேண்டும் என்ற கணக்கும் இருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner