எழுத்துரு அளவு Larger Font Smaller Font


எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.

வாயுத் தொல்லை எது?

அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப் படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் வாயுத் தொல்லை  என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.

நம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.

வாயு எப்படி வருகிறது?

நாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக் கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங் களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்து வதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?

நாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.

அடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய்  போன்றவற்றால் குடலியக்கம் தடைப்படும்போது வாயு அதிக மாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.

என்ன சிகிச்சை?


வாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல் லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.

வாயுக்கு எதிரிகள்!

மொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.

வாயுவைக் கட்டுப்படுத்த

எண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.

வாய்ப்புண் வருவது ஏன்?

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்; சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும்; காய்ச்சல் வரும்; உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும்.
யாருக்கு வரும்?

குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள வர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். எந்த நேரமும் வேலை, வேலை என்று பரபரப்பாக இருக்கிறவர்களுக்கும், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும்.

காரணம் என்ன?

நீண்ட நாட்களுக்குச் சரிவிகித உணவைச் சாப்பிடாத வர்களுக்கு இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 குறைபாடு ஏற்படும். இதனால் ரத்த வெள்ளை அணுக்கள் குறைந்துவிடும். இதன் விளைவாக உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து வாய்ப்புண் வரும்.

ஆண்களைவிடப் பெண்களுக்கு இந்தத் தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் இவர்களுக்கு வாய்ப்புண் வருகிறது. அடுத்து, இவர்கள் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளும் வாய்ப்புண் ஏற்படக் காரணமாகின்றன.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் முக்கியக் காரணம்தான். உணவு ஒவ்வாமை - குறிப்பாகச் செயற்கை வண்ண உணவுகள் - மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். அதிகமாகக் கவலைப்பட்டாலும் வாய்ப்புண் வரும். உதாரணம், மாணவர்களுக்குத் தேர்வு நேரங்களில் மன அழுத்தம் அதிகரிப்பதால் வாய்ப்புண் வருவது.

வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் வெள்ளை நிறத்தில் வெடிப்புகள் தோன்றும். இரைப்பையில் புண் உள்ளோருக்கு, அங்கே சுரக்கிற அதீத அமிலம் தூக்கத்தில் உணவுக்குழாயைக் கடந்து வாய்க்கு வந்துவிடும். அப்போது தொண்டையிலும் வாயிலும் புண் ஏற்படும்.
கூர்மையான பற்கள் இருந்தால், அவை உள் கன்னத் தைக் குத்தி, புண்ணை உண்டாக்கும். கவனக்குறைவாகச் சாப்பிடும்போது கன்னம் கடிபட்டு வாய்ப்புண் ஏற்படலாம். பல் துலக்கும்போது பிரஷ் குத்துவதால் புண் உண்டாகலாம். செயற்கைப் பற்கள் சரியாகப் பொருந்தவில்லை என்றால், அடிக்கடி வாய்ப்புண் வரும். மிகச் சூடாக காபி, தேநீர் குடித்தால்கூட வாய்ப்புண் வருவதுண்டு. சிலர் வாயின் ஒரு பக்கத்தில் மட்டுமே உணவை மெல்லுவார்கள். இது நாளடைவில் வாய்ப்புண்ணுக்கு வழியமைக்கும்.

என்ன சிகிச்சை?

பெரும்பாலான வாய்ப்புண்கள் சரியான உணவு மூலமே குணமாகி விடும். அதேநேரத்தில், வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு வலி நிவாரணி மாத்திரைகளையும் ஒரு வாரம் சாப்பிட வேண்டும். லாக்டோபேசில்லஸ் மருந்து கலந்த மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான் கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.




.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner