எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. 

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன் னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத்துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.
அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை இம்யூனோகுளோபுலின்  ஈ  என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொரு ளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக் கோட்ரின்  எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்பு கேபிள்தான். 

என்ன காரணம்?


அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும். 

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த் தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்:  உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச்சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப் படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டி பயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத்துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்


அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. 

உடம்பு அரித்தால் ஒரு அவில் போட்டுக்கோ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதே வேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போன்றதாகும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner