எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எனக்குச் சிறு வயதிலிருந்தே கீரை என்றாலே ஒத்துக்கொள்ளாது. சமீபத்தில் நான் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அலைபேசியில் என் நலம் விசாரித்த ஒரு இளம் மருத்துவ நண்பர் தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ளுங்கள், சீக்கிரம் குண மடைவீர்கள் என்றார். கீரை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது எனக் கேள்விப்பட்டி ருக்கிறேன். பொது ஆரோக்கியமும் வலுப் படும் என்பதை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். இது சரியா என்றால்?

இது மிகவும் சரி. வீட்டிலேயே வளர்க்கக் கூடியதும், விலையில் மலிவானதும், வைட்ட மின் மற்றும் தாது சத்துக்கள் மிகுந்ததுமான ஓர் உணவுப் பொருள் இருக்கிறது என்றால், அது கீரைதான். எளிய கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ள விவரம் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. எனவேதான், பலரும் இதை அலட்சியப்படுத்துகின்றனர். பொதுவாக, கீரை அனைவருக்கும் தேவையானதொரு உணவுப் பொருள். என்றாலும் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள், ரத்தசோகை நோய் உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் கட்டாயம் கீரை சாப்பிட வேண்டும்.

ஆர்கானிக் கீரை நல்லது!

ஆர்கானிக் கீரைகள்தான் மிகவும் நல்லது. வீட்டிலேயே வளர்க்கப்படும் கீரையும் நல்லது. வெளியில் வாங்கப்படும் கீரைகள் பெரும் பாலும் அதிகமாகப் பூச்சிக்கொல்லிகளையும் ரசாயன உரங்களையும் பயன்படுத்தி வளர்க் கப்பட்டவை. அவற்றில் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் கெடுதல்கள் பல உண்டு. ஆகவே, அவற்றைத் தவிர்ப்பது நல்லது. வேறு வழி யில்லாமல் அவற்றை வாங்கிப் பயன்படுத் துவதாக இருந்தால், தண்ணீரில் நன்கு அலசி சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். சமைக்கும்போது நன்றாக வெந்த கீரைகள், அவற்றிலுள்ள சத்துக்கள் எல்லாவற்றையும் நமக்குத் தரும். அதற்காக அதிக வெப்ப நிலையில் கீரையை அதிக நேரம் வேக வைக்கவும் கூடாது. அப்படிச் செய்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்து அழிந்துவிடும். பொதுவாகவே கீரைகளில் புரதம், மாவுச்சத்து, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், நீரிழிவு நோயாளிகள் பயமின்றிச் சாப்பிடலாம்.

தினமும் ஒவ்வொரு கீரையைச் சேர்த்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான எல்லா வைட்டமின்களும் தாதுக்களும் கிடைத்து விடும். அதேநேரம், கீரைகளில் அதிக நார்ச் சத்து உள்ளதால், செரிமானமடைய நேரம் ஆகும். இதனால், இரவில் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கீரை சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். சில கீரைகள் சிறுநீரகப் பிரச்சினை அல்லது  மூட்டுவாதப் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆகாது. அவர்கள் மருத்துவர் ஆலோசனைப் படி கீரைகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

பசலைக் கீரை

இது கீரைகளின் அரசன் என அழைக்கப்படுகிறது. காரணம், குறைந்த அளவில் இருந்தாலும் பல சத்துகளைக் கொண்ட கீரை இது. வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், அமினோஅமிலம் எனப் பல சத்துகள் நிறைந்த கீரை. இதைத் தொடர்ந்து சாப்பிடுப வர்களுக்கு வாய்ப் புண்,  இரைப்பைப் புண் வராது. இது உடலுக்கு வலிமை தருகிறது. நோய்த் தொற்றைத் தடுக்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் குணமும் இதற்கு உண்டு. இதை அடிக்கடி சாப்பிடுபவர்களை சிறுநீரகப் பிரச் சினைகள் அண்டுவதற்கு அஞ்சும். பாலூட்டும் பெண்களுக்கு அற்புத உணவு இது.

முருங்கைக் கீரை

இதில் இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் ஆகியவை அதிகமாக உள்ளன. பொட்டாசியம், மெக்னீ சியம், குரோமியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்களும் இதில் தேவைக்கு உள்ளன. இது கண்களுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக மாலைக்கண் நோயாளிகள் தினமும் இதைச் சாப்பிட்டுவர, நோய் குணமாகும். இது ரத்தசோகையைப் போக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. நோய் எதிர்ப் புச் சக்தியை அதிகரிக்கிறது. இரைப்பைப் புண்ணைக் கட்டுப்படுத்துகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது. இதய நோயாளிகள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.

அரைக் கீரை

இதில் கால்சியமும் வைட்டமின் சியும் அதிகம். பீட்டா கரோட்டின், நார்ச் சத்து ஓரள வுக்கு உள்ளது. இரும்புச் சத்து மிக அதிகம். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் கர்ப்பிணி களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் ஏற்ற உணவு இது. புரதம், கலோரிகள் குறைவாக இருப்பதால், உடற்பருமன், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் இதைத் தாராளமாகச் சாப்பிடலாம். இது உணவு செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது.

வெந்தயக் கீரை

இதில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மிக அதிகமாக இருக்கிறது. இரும்புச் சத்தும் நார்ச் சத்தும் ஓரளவு இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோடின் நிறைய இருக்கின்றன. தாமிரம், துத்தநாகம், மக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை தேவைக்கு உள்ளன. பொட் டாசியம் குறைந்த அளவில் உள்ளது. இது பசியைத் தூண்டி செரிமானத்தை அதிகரிக் கிறது. இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் இது சிறந்ததொரு உணவு. இது மூளை நரம்பு களுக்கு நல்லது. சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்ற கீரை.

அகத்திக் கீரை

கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்ல தொரு உணவு. கீரைகளில் அதிக ஆற்றல் தருவதும் இதுதான். பல மருத்துவக் குணங்கள் இந்தக் கீரைக்கு உண்டு. புரதமும் கார் போஹைட்ரேட்டும் ஓரளவுக்கு உள்ளன. இதில் பாஸ்பரஸ் அதிகம் என்பதால், பல் நலன் காக்க உதவுகிறது. வைட்டமின் ஏ சத்தும் இரும்புச் சத்தும் தேவைக்கு உள்ளன. கண் ணுக்கு நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிடுப வர்களுக்கு மாலைக்கண் நோய் குணமாகும். ரத்தசோகை நோயாளிகளுக்கு இது உதவும்.

மணத்தக்காளிக் கீரை

இதில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகமாக இருப்பதால் பொது உடல் ஆரோக் கியத்துக்கு நல்லது. இதைத் தொடர்ந்து சாப் பிட்டு வந்தால், வாய்ப் புண்ணும் இரைப்பைப் புண்ணும் குணமாகும். இதில் ஓரளவுக்குப் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை உள்ளன. ரத்தசோகை உள்ளவர்களுக்கு இது நல்லதொரு கீரை. வாரம் ஒருமுறையாவது குழந்தைகள் இதைச் சாப்பிட பழக்கப்படுத்திவிட வேண்டும்.

புதினா கீரை

செரிமானத்துக்கு ஏற்ற கீரை இது. எல்லா வயதினருக்கும் ஏற்றதும் இதுதான். சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கும் பசியைத் தூண்டி, சாப்பிடவைக்கும். வைட்டமின் ஏ, சி, ரிபோஃபிளேவின், ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் தேவைக்கு உள்ளன. மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், குரோமியம் எனப் பல தாதுக்கள் இதில் அடங்கியுள்ளன. ரத்தசோகையைப் போக்கவும் மலச்சிக் கல்லைத் தீர்க்கவும் இது உதவுகிறது. புதினா வில், மென்தால் எனும் வேதிப்பொருள் உள்ளது, இது சளி  பிடிக்காமல் தடுக்கிறது. மலச்சிக்கலையும் போக்குகிறது.