எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுவாக இறைச்சியை நீர்த்த குழம்பாகச் சமைப்பதற்குப் பதிலாகக் கெட்டியான (கிரேவி) பதத்தில் உண்பதையே பலரும் விரும்புகின்றனர். உணவின் எந்த வகையும் அடர் வடிவத்தில் உள்ளே செல்கிறபோது, அதைச் செரிக்க நமது இரைப்பைக்கு நிறைய நீர் தேவைப்படும். செரிப்பதற்கான நீரை உடலில் இருந்தும் எடுத்துக்கொள்ளும். தாகத்தை உருவாக்கி வெளியில் இருந்தும் நீரை குடிக்கச் செய்யும்.

இது செரிமான மண்டலத்துக்கு ஒரு கூடுதல் வேலை என்பதை நாம் உணர்வதே இல்லை. இந்தக் கூடுதல் வேலையைச் செரிமான மண்டலம் தொடர்ந்து செய்கிறபோது தொய்வுற்று இரைப்பைப் புண், குடல் புண், உணவுக்குழாய் எரிச்சல் போன்ற பல்வேறு இடர்பாடுகளுக்கு உள்ளாகிறது.
எனவே, செரிக்கக் கடினமான இறைச்சி போன்ற உணவு வகைகளை உண்கிறபோது, கூடிய மட்டிலும் நீர்த்த வடிவத்தில் உண்பதுதான் உடலுக்கு நன்மை தரும். உண்ட உணவை உடனடியாகச் செரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கவும் இலகுவாகும்.  பருப்பு வகைகளைத் தோலுடன் சமைப்பதே அதன் சத்துக்களை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்ற முறை என்று முன்னரே பார்த்துள்ளோம். அதுபோல் கோழியையும் தோலுடன் சமைப்பதே சிறந்தது. தோலுக்கும், சதைக்கும் இடையே கொழுப்புப் படலம் இருக்கும். அதைத் தவிர்ப்பதால் மிகைக் கொழுப்பு சேராமல் தவிர்க்கலாம் என்று கருதுவோரும் உண்டு. 

இறைச்சி போன்ற கடினத் தன்மை வாய்ந்த உணவைச் சமைப்பது என்றாலே சேர்மானங்கள் கலந்து, அவற்றை குக்கரில் போட்டு சமைக்கிறார்கள்.  மிகை அழுத்தத்தில் வேகிற உணவுப் பொருள், தனது சத்துக்களை இழந்துவிடும் என்பதை நினைவில் நிறுத்தி, கோழி இறைச்சி சமைக்க மண் பாத்திரத்தையே தெரிவுசெய்வோம்.

மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது. எனவே, உணவுப் பொருளின் உள்ளுக்குள் புழுங்கி வெந்து இணக்கமாக இருக்கிறது. எந்த இறைச்சி ஆனாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும்.