எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காரட் சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றி விடலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவிவருகிறது. இன்றும் அது வலுவாக நம்பப்படுவதற்கு என்ன காரணம்?
ராயல் விமானப் படையும் காரட்டும்

ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளுக்குக் காரட் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் அய்ரோப்பாவில் பாம்புக் கடிக்கும், பால்வினை நோய்க்கும் மருந்தாகக் காரட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர் இரவு நேரத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், இதற்கு அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டு வந்ததுதான் காரணம் என்றும் ஒரு விமானி தெரிவித்தார். தங்கள் நாட்டு விமானப்படையினரின் ஆற்றலுக்கும் - குறிப்பாக இருட்டில்கூடத் தெளிவாகப் பார்த்து எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கும் தினமும் அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதே காரணம் என்றும் பிரிட்டிஷ் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதற்குப் பிறகு காரட் சாப்பிட்டால் பார்வை நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்தது.

உண்மையிலேயே காரட் கண்ணுக்கு நல்லதா? கண்ணுக்குத் தேவையான எல்லாச் சத்தும் காரட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழலாம்.

வைட்டமின் ஏ: பார்வைத் திறனோடு நெருங்கிய தொடர்பு கொண்டது வைட்டமின் ஏ. கீரை, காரட், பால், முட்டை, ஈரல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ இருக்கிறது. சாப்பிடும்போது சக்கையென நினைத்துத் தூர எறிகிறோமே அந்தக் கறிவேப்பிலையிலும் கொத்துமல்லியிலும்தான் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அது நிறைந்துள்ள உணவுகள் உதவும். 40 ஆண்டுகளுக்கு முன் வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாததாலும், போதிய அளவு வைட்டமின் ஏ சத்து கிடைக்காத தாலும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு வயிற்றில் புழுத்தொற்று இருந்தால், வைட்டமின் ஏ சத்தை உடல் கிரகிக்க முடியாத நிலைமை இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.

அரசுத் திட்டம்: வைட்டமின் ஏ சத்துப் பற்றாக் குறைக்கான அறி குறிகள் தெரிந்தவுடன் வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவை அதிகம் உட்கொண்டாலே நிரந்தரப் பார்வையிழப்பைத் தடுத்து விடலாம். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தில் இருந்து, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் அய்ந்து வயதுவரை வைட்டமின் ஏ சத்துத் திரவம் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் / துணைச் சுகாதார நிலையங்கள் மூலம் கொடுக்கப் பட்டது. இன்றும் இத்திட்டம் தொடர்கிறது.

மருத்துவ சிகிச்சையோடு பிசியோதெரபியும் அவசியம்

தசைகள், நரம்புகள் மற்றும் எலும்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, பிஸியோதெரபி பயிற்சிகளையும் இணைத்து தருவது அவசியம். அப்போதுதான் விரைவில் குணமடைய முடியும் என்கிறார் நரம்பியல் இயன்முறை மருத்துவர் மணிவேல். பிஸியோதெரபியில் இருக்கும் வகைகள், அவை எப்போது தேவைப்படும் என்பதைத் தொடர்ந்து கூறுகிறார்.

பிஸியோதெரபி சிகிச்சையில் நோயாளி ஒருவரின் மீட்பு நிலையைச் சார்ந்து இயக்கப் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. இதில் Active, Passive
மற்றும்   Active, Passive என்ற 3 முக்கிய நிலைகளில் பயிற்சிகள் கொடுக்கப் படுகின்றன. ஆக்டிவ் தெரபி என்பது நோயாளிகளை தானாகவே செய்ய வைக்கும் பயிற்சியாகும்.

நோயாளிக்கு ஒரு குறிப்பிட்ட நரம்போ, தசையோ பிடித்துக் கொள்ளும்போது அதை தளர வைப்பதற்காக சில பயிற்சிகளை மருத்துவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அவற்றை தாங்களாகவே செய்து அப்பகுதியை செயல்பட வைக்கும் முறைதான் ஆக்டிவ் பிசியோதெரபி. அதாவது மூளை இடும் கட்டளைகளை ஏற்று உடலின் பகுதிகள் தானாக இயங்கும் முறை.

பாஸிவ் என்பது செயலற்ற நிலையைக் குறிக்கும். மூளையின் கட்டளைகளைப் பெற முடியாமலும், தானாக இயங்காமலும் உடல் செயலற்று இருக்கும் நிலையில் உள்ள நோயாளிக்குக் கொடுக்கப்படும் தெரபி இது. இந்த பாஸிவ் தெரபி நிபுணரின் உதவியோடு செய்யப்படும். ஆக்டிவ் அஸிஸ்டிவ் என்ற மூன்றாவது வகையில் பயிற்சியாளரின் மேற்பார்வையுடன்  நோயாளிகள் செய்வார்கள்.

சில நேரங்களில் கை, கால், தோள்பட்டை மூட்டு இணைப்புகள் இறுக்கமாக இருக்கும். அசைக்க நினைத் தாலும் குறிப்பிட்ட அளவுக்குமேல் அசைக்க முடியாது. இந்நிலையில், திசுக்கள் மற்றும் மூட்டுகளைத் தளர்த்த வெப்பமூட்டும் நடைமுறையை பயன்படுத்தி, உறுப்பு களை அசையவைத்து அவற்றின் இயக்கத்தை மேம் படுத்துவோம் என்றவரிடம், இன்னும் கொஞ்சம் விளக்க மாகச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.

பாஸிவ் என்ற இயக்கமற்ற நிலையிலிருந்து மாறி, நோயாளிகளின் இயக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் நலிவுற்ற தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் கொடுக்கப் படும்.

நீண்ட நாட்கள் அசையாமல் படுத்த நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு தசை மற்றும் மூட்டுகள் மிகவும் நலிவடைந்திருக்கும். நோயாளிகளின் நிலை மையை கருத்தில் கொண்டு, பிற்காலத்தில் தசைகளிலோ, எலும்பு இணைப்புகளிலோ காயங்கள் ஏற்படாத வண்ணம் படிப்படியாக வலுப்படுத்தும் பயிற்சிகளை கொடுப்போம்.
செயலற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு முதுகு மற்றும் மார்பு தசைகள் இறுக்கமாகும். அப் பகுதிகளில் லேசாக தட்டுவதன்() மூலம் தசைகளை தளர்வடையச் செய்வோம். நுரையீரல் செயலற்று இருக்கும் நோயாளிக்கு மார்பை கைகளால் தட்டி சிகிச்சை கொடுப்போம்.

தீவிரமான சிகிச்சைதேவைப்படும் நிலையில் எலக்ட் ரானிக் கருவிகள், மற்ற கருவிகளின் உதவியோடு மார்புப் பகுதிகளில் அதிர்வுகள் கொடுத்து தசைகளை தளர் வடையச் செய்வோம். எலக்ட்ரானிக் அதிர்வுகளால் தசை களின் இறுக்கம் குறையும் போது லேசாக இருமல் வரும்.

இதனால் நுரையீரலில் இறுக்கம் குறைந்து இயல்பான சுவாசம் ஏற்படும். இயல்பு நிலை திரும்பியவுடன் படிப்படி யாக பயிற்சிகளை குறைத்து வருவோம்.
வெளிநாடுகளில் நுரையீரல் பாதிப்புக்கு ஆன்ட்டி  பயாட்டிக் மருந்துகள் கொடுப்பதைத் தவிர்த்து, பிரதான மாக பிஸியோதெரபி பயிற்சிகளையே மேற்கொள் கிறார்கள். நம் நாட்டில்தான் அதிகமான அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகிக்கிறார்கள்.

இதனால் உடல் மருந்துகளுக்கு பழக்கப்பட்டு ஆன்டிபயாடிக் எதிர்ப்புநிலை  உருவாகி விடுகிறது. அதாவது, அதற்குப் பிறகு கொடுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பலன் தராமல் மேலும் அதிக வீரியமுள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும். அதனால், பிசியோதெரபி பயிற்சிகளைப் போதுமான அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொஞ்சம் இஞ்சி...

நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருளான இஞ்சி பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை, பெரும்பாலான வீடுகளில் பித்தம், மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரீதியாக இஞ்சிக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமாரிடம் கேட்டோம்.

பசியின்மை, வாந்தி உணர்வு, வயிறு உப்புசம், மூச்சுத்திணறல், பெருவயிறு(வயிறு வீக்கம்) முடக்குவாதம், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை உஷ்ண தன்மை கொண்ட இஞ்சி குணப்படுத்தும் சக்தி உடையது. பெரு வயிறு பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, வயிற்றின் மேல் பகுதியில் இஞ்சியை அரைத்து தடவி வரலாம். மேலும், சுவை உணர்வு, பாலுணர்வு ஆகியவற்றையும் இஞ்சி அதிகப்படுத்தும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சியை லேகியம் மற்றும் சூரணமாக கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இஞ்சியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்துக்கு ஆர்த்ரக்க ரசாயனம்( என்பது இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர்) எனவும், சூரணத்துக்குத் திரிகடுக சூரணம் எனவும் பெயர்.

இஞ்சியைக் காய வைத்து, சுக்காக மாற்றி சவுபாக்கிய லேகியம் தயாரிக்கிறோம். ஆர்த்ரக்க ரசாயனத்தில் இஞ்சியுடன் வெல்லம், லவங்கப் பட்டை, பச்சிலை(மூலிகை) குருவேர், கோரைக்கிழங்கு, தணியா, தேன் மற்றும் நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இஞ்சியை முக்கிய பொருளாக வைத்து தயாரிக்கப்படும் எல்லா மருந்துகளும் கார சுவை கொண்டவை. ஆகவே, இஞ்சி, சுக்கு போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. முக்கியமாக, அல்சரால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகளை சாப்பிட வேண்டும்.