மருத்துவம்

இன்று பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப் பெரிய சவால் குழந்தைகளைச் சாப்பிட வைப்பதுதான். அவர்களை ஒரு இட்லி சாப்பிடச் செய்வதற்கு நாம் நிறைய சாப்பிட வேண்டியிருக்கும். அவ் வளவு ஆற்றலும் பொறுமையும் தேவைப்படுகிறது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இந்தியக் குழந்தைகளில் சரிபாதி அளவினர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் வாடுகின்றனர். இன்னொரு புறம் மூன்றில் ஒரு பங்குக் குழந்தைகள் அதிக ஊட்டச்சத்தால் உடல் பருத்து அவதிப்படுகின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு, அதிக ஊட்டச்சத்து ஆகிய இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. அதைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளின் ஊட்டச்சத்துப் போதாமை, தேசிய வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கும் என்பதால் மக்களிடம் நல்வாழ்வு குறித்த பிரச்சாரத்தை மத்திய அரசு 1982இல் முன்னெடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்துடன் சில தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தின் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

2011 முதல் தேசிய ஊட்டச்சத்து வாரம் ஏதாவதொரு கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, உணவால் இன்னும் மேம்படுவோம் என்பதை மய்யப் பொருளாகக் கொண்டு தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததற்கு வறுமை மட்டுமே காரணமல்ல. நம் வாழ்க்கை முறை மாற்றத்துக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாரம்பரிய உணவுப் பழக்கம் குறைந்துவரும் சூழலில் பெரும்பாலான வீடுகளில் துரித உணவு, சக்கை உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

குழந்தை பிறந்தது முதலே டப்பாக்களில் அடைக் கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பலரும் வளர்க்கிறார்கள். இதனால் ஒரு குழந்தையின் சீரான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை ஊட்டசத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை.

வறுமையால் ஊட்டச்சத்து கிடைக்காமல் வாடும் குழந்தைகளுக்கு அதைக் கிடைக்கச்செய்வது அரசாங்கத்தின் கடமை. அதேபோல் முறையற்ற உணவுப் பழக்கத்தால் குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்காமலோ அதிக ஊட்டச்சத்துடன் வளர்ந்தாலோ அதற்குப் பெற்றோரே பொறுப்பு.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஊட்டச்சத்து அவசியம். ஆண்களைவிடப் பெண்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். பாலினப் பாகுபாடு இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் சீரான ஊட்டச்சத்தைப் பெற்று வளரும்போதுதான் நாட்டின் மனித வளம் மேம்படும். உணவுப் பழக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலமே இதைச் சரிசெய்ய முடியும். பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறுவது அதன் முதல்படியாக இருக்க வேண்டும்.

இனி கவலையில்லை!

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவே சிறந்தது. கொழுப்பு உடலுக்குக் கெடுதல் எனப் பலர் தவறாகப் பிரச்சாரம் செய்வதை நம்பிப் பலரும் கொழுப்பு உணவை அறவே தவிர்த்துவிடுகின்றனர். இது தவறு. நல்ல கொழுப்பு உடலுக்கு நன்மை தரும்.

தவிர, எதையுமே சரியான அளவில் சாப்பிட்டால் சிக்கல் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் மட்டுமல்ல குறைந்தாலும் கெடுதல்தான். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பயறு வகைகள், சிறுதானியங்கள், இறைச்சி, பால், முட்டை, மீன் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். ரசாயன நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவை சேர்க்கப் பட்ட உணவுப் பொருட்கள் குழந்தைகளின் சாப்பிடும் உணர்வை மட்டுப்படுத்தும். அதனால்தான் பெரும் பாலான குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடிக் கிறார்கள்.

கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களைத் தவிர்த்து வீட்டில் சமைக்கப்படும் ஆரோக்கிய உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே போதும். ஊட்டச்சத்து குறித்த கவலை இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், சமூகப் பணித்துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம்,  திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் "மக்களை நாடி மருத்துவம்" என்ற இலவச பொது மற்றும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் குன்னூர், காந்திபுரம், நகராட்சி நடுநிலைப் பள்ளியில்  9.9.2018 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

பிரபல மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்கள்

இலவச மருத்துவ முகாமில் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

- மருத்துவர் கவுதமன்,

இயக்குநர், பெரியார் மருத்துவக்குழுமம்

இலவச பொது மருத்துவம்  - புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்

குற்றாலம், ஆக.20 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், சமூகப்பணித்துறை, பெரியார் மருத்துவ குழுமம், திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரி திருச்சி ஹர்சமித்ரா புற்று நோய் மருத்துவமனை மற்றும் தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் இணைந்து குற்றாலம் வி.கே.என் மாளிகையில். 03.08.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிமுதல் மதியம் 2.00 மணி வரை இலவச பொதுமருத்துவம் மற்றும் புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரியார் மருத்துவ குழுமத்தின் மருத்துவமனை மருத்துவ குழுவுடன் மருத்துவ முகாமிற்கு 40 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவ சேவை வழங் கினார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற ஏழாவது பெரிய மருத்துவ முகாம் ஆகும். இந்த  மருத்துவ முகாமில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனையில் 50 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். சர்க்கரை நோய் கண்டறியும் சோதனையில் 150 பேர் சோதனை செய்துகொண்டனர் மற்றும் பொது மருத்துவத்தில் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் சிறப்பு அம்சமாக முகாமில் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனையும் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

இந்த மருத்துவ குழுவில் பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத் துவர் ஆர்.கவுதமன் மருத்துவர் எஸ்.பிறை நுதல் செல்வி (பொருளாளர் திராவிடர் கழகம்),  மருத்துவர் டி.எஸ்.அன்பரசன் தென்காசி மருத்துவர் என்.எழில். விருது நகர் மருத்துவர் ரூகி பாவை ஹர்சமித்ரா மருத்துவமனை திருச்சி பி.மந்திரம் ஆய்வக உதவியாளர் தென்காசி, பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள், பணி யாளர்கள், திருச்சி ஹர்சமித்ரா மருத்துவ மனை பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான மருத்துவசேவை வழங்கினார்கள்.

பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் த.ஜானகி இந்த மருத்துவமுகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றிய பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குநர் மருத் துவர் ஆர்.கவுதமன், தென்காசி மாவட்ட திராவிடர் கழகம், திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரி மாணவிகள், பணியாளர்கள். திருச்சி ஹர்சமித்ரா மருத்துவமனை மருத் துவர்கள், பணியாளர்கள் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை புரா திட்ட ஒருங்கிணைப்பாளர் க.முருகேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

“மாறிவரும் வாழ்க்கைமுறை, ஹார்மோன் சுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகி வருகிறது. நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்“ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பரிசோதனைக் கருவிகள் மீதான பயத்தால் பல பெண்கள் பரிசோதனைகளைத் தவிர்க்கின்றனர்.  மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய `மேமோகிராபி`  என்ற சோதனைமுறை பயன்படுத்தப்படுகிறது. `இந்தப் பரிசோதனையின்போது கதிர்வீச்சு வெளிப்படும். சில சமயங்களில் வலியும் ஏற்படலாம்‘ என்ற அச்சமும் பெண்கள் மத்தியில் இருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்திவிட முடியும். ஆனால் பலர் பரிசோதனைக்கு பயந்தே நோயை முற்றச் செய்துவிடுகிறார்கள்.

இந்த நிலையைப் போக்கும் வகையில், கதிர்வீச்சுப் பாதிப்பும் வலியுமின்றி, மார்பகப்புற்றுநோயைக் கண்டறியும் `அய் ப்ரெஸ்ட் ஸ்கேனர்’  என்னும் நவீன கருவி அறிமுகமாகியுள்ளது.

உள்ளங்கை அளவே இருக்கும் இந்தக் கருவியில் பதினாறு சென்சார்கள் உண்டு. இந்தக் கருவியை மார்பின் மீது வைத்தவுடன், அப்பகுதியில் உள்ள திசுக்களைத் திரையில் காட்டும். இந்தக் கருவியுடன் மொபைல் போனை ப்ளூ-டூத் மூலம் இணைத்துக்கொள்ள முடியுமென்பதால், பரிசோதனை முடிந்ததுமே அதன் முழுவிவரம் நமக்குக் கிடைத்துவிடும். சில நிமிடங்களில் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பெற்றுக்கொள்ளலாம். ஏதேனும் அசாதாரணமான திசு வளர்ச்சி இருந்தால், சிவப்பு நிறத்தில் அதை அடையாளம் காட்டும். ஆனால், சிறிய அளவிலான கருவி என்பதால், மார்பின் அனைத்துப் பகுதி களிலும் கருவியை வைத்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டி யிருக்கும். `அய் ப்ரெஸ்ட் ஸ்கேனர்’, அசாதாரண திசு வளர்ச்சியைக் கண்டறியுமே தவிர அதற்கான காரணம் என்ன என்பதைத் தெரி விக்காது. ஆகவே, அசாதாரண திசு வளர்ச்சி இருப்பவர்கள் மட்டும் அல்ட்ரா-சவுண்டு, பயாப்ஸி, மேமோகிராம் போன்ற பரிசோதனைகள் செய்து காரணத்தை அறியவேண்டும்.  ஆனாலும், அவை அனைத் துக்கும் முதன்மையானது, சுயபரிசோதனை. நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள், மாதம் ஒருமுறையாவது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகம், அக்குள் போன்ற எந்தப் பகுதிகளில் எத்தகைய மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சளிப் பிரச்சினைக்கு காரணம்?

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தாம் சைனஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போதும், சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, பாலிப் எனும் மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.

அழற்சியே அடிப்படை

மாசடைந்த காற்றில் வரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும்போது, அங்குள்ள சளிச் சவ்வு வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப் பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான்.

சைனஸ் அறையில் அழற்சி அதிகமாகும்போதும், மூக்கில் சதை வளரும்போதும், இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப் பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.

அறிகுறிகள் என்ன?

அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொது வான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலிக்கும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டை யில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.

பரிசோதனைகள் என்ன?

சைனஸ் தொல்லையைக் கண்டறிய முகத்தை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். இப்போது மூக்கு எண்டாஸ்கோப்பி பரிசோதனை மூலமும் சைனஸ் பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இவற்றுடன் பொதுநலன் அறியும் ரத்தப் பரிசோத னைகள், ஒவ்வாமைக்கான பரிசோத னைகள், சளிப் பரிசோதனைகள் ஆகியவையும் தேவை.

இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையைத்தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த மருத்துவர் களின் பரிந்துரையுடன் சில மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும். ஆனால், இதையே தொடர்ந்து மேற்கொள்வது நல்லதல்ல.

சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது. இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரே யரைப் பயன்படுத்தலாம். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இதைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி, காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகி, சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டி பயாடிக் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

எண்டாஸ்கோப்பி உதவும்!

இதற்கு எண்டாஸ்கோப்பி உதவியுடன், பலூன் சைனுபிளாஸ்டி  எனும் நவீன சிகிச்சை முறையில், முழு நிவாரணம் அளிக்க முடியும். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இது இலவசமாகச் செய்யப்படுகிறது.

செய்யக் கூடாதவை என்ன?

# அய்ஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவு வகைகள் கூடாது

# பனியில் அலையக் கூடாது.

# புகைப்பிடிக்கக் கூடாது.

# புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.

# மூக்குப்பொடி போடக் கூடாது.

# அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.

# விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.

# மூக்கடைப்பைப் போக்கும் சாதாரண இன்ஹேலரை மருத்துவர் கூறாமல் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.

 

நாள் முழுக்க புத்துணர்வைத் தக்க வைக்க..

திறந்துவைக்கப்பட்ட ஜன்னல் கதவுகளின் வழியே படரும் காலைச் சூரிய ஒளி, நமக்குத் தூக்கத்தை வரவைக்கும் மெலடோனின் ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்துகின்றன. உங்கள் படுக்கைக்கு அருகே பூக்களை வைத்திருந்தால் அன்றைய நாள் முழுவதும் நல்ல மனநிலையில் இருப்பீர்கள் என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகம் 2007இல் நடத்திய ஆய்வு.

காப்பி, தேநீர், பழரசம் அருந்தும்முன் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும்.

சரியான காலை உணவு உண்பது அன்றைய நாள் முழுவதும் அதிகமாக உண்பதைத் தடுப்பதற்கு உதவுவதாகச் சொல்கிறது மிசௌரி பல்கலைக்கழகத்தின் ஆய்வு. காலை உணவுக்கு குறைந்த கொழுப்புடைய தயிர், 30 கிராம் பாதாம் பருப்பு ஆகியவற்றை உண்ணப் பரிந்துரைக்கிறது.

அலுவலகத்தின் இருக்கையில்

கணினித் திரை உங்கள் கண்களுக்கு நேராக இருக்க வேண்டும். உங்கள் கைமூட்டுகளையும் கைகளின் மேற்பகுதிகளையும் சம தளத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மிக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மிகுந்த உடல் பருமன், நோய்களுக்குக் காரணமாகும். எனவே, அவ்வப்போது எழுந்து சிறிது தூரம் நடந்து செல்லுங்கள். தொலைபேசியில் பேசும்போது நின்றுகொண்டே பேசுங்கள். முற்பகல் 11 அல்லது மாலை 4 மணிக்கு ஆரோக்கியமான புரதச் சத்து மிகுந்த சிற்றுண்டி எதையாவது சாப்பிடுங்கள். மதிய உணவில் மாவுச்சத்தும்  புரதமும் அதிகமாக இருக்கட்டும். மசூர் பருப்பு, ஒரு வஞ்சிர மீன் அல்லது முட்டை, இரண்டு கப் சாலட் உள்ளிட்டவை உணவில் இருக்கலாம்.

அலுவலக நேரத்துக்குப்பின்

நமது உடலின் வெப்பநிலை உள்ளிட்ட உடல்சார்ந்த அளவீடுகள் பின்மதியப் பொழுதிலும் முன்மாலைப் பொழுதிலும் உச்சத்தை அடைவதாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. எனவே, அலுவலக வேலையை முடித்த பிறகு உடற்பயிற்சி செய்வது நல்லது. வேலை முடிந்தவுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யுங்கள். இதன்மூலம் உங்களது எலும்புகளின் கனிம அடர்த்தியும் தசைகளின் நிறையும் மேம்படுவதோடு, வளர்சிதை மாற்றமும் வேகமும் அதி கரிக்கும். மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவை குறையும்.

அலுவலக நேரம் முடிந்த பின்னும் அலுவல்களைச் செய்துகொண்டி ருக்காதீர்கள். உங்கள் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல பொழுது களைக் கழிப்பது ஆயுட்காலம் 50% அதிகரிக்க உதவும் என்கிறது 2010இல் வெளியான பி.எல்.ஓ.எஸ் மருத்துவ இதழ்.

குறைந்தபட்சம் 6-7 மணி நேரம் உறங்குங்கள். உறக்கக் குறைவால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கடுமையாக பாதிக்கப்படுவதாக வாசிங்டன் பல்கலைக்கழக உடல்நல அறிவியல் துறை 2017இல் வெளியிட்ட ஆய்வு சொல்கிறது. 41% இந்தியர்கள் அளவு கடந்த உடல் பருமனால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இதில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது எனவே உடல் பருமனை குறைப்பதற்கான வழிகளைநாட வேண்டும்.

சமையலில் சுவை மற்றும் மணம் கூட்டுவதற்கு உலர் திராட்சை பயன்படுத்தப்படு கிறது என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த உணவுப்பண்டத்திற்கென மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன.

* பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினருக்கும் ஏற்ற உலர் திராட்சையை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்; உணவு வேளைக்குப் பின்னரும் சாப்பிடலாம்.

* உலர் திராட்சை எளிதாகக் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த ஓர் உணவுப்பொருள். கறுப்பு மற்றும் வெளிர் நிறம் என இரண்டு வகைகள் இதில் உண்டு.

* நேரடியாக சூரிய ஒளியில் உலர வைத்தல், சல்ஃபர் டை ஆக்சைடு என்ற வேதிப்பொருள் சேர்த்து பதப்படுத்துதல், தண்ணீரில் ஊற வைத்து பதப்படுத்துதல் என மூன்றுவிதமாக திராட்சையைப் பதப்படுத்தி உலர் திராட்சையாக மாற்றுகிறார்கள்.

* புளிப்புத்தன்மை, இனிப்பு சுவை இரண்டும் கலந்த உலர் திராட்சையில் தேனின் மருத்துவ குணம் நிறைய உள்ளது.

* விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஏற்ற சத்துணவாக இது திகழ்கிறது. இவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் கலோரி தேவைப்படும்.

* ஒரு கப் உலர் திராட்சை சாப்பிட்டால் 130 கலோரி கிடைக்கும். பயிற்சியின் இடையேயும் பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

* பெண்கள் மெனோபாஸ் காலக்கட்டத்தில், தினமும் 5 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் எலும்பு பலவீனம் அடைவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாட்டை சரி செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

* உலர் திராட்சையை உண்பதால் செரிமான குறைபாடு வராது. மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நோய் எதிர்ப்பு திறனும் அதிகரிக்கும்.

* உலர் திராட்சையில் புரதம் 3 சதவீதமும், நார்ச்சத்து 3.7%-லிருந்து 6.8 சதவிகிதமும் உள்ளன. இவற்றைத் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, மினரல்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் உள்ளன.

* கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு உடல் நலனுக்குத் தீங்கும் உண்டாக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதையும் உலர்திராட்சை குறைக்கிறது. புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உலர்திராட்சைக்கு உண்டு.

* பல் சொத்தை, ஈறு தொடர்பான பிரச்சினைகளையும் சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வளர விடாமல் தடுக்கும்.

* ரசாயனம் சேர்க்கப்பட்டு உலர் திராட்சை பதப்படுத்தப்படும் வாய்ப்பு உண்டு என்பதால் தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்து நன்றாக கழுவிய பின்னர் சாப்பிடுவதே பாதுகாப்பானது.

எப்படி வரும் ஆரோக்கியம்?

உடலுக்கு வடிவம் கொடுப்பதில் தொடங்கி, உடலின் சமநிலையைத் தக்க வைத்துக்கொள்வது வரை அனைத்து செயல்களுக்கும் எலும்புகள் அவசியம் என்பது நமக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்காக எலும்புகளின் ஆரோக்கி யத்தைக் குலைக்கும் விஷயங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்துகொள்வோம்.

உடலியக்கம்

தினமும் உடற்பயிற்சிகள் செய்வோருக்கும், உடலள வில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்போருக்கும் எலும்புகள் ஆரோக்கியமாகவே இருக்கும். உடலுழைப்பே இல்லாதவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் இள வயதிலேயே பாதிக்கப்படும்.

கால்சியம்

எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து அடிப்படை. சிறு வயது முதல் பால் பிடிக்காது, தயிர் பிடிக்காது என்று வளர்பவர்களுக்கும், காய்கறி, பழங்கள், தானியங்கள் எடுத்துக்கொள்ளாதவர்களுக்கும் உடலில் போதுமான அளவு கால்சியம் இருக்காது. அவர்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும். தவிர சிறிய அடிபட்டாலே எலும்பு முறிவு ஏற்படும் அளவுக்கு எலும்புகள் உறுதியின்றி இருக்கும்.

புகை மற்றும் குடிப்பழக்கம்

இந்த இரண்டும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை. புகைப்பழக்கத்தால் எலும்புகளின் அடர்த்தி குறையும். அதே போல தினமும் குடிப்பவர்களுக்கு உடலில் கால்சியம் கிரகிக்கப்படும் தன்மை பாதிக்கப்படுவதால் எலும்புகள் உறுதியிழக்கும்.

பாலினம்

ஆண்களைவிட பெண்களுக்கே எலும்பு தொடர்பான பாதிப்புகள் அதிகம். காரணம் அவர்களுக்கு இயல்பி லேயே ஆண்களைவிட எலும்புத் திசுக்களின் அளவு குறைவு. தவிர மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது மிகவும் சகஜமான ஒன்று. அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படுகிற எலும்புகள் மென்மையாதல் பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புகள் மிக அதிகம்.

உடல் எடை

அதிக உடல் பருமன் இதயம் முதல் எலும்புகள் வரை ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயம். அதே போல சராசரிக்கும் குறைவான உடல் எடை கொண்டவர்களுக்கும் எலும்புகளின் ஆரோக்கியம் சீராக இருக்காது. ஒல்லியாக இருப்பவர்கள் தாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு எலும் புகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

ஹார்மோன் சமநிலையின்மை

தைராய்டு ஹார்மோன்களின் சீரற்ற தன்மையும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு வெகுவாகக் குறைவதும் ஒரு காரணம். மெனோபாஸ்க்கு முன் நீண்ட நாட்களாக மாதவிடாய் வராமலிருப்பதும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை அதிகரிக்கும். ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்ட் டோஸ்டீரோன் என்கிற ஹார்மோன் அளவு குறைவது அவர்களுக்கு எலும்புகளின் உறுதியை பாதிக்கும்.

முறையற்ற உணவுப்பழக்கம்

சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு உண்ணத் தவறுகிறவர்களுக்கு எலும்புகள் ஆரோக்கியம் இழக்கும். உதாரணத்துக்கு உடல் எடை அதிகரிக்குமோ என்கிற பயத்தில் உணவைத் தவிர்ப்பவர்கள், சாப்பிட்டதை உடனே வாந்தி அல்லது பேதி மூலம் வெளியேற்றுகிறவர்கள் போன்றவர்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியம் பாதிக் கப்படும்.

மருத்துவ சிகிச்சைகள்

சில வகை பிரச்சினைகளுக்காக ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும் அதன் விளைவு எலும்புகளின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும். புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்கிற சில மருந்துகளும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம்

மேம்பட என்ன செய்யலாம்?

* கால்சியம் : 19 வயது முதல் 50 வயது வரையிலான ஆண்களுக்கு தினசரி 1000 மி.கி கால்சியமும், 50 வயது முதல் 70 வயது வரையுள்ள பெண்களுக்கும், ஆண் களுக்கும் இந்த அளவு 1200 மி.கி அளவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பாதாம், ப்ரோக்கோலி, சோயா, சாலமன் மற்றும் சார்டைன் வகை மீன்கள் போன்றவற்றில் கால்சியம் அதிகமுள்ளதால் அவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவற்றை எடுத்துக்கொள்வதில் நடைமுறை சிரமங்கள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.

* வைட்டமின் டி : கால்சியம் சத்தை உட்கிரகிக்க வைட்டமின் டி சத்தும் அவசியம். அதை சூரிய வெளிச்சத்திலிருந்து இயற்கையாகப் பெறலாம். இளம் வெயிலில் உடற்பயிற்சி செய்வது, தோட்ட வேலை செய்வது போன்றவை பலனளிக்கும். அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, அதற்கும் மருத்துவரிடம் கேட்டு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ளலாம்.

* உடற்பயிற்சியும் உடலியக்கமும் : எடை தூக்கும் பயிற்சிகள் மிக முக்கியம். நடைப்பயிற்சி நல்லது. ஜாகிங், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது போன்றவை சிறந்த பயிற்சிகள். புகையும் குடியும் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்னும் சில சத்துக்கள்

கால்சியம் மற்றும் வைட்டமின் டி மட்டுமே எலும்பு களின் நலன்காக்க போதுமானவை அல்ல. இவை தவிர வேறு சில சத்துகளும் அவசியம். அதன்படி மக்னீசியம் எலும்புகளின் அடர்த்தி குறைவதை இது தடுக்கும். கீரைகள், பீன்ஸ், நட்ஸ் மற்றும் சீட்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் இருக்கிறது. வைட்டமின் பி எலும்பு முறிவுக் கும், வீக்கத்துக்கும் காரணமான ஹோமோசிஸ்டைனை கட்டுக்குள் வைத் திருக்க வைட்டமின் பி அவசியம். முழுதானியங்கள், பால், முட்டை, கீரை, பழங்களில் இது அதிகமுள்ளது. வைட்டமின் ஏ அளவு குறைந்தாலும், கூடினாலும் எலும்புகளுக்கு நல்லதல்ல. கேரட், ஈரல், வெண்ணெய், முட்டை போன்றவை வைட்டமின் ஏ நிறைந்தவை.புரதம் எலும்புகளின் அடர்த்திக்கு 20 சதவிகிதம் புரதச்சத்து அவசியம். புரதத்தின் அளவும் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

தெரியுமா?!

கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்கும், சர்க் கரை நோய் வராமல் தடுக்கும் என்பதை நாம் கேள்விப் பட்டிருப்போம். இதுபோன்ற நன்மைகளால் கிரீன் டீ பருகு பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கிரீன் டீயில் காணப்படும் பாலிபெனால்ஸ் மூலக்கூறுகள் உடலுக்கு பலவிதங்களில் நன்மை புரிவதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மூலக் கூறுகள் கல்லீரலால் கிரகிக்கப்பட்டு பல்வேறு வளர்சிதை மாற்றப் பணிகளில் பங்கெடுக்கிறது. ரத்தம் மற்றும் தோல் செல்களாலும் இந்த மூலக்கூறுகள் உறிஞ்சப்படுகின்றன.  குடல் பகுதியும் கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறுகளை கிரகிப்பதாக இந்த புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறு உடல் எடை  குறைப்பிற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

Banner
Banner