மருத்துவம்

இன்றைய காலகட்டத்தில் நல்ல சத்தான உணவுகளைத் தவிர்த்து, சக்கைகளை சாப்பிட்டு உடல் நலனைக் கெடுத்துக் கொள்வோர் பெருகிவிட்டனர்.  மேலும் வகை வகையான உணவுகளை ருசிக்கும் ஆர்வம் வேறு பலவிதமான நோய்களுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கிவிட்டது.

இதனை இதனுடன் சேர்த்து சாப்பிடலாம், இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. ருசிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சமைக்கப்படும் உணவுகள், உடலுக்கு சத்து தருவதற்கு பதிலாக நச்சுக்களை உருவாக்கி விடுகின்றன.

ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு ஒரு முறை இருக்கிறது என்கிறது மருத்துவ முறை. ஒன்றாகச் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு களை, அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணக் குறைபாடுகள், ஒவ்வாமை ஏற்படுவதுடன்,  உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கச் செய்து விடும்.

ஒவ்வொரு உணவுக்கும் பிரத்யேக சத்துக் களும், குணநலன்களும், சுவையும் உள்ளது. அவை அத்தன்மைக்கு ஏற்ப ஜீரண மண்ட லத்தில் செயல்படும். சில உணவுகளை சாப்பிட்ட பின் வயிறு உப்பிசம், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக் காரணம் குறிப்பிட்ட உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவினை தெரியாமல் சாப்பிட்ட காரணத்தால், உடல் தன் எதிர்ப்பினை இவ்வாறு தெரிவிக்கிறது.

உதாரணத்துக்கு பாலுடன் வாழைப் பழத்தை சாப்பிடுவது தவறு. பலரும் அது சத்தான உணவு என்றே நினைப்பார்கள். இரண்டும் அதிக சத்துடையவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவற்றை ஒன்றாகச் சாப்பிடும் போது வயிற்றில் ஜீரண உறுப்புக்களை மந்தமாக்கி, இவை டாக்சின் எனப்படும் நச்சுக்களை உருவாக்கி விடும். கேரட்டையும் முள்ளங்கியையும் சேர்த்து சமைக்கக் கூடாது. பாலுடன் சாக்லெட்டைச் சேர்த்து சுவைக்க கூடாது.

அசைவ உணவில் இறைச்சியுடன் வினிகரை சேர்த்து சமைக்கக் கூடாது.  மேலும் எந்த உணவைச் சேர்க்க வேண்டும், எதனைத் தவிர்க்க வேண்டும், எந்தப் பருவத்தில் எவ்வகை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து உணவு பழக்கத்தை முறைப்படுத்திக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது.

முக்கிய உணவுப் பழக்கங்கள்

குளிர் காலங்களில், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளையும், மசாலா மற்றும் எண்ணெய் அதிகமாகவும் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

அதைப்போலவே, வெயில் காலத்தில் புளிப்பு மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நன்றாக பசி எடுக்கும் முன்னரே அதிகளவு உணவினை சாப்பிடக்கூடாது.

சூடான உணவுகளையும் குளிர்ச்சியான உணவையும் கலந்து சாப்பிடக் கூடாது.

சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகள் வரும் போது அதை அடக்கிக் கொண்டு உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பாலில் ஒரு போதும் உப்பு போடக் கூடாது. அதை துவர்ப்பான பழங்களுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது.

சமையல் செய்யும் போது சரியான பதத்தில் உணவினை வேக வைக்க வேண்டும். அரைகுறையாக வெந்த உணவும், அதிகப் படியாக வெந்த உணவும் ஆரோக்கியத்துக்கு கெடுதல்.

அன்றைக்கு சமைத்த உணவை அன்றே பயன்படுத்தி விட வேண்டும். அதிக நேரம் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து, பின்னர் அவ்வுணவை சாப்பிடும் போது அதிலுள்ள சத்துக்கள் பெரும் அளவுக்கு இழக்கப்படும்.


கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழம்  உண்டதும்  உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது.

குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு. பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது. பேரீச்சையில் வைட்டமின்  ஏ  அதிக அளவில் உள்ளது. இது கண்  பார்வைக்கும்,  குடல்  ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசிய மானது.

குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்று நோய்களுக்கு எதிராக செயல் படக் கூடியது பேரீச்சை.

பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை  உற்பத்தி  செய்கிறது.

சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது கருப்பையில் கேளாறுகள் தோன்றும்.  அவர்கள் தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன்  கிடைக்கும்.   சிலருக்கு வாயில் அதிக அளவில் கோழை தோன்றும். பேரீச்சம் பழம் கோழையை  அறுத்து வெளியேற்றும்.

எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம்  உண்பது நல்லது. உடல் பொலிவும், வனப்பும் அற்றவர்கள் தொடர்ந்து சில பேரீச்சம் பழங்களை உண்டு வந்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பெறலாம்.

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனைக்கு பயன்படும் வகையில் கீழ்கண்ட மருத்துவ உபகரணங்களை திராவிடன் நிதி தலைவர் த.க.நடராசன் அவர்கள் இலவசமாக வழங்கி உள்ளார். பொருள் விவரம் வருமாறு:

Folding Type Walker - 1,

Folding Type Bed Pan - 1,

Plastic Tub - 1

மேற்கண்ட பொருட்களை நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.

- நிர்வாகி

பெரியார் மணியம்மை மருத்துவமனை

பெரியார் திடல், சென்னை - 7

மாரடைப்பு வருவதற்கான சூழ் நிலையை ரிஸ்க் ஃபேக்டர்ஸ் என்று சொல்கிறோம். உதாரணமாக, சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், புகை பிடித்தல், மாதவிடாய் நின்றுபோதல் போன்றவற்றைக் கூறலாம்.

மாரடைப்பு ஏற்படுவதை, தவிர்க்க இயலாத சூழ்நிலைகள், தவிர்க்கக் கூடிய சூழ்நிலைகள் என இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

இதில், தவிர்க்க இயலாத சூழ்நிலை என்பது, குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள், உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல், உடலுக்கு அனுமதிக்கப் பட்ட அளவுள்ள கொழுப்பை வைத்தி ருத்தல், உடற்பயிற்சி போன்றவற்றை முறையாகப் பின்பற்றினால் மாரடைப்பு ஏற்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

மாரடைப்பைத் தவிர்க்க புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், இவ்விரு பழக்கங்களையும் முதலில் நிறுத்த வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில், 45 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் நிச்சயம் இவ்விரு பழக்கங்களாகத்தான் இருக்க முடியும்.

 


 

அனைவருக்குமான

உணவு எது?

அம்மாவுக்குத் தினைப் பொங்கல், அப்பாவுக்குக் கேழ்வரகு ரொட்டி, மகனுக்கு வெள்ளை தோசை ரோஸ்ட், அக்காவுக்குப் பழத்துண்டு என ஆளுக்கு ஒரு உணவு தயாரிப்பது நகர்ப்புற வாழ்வில், சிக்கலான வேலை.

சர்க்கரை நோயுள்ளோர் இருக்கும் குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடும்படியான உணவுத் திட் டத்தைப் பற்றிய தெளிவான புரிதலும் இருக்க வேண்டும். வெள்ளைச் சர்க்கரை இல்லாத, திடீர் ரத்தச் சர்க்கரை உயர்வைத்  தராத உணவை, அனைவருமே சாப்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. வீட்டில் உள்ள  எல்லோருமே ஒன்றாக இன்றைக்குக் குதிரைவாலிச் சோறு, ஞவரா (கேரளப் பாரம்பரிய சிவப்பரிசி) அரிசிக் கஞ்சி எனச் சாப்பிடுகையில், சர்க்கரை நோயுள்ளவருக்கு தான் திடீர் என புழல் சிறைக்குப் போன உணர்வைக் கொடுக்காது.

ஏனெனில், சர்க்கரை நோயுள்ளோருக்குக் கொடுக்கப்படும் உணவுக் கட்டுப்பாட்டில், ஒருசிலர் ஒருவித உளவியல் வெறுமையில் தள்ளப்படு கின்றனர்.  மேற்கண்ட பொதுவான, வீட்டிலுள்ளோர் கடைப்பிடிக்கும் உணவுக்கட்டுப்பாட்டு முயற்சி அனைவரையும் நல வாழ்வை நோக்கி நகர்த்தும்.


மாதுளையின் மருத்துவ குணங்கள்

மாதவிலக்கு சீராக கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும் தன்மையும் மாதுளம் பூவிற்கு உண்டு. இதன் பூவுடன் சம அளவு வால் மிளகு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து இடித்து பொடி யாக்கி காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண் களுக்கு தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.

மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த மாதுளை பழத் தோலை அரைத்து புளித்த மோரில் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் மாத விலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை வலி குணமாக மாதுளம் பூவை இடித்து சாறு பிழிந்து, அதை காய்ச்சி வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

சளித்தொல்லை நீங்க மாதுளம் பழச்சாற்றுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்துவந்தால் சளித் தொல்லை தீரும். மலச்சிக்கல்  பிரச்சினை தீர தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை குணமாகும்.

குளிக்கும்போது சோப்புப் போட்டுக்கொள்வது ஆகப் பெரிய குற்றமல்ல. சோப்பின் ரசாயனக் காரம், அது ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தோல் வெகு விரைவிலேயே மீண்டுவிடும். அதனால்தான் உலகம் முழுவதும் நூறாண்டுக்கும் மேலாக சோப்பு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், நாம் உள்ளும் புறமும் பயன்படுத்தும் ரசாயனத்தின் அளவு, உடலைச் சிதைக்கக் கூடியதாக உயர்ந்துகொண்டே போகிறது.

தோலின் மீது மட்டுமே பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறோம். உடலுக்கு ஒவ்வாத எத்தனையோ விதமான தாக்கத்தை, தோல் ஏற்க வேண்டியுள்ளது. இப்போதைக்குக் குளியலை மட்டும் பார்க்கலாம்.

தமிழ் போலவே ஒலிக்கும் ‘சோப்பு’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு மாற்றாக வழலை என்கிறார்கள் தனித் தமிழ் ஆர்வலர்கள். அது வழவழ என்று இருப்பதால் இட்ட காரணப் பெயர். இங்கு அறிமுகமானபோதே, அதன் இடுபொருளை முதன்மைப் பொருளாகக் கொண்டு சவர்க்காரம் என எளிய தமிழ்ப் பெயரிட்டு, பேச்சு வழக்கில் சவுக்காரம் என்றனர் நம் முன்னோர்.

நுண்ணுணர்வு கொண்ட தோலின் மீது தண்ணீரை ஊற்றிய சில நிமிடங்களில் தோல் செல்கள், சவ்வூடுப் பரவலின் மூலம், நீரை உள்நோக்கி ஈர்க்கத் தொடங்குகின்றன. அடுத்து, நாம் சோப்புப் போட்டுத் தேய்க்கத் தொடங்கியதும் அதையும் உள்நோக்கி ஈர்க்கிறது. இப்போது உடலெங்கும் பரவிய சோப்பின் சவர்ச்சுவை நாவிலும் வெளிப்படும்.

என்னாது சோப்பின் சுவை நாவில் தென்படுமா? ஆம். குளியலின்போது நாவில் தென்படும் சோப்பின் சுவைக்குக் காரணம், மனம் விட்டு, வாய் திறந்து பாத்ரூமில் பாடும் போது உட்புகுந்ததல்ல அது. மாறாகத் தோலின் வழியாக செல் இயக்கத்தின் மூலம் உட்புகுந்த சோப்பின் காரத் தன்மையே நாக்கில் வெளிப்படுகிறது.

நாம் சோப்பைத் தோல் முழுவதும்போட வேண்டியதுகூட இல்லை. உடலின் உயிர்ப்புணர்வு துல்லியமாக இருக்குமானால் சோப்பைக் கைகளில் தேய்த்ததும் ஸ்விட்ச் போட்டால் லைட் எரியும் வேகத்தில் நாவின் சுவை மொட்டுக்களைத் தாக்குவதை உணர முடியும். மெய்யாகவே அத்தனை நுட்பமானது நமது தோலின் செல்களும், உடலின்  பிற செல்களும்!

புறச்சூழலின் வெப்பம் அல்லது குளிர்ச்சியை நமது தோல் பெருமளவு தடுத்து நிறுத்த முடியும். ஆனால், தோலின் மீது தொடர்புறுகிற நீர்த்த வடிவிலான எதையும் கடத்துவதைத் தவிர தோலுக்கு வேறு வழியில்லை.

சோப்பு, தோலுக்குப் பதத் தன்மையைத் தரும் எண்ணெய் யையும், அழுக்கையும் சுரண்டி எடுக்கக் கூடிய காரத் தன்மை உடைய சோடாவையும் மூலப் பொருளாகக் கொண்டுள்ளது.

முப்பது விதமான ரசாயனம்

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்பில் எண்ணெய், சோடியம் ஹைடிராக்சைடு எனும் காஸ்டிக் சோடா ஆகிய இரண்டு அடிப்படையான பொருட்களோடு எடையைக் கூட்ட, மாவாக அரைக்கப்பட்ட வெள்ளைப் பாறையும், எண் ணெய்யின் அளவைக் குறைத்து வழவழப்பை அதிகரிக்க, பெட்ரோலியத்தின் உப கூறாகிய மெழுகு, வாசனைக்கு ஒரு ரசாயனம், நிறமிக்கு ஒரு ரசாயனம் என அடுக்கடுக்காகச் சுமார் முப்பது விதமான ரசாயனக் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதில் சோடியம் லாரில்  போன்றவை நம்முடைய தோலில் வெளிப் படும் இறந்த செல்களை நீக்குவதற்குப் பதிலாக, உயிருள்ள செல் களையும் அழித்துவிடுகின்றன.

அதுபோல எந்த சோப்பில் என்ன புற்றுநோய்க் கூறு உள்ளது என்று விழிப்பு பெறல் வேண்டும். நன்மை செய்யும் என்று நினைத்து நாம் பாவிக்கிற பலவும், நன்மை செய்வதில்லை.

எளிய மாற்று வழியாக வாரத்தில் ஓரிரு நாட்களேனும் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அரைப் பிடியளவு கடலைப் பருப்பை எடுத்து, இரவில் ஊற வையுங்கள். அதனோடு ஒரு தேக்கரண்டி வெள்ளைக் குண்டு உளுந்து, அரைத் தேக்கரண்டி வெந்தயம் போடுங்கள். காலையில் சிறு துண்டு தேங்காயை உடன் சேர்த்து, நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

உடல் மீது ஒன்றிரண்டு குவளை நீர் ஊற்றி, அதன் மீது அரைத்து வைத்த மாவைச் சந்தனம் போலத் தடவிவிட்டு, அய்ந்து நிமிடம் முதல் பத்து நிமிடம்வரை ஊறவிடுங்கள். கலவை உலர்ந்து இறுகப் பிடிக்கும் தருணத்தில் தாராளமாக நீர் விட்டுத் தேய்த்துக் குளியுங்கள்.

குளியல் முடித்து வெளியில் வரும்போது காற்றில் புதுக் குளிர்ச்சி பரவி இருப்பதை உணர்வீர்கள். உண்மையில் அது காற்றில் ஏற்பட்ட குளிர்ச்சி அல்ல. உங்கள் சருமத்தின் வியர்வைத் துளைகள் புதுப்பிக்கப் பட்டு அதன் மூலம் புது சுவாசத்தை, உங்கள் தோல் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தோல். தோல்தான் நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு! பலரும் தோலை ஒரு உறுப்பு என்றே கருதுவதில்லை. நாம் இங்கே தோலை முதன்மைப் படுத்திச் சிறப்பு தகுதி அளித்துப் பெருமைப்படுத்தக் காரணம் இருக்கிறது. தோல் நம் உடலின் சதையை மூடிக்கொண்டிருக்கும் வெறும் போர்வை மட்டு மல்ல; பல்வேறு விதமான தனித்த இயக்கம் கொண்ட உறுப்பு.

சராசரி அளவுள்ள மனிதனுக்கு ஒன்றரை முதல் இரண்டு சதுர மீட்டர்வரை விரிந்து பரந்துள்ள தோல்தான் புறச் சூழலுக்கும் நமது உடலுக்குமான எல்லைக் காப்பு அரண்.  புறச் சூழலில் நிலவும் கெட்ட காற்று, மாசு, நீர் அனைத்தும் உடலினுள் புகுந்துவிடாமல் தடுத்து நிறுத்திவைப்பது தோல் தான். வெளியில் வெப்பம், உடலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக நிலவும்போது, உள்ளிருக்கும் நீரை, மேல் தோலுக்கு அனுப்பிக் குளிர்வூட்டி உடல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. புறச் சூழலில் குளிரும் மிகையான ஈரப்பதமும் நிலவுமானால் உள் ளிருந்து வெப்பம் மேல் தோலுக்கு வந்து புறக் குளிர் உள்ளே புகுந்துவிடாமல் பாதுகாக்கிறது தோல்.

வெப்பமோ குளிரோ புறச் சூழலுக்கு ஏற்ற எதிர் சீதோஷ்ணத்தைத் தோலின் மேற்பரப்பு உருவாக்கிக் கொள்கிறது. அடித் தோலில் படர்ந்திருக்கும் கொழுப்பு, மேல் தோலில் உருவாக்கப்பட்ட வெப்பம் அல்லது குளிரைப் புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் நிலைநிறுத்த உதவுகிறது.

இது தோலின் முதன்மைப் பணி. அது நமது உடலியக்கத்தில் ஆற்றும் பல்வேறு பணிகள் குறித்து அடுத்தடுத்துப் பார்க்கலாம். தோலைப் பராமரிக்க நாம் செய்வது என்ன?

அன்றாடம் குளிக்கிறோம். குளித்தல் என்பது புறத்தில் நம் தோலில் படியும் அழுக்கை நீக்கும் நட வடிக்கை என்றே நம்மில் பலரும் கருதிக்கொண்டி ருக்கிறோம். ஏதோ பாத்திரத்தின் பற்றைத் துலக்குவது போல, உடல் நுரைக்க சோப்பு போட்டுத் தேய்க்கிறோம். மேலும் மேலும் நுரைப்பதற்கென்று நைலான் நாறு போட்டும், வெட்டிவேர் நாறு போட்டும் தேய்க்கிறவர்கள் உண்டு. இன்னும் சிலரோ போனமா, குளிச்சோமா, வந்தோமான்னு இருக்கணும் என்று சோப்பு வாசனை காட்டுவதற் காகவே குளிப்பதும் உண்டு.

உண்மையில் நமது உடலில் புறத்தில் இருந்து தோல் மீது படியும் அழுக்கைவிட, உள்ளிருந்து வியர்வை வடிவத்திலும் இறந்த செல்கள் வடிவத்திலும் படியும் அழுக்குதான் அதிகம்.

அழுக்கை நீக்குவதற்காகத்தான் குளிப்பது என்றால், புறத் தூசி படியாத வண்ணம் ஏ.சி. காரில் பயணித்து, ஏ.சி. அறையில் அமர்ந்து, உடல் அழுக்காகாத, வியர்வை வடியாத வேலையைச் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து உண்டு களைத்து, உறங்கி எழுபவருக்கு குளியல் தேவையில்லை. கறுத்த எண்ணெய்யும், கெட்டியான மசகு கிரீசும் படிய வேலை செய்பவர்களும், வியர்வைச் சொட்டச் சொட்ட ஓடியாடி வேலை செய்பவர்களும் மட்டும் குளித்தால் போதுமானது.

நமது தோலைப் பராமரிப்பது ஒரு பெரிய உறுப்பைப் பராமரிப்பது மட்டுமே அல்ல. தோலின் வாயிலாக நமது உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிக்கவும், தோலின் மூல உறுப்புகளைப் பாதுகாக்கவும் செய்கிறோம். தோலைப் பாதுகாப்பது குளியலில் இருந்தே தொடங்குகிறது.

ரசாயனக் கலப்பில்லாத கைக்கு எட்டும் தொலைவில் கிடைக்கிற இயற்கைப் பராமரிப்பு முறைகள் நிறைய உண்டு. முதலில் குளியல் என்பது அழுக்கு நீக்குதல் மட்டுமே அல்ல. அது குளிர் வித்தலின் மூலமாக உடலுக்குப் புத்துணர்வு தருவது என்ற அடிப்படை உண்மையையும், நிதானமான குளியலே அந்த நாளை நமக்குப் புதிதாக்கித் தரும் என்பதையும் புரிந்துகொண்டால் நம்முடைய அடுத்த குளியலிலேயே கண்கள் கூடுதல் ஒளி பெறும்.

Banner
Banner