மருத்துவம்

பயறின் உள்கூறாகிய பருப்பு, மாவுத்தன்மை மிக்கது. மாவுக் கட்டமைப்பை உடைய உணவுப் பண்டங்கள் அமிலச் சுவையை அளிக்கும். அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள் அனைத்துமே இறுதியில் மாவாக்கப்பட்ட பின்னரே செரிமானச் செயல்பாடுகள் தொடங்கும்.

பருப்பின் மேல்கூடாகிய தோல் நார்ப்பண்பு மிகுந்தது. ஒரு பண்டத்தின் இறுதிக்கூறு நார்க் கட்டமைப்பைக் கொண்டிருந்தால், அது நம் உடலுக்குக் காரச் சுவையை அளிக்கும். அமிலச் சுவை சதைக் கட்டமைப்பை வளர்க்கவும், பராமரிக்கவும் உதவியாக இருக்கும். காரச் சுவை, அமிலத்தின் தீவிரத்தைத் தணிப்பதோடு உடலின் அடிக்கட்டுமானமாகிய எலும்புக்கு உறுதியை அளிக்கும், உயிராற்றலைப் பெருக்கும்.

இன்றுள்ள உடலுழைப்பு இல்லாத சோம்பல் பண்பு மிகுந்த வாழ்க்கை முறையில், பற்களுக்கு மெல்லும் வேலையளிக்காத மாவுத் தன்மை உடைய உணவுப் பண்டங்களையே தொடர்ந்து உண்டுவருகிறோம். மாவின் அமிலத் தன்மையைத் தணிக்கும் நார்த்தன்மையுள்ள உணவு, நம் உணவில் அறவே இல்லை என்று கூறலாம்.

நம் உணவில் முடிந்த மட்டிலும் நார்த்தன்மை உள்ளவற்றைச் சேர்த்துக்கொண்டால், அது உடலில் மிகுந்திருக்கும் அமிலத் தன்மையைத் தணிக்கும்.

நாம் அடிக்கடி பாவிக்கிற துவரை, உளுந்து, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவை தோல் நீக்கிய வடிவத்தில்தான் இன்றைய இயந்திர யுகத்தில் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு காராமணி, மொச்சை, முழுக் கொண்டைக்கடலை ஆகியவற்றை வாரத்தில் ஓரிரு முறையேனும் பயன்படுத்துவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பயறுகளின் நார்ப் பண்பு உயிராற்றலை வழங்கு வதோடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. வயிறு சுத்தமாக இருந்தால் உடலில் தொல்லைகளுக்கு இடமில்லை.

மொச்சையோ காராமணியோ உண்டால் எனக்கு வாயுத் தொல்லை உருவாகும் என்று சிலர் சொல்லக் கூடும். உண்மையில் அதற்கு முன்னரே வாயுக் கலனாக இருக்கிறது நம் உடல். அதனால்தான் அப்பயறுகளை உண்டதும் கிளர்ச்சியுற்று காற்று வெளிப்படுகிறது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் சேர்ந்திருக்கும் தீய காற்றை நீக்குவதுதானே தவிர, வாயுப் பண்டங்கள் என்று அபாண்டப் பழி சுமத்தப்பட்டவற்றைத் தவிர்ப்பது அல்ல.

அவ்வாறு தவிர்த்துக்கொண்டே போவதன் மூலமாக உடல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுதான் போகுமே தவிர, அதன் நலன் மேம்படாது.  

இப்போது பயறைப் பற்றிய முக்கியமான ஒன்றைக் கடைசியாகப் பார்த்துவிடுவோம். துவர்ப்புச் சுவையும் நார்த்தன்மையும் மிகுந்த பயறு, பொதுவாக நம் உணவுப் பட்டியலில் இடம்பெறாத ஒன்று. அது விலையிலும் மலிவு, சமைப்பதும் எளிது அது என்ன பயறு?
கொள்ளு. இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்த வனுக்குக் கொள்ளு என்பது நம்முடைய நாட்டுப்புற வழக்கு.

ஆடிப்பருவத்தில் போதிய மழையின்றி விதைப்பு தவறிப் போனால் புரட்டாசி, அய்ப்பசியில் கொள்ளை மேல் தூவலாகத் தூவிவிட்டால் கார்த்திகை, மார்கழிப் பனியில் காய் பற்றி, தை மாதத்தில் விவசாயிகளின் கைக்குத் துணையாக வீடு வந்து சேரும் எளிய பயிர் கொள்ளு. ஆனால், அதன் சத்துப் பலனோ அளப்பரியது.

தற்கால வாழ்க்கை முறையால் உடல் பருமன் மிகப் பரவலான ஒன்றாகி விட்டது. உடல் பருமனைக் கரைக்க உலகெங்கும் எளிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பலவீனமடையாமல் உடல் இளைப்பதற்கான சிறந்த வழி உணவில் கொள்ளைச் சேர்த்துக்கொள்வதே!
தொடர் சளித் தொல்லை, ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் கொள்ளு சாப்பிட்டுப் பழகிவிட்டால் மிக எளிதாக அவற்றிலிருந்து மீண்டு விடுவார்கள்.

தங்கப் பல் அடைப்பு, பெரும்பாலும் செலவு பிடிக்கக் கூடியது என்பதால், பலரும் மெட்டாலிக் பல் அடைப்புகளை நாடுகிறார்கள். அதிலும், பாதரசத்தைப் பயன்படுத்தி அடைக்கப்படும் சில்வர் அமால்கம் வகையைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.

பாதரசம் என்பது ஆபத்தான திரவ ரசாயனப் பொருள். நரம்பு மண்டலங்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பாதரசத்தின் அளவு அதிகமானால், அது உடலுக்குப் பல பிரச்சினைகளைக் கொண்டு வரும். அதை முகர்ந்து பார்ப்பதுகூட மிகவும் ஆபத்து. பல் மருத்துவர், பல் அடைப்புக்கான பொருள்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆகியோரால் முறையானபடி பாதுகாப்பாகக் கையாளப்படும் பட்சத்தில், பாதரசப் பல்ல டைப்பால் பிரச்சினை இருக்காது.

பல்லடைப்புக்குப்பாதரசத்தைநேரடி

யாகப்பயன்படுத்துவதில்லை.வெள்ளிஉள்ளிட்ட உலோகங்களுடன் கலந்துதான் பயன்படுத்தப் படுகிறது. கையாலோ அல்லது இயந்திரத்தைக் கொண்டோஇந்தக்கலவையைப்பல்மருத் துவர்கள் உருவாக்குகிறார்கள். பல் மருத்துவ மனையில், இந்த அளவுக்குத்தான் பாதரசம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சில விதி முறைகள் இருக்கின்றன. பல் மருத்துவர்கள் அதன்படிதான் கலவையை உருவாக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவை, சொத்தைப் பல்லில் வைத்து அடைக்கப்படும்.

பாதரசப் பல்லடைப்பால் நரம்பு மண்டலச் சீர்குலைவு, உடல் அசதி, எடை குறைவு, செரி மானமின்மை போன்ற நாள்பட்ட பாதிப்புகளும், வாந்தி, தள்ளாட்டம், சுவாசக் கோளாறுகள் போன்ற குறுகிய கால பாதிப்புகளும், வயிற்றுப்போக்கு, தும்மல் போன்ற கடுமையான பாதிப்புகளும் ஏற் படுவதற்குச் சாத்தியம் உண்டு.


பேதிக்குக்கொடுக்கப்படும்மாத்திரைக ளும்திரவமருந்துகளும்மலத்தைஎளிதில் வெளியேற்றஉதவுகின்றன.முக்கியமாக, மலச்சிக்கல்ஏற்படும்போதும்,மலத்தை வெளி யேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இந்த மருந்துகளில் பலவிதம் உண்டு. ஒவ் வொன்றும் ஒவ்வொரு வழியில் செயல்பட்டு, குடலியக்கத்தைத் தூண்டி, மலத்தை வெளி யேற்ற உதவுகின்றன. ஆனால், இந்த மருந்து களால் குடல் புழுக்களை வெளியேற்ற முடியாது. இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், புழுக்களின் வளர்ச்சிப் புராணம் தெரிந்திருக்க வேண்டும்.

புழுக்கள் வளரும் விதம்

குடல் புழுக்களில் உருண்டைப் புழு, கொக்கிப் புழு, நூல் புழு, சாட்டைப் புழு, நாடா புழு எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையிலும் ஆண், பெண் என இரண்டு இனமுண்டு. பெண் புழு இடும் முட்டைகள் மனித மலத்தின் வழியாக நிலத்துக்கு வந்து, மண்ணோடு மண்ணாகக் கலந்துவிடும். குழந்தைகள் விளையாடும்போது கை விரல் நகங்களில், அவை புகுந்துகொள்ளும். கைகளைச் சுத்தப்படுத்தாமல் உணவைச் சாப்பிடும்போது, உணவுடன் முட்டைகள் சிறுகுடலுக்குச் சென்று, லார்வாக்கள் எனும் தோற்றுவளரிகளைப் பொரிக்கும்.

ஒவ்வொரு லார்வாவும் சிறுகுடலின் சுவரைத் துளைத்து, ரத்தத்தில் கலந்து, கல் லீரலுக்குச் சென்று, சுமார் நான்கு நாஷ்யீகள் அங்கே தங்கும். பிறகு, அங்கிருந்து இதயத் துக்குச் சென்று நுரையீரலுக்குள் நுழையும். அங்கிருந்து உணவுக் குழாய்க்கு வரும். மீண்டும் இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து சேரும் இந்தச் சுற்றுலாவுக்கு, மூன்று மாதங்கள் எடுக்கும். அதற்குள் லார்வா கட்டத்தில் இருந் தவை முழுப் புழுக்களாக வளர்ந்துவிடும். அதற்குப் பிறகுதான் உடலுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கும்.

பாதத்தைத் துளைக்கும் புழு

கொக்கிப் புழுவின் லார்வாக்கள் மட்டும் நம் பாதத்தைத் துளைத்துக் கொண்டு நேரடி யாகவே ரத்தத்தில் கலந்து, கல்லீரலுக்குச் சென்று இதயம், நுரையீரல், உணவுக்குழாய், இரைப்பை வழியாகக் குடலுக்கு வந்து, முழு புழுக்களாக வளர்ந்து பிரச்சினைகளை உரு வாக்குகின்றன.
இப்படிக் குடல் புழுக்கள் முட்டை, லார்வா, புழு என மூன்று பிறப்புகளை எடுத்திருக்கும். நம் குடலில் மட்டுமில்லாமல் உடலின் பல பகுதிகளில் இவை சுற்றிக்கொண்டிருக்கும். இவற்றில் முட்டையும் லார்வாவும் குட லின் சுவர்களில் அட்டைப் பூச்சிபோல் ஒட்டிக்கொண்டிருக்கும். கொக்கிப் புழுக்களின் வாயில்கொக்கிபோன்றஅமைப்புகள்இருப்ப தால், சுவரில் ஆணி அடித்துத் தொங்க விட்டதுபோல் குடல் சுவரில் அவை தொங்கிக் கொண்டிருக்கும். ஆகவே, குடல் புழுக்களைப் பேதி மருந்து கொடுத்து ஒழிக்க முடியாது.

என்ன செய்யவேண்டும்?

குடல் புழுவை ஒழிப்பதற்கான மருந்துகள் பெரியவர்களுக்கு மாத்திரையாகவும், குழந் தைகளுக்குத் திரவ வடிவ மருந்தாகவும் கிடைக்கின்றன. சுயமாக மருந்து கடைகளில் மாத்திரை வாங்குவதைவிட, எந்தப் புழுவின் பாதிப்புள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத் துவர் பரிந்துரைப்படி மருந்து சாப்பிட்டால் குடல் புழுக்கள் 90 சதவீதம் ஒழிந்துவிடும்.
முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இதில் உள்ளது. குடல் புழு பிரச்சினைக்கு முதலில் சாப்பிடும் மாத்திரையோடு பலரும் சிகிச்சையை நிறுத்திக் கொள்கின்றனர். இந்த மாத்திரையின் பலனால், குடலில் முழு வளர்ச்சி பெற்ற புழுக்கள் மட் டுமே இறக்கும். உடலில் லார்வா பருவத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் புழுக்கள் முதலில் சாப்பிட்டமாத்திரையால்அழிவதில்லை. இந்த லார்வாக்கள் புழுக்களாக வளர்ச்சி பெற்று குடலுக்கு வந்ததும் மறுபடியும் தொல்லை கொடுக்கும்.

சுத்தம் மிக முக்கியம்!

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முதலில்ஒருமுறை மாத்திரை/மருந்துசாப் பிட்ட பிறகு, இரண்டிலிருந்து  மூன்று வாரங்களுக்குள் மறுபடியும் ஒருமுறை குடல் புழுவுக்கு மாத்திரை/ மருந்து சாப்பிட வேண்டும். இப்படி ஒரு பின் சிகிச்சையை எடுக்கத் தவறுவதால்தான் பலருக்கும் குடல் புழு தொல்லை நீடிக்கிறது.

மேலும், குடும்பத்தினர் அனைவரும் ஒரே வேளையில் குடல் புழுவுக்குச் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்குக்குடல்புழுவுக்கானஅறி குறிகள் இல்லை என்றாலும்கூட, இப்படி சிகிச்சை எடுக்கலாம். தவறில்லை. எல்லாவற்றையும்விட முக்கியமானது: சுயசுத்தம் காப்பது, குறிப்பாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, வெளியில் செல்லும்போது காலணி அணிந்து கொள்வதுதான் குடல் புழுத் தொல்லைக்கு 100 சதவீதம் முடிவு கட்டும்.


ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை முன்னரே தெரிவிக்க பயோமார்க்கர் பரிசோதனை உள்ளது. இது அனைவருக்கும் அவசியமில்லை. முதலில் பயோமார்க்கர் என்றால் என்ன என்று பார்ப்போம்.

பயோமார்க்கர் - எச்சரிக்கை மணி

உடலில் குறிப்பிட்ட நோய் உள்ளது அல்லது நோய் வர வாய்ப்புள்ளது என்பதை உறுதிப்படுத்தும் உடலியல் உயிர்ப் பொருளுக்கு ‘பயோமார்க்கர்’ என்று பெயர். இது புரதம், கொழுப்பு, மரபணு, என்சைம் என எதுவாகவும் இருக்கலாம். களவுபோன வீட்டில் கைரேகைகளைப் பார்த்துத் திருடனைக் கண்டுபிடிப்பதுபோல, ஒருவர் ரத்தத்தில் குறிப்பிட்ட பயோமார்க்கர் காணப்பட்டால் அவருக்கு அந்த பயோமார்க்கருக்குரிய நோய் உள்ளது என்று முடிவு செய்யப்படும். அதன்மூலம் ஆரம்பகட்டத்தில் உள்ள நோய்களைக் கண்டுபிடித்துத் தடுத்துவிடலாம்.

மாரடைப்புக்கான பயோமார்க்கர்கள் 

1. ஹோமோசிஸ்டீன் பயோமார்க்கர்

ஹோமோசிஸ்டீன் என்பது ஓர் அமினோ அமிலப்புரதம். இது 100 மில்லி ரத்தத்தில் 12 மைக்ரோமோல்ஸுக்குக் கீழ் இருந்தால் இயல்பு அளவு. இது 16 மைக்ரோமோல்ஸ் அல்லது அதற்கும் அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து நான்கு மடங்கு அதிகம் என்று அமெரிக்க இதயநலக் கழகம் உறுதி செய்துள்ளது.

குடும்பத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பால் யாரேனும் மரணம் அடைந்திருந்தால், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே இந்தப் பரிசோதனையை ஆண்டுதோறும் செய்துகொள்வது நல்லது.

2. லிப்போ புரோட்டீன்  ஏ பயோமார்க்கர்

இது ஒரு வகை கொழுப்புப் புரதம். இதயத்துக்குக் கெட்ட கொலஸ்டிராலைச் சுமந்து செல்கிற ரத்த வாகனம். இது தமனி நாளங்களைப் புண்ணாக்கி ரத்த உறைவை அதிகப்படுத்தும். மற்றவர்களைவிட பரம்பரையில் மாரடைப்பு ஏற்பட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள், சிறுநீரகப் பிரச்சினை, ஈஸ்ட்ரோஜன் பிரச்சினை, கட்டுப்படாத நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதன் அளவு அதிகரித்து மாரடைப்பை வரவேற்கும். 100 மில்லி ரத்தத்தில் இது 20-லிருந்து 30 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் இதயத்துக்கு ஆபத்து என்கிறது சர்குலேஷன் எனும் மருத்துவ ஆய்விதழ்.

3. அப்போலிப்போ புரோட்டீன்  பி பயோமார்க்கர்

இதில் இரு வகை உண்டு. அப்போலிப்போ புரோட்டீன்  பி 48, அப்போலிப்போ புரோட்டீன்  பி 100. இரண்டாவதுதான் இதயத்துக்கு ஆபத்தைத் தருகிறது. இதன் அளவு அதிகரித்தாலும் மாரடைப்புக்கு வாய்ப்புள்ளது.

4. ஃபைப்ரினோஜன் பயோமார்க்கர்

நம் ரத்தம் உறைவதற்குத் தேவைப்படும் ஃபைப்ரினோஜன் எனும் சத்துப்பொருள் 100 மில்லி ரத்தத்தில் 150-லிருந்து 400 மில்லி கிராம்வரை இருக்க வேண்டும். இந்த அளவு அதிகமானால் இதயத்துக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். எவ்வாறெனில், இயல்பான ரத்த ஓட்டத்தில் தட்டணுக்கள் தனித்தனியாக ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், ஃபைப்ரினோஜன் அதிகமாக உள்ளவர்களின் ரத்த ஓட்டத்தில் இவை ஒரு திராட்சைப் பழக்கொத்துபோல ஒட்டிக்கொண்டு ஓடும். அப்போது இதயத் தமனி போன்ற மிகச் சிறிய ரத்தநாளங்கள் எளிதில் அடைத்துக்கொள்ளும், இதனால் மாரடைப்பு ஏற்படும்.

5. ட்ரோப்போனின் பயோமார்க்கர்

தற்போது மாரடைப்பை முன்னரே அறியப் பயன்படும் முக்கியமான பரிசோதனை இதுதான். ட்ரோப்போனின் அய் மற்றும் டி  எனும் புரதங்களின் அளவை ரத்தத்தில் அளந்து இதயத்தின் நிலைமையை அறிந்துகொள்ள இது உதவுகிறது. இதன் அளவு பொதுவாக மாரடைப்புக்கான சிறு அறிகுறிகள் ஏற்பட்ட நான்கு மணி நேரத்தில் அதிகரிக்கத் தொடங்கி, இரண்டு வாரங்களுக்கு அதே அளவில் நிலைத்திருக்கும்.

6. கிரியேட்டின் பாஸ்போகைனேஸ் பயோமார்க்கர்

கிரியேட்டின் பாஸ்போகைனேஸ்  எனும் என்சைமை அளந்தும் மாரடைப்பை முன்னரே அறிய முடியும். இதன் இயல்பு அளவு 10 முதல் 120  னீநீரீ/லி.  இந்த அளவு அதிகமானால் மாரடைப்புக்கான சாத்தியம் உள்ளது என அறியலாம்.

யாருக்கு அவசியம்?

மாரடைப்புக்கான பயோமார்க்கர் பரிசோதனைகள் எல்லோருக்கும் பயன்தரக்கூடியதுதான் என்றாலும், பரம்பரையாக மாரடைப்பு நோய் உள்ளவர்கள், நாட்பட்ட புகைப் பழக்கம், கட்டுப்படாத உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன்,  அதிக மன அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு உள்ளவர்கள் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை முன்னதாகவே தெரிந்துகொள்ள, மேற்கண்ட பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருந்து ஆபத்தைத் தவிர்க்கலாம்.


ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ் என்ற பிரச் சினையைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  
நம்மில் பலருக்கு இந்தப் பிரச் சினை வரும் அபாயம் அதிக முள்ளது. பகல் இரவு பாராமல் செல்போனில் வசிக்கும் ஜீவி களின் கவனத்துக்கு - தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுமாம். அதன் பெயர் தான் ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ் என்கிறார்கள் மருத்துவர்கள்.

முகத்தின் இடது புறம் தலையணையில் புதைந்திருக்க, வலது கண்ணால் சிரமப்பட்டு ஸ்மார்ட் ஃபோன் ஸ்கீரீனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதால் விளையும் விபரீதம் இது.

சரியாக உறங்காமல், விடியும் முன்பே விழித்து, படுத்த நிலையி லேயே ஸ்மார்ட்போனைப் பார்ப்பதை தொடர் பழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கும் இப்பிரச்சினை என்கிறது ஒரு ஆராய்ச்சி. இரவில் உறங்காமல் ஸ்மார்ட்போனை மேற்சொன்ன விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் ஓமர் மஹ்ரூ கூறுகையில், ‘சூரிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்த பின், சட்டென்று அறைக்குள் நுழையும் போது, சில கணங்களுக்கு கண் பார்வையே மங்கலானது போலக் காட்சிகள் தெளிவற்று இருக்கும். எந்தளவுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை நேரடியாக விழித்திரை சந்தித்ததோ, அதே அளவுக்கு சாதாரண நிலையில் இக்குருட்டுத்தன்மை நீடிக்கும்.

ஸ்மார்ட்போனில் பளிச்சென்ற ஸ்கீரினில் செய்திகளை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச் சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங் களுக்குப்பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் இதையே தொடர் பழக்கமாகக் கெண்டிருந்தால் விழித்திரை பிரச்சி னைகள் ஏற்பட்டு நிரந்தரமாக பார்வையிழப்பும் ஏற்படலாம்‘ என் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக தொலைக்காட்சி, கணினி மற்றும் ஸ்மார்ட் போன் என எந்த வெளிச்ச திரையையும் பார்க்காமல் கண்களை மூடி சற்று நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு அதன் பின் உறங்கச் சென்றால் நிச்சயம் இந்த பிரச்சினை ஏற்படாது.

 

உங்கள் வயிற்றில் பிரச்சினைகள் இருக்கிறதா?

உணவுப் பழக்கத்தில் தொடங்கி சில பழக்கவழக்கங்களால்தான் வயிற்றில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதிலிருந்து விடுபடுவது எப்படி?

உணவு சாப்பிடும் போது வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது. சிலர் புத்தகங்கள் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டே ஏனோ தானோவென்று சாப்பிடுவார்கள். அது தவறு. சிலர் சாப்பிடும் போது கோழி விழுங்கு வதைப் போல அவசர அவசரமாக மொத்த உணவையும் விழுங்கி வைப்பார்கள். இதுவும் தவறு. இதனால் அவர்கள் உணவுடன் சேர்த்து காற்றை வயிற்றுக்குள் அனுப்புவதால் வயிறு உப்புசம் அடையும்.  உணவை கவனத்துடன் நன்றாக மென்று விழுங்க வேண்டும். உடலின் நீர்ச்சத்து எப்போதும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு திரவ உணவும் சரிசதவிகிதம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் வயிற்றில் பிரச்சினைகள் உண்டாக்கி, வீக்கத்தை ஏற்படுத்திவிடும்.

க்ளூட்டன் நிறைந்த உணவுப் பொருட்களான கோதுமை, பார்லி, சோயா ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். எனவே இவற்றை தவிர்த்து காய்கறிகள், பழங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு வாயுக் கோளாறுகள் இருக்கும். உருளைக் கிழங்கு, துவரம் பருப்பு, கொண்டைக் கடலை, பன்னீர், சீஸ் போன்ற கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் சாப்பிட்டு விட்டால், நீராக கரைத்த மோரில் சிறிதளவு சீரகப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து குடித்தால் வயிற்றில் சேர்ந்த வாயு வெளியேறி வீக்கம் குறையும்.

வேலை நேரத்தில் சிறுநீர் வரும்போது சிலர் அப்புறம் போகலாம் என்று அடக்கிக் கொள் வார்கள். இது தவறு. சீரான இடைவெளியில் தவறாமல் சிறுநீர் அல்லது மலத்தை வெளி யேற்றாமல் இருந்தால், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

உடல் எடையை குறைக்க மாத்திரை உட்கொள்ளலாமா?

உடல் எடையைக் குறைக்கும் மாத்திரைகளால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவது உண்மைதான். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை உட்கொள்வது தவறு.
மாத்திரை என்ன செய்கிறது?

உடல் எடையைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பொதுவாக மூன்று வழிகளில் வேலை செய்கின்றன. ஒன்று, பசியைக் குறைக்கின்றன. இதனால், நாம் சாப்பிடுவது குறைகிறது. இரண்டாவதாக, குடலில் கொழுப்புச் சத்து உறிஞ்சப்படுவதை அவை தடுக்கின்றன. இதனால், கொழுப்பு உடலில் சேருவது குறைகிறது. மூன்றாவதாக, எந்நேரமும் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகின்றன. இதனால் அதிகம் சாப்பிட முடிவதில்லை. நாம் குறைந்த உணவை சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிவிடுகிறது. இம்மாதிரியான காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.

ஒருவர் எடைக் குறைப்பு மாத்திரையை உட்கொள்வதற்கு முன்னால், அவருடைய உடல் பருமன் அடைந்திருப்பதற்கான அடிப்படைக் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தக் காரணத்தைக் களைவதற்கு சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக, ஒருவரின் பி.எம்.அய். 30-க்கு மேல் இருந்தால்தான் உடல் எடைக் குறைப்பு மாத்திரையை மருத்துவர்கள் பரிந் துரை செய்வார்கள்.

பக்க விளைவுகள் என்னென்ன?

இந்த மாத்திரைகள் குடலில் இயங்குவதால் வயிறு உப்புசம், வாய்வு சேருதல், வயிற்றில் இரைச்சல் போன்ற சாதாரண பக்கவிளைவுகள் ஆரம்பத்தில் தோன்றும். வாய் உலர்வது, மலச்சிக்கல், லேசான தலைவலி, கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளும் அடிக்கடி ஏற்படும். போகப்போக, கல்லீரலை இவை தாக்கும். அப்போது செரிமான நீர்கள் சுரப்பது குறையும்.

இதன் விளைவால், உணவுச் செரிமானம் ஆவது பாதிக்கப்பட்டு, கொழுப்புச் சத்து மட்டுமன்றி, மற்ற சத்துகளும் உடலுக்குக் கிடைக்காமல் போகும். இதனால், உடல் சோர் வடையும். வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாது. நீரிழிவு உள்ளவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டால், அடிக்கடி ரத்தச் சர்க்கரை குறைந்து மயக்கம் வரும்.

மேலும், இந்த மாத்திரைகளை உட்கொண்டால், இதய நோய், உயர் ரத்தஅழுத்தம், மன அழுத்தம், வலிப்பு நோய், உறக்கமின்மை போன்றவற்றுக்கு உட்கொள்ளும் மாத்திரை களின் செயல்பாட்டையும் பாதிக்கும். வைட்டமின் மாத்தி ரையைக்கூட எடைக் குறைப்பு மாத்திரைகளை உட்கொள் வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக உட்கொண்டால்தான், பலன் தரும். எடைக் குறைப்பு மாத்திரையோடு எந்த மாத்திரையையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளக் கூடாது. அப்படி உட்கொண்டால், எந்த மாத்திரையும் பலன் தராது.
யார் உட்கொள்ளக்கூடாது?

குழந்தைகள், கர்ப்பிணிகள், கர்ப்பத்துக்குத் தயாராகும் பெண்கள், பாலூட்டும் அம்மாக்கள், முதியவர்கள் ஆகியோர் எடைக் குறைப்பு மாத்திரைகளைக் கண்டிப்பாக உட்கொள்ளக் கூடாது. ஏற்கெனவே, உயர் ரத்தஅழுத்தம், இதயநோய், வலிப்பு நோய், மன நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.

அது மட்டுமில்லாமல் எடைக் குறைப்பு மாத்திரை எதுவாக இருந்தாலும் உட்கொள்ளத் தொடங்கிய 3 மாதங்களில் 5 சதவீதம்கூட எடை குறையவில்லை என்றால், அதற்குப் பிறகு அதை உட்கொள்வது வீண். ஏனென்றால், இந்தக் காலகட்டத்துக்குள் பலன் கொடுக்காத மருந்து, அதற்குப் பிறகு கண்டிப்பாக பலன் கொடுக்காது.

இன்னொன்று, எடைக் குறைப்பு மாத்திரைகளை மருத்து வர்கள் பரிந்துரைக்கும்போது உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியின் அவசியத்தையும் கட்டாயம் கூறுவார்கள். அவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும். ‘மந்திரம் போட்டு மாங்காய் பறிக்கலாம்‘ என நினைப்பது எவ்வளவு தவறோ, அந்த அளவுக்கு எடைக் குறைப்பு மாத்திரையை உட் கொண்டால் உடல் எடை குறைந்துவிடும் என்று நம்புவதும் தவறுதான். எடையைக் குறைப்பதில் மாத்திரைகளின் பங்கு 20 சதவீதம் என்றால், மீதி 80 சதவீதம் உணவுக்கும் உடற்பயிற்சிக்கும் உண்டு. இந்த 20 சதவீதப் பலனுக்காக எடைக் குறைப்பு மாத்திரையை மட்டும் உட்கொண்டு, பக்க விளைவுகளைப் பரிசாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

தைராய்டு பிரச்சினை, இரண்டாம் வகை நீரிழிவு போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்பட்டிருக்கிறது என்றால், முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். உடல் பருமனுக்குக் காரணம் எதுவானாலும், அவரவர் உடல் எடைக்குத் தேவைப் படும் கலோரிகளைக் கணக்கிட்டு, ஆரோக்கிய உணவுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அதற்கேற்ப உணவு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். முக்கியமாக, கொழுப்புள்ள உணவைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பண்டங் களையும் நொறுக்குத் தீனிகளையும் ஓரங்கட்ட வேண்டும். மென்பானங்கள், குளிர்பானங்கள், மது அருந்துவதை நிறுத்த வேண்டும். பகல் தூக்கத்தைக் கைவிட வேண்டும்.

தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை முறைப்படி தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின்பற்றினால்தான் எடை குறையும். இதற்கு அதிகம் பொறுமையும் வேண்டும்

Banner
Banner