மருத்துவம்

அரிப்பு ஏற்படுவது ஏன்?

அரிப்பு என்பது நம் உடல் இயந்திரத்தில் இயங்கும் ஒரு அலாரம். உடம்புக்குள் வேண்டாத பொருள் ஒன்று நுழைந்து விட்டால் நம்மை எச்சரிக்கை மணி அடிக்கும் அறிகுறிதான் அரிப்பு. நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் எதிராளி தொல்லை கொடுத்தால், உடனே தோலைச் சொறிய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகிற ஓர் எதிர்வினை இது.

இது சில நேரம் இதமாகவும், இன்பமாகவும் இருக்கும். அதுவே பல நேரம் எரிச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்து வதாக மாறிவிடும். உடலியல்ரீதியில் சொன்னால் அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செயல்படுத் துவது நம் தோலில் உள்ள மாஸ்ட் செல்கள்.

எதிர்ப்புப் புரதம்

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம்தான். இதை இம்யூனோகுளோபுலின்  ஈ என்பார்கள். இந்தப் புரதத்தை ரத்த செல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடம்புக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமைப் பொருளுடன் சேர்ந்து மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ஹிஸ்டமின், லுயூக்கோட்ரின் எனும் வேதிப் பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால்தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். சொறியச் சொறிய அரிப்பு கொஞ்சம் குறைந்தும்விடுகிறது. எப்படி? தொலைபேசி (லேன்ட்-லைன்) போன் வேலை செய்யும் கருவி போன்றது இது. தொலை பேசியில் போனில், எதிரெதிர் முனைகளில் உள்ளவர்களை இணைப்பது ஒரே ஒரு கம்பிதான். எனவே, ஒரே நேரத்தில் ஒரே எண்ணில் இரண்டு பேர்தான் பேச முடியும்.

இதுபோல், அரிக்க வேண்டும் என்ற தகவலை மூளைக்கு எடுத்துச் செல்வதும், மூளையிலிருந்து சொறிய வேண்டும் என்ற கட்டளையை விரல்களுக்கு எடுத்து வருவதும் ஒரே நரம்பு கேபிள்தான். நாம் சொறிய ஆரம்பித்ததும், சொறிகிற உணர்வையும் இந்த நரம்புதான் மூளைக்கு எடுத்துச் செல் கிறது. ஒரு நேரத்தில் ஒரு தகவலை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்லும் என்பதால், அரிப்பு உணர்வை மூளைக்கு எடுத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு, சொறி யும் உணர்வை மட்டுமே இது மூளைக்கு எடுத்துச்செல்கிறது. இதனால் அரிப்பு குறைகிறது.

என்ன காரணம்?

அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக் கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது செயற்கை அழகுச் சாதனப் பொருள்கள். சோப்பு, சென்ட், குங்குமம், தலைச்சாயம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக் கொள்ளா விட்டால் அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால் உடல் அரிக்க ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளுக்கு டயாபர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பிட்டத்தில் அரிக்கும். ரப்பர் செருப்பு, கைக்கடிகார நாடா, பெயிண்ட், பூச்சிக்கொல்லிகள், ரசாயனப் பொருள்கள் போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். இன்னும் சிலருக்கு பிளாஸ்டிக் வளையல், தங்க நகை, கவரிங் நகைகளால் அரிப்பு உண்டாகும். குறிப்பாக, நிக்கல் வகை நகைகளால் ஏற்படும் அரிப்பு, நம் நாட்டுப் பெண்களுக்கு அதிகம். துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் டிடெர்ஜென்ட் தூள் அல்லது சோப்பு சில பெண்களுக்கு அலர்ஜியாகி, அரிப்பை ஏற்படுத்துகிறது.

அப்படி ஆகும்போது தோல் தடிமனாவதுடன், சொரசொரப்பாகிக் கறுத்துப்போகிறது. இந்த இடங்களைச் சொறியச் சொறிய நீர்க் கொப்புளங்கள் ஏற்பட்டு வீங்கி, தடித்து, நீர் வடிகிறது. இதற்குக் கரப்பான் நோய் என்று பெயர். இது வந்துவிட்டால் நாள் முழுவதும் அரிப்பை ஏற்படுத்தும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு வெயிலும் குளிரும்கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர் ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும் அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு அரிப்பு உண்டாகும். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

தொடை இடுக்கு அரிப்பு

காளான் கிருமிகள் தொடை இடுக்குகளில் புகுந்து அரிப்பை ஏற்படுத்தும். இந்த அரிப்பு இரவு நேரத்தில்தான் மிகத் தீவிரமாகும். அரிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த இடத்தில் அகலமாகப் படை போலத் தோன்றும். கால் விரல் இடுக்குகளில் வருகிற சேற்றுப் புண்ணும் அரிப்பை ஏற்படுத் துகிற ஒரு காரணிதான். தண்ணீரில் அதிகம் புழங்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இந்தத் தொல்லை இருக்கும்.

அடுத்து, உடல் பருமன் உள்ளவர்களுக்கு அக்குள், இடுப்பின் சுற்றுப்புறம், தொடை இடுக்கு, மார்பகங்களின் அடிப்பகுதி... இப்படிப் பல இடங்களில் காளான் பாதிப்பு ஏற்பட்டு அரிப்பு தொல்லை கொடுக்கும். இந்த இடங்களில் பாக்டீரியாவும் சேர்ந்துகொண்டால், தோல் மடிப்பு நோய்  தோன்றும். இதுவும் அரிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான். இவை தவிர பேன், பொடுகு, தேமல், சிரங்கு, சோரியாசிஸ் போன்ற தோல் நோய்களும் அரிப்பை ஏற்படுத் தும். எறும்பு, கொசு, தேனீ, குளவி, வண்டு, சிலந்தி போன்ற பூச்சிகள் கடித்தாலும், கொட்டினாலும் தோலில் தடிப்பு, அரிப்பு, தோல் சிவந்துபோவது போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

வயதானால் வரும் அரிப்பு

முதுமையில் வருகிற அரிப்புக்கு வேறு காரணம் இருக் கிறது. வயதானவர்களுக்குத் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. உதாரணம்: சொத்தைப் பல், சுவாசப் பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. ஆசன வாயில் அரிப்பு உண்டாவதற்கு நூல் புழு காரணமாக இருக்க லாம். குடலில் எந்தப் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். உடம்பெல்லாம் அரித்தால், உடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு புற்றுநோயின் அறிகுறியாகவும் அது இருக்கலாம்.

தவிர, நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சினை, பித்தப்பைப் பிரச் சினை, மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும் அரிப்புக்குக் காரண மாக இருக்கலாம்.

உணவும் மருந்தும்

நாம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளாமல் அரிப்பை உண்டாக்கும். முக்கியமாகப் பால், தயிர், முட்டை, இறால், இறைச்சி, கடல் மீன், கருவாடு, தக்காளி, சோயாபீன்ஸ், வேர்க்கடலை, முந்திரி, செர்ரி பழங்கள் போன்றவற்றைச் சொல்லலாம். வெளிநாட்டுப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில், அரிப்பை ஏற்படுத்தும் உட்பொருட்கள் குறித்த எச்சரிக்கை இருக்கும். உணவைப் போலவே நாம் சாப்பிடும் மருந்துகளும் அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம்.

குறிப்பாக, ஆஸ்பிரின், பெனிசிலின், சல்ஃபா, நிமிசுலைட், மலேரியா மருந்துகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதன் காரணமாகத்தான் முதன்முதலில் ஆன்ட்டிபயாட்டிக்ஸ் ஊசி போடுவதற்கு முன் சிறியதாக மருந்தைச் செலுத்தி மருத் துவர்கள் பரிசோதிப்பது வழக்கம்.

மனப் பிரச்சினைகள்

அரிப்புக்குக் கவலை, பயம், டென்ஷன் போன்ற மனம் சார்ந்த காரணங்களும் இருக்கின்றன. ஹிஸ்டீரியா என்ற மனநோய் உள்ளவர்கள் உடலில் பூச்சி ஊறுவதைப்போல் கற்பனை செய்துகொள்வார்கள். இதனால் எந்நேரமும் உடலைச் சொறிந்துகொண்டே இருப்பார்கள். இவர்களது மனநோய் குணமானால்தான் அரிப்பும் சரியாகும்.

உடம்பு அரித்தால் ஒரு அவில் போட்டுக்கோ என்று சாதாரணமாக வீடுகளில் சொல்வார்கள். அதேவேளையில் எதனால் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால்தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும். நாமாக மருந்து சாப்பிடுவது, ஆபத்துக்கு அழைப்பு விடுப்பதைப் போல.

உண்ட பிறகு
குறுநடை கொள்வோம்

சாப்பிட்டவுடன் நடக்கலாமா, கூடாதா? என்ற தலைப்பில் பெரிய விவாத மேடையே நடத்தும் அளவுக்குப் பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. உண்டபின்பு குறுநடை கொள் வோம் என்ற சித்தர் பாடல் வரி விவாதம் செல்ல வேண்டிய திசையைச் சொல்கிறது. அதாவது சாப்பிட்ட பிறகு மெதுவாக, குறைந்த தொலை வுக்கு நடை அவசியம் என்றே சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.
எது தவறு?

அதற்காகச் சாப்பிட்டவுடன் நான்கு கிலோ மீட்டர் வேகத்தில், வேக நடை போட்டால் செரிக்காமை, எதிர்க்களித்தல், மலக்கட்டு போன்றவை உண்டாக வாய்ப்பு அதிகம். சாப்பிட்டவுடன் அதிவேக வாக்கிங், ஜாக்கிங் செய்வது முற்றிலும் அபத்தம். இன்றைய அவசர யுகத்தில், காலை உணவை எடுத்துக்கொண்ட மறுநொடியே, அரக்கப் பறக்க வேக நடையுடன் அலுவலகத்துக்கும் பள்ளிகளுக்கும் செல் வோரின் எண்ணிக்கை மிக அதிகம். சாப்பிட்ட வுடன் அதிவேகமாக நடப்பவர்களின் உணவு செரிமானம் பாதிக்கப்படும்.

அதேநேரம் சாப்பிட்டவுடன் உறங்குவதும், நகராமல் ஒரே இடத்தில் கணினி முன் உட் கார்ந்து வேலை செய்வதும்கூடத் தவறுதான். சாப்பிட்டவுடன் தூங்குவது அல்லது அதிகமாக வேலை செய்வதால் மண்ணீரல் நோய் உண்டாகும் என்கிறது சித்த மருத்துவம்.
எது சரி?

உணவு உண்ட பின்பு, பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக நடப்பது ஆரோக் கியத்தைத் தரும். உணவுக்குப் பின் குறுநடை போடுவதால், உணவு செரிப்பதற்குத் தேவை யான சுரப்புகளின் செயல்பாடுகள் சிறப்படை யும், உணவு எதிர்க்களித்தல் தொந்தரவு மறை யும், கொழுப்புச் சத்தின் அளவு குறையும், நல்ல உறக்கமும் கிடைக்கும் என்கின்றன சமீபத்திய ஆராய்ச்சிகள்.

வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை விரைவு படுத்தப்பட்டு செரிமானம் முறைப்படுத்தப்படும். இரவு உணவுக்குப் பின் உடனடியாகப் படுத்து உறங்கிவிடாமல், ரத்தஉறவுகளோடு சிறிது தூரம் மெதுவாக நடப்பது உடல்நலனை மட்டுமல்ல, உறவுகளின் பலத்தையும் சேர்த்துக் கூட்டும்.

ஆன்டிபயாட்டிக் மருந்து, ஜாக்கிரதை

மருந்துக் கடைகளுக்குச் சென்று சளி, காய்ச்சல் என்று கூறி மருந்து கேட்டால் என்ன மருந்து கொடுக்கிறார்கள்? பத்து மருந்துக் கடைகளில் கேட்டபோது, எல்லா மருந்துக் கடைகளிலும் ஒரு செட் மருந்து என்று சொல்லக்கூடிய மருந்துகளில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து  ஒன்று இருந்தது. இந்த ஆன்டிபயாட்டிக் மாத்திரையை ஒரு நாள் மட்டும் உட்கொள்ளலாமா?

கண்டிப்பாகக் கூடாது. நோய்த் தொற்று கிருமியை எதிர்க்கக்கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை ஒரு நாளைக்கு மட்டும் பயன்படுத்தும் போது நாளடைவில், அந்தக் கிருமி நுண்ணுயிர்க் கொல்லி மருந்து எதிர்ப்புத் திறனை  பெற்றுவிடும்.

வயிற்றுப் போக்குக்கு மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்தில் புளூரோ குயினலோன்ஸ் என்ற வேதிப் பொருள் இருக்கும். நோய்த் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை அந்த மருந்து இழந்துவிட்டால், நம் உடல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும். நோய்த் தொற்றிலிருந்து உடல் சீரடையாது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாடு - மருத்துவத் துறையின் கடமைகள்:

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொடுக்கும் மருத்துவர்கள், நோய்க் கிருமித் தொற்றிலிருந்து மக்கள் எப்படித் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் சேர்த்தே ஏற்படுத்த வேண்டும்.

தேவையானபோது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை முறையான, தரமான, சரியான அளவில் வழங்குவது மட்டுமல்லாமல், அதை எப்படி முறையாக உட்கொள்ள வேண்டும் என்றும், அதன் பக்க விளைவுகள், நன்மைகள் பற்றியும் நோயாளிகளுக்கு விளக்க வேண்டும்.

மருந்துக் கடை நடத்துபவர்கள் மருத்து வரின் பரிந்துரை இல்லாமல் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரு போதும் கொடுக்கக் கூடாது. சாதாரணக் காய்ச்சல், சளி  என்று வரும் நோயாளிகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் தேவையில்லை என்பதை எடுத்துக் கூற வேண்டும்.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை எத் தனை வேளை உட்கொள்ள வேண்டும், எத்தனை நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் எனத் தெளிவாக விளக்கி, எழுதிக் கொடுக்க வேண்டும்.

ஒரு நோய்க் கிருமியின் தாக்கம் சமூகத்தில் அதிகமாகக் காணப்பட்டால், அந்த நோய்க் கிருமி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்குச் செய்ய வேண்டியவை குறித்து நோயாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உதாரண மாக, முறையற்ற பால் கவர்ச்சியைத் தவிர்த்தல் போன்ற அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பால்வினை நோய்களை   தடுக்கலாம். மேலும் தொற்றுத் தடுப்பூசிகள் பற்றியும், கைகளைச் சுத்த மாகக் கழுவுவதன்  அவசியம் பற்றியும் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவமனையில் பணிபுரியும் மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு வேறொரு நோயாளிக்கு மருத்துவம் செய்வதற்கு முன், தங்கள் கைகளைச் சோப்பு நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இதனால் ஒரு நோயாளியிடம் இருந்து மற்றொரு நோயாளிக்குக் கிருமி பாதிப்பு  பரவுவது தடுக்கப்படும். இதனால் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தின்  தேவை குறையும்.

மருத்துவமனை, அங்கு பயன்படுத்தப்படும் கருவிகளை நோய்த் தொற்று இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாடு - மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை மருத் துவரின் பரிந்துரையின்றி நீங்களாகவே உட்கொள் ளக் கூடாது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உட் கொள்ள ஆரம்பித்து ஓரிரு நாளில் உடல்நிலை சரியாகிவிட்டாலும், மருத்துவர் பரிந்துரைத்த நாட் கள்வரை அந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே மருத்துவர் கொடுத்த மருந்து வீட்டில் மீதம் இருந்தால், நீங்களாகவே உட்கொள் ளக் கூடாது.

உடல்நிலை சரியில்லை என நீங்களோ, குடும்பத்தில் யாருக்கோ மருத்துவர் பரிந்துரைத்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பிறர் உட்கொள்ளக் கூடாது.

கைகளைச் சோப்பு நீரால் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமாகவும், நோய் தாக்கிய வர்களுடன் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பதன் மூலமாகவும், நோய்க் கிருமி தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமாகவும் நுண் ணுயிர்க் கொல்லி மருந்துப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம்.

முதுகுவலிக்குத் தீர்வு என்ன?

வெளிப்பக்கம் காணப்படும் உடல் பகுதி களில் முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் நம்மால் பார்க்கமுடியாத ஒரு முக்கியப் பகுதி முதுகு. தடித்த சருமம், பரந்து விரிந்த தசைகள், நீண்ட தசை நாண்கள், பலதரப்பட்ட எலும்புகள், மூளைத்தண்டுவட நரம்புகள் என்று பல கலவையால் ஆன கூட்டுக் குடும்பம் இது. கழுத்து, தோள்பட்டை எலும்பு, மேல் முதுகு, மத்திய முதுகு, கீழ் முதுகு என்று பல பகுதிகளைக் கொண்டது இது.

பெரும்பாலும் மேல் முதுகில் ஏற்படும் பிரச்சினை தசை சுளுக்கு காரணமாகவே இருக்கும். விபத்தின் மூலம் முதுகெலும்பு களில் அடிபடுதல், தோள்பட்டை வலி, விலா எலும்பு முறிவு, ரத்தம் கட்டுதல், விலா குருத்தெலும்பு வீக்கம் போன்ற பிரச் சினைகளும் வரலாம். மேல் முதுகில் வலி உண்டாகி இருமலும் இருந்து இவை இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால்,  அது காச நோயாக இருக்கலாம்.

மேல் முதுகெலும்பு களில் பலமாக அடிபட்டு அவை நொறுங்கிப் போனாலோ, அங்கு செல்லும் முதுகுத் தண்டுவட நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ, அடிபட்ட உடல் பகுதிக்குக் கீழ் உள்ள பகுதிகள் எல்லாமே செயலிழந்து விடும். அந்த இடங்களில் உணர்ச்சி இல்லாமல் போகும். இந்த பாதிப்பு களை சரி செய்வது மிகவும் சிரமம்.

கீழ் முதுகு மார்பு முள்ளெலும்புத் தொடருக்கும் இடுப்பெலும்புக் கட்டுக்கும்  இடையில் உள்ள பகுதியைக் கீழ் முதுகு என்கிறோம். இதில் ஐந்து கீழ் முதுகு முள் ளெலும்புகள் ஒன்றோடொன்றாக கோர்க்கப் பட்டு, சற்று முன்புறமாக வளைந்துள்ளன. மேல் முதுகு சற்றே பின்பக்கமாக வளைந் துள்ளதைச் சரி செய்யவே இந்த எலும்புகள் முன்பக்கமாக வளைந்துள்ளன.

முதுகெலும்பிலேயே அதிக அசைவு உள்ள பகுதி கீழ் முதுகுதான். முன்பக்கம் குனிவது, பின்னால் சாய்வது, வலப்பக்கம் இடப்பக்கம் என உடலைச் சுழற்றுவது. இப்படிப் பல அசைவுகளை நம்மால் எளிதாக செய்ய முடிவதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள எலும்புகள்தான். சர்க்கஸ், நாட்டியம், மலை ஏறுதல், டென்னிஸ் போன்ற விளையாட்டு என பலவற்றுக்கும் இவை தருகின்ற அசைவுகள்தான் மூல காரணம். மேலும், உடல் எடை அதிகமாக இருந்தால் அதையும் இந்த எலும்புகள்தான் தாங்க வேண்டும்.

பரிசோதனையும் சிகிச்சையும்

கீழ் முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருப்பதால் முதுகு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகள் செய்து காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். ஜவ்வு வீங்குவது அல்லது விலகுவது காரணமாக ஆரம்பத்தில் ஏற்படுகிற கீழ் முதுகு வலியானது வலி நிவாரணிகள், 3 வாரம் முழுமையாக ஓய்வு எடுப்பது, இடுப்பில் பெல்ட் அணிவது, பிசி யோதெரபி மற்றும் ட்ராக்ஷன் சிகிச்சையில்  குணமாக அதிக வாய்ப்புகள் உள்ளன. சில ருக்கு முதுகு தண்டுவடத்தில் ஸ்டீராய்டு ஊசி போட்டும் இதைக் குணப்படுத்துவதுண்டு.

முதுகு வலியைத் தடுக்க

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக் கூடாது. முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும்; கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
2. சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகு வலி வராமல் தடுக்கும்.

3. காற்றடைத்த  பானங்கள், குளிர் பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப் படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்து விடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

4. மேல் முதுகில் வலி ஏற்பட்டால் ஐஸ் ஒத்தடம் கொடுத்து, மூச்சுப்பயிற்சிகளைச் செய்தால் போதும். வெந்நீர் ஒத்தடம் கொடுப் பது, சுளுக்கு எடுப்பது, பேண்டேஜ் கட்டுவது, கண்ட கண்ட களிம்புளைப் போட்டு தேய்ப் பதை எல்லாம் செய்தால் பாதிப்பு அதிகமாகி வலியும் கடுமையாகிவிடும்.

5. முதுகில் வலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கக் கூடாது. இவர்கள் கட்டாந்தரையில் தான் படுக்க வேண்டும்; கட்டை பெஞ்சில்தான் படுக்க வேண்டும் என்பதில்லை. சரியான மெத்தையில் பக்க வாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.

6. பலமாகத் தும்மக்கூடாது. மலம் கழிக்கும் போது அதிகமாக முக்கக்கூடாது. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. அதிக எடையைத் தூக்கக்கூடாது. அப்படியே தூக்கவேண்டியது இருந்தால் எடையைத் தூக்கும்போது இடுப்பை வளைத் துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.

8. உடலை அதிகமாக விரியச் செய்தல், வளைத்தல் கூடாது. திடீரெனத் திரும்புதல் கூடாது.

9. குனிந்து தரையைச் சுத்தம் செய்வ தற்குப் பதிலாக நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.

10.இந்தியக் கழிப்பறைக்குப் பதிலாக மேற் கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் நல்லது.

11. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியக் கூடாது.

12. அருகில் உள்ள இடங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வதைவிட நடந்தே செல்லுங்கள்.
13. நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டியரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.

14. ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது பஸ்ஸின் நடுவிலுள்ள இருக்கையில் உட்கார்ந்து கொள்வது நல்லது.

15. பருமனைத் தவிர்க்க வேண்டும்.

16. புகை, மது, போதை மாத்திரைகள் கூடாது.

17. மன அழுத்தம் தவிருங்கள்.

மழையோடு வரும் மாபெரும் தொற்று

மழையைப் பற்றிய இனிய நினைவுகளைக் கலைத்துப் போட்டு வெறும் கசப்புகளையும் பயத்தையும் மட்டுமே கொடுத்துச் சென்றது கடந்த  ஆண்டு மழையும் வெள்ளமும். இந்த  ஆண்டு மழை எப்படி இருக்குமோ... ஆனால், மழையால் ஏற்படும் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் இவற்றுடன் 'ஹெபடைடிஸ் ஏஎனப்படும் மிகக் கொடிய தொற்று நோயையும் சந்திக்க நேரிடும்  "தூய்மையற்ற நீர், உணவு இவற்றால்  ஏற்படுகின்ற ஆரம்பகட்ட கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்து கிறது ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்று.  மழை நீர் மாசுபடுவதால் தொற்றுக்கிருமிகள் உற்பத்தி அதிகமாகி ஹெபடைடிஸ் ஏ பரவக்கூடிய  நிலை உருவாகிறது.

மேலும் ஹெபடைடிஸ் ஏவால்  பாதிக்கப்பட்ட நோயாளியின் இயற்கைக் கழிவுகளாலும் அவ ருடைய நேரடித் தொடர்பினாலும் இது மற்ற வர்களுக்கு பரவுகிறது. சுற்றுப்புறத்திலுள்ள சரியாகப் பராமரிக்கப்படாத கழிவு அகற்றும் குழாய்கள், சாக்கடைகளில் உற்பத்தியாகும் கிருமி களால் இந்தத் தொற்று திடீரென்று  வேகமாக பரவு கிறது. 14 முதல் 28 நாட்களுக்குள் ஹெபடைடிஸ் ஏ நோயின் கிருமிகள் பெருகி மஞ்சள் காமாலை எனும் நோயை ஏற்படுத்துகிறது.

கண்களிலும், சருமத்திலும் மஞ்சள் ஏற்படுவது, பசியின்மை, பலவீனம், வயிற்றுப்போக்கு, வாந்தி இவை அறிகுறிகள்.  இந்த தொற்றினால் பாதிக்கப் பட்ட 70 சதவிகித நோயாளிகளில், 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் இதன் தீவிரம் அதிக மாகக் காணப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தொற்றுஆபத்து குறையும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர் களுக்கும், சுகாதாரமற்ற சூழலில் வாழ்பவர்களுக் கும், தொற்றினால் பாதிக்கப்பட்ட தனிநபருடன் பழகுபவர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்து அதிகம். நம் உடலில் சேரும் நச்சுப்பொருட்களை கழிவுகளாக உருமாற்றி நீக்கும் பணியைச் செய்யும் கல்லீரல், ஹெபடைடிஸ் ஏ தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் ஏ தொற்றுக்கு வரையறுக் கப்பட்ட சிகிச்சையோ தடுப்பு மருந்துகளோ கிடை யாது. இதிலிருந்து நோயாளி முற்றிலுமாக விடுபடு வதற்கு ஒரு மாத காலமாகும். சத்தான உணவும், போதுமான நீராகாரங்களும் வழங்கப்பட வேண் டும். இல்லையெனில் ஊட்டச்சத்து குறைவு ஏற் பட்டு, குமட்டல், வாந்தி  மற்றும் வயிற்றுப்போக்கை நீட்டிக்கும் என்று  அறி குறிகளையும் கூறுகிறார்.

தடுப்பூசி மூலம் மட்டுமே ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தொற்றிலிருந்து உறுதியான பாதுகாப்பு கிடைக்கிறது. ஊசி மூலம் ஏற்றப்படும் தடுப்பு மருந்து ஒரு மாதத்துக்குள் உடலில் நோய் எதிர்ப்பு கிருமிகளை உருவாக்கி நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது.

தடுப்பூசி போட்டுக் கொண்டதிலிருந்து  இரண்டு வார காலத்துக்குள், இந்தத் தொற்றினால் திடீரென்று பாதிக்கப் பட்டவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. இப்போது மேம்பட்ட வடிவங்களில் தடுப்பூசி மருந்து வந்துவிட்டது.

வழக்கமாக போடப்படும் அதிக வலியை தரக்கூடிய இரண்டு டோஸ் ஐ.எம். எனும் தசையின் மூலம் ஏற்றப்படும் ஊசிக்கு பதிலாக சருமத்துக்கு அடியில் செலுத்து வதன் மூலம் மருந்து உடலினுள் ஏற்றப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசி தொற்றிலிருந்து  நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்ய உங்கள் குழந்தையின் நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந் துரைக்கிறது  தடுப்பூசியின் அவசியத்தை எடுத் துரைக்கிற மருத்துவர்கள், யாரெல்லாம் இத்தடுப் பூசியை போட்டுக் கொள்ளலாம் என்பதையும் சொல்கிறார்.

1 வயதுக்கு குறைவான குழந்தைகள் தவிர, எந்த வயதினரும் எடுத்துக்கொள்ள முடியும். குழந்தை பருவத்தில் தடுப்பூசி போட்டுக் கொள் ளாத பெரியவர்கள் கூட, இப்போது தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த தொற்று ஏற்படுவதற்கான அபாயத் திலிருந்து தங்களை பாதுகாக்க முடியும். வரும் மழைக்காலம் தொடங்கும் முன், தங்களுக் கும் தங்கள் பிள்ளைகளுக்கும் முறையான தடுப்பூசி மூலம் பாதுகாக்க வேண்டும். முறையான சுகாதாரம், உணவு மற்றும் இன்றியமையாத தடுப்பூசி மருந்து  இவை யாவும் ஹெபடைடிஸ் ஏ எனும் கொடிய தொற்றிலிருந்து நம்மைக் காத் துக்கொள்ளும் வழிகளாகும் என முன்னெச் சரிக்கை முறைகளை முன் வைக்கின்றனர் மருத்துவர்கள்.

Banner
Banner