
பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை. அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன்.
இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.
(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)