எழுத்துரு அளவு Larger Font Smaller Font

19.06.1932 - குடிஅரசிலிருந்து...

மைசூர் சமஸ்தான சட்டசபைத் கூட்டத்தின் முடிவில், திவான் சர். மீர்சா இஸ்மாயில் அவர்கள் செய்த பிரசங்கத்தில் இந்தியாவின் சமுதாய சீர்திருத் தங்கள் சம்பந்தமாக சட்டங்களை அமலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். முதலில் பொதுஜனங்களிடம் சீர்திருத்தம் உண்டாக வேண்டும் இதனால்தான் எளிதில் சமுதாயச் சீர்திருத்தம் உண்டாகும். இவ்வாறு பொது ஜனங்களிடம் சீர்திருத்த உணர்ச்சி உண்டாகாத காரணத்தால்தான், அதிகமான பொது ஜன ஆதரவு ஏற்படும் வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்களை ஆதரிக்க அரசாங்கத்தார் பின் வாங்குகின்றனர் என்று பேசியிருக்கிறார்.

இப்பேச்சிலிருந்து பொதுஜன ஆதரவு இருந்தால் தான் அரசாங்கத்தார், சமுக சீர்திருத்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியும். இன்றேல் அளிக்க முடியாதென்று அர்த்தம் உண்டாகவும் இடமிருக்கின்றது. உண்மையில் இந்த அர்த்தத்தில் திவான் அவர்கள் பேசியிருப்பா ரானால், இது அலை ஓய்ந்த பின் கடலில் ஸ்நானம் செய்யலாம் என்னும் முடிவைப் போன்றது என்று தான் நாம் கருதுகின்றோம்.

பொது ஜனங்கள் எப்பொழுதும், மூடநம்பிக்கை யுடைய வைதிகர்களுடைய பேச்சுக்களுக்குச் செவிசாய்க்கக் கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். ஆகையால் அவர்களே சமுதாய சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்க முன்வரவேண்டுமென்று எதிர் பார்ப்பது தவறாகும். குற்றஞ் செய்கின்றவனை தானே குற்றஞ் செய்யாமல் திருந்திவரட்டுமென்று விட்டுக் கொண்டிருந்தால்  அவன் திருந்துவது எப்பொழுது? அவன் செய்த குற்றத்தை எடுத்துக்காட்டித் தண்டனையும் அளித்தால்தான் அவன் திருந்துவான் என்பது உண்மையல்லவா? அதுபோலவே, பழைய நம்பிக்கையினாலும் குருட்டுப் பழக்க வழக்கங்களினாலும் பொது ஜனங்கள் கைக்கொண்டு வரும் சமுக ஊழல்களைப் போக்க அரசாங்கத்தாரே முற்பட்டு, சட்டங்களைச் செய்து, அச்சட்டங்களின் கருத்துக்களைப் பொது ஜனங்கள் உணரும்படி செய்வதன் மூலமே சமுகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் சமுதாய சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கும், துருக்கி முதலிய தேசங்களை எடுத்துக் கொண்டால், அங்கெல்லாம் பொதுஜனங்கள் சமுதாய சீர்திருத்த உணர்ச்சி பெற்ற பிறகுதான் சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் செய்யப்பட்டதா? அல்லது அரசாங் கத்தாரே முன்வந்து சமுதாய சீர்திருத்தச் சட்டங் களைச் செய்து அவைகளுக்குப் பொதுஜன ஆதரவைப் பெற்றார்களா? என்று பார்த்தால், இவ்வுண்மை விளங்கும்  அரசாங்கமே தைரியமாகச் சமுதாயச் சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றி அவைகளைப் பொது ஜனங்கள் அனுசரிக்கும் படி செய்தார்கள் என்பது யாவருக்கும் தெரியும்.

இப்பொழுது இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங் கத்தைக் காட்டிலும் சமுதாயச் சீர்திருத்தம் சம்பந்த மாகக் கொஞ்சம் முன்னணியில் நிற்கும் சமஸ்தானங் களில் முதன்மை பெற்று பரோடாவும், இரண்டாவது மைசூருமாக இருக்கின்றது என்று புகழப்படுகின்றது. இந்த நிலைமையில் திவான் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சமுதாய சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்கள் சட்டசபையில் ஆலோசனைக்கு வரும்போது பொது ஜன ஆதரவு இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாங்கள் ஆதரிப்போம் என்ற பல்லவியைப் பாடிக் கொண்டிருப்பது போல மைசூர் அரசாங்கத்தின் சார்பாகவும் பாட ஆரம்பித் ததைப் பற்றி நாம் வருந்துகின்றோம் ஆயினும் திவான் அவர்கள் அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கப் பின்வாங்குகின்றனர் என்று தான் கூறு கிறாரே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போல ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறவில்லை என்பதைப் பார்க்கச் சிறிது சமாதானம் அடைய வேண்டியிருக்கிறது.

இவ்வாறு பின்வாங்கிய மனதுடனாவது சமுகச் சீர்திருத்த சட்டங்களுக்குக் கூடியவரையிலும் ஆதரவு அளித்து வரும் மைசூர் அரசாங்கத்தையும் திவான் சர். மீர்சா இஸ்மாயில் அவர்களையும் பாராட்டுகின்றோம்.

சென்ற சட்டசபைக் கூட்டத்தில் பால்ய விவாகத் தடைச் சட்டம் மைசூர் சட்ட சபையில் நிறைவேறி இருப்பதும் அவ்வரசாங்கம் சமுதாயச் சீர்திருத்த விஷயத்தில் ஊக்கம் காட்டி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும் என்பதையும் இச்சமயத்தில் நினைப்பூட்டுகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner