எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.12.1930 - குடிஅரசிலிருந்து...

சென்ற வாரத் தொடர்ச்சி...

திரு. பாண்டியன் அவர்கள் பெரிய தனவந்தர். அதாவது வருஷம் 50 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை வருவாயுள்ள செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகவே அவர் தனக்குப் பணமில்லாததால் பணக் காரரை வெறுத்தார் என்று யாரும் சொல்லி விட முடியாது.

திரு. பாண்டியன் அவர்கள் ராமநாதபுரம் ஜில்லாபோர்டுத் தலைமைப் பதவியில் பட்டுக் கொண்டதாலும், மற்றும் அரசியல் தொல்லையாலும் சுயமரியாதை இயக்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதே தவிர, அதாவது அவர் வெளியில் இருந்தால் எவ்வளவு பலன் ஏற்பட்டு இருக்குமோ, அவ்வளவு பலன் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது.

இது நிற்க, ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதும், சீர்திருத்தம் என்பதும், அரசியல் சுதந்திரம் என்பதும் நாட்டிற்கும், பாமர மக் களுக்கு ஏழை மக்களுக்குத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எவ்வளவு தூரம் பயனளிக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதைப் பொது ஜனங்கள் அறிய இது ஒரு சந்தர்ப்பமாக ஏற்பட்டது மற்றொரு விதத்தில் மகிழ்ச்சி யடையத் தக்கதாகும்.

ஆகவே, இன்றைய தினம் இந்நாட்டில் பொதுஜனங் களுக்குப் பிரதிநிதியாக பிரபுத் தனமும், வைதிகமும்தான் இருக்க யோக்கி யதையுடைய அரசியல் சுதந்திரங்கள் இருக் கின்றனவே ஒழிய உண்மையான மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு எவ்வித சாதனமும் இல்லை என்பது உறுதியாகி விட்டது.

இது தவிர தல ஸ்தாபன நிர்வாகங்கள் இந்த மாதிரி காரணங்களில் அடிக்கடி மாறி மாறித் தொல்லையடையாமல் ஒரே ரீதியில் நடை பெற வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங் களுக்குச் சுதந்திரமாய் நடக்கக்கூடிய ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் இருப்பாரானால் இம்மாதிரிக் காரியங்களால் கொள்கைகள் மாறுபடாமல் இருக்கலாம். ஆனால் இன்றுச் சட்டசபையிலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகத் தலைமையிலும் ஒரே கனவான்கள் பெரிதும் இருப்பதால் அதை ஏற்படுத்த முடியவில்லை. ஆனபோதிலும் இவைகளுக்காக வெல்லாம் நம்பிக்கை இல்லாத் தீர்மானச் சட்டம்  வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. அது இருந்துதான் தீர வேண்டும். இன்றைய தினம் கட்சி பிரதிக்கட்சிகளால் மந்திரி போட்டிகளால், அரசியல் தகராறுகளால் தான் இது வரை மேற்படி சட்டம் பிரயோகிக்கப் பட்டிருக்கின்றதே தவிர, நிர்வாகக் குற்றத் திற்குத் திறமைக்குப் பிரயோகிக்கப்பட வில்லை. இம்மாதிரி காரியங்களால் உடனே தலைமை ஸ்தானம் காலிசெய்யப்பட வேண்டி யதும் ஒரு விதத்தில் அவசியமாகும்.. இல்லாத வரை இக்கட்சிகள் நிர்வாகத்திற்குள் புகுந்து, ஸ்தாபனங்களை மிக்க கேவலமாக ஆக்கி விடும். இந்தக் குறிப்பிட்ட சம்பவம்கூட சுய மரியாதை உணர்ச்சியினால் ஏற்பட்ட தாகும்.

ஏனெனில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் போதிய மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியானாலும் இம்மாதிரி மனப்பான்மை உள்ள இடத்தில் இனி இருப்பது கொஞ்சமும் சுயமரியாதை அல்ல என்றே விலகி விட்டார். ஆனால் மற்ற சம்பவங்களில் மெஜாரிட்டி மெம்பர்கள் எந்தக்  காரணத்தைக் கொண்டானாலும், ஒருவரை வேண்டியதில்லை என்று கருதி விட்டால், அவர் மறுபடியும் அதிலேயே இருக்கும் படியாக இருந்தால் அந்த மெஜாரிட்டி மெம்பர்கள் தொல்லையால் நிர்வாகம் பாதிக்கப்படாதா என்று கேட்கின் றோம். மெஜாரிட்டிக்கு  விரோதமாய் உள்ளே இருந்து எப்படி யாருடைய தயவின் மீது சமாளித்துக் கொண்டிருந்தாலும் அது சுயமரியாதை அற்ற தன்மையோடு, நிர்வாகம் பாழ் என்றே சொல்லுவோம். பொதுவாக பதவிகள் அடையும் மார்க்கமும் மந்திரிகளாய் வரப்பட்டவர்கள் நிலையும் இன்று இருப்பது போலவே என்றும் இருக்குமேயானால் கீழ் நிர்வாகங்களுக்கு எவ்வளவு பந்தோபஸ்து ஏற்படுத்தினாலும் இப்படித்தான் நடக்கும். சாதாரணமாக மந்திரிகளுக்குக் கூட இந்த நிபந்தனைகள்தானே இருக்கின்றது? அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் விட்டு விட்டுப் போய் விட வேண்டும் என்பதாகத் தானே இருக்கின்றது. ஆகவே மேலுள்ளது போலவே தான் கீழ் இருப்பதும் இருக்கின்றது. ஆதலின் நாம் இதை மாத்திரம் குற்றம் சொல்வது ஒழுங்காகாது.

இவைகளையெல்லாம் நினைப்பதற்கு முன் ஜனநாயகம் நல்லதா? தனி நாயகம் நல்லதா; அல்லது பஞ்சாயத்து குடிஅரசு நாயகம் நல்லதா? என்று முடிவு செய்வதில் தான் உண்மை, நன்மை கிடைக்க முயற்சி செய்ய முடியும்.

(முடிந்தது)

 

ஜாதி, மதம், கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லையென்றும், அவைகள் போலியும் சூழ்ச்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லுகின்றேன். ஆகையால், அதை விட்டுவிட்டு, மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து, அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்தவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.

மனித நாகரிகம் பெருக வேண்டுமானால், முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனிதத் தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க, நிலை

நிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனிதச் சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner