13.11.1932 - குடிஅரசிலிருந்து...
இந்த சினிமா காட்சி பார்ப்பதற்கு மிக அதிசய மாயும் ரம்மியமாயும் காணப் பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூடநம்பிக்கையும் அடிமைத் தன்மையையும் சோம்பேறிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக் கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப் பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங் களையே நாடகமாகவோ படக்காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத் துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்றதென்றும் சொன்னார்.
ஆதி திராவிடர் சங்க வரவேற்பில் சொற்பொழிவு
தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்ட வர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டுமென்றும், அம்முயற்சிக்கு எதிரி யாய் இருக்கும் சாதனங்களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் உலக தாழ்த்தப் பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமுகத்தை 2-வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யாமல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேறி செல்வவான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடைய தயாராயிருக்க வேண்டுமென்றும் பேசினார். (கடைசியாக, ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தை யும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடு மென்றும், ஆனால் அவர் கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற தென்றும் சொன்னார்.) அதற்கு ராமசாமி பதிலளிக்கையில் கடவுளை நம்ப வேண்டும் என்பது ஒரு அடக்குமுறை என்றும், அது அவனவன் சொந்த விஷய மாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை இருப்ப வர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழைகளை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம் பேறியாய் வாழும் அயோக்கிய தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக் காரர்கள் தான் காரண தர்களாகவும் பொறுப்பாளிகளாகவும் இருக்கின்றார் களே ஒழிய வேறில்லை என்றும் ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம் என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொன்னார்.
ஒருவன் பூணூல் போட்டுக்கொண்டு, நெற்றிக் குறி இட்டுக் கொண்டு, அவன் தாயார் மொட்டை அடித்து முக்காடு போட்டுக் கொண்டு, அவன் மனைவி கோவணம் போட்டு சேலை கட்டிக் கொண்டு இருக்க உங்களிடம் வந்து நான் பொதுஉடைமைவாதி, அதுவும் இடதுசாரிக் கம்யூனிஸ்ட் என்று சொன்னால், அதை நீங்கள் நம்பினால் நீங்கள் எவ்வளவு தூரம் முட்டாள்கள் ஆவீர்களோ அதேபோல்தான் நெற்றிக் குறியுடன் இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக்கொண்டு பாராயணம் செய்துகொண்டு பூசை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று நம்புவதாலும் ஆவீர்கள்.