எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

21.08.1932 - குடிஅரசிலிருந்து...

இப்பொழுது இந்துக்களுக்குள்ளேயே, வடநாட்டிலும் தென்னாட்டிலும், சாதி வேற்றுமையையும், பெண்ண டிமையையும் ஒழிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி தோன்றியிருப்பதைக் கண்டு நமது இயக்கத்தின் நோக் கமும், வேலையும் வீண்போக வில்லை யென்று களிப்படை கிறோம். இதற்கு உதாரணமாகச் சென்ற 08.08.1932இல் புதிய டில்லியில் இந்து சீர்திருத்த மகாநாடு என்னும் பெயருடன் இந்துக்களால் ஓர் மகாநாடு நடத்தப் பட்டதையும், அம்மகா நாட்டின் தலைவர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களின் பேச்சுக்களையும், அம்மகா நாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களையும் கூறலாம்.

அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திரு. ராமலால் வர்மா என்பவர் மூட நம்பிக்கைகளாலும், இழிவான வைதி கங்களாலும், பலவிதமான சாதி பேதங்களும் பிரிவுகளும் ஏற்பட்டக் காரணத்தால் இந்து சமுகம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது. இந்து சமயம் தீண்டாமை என்னும் கறையினால் தாழ்வையடைந் திருக்கிறது. ஆகையால் இந்தச் சாதி வேற்றுமைகளையும், தீண்டா மையையும் அடியோடு ஒழிக்க வேண்டியது அவசியமாகும். என்று பேசியிருக்கிறார்.

அம் மகாநாட்டின் தலைவர் சுவாமி சத்திய தேவ பாரி பிரஜாத் என்பவர், இந்துக்கள் வீண்பெருமையையும் துவேஷத்தையும் விடு வார்களானால் அவர்கள் ஆதிக்கம் மிகுந்தவர்களாவார்கள். இந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்படு வதற்கு முன் சுயராஜ்யம் கிடைப்பதென்பது முயற் கொம்புதான். இந்தியாவின் மக்களாகிய இந்துக்கள் அனை வரும் தமக்குள் உள்ள சமுகத் துவேஷங்களை விட்டொ ழித்தும், சமுகக் கொடுமைகளை ஒழித்தும், சுயநலத்தை விட்டு கொடுத்தும் இந்தியாவுக்குத் தொண்டு புரிய வேண் டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன் என்று பேசியிருக் கிறார். இன்னும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சிறந்த தீர்மானங்களாகும், அவைகள் வருமாறு:-

1. இம்மகாநாடு இந்து சமுகத்தில் பிறப்பினாலேயே சாதி வேற் றுமை பாராட்டும் காரணத்தால் ஆயிரக் கணக்கான சமுக வேற்றுமைகளும், தீண்டாமையும் வளர்வதாகக் கருதுவதால் சாதி வித்தியாசம் பாராட்டுவதை இந்துக்கள் அதிவிரைவில் விட்டொழிக்க வேண்டுமென்றும் இதன் பொருட்டு இந்துக்களின் பல விரிவான சாதியினரும் தங்களுக்குள் சமபந்தி போஜனமும், கலப்பு மணமும் செய்ய வேண்டுமென்றும் யோசனை கூறுகிறது.

2. இம்மகாநாடு தீண்டப்படாதவர்களுக்கும் தாழ்த்தப் பட்ட வகுப்பாருக்கும் பொது இடங்கள், பொதுக்கிணறுகள், பொதுப் பாதைகள் முதலியவற்றை மற்ற இந்துக்களைப் போல் சம உரிமை யோடு அனுபவிக்க உரிமை உண்டு என்று கருதுவதுடன், பொதுப் பள்ளிக் கூடங்களில் மேற் கண்ட வகுப்புப் பிள்ளைகளைத் தடையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்கோயில் களிலும், மற்ற பொது இடங்களிலும் தடையின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறது.

3. இம்மகாநாடு இளம்பருவத்தில் பெண்களுக்கு மணம்புரியும் காரணத்தாலேயே விதவைகள் பெருகு வதனால் இந்துக்கள் அனை வரும் இளம்பருவ மணத்தை ஒழித்துச் சாரதாசட்டத்தின்படி மணம் செய்யுமாறும், சமுக ஒற்றுமையுடன் அச்சட்டத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.

மேற்கண்ட மூன்று தீர்மானங்களிற்கண்ட விஷயங்கள் நமது சுயமரியாதை இயக்கத்திற்குப் புறம்பானவையல்ல. அத்தீர்மான விஷயங்கள் இந்துக்களால் அனுஷ்டானத் துக்குக் கொண்டு வரப்படுமானால் நமது விருப்பத்தின் படி இந்துக் களின் சமுகம் வளர்சியடைவதுடன், அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இந்து மதமும் அழிந்துதான் தீரும்.

ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் கோயில்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பொதுக்கிணறு, பொதுப்பாதை களிலும், தாழ்த்தப் பட்டோருக்கு உரிமை இல்லாதிருப்பதும், இளமை மணமும் இந்து மதத்திற்கு அடிப்படையானவைகள்; ஆகையால் இவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கும்பகோணம் பார்ப்பனர்கள் பேசிக் கொண்டு வரு வதையும் மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்தவர்கள் டில்லி இந்து சீர்திருத்த மகாநாட்டுத் தீர்மானங்கள் இந்து மதத்திற்கு மாறுபட்ட தென்பதையும் இந்து மதத்திற்கு அழிவைத் தேடுவது என்பதையும் ஒப்புக் கொள் ளாதிருக்க முடியுமா? என்றுதான் கேட்கின்றோம். ஆகவே இந்து மதத்திற்குப் புறம்பான தாயிருந்தாலும் இருக்கட்டும், இதனால் இந்து மதம் அழிந்தாலும் அழியட்டும் என்ற தைரியத் துடன் இந்து சமுக வளர்ச்சி ஒன்றையே கருதி மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிய டில்லி இந்து சீர்திருத்த மகா நாட்டாரை நாம் பாராட்டுகிறோம். இச்சமயத்தில் சுய மரியாதை இயக்கத்தைக் கண்டு முணுமுணுக்கும் பண்டிதர் களும், தென் னாட்டுக் கும்பகோணம் மடி சஞ்சிகளும் திரு. எம்.கே.ஆச்சாரியார் கூட்டத்தாரும், வடநாட்டில் இந்துக்கள் கூடி இவ்வாறு தீர்மானம் பண்ணியிருக் கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்.

இதனால் தான் நமது இயக்கத்தின் ஆக்க வேலை களாகக் கலப்பு மணங்களையும், விதவா விவாகங்களையும், சமபந்தி போசனங்களையும், தீண்டாமை ஒழித்தலையும் செய்து வருகிறோம் இக்காரியங்களின் மூலம் சடங்குகளும், சாதிகளும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இக்கொள்கை இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுமாயின் இந்துக் களைப் பிடித்த கஷ்டம் விரைவில் அழிந்து ஒழிவது நிச்சயமென்பதில் அய்யமில்லை.

இன்று சாதிகள் ஒழிய வேண்டும், பெண்களுக்குச் சமத் துவம் கொடுக்க வேண்டும். இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும், மூட நம்பிக் கைக்கான சடங்குகளைஒழிக்க வேண்டும். இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும் என்னும் கொள்கைகளைப் பழுத்த இந்து மத பக்தர்கள் கூட ஒப்புக்கொண்டு பிரசாரம் பண்ண முன் வந்திருப்பதை நோக்கும் போது, இன்னுஞ் சில நாட்களில் இவர்களே, இந்து மதத்தினர் வரவர தரித்திர திசையை அடைவதற்கு காரணம் எனன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார் களாயின் அதற்குக் காரணம் கோயில்களும், சாமிகளும், சடங்கு களும், பண்டிகைகளும் என்பதையுணர்ந்து இவை களையும் ஒழிக்க முன்வருவார்களென்றே நம்பலாம்.

ஆகையால் எப்பொழுதாவது இன்றில்லாவிட்டாலும் இன்னுஞ் சில தினங்கள் கழித்தாவது மக்களின் முன்னேற் றத்திற்குத் தடை யாயிருக்கின்ற இந்து மதம் வைதிக மதம் தெய்வீக மதம் புராதன மதம் என்று சொல்லப்படுகின்ற பாழும் மதம் அழிந்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆதலால் இனியாவது சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்ற விஷயங் களில் உண்மையை உணர்ந்து மக்களின் முன்னேற்றத் திற்கான முயற்சியைப் புரியுமாறு பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.


விதவையிலும் பணக்காரனியமா?
04.02.1934- புரட்சியிலிருந்து..

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ் அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செல வுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிரா மணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர் களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் விதவைகள் விடுதியில் தலைமை உத்தி யோகம் ஒரு பிராமண விதவை அம் மாளிடமும், விதவை விடுதி யில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள் களாலேயே நிரப்பப்பட்டிருக்கிற தென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது. கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராம ணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறுகிறோம்.

நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்
02.09.1934 - பகுத்தறிவு - கட்டுரையிலிருந்து..

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய தேசத்து தேசியத் தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்ட மான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.எ., எது கிரியம்மாள் ஆகியவர்களாவார்கள். இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி இருக்கிறார்கள். சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள். தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்க மில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner