எழுத்துரு அளவு Larger Font Smaller Font


12.11.1933 - குடிஅரசிலிருந்து...

குடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசர சட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20-ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுரகர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும், இருக்கின்றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்ட வேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.
முதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்.

குடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணையில்லை.

இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளைக் கண் ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

சிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பதுபோல்  குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.

ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது. மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.

நிற்க, இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்படவேண்டியதில்லை. நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது. குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள்கை களைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருத வேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக்கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விபரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இதுவிஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ளவேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

புரட்சி
26.11.1933 - குடியரசு புரட்சிலிருந்து...  

குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியால் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆகவேண்டும். அந்த அய்தீகப் படியே புரட்சி தோன்றி இருப்பதால் புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை.

நமது முதலாளி வர்க்க ஆட்சியானது தனது காவலாளி களாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியிருப்பதால் குடிஅரசை அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும் என்ற ஞானபோதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது புரட்சியானது குடிஅரசைக் காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப் பிரச்சார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது.

இதன் காரணமாய்ப் புரட்சி எந்த நிமிஷத்தில் குத்துப் பட்டாலும் படலாம். எந்த விநாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம். ஆனால் சுயமரியாதைப் புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும்வரை ஒரு கணமும் ஒய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி.

காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமாறவருந்தியும், மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி. மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனித சமுக சமதர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு. மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காத வனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சித் தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

ஆதலால் மனிதசமுகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டு பிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடை கின்றோம். சோம் பேறித்தனமாய் வாழ நினைத்து சுய மரியாதை இயக்க நிழலில் திரிந்தவர்களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள் அடையக்கருதி சுயமரியாதை இயக்கப்போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர்களுடையவும் ஆதரவு நம் புரட்சிக்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே புரட்சி தோன்றியிருக்கிறது. ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினியாயும் சமுக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே புரட்சி எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளி களைக் காக்கும் வேலைக்கு இன்று புரட்சி வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப புரட்சி தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த புரட்சி வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வசமயங் களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியா தையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே புரட்சி தோன்றியி ருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில், ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.

 

ஜாதி என்பது வடமொழி. இதற்கு ஏற்ற சொல் தமிழில் இல்லை. எனவே, ஜாதி என்பது தமிழரிடை முன்பு இருந்ததில்லை. தமிழர்களுக்குள் ஜாதி என்பது இருந்து இருக்குமானால் அதற்குத் தமிழில் ஒரு சொல் இருந்து இருக்க வேண்டுமே? இல்லையே! எப்படி காபி என்பது அன்னிய நாட்டுப் பொருளானதால் அதற்குத் தமிழில் சொல் இல்லையோ அதுபோல் ஜாதி என்பதற்கும் சொல் இல்லை.

தந்தை பெரியார் பொன்மொழிகள்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner