எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தந்தை பெரியார் மே 22, 23,  ஆகிய இரு நாட்கள் (சனி, ஞாயிறு) சிதம்பரத்தில் கலந்து கொண்ட மாநாடுகள் வெற்றி விழா மாநாடுகள் என்றே கூறலாம்.

ஆச்சாரியார் ஆட்சியையும், புதிய வர்ணாசிரமத் திட்டத்தையும் ஒழித்துக் கட்டிய தனிப் பெருந்தலைவர் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மாநாடும், தாழ்த்தப்பட்ட மக்களின் சமுதாய - பொருளாதார கல்வி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் போர்குரல் எழுப்பி வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் தொண்டு வ.வீராசாமி அவர்கள் தலைமையில் திராவிட விவசாய தொழிலாளர் மாநாடும் நடைபெற்றன. இம்மாநாட் டில்  உரையாற்றிய தந்தை பெரியார் தமது உரையின் தொடக்கத்தில், முதலாவது இந்த மாநாடு அய்ந்து வருடத்திற்கு அசைக்க முடியாதபடி இருந்த ஆச் சாரியாரின் ஆட்சி ஒழிந்த சந்தர்ப்பத்தில் நடை பெறுகிறது. இரண்டாவது ஒரு தமிழரது மந்திரிசபை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது என்று எடுத்துக் கூறி, கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத மாதிரி இப்போது தான் தமிழர் மந்திரி சபை ஏற்பட் டுள்ளது. இதற்கு முன் இருந்த அமைச்சர்களெல்லாம் பார்ப்பனர்களாகத்தான் இருந்தார்கள் என்று கூறியவர் - காமராசரைப் பச்சைத் தமிழர் என முதன் முதலாக அழைத்தும் தமிழ்நாட்டில் ஒரு பச்சைத் தமிழனுடைய மந்திரி சபை ஏற்பட்டிருப்பது நமக்கு ஒரு பெருமை. அடுத்து காமராசர் அமைச்சரவை பார்ப்பானே இல்லாத அமைச்சரவை என்று சுட்டிக் காட்டினார். (ஆர்.வெங்கட்ராமன் பின்னர் சேர்க்கப் பட்டார்).

என்னைப் பொறுத்த வரையிலும் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன் என்றும் விளக்கம் அளித்தார். தொடக்கத்தில் இராஜாஜி ஆட்சிக்கு வந்தபோது தந்தை பெரியார் ஆதரித் ததை அன்றும் இன்றும் ஏதோ ஒரு பெருங்குறையைக் கண்டுபிடித்தது போல் சிலர் பேசுவர், எழுதுவர். அதற்கும் விளக்கம் கிடைத்தது. தேர்தலில் கம்யூ னிஸ்டுகளை ஆதரித்தேன். நாம் படாத பாடுபட்டு கஷ்டப்பட்டு உழைத்து வெற்றி தேடித் தந்தோம். அவர்கள் வெற்றி கிடைத்ததும் நம்மைப் பற்றி எந்த விதமான கவலையும்படாமல் ஆந்திரப் பார்ப்பனர் பிரகாசத்திடம் போய்க் கெஞ்சினார்கள். இது கூடாது என்று நான் எண்ணினேன். இந்தச் சமயத்தில் எழுதினேன். தைரியமாக. கம்யூனிஸ்ட் மூலம் பிரகாசம் வருவதைவிட காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆச்சாரியார் வருவது நல்லது என்றேன். ஆச்சாரியாருக்கு என் ஆதரவு முழுவதும் கிடைக்கு மென்றேன். மற்றவர்கள் திட்டும் பொழுது கூட அவரை நான் ஆதரித்தேன். அவர் லஞ்சத் துக்கு வழிவிடமாட்டார் என்றேன். இந்த எம்.எல்.ஏ.க்களை வாலாட்ட விடமாட்டார் என்றேன். உடனே அவரும் கண்ட்ரோலை எடுத்தார். அதனால்தான் எது இல்லை என்றாலும் நாட்டிலே பொது ஒழுக்கம் குறைந்து வந்ததாவது நிறுத்தப்பட வசதியாயிற்று என்று புகழ்ந்தேன். அதனால்தான் அவருக்கு நம் பேரில் சந்தோஷம் ஏற்பட்டது. அவரும் நம் பத்திரிகையைப் பார்த்துத்தான் தஞ்சை ஜில்லா விவசாயச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம்முடைய சேலம் மாநாட்டுத் தீர்மானத்தை அப்படியே எடுத்து நெசவாளருக்கு நன்மைகள் செய்தார். இதைப் பார்த்து இந்த ஜீவானந்தமும் இந்த இராமமூர்த்தியும் கூட இந்த நாட்டை இராஜ கோபாலாச்சாரியார் ஆளவில்லை; இந்த ஈரோட்டு இராமசாமிதான் ஆளுகிறார் என்றார்கள்!
சட்டசபைக்கோ  பதவிக்கோ செல்லாத  நாம்  யார்  நல்லது செய்தாலும், பாராட்டுவது போல் இதையெல்லாம் பாராட்டினோம். கல்வித் திட்ட எதிர்ப்பின் வலிமை புரியாமல் எடுத்துச் சொன்ன வர்களெல்லோருமே இராமசாமி நாயக்கரின் ஆள் என்று கருதி ஆணவமாக இருந்ததால் ஆச்சாரியார் இன்று நானே வருந்தும்படி வெளியேறி விட்டார்.

எதையும் பட்டவர்த்தனமாகப் பேசும் பெரியார் அன்று சிதம்பரத்தில் பேசியது இன்று வரை பொருந்துகிறது என்பதற்கு அவர் பேச்சில் ஒரு துளி.

‘விடுதலை', 25.5.1954

பெரியார் வருகை தந்த பலன்

மலாயப் பயணத்தின்போது மலாயாத் தமிழரை அரிக்கும் மற்றொரு தீய வழக்கமான குடியை ஒழிக்குமாறு பெரியார் சென்றவிட மெல்லாம் இடித்துக் கூறினார்.
மலாயா இந்தியரின் தலையாய பிரச்சினை ஒன்றில் பெரியார் செலுத்திய நாட்டமும் தந்த அறிவுரையும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத் தின. மனமாற்றம் பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. பலகாலமாக மலாயாவில் வாழ்ந்தும், மலா யாவை வளப்படுத்த உழைப்பை நல்கியும் இந்த நாட்டு பிரஜைகளாகப் பகிர்ந்து கொள்ள உங்களில் பலர் முன் வரவில்லையே என்று வருந்தினார். மலாயா நாட்டில் சொந்தம் கொண்டாட, தமிழருக்குரிய உரிமையைப் பெற, சீனர்களுக்கு இணையாக வாழ மலாயா நாட்டுக் குடியுரிமை பெறுவதே வழி. இங்கே குடியும் குடித்தனமுமாக நிரந்தரமாக நிலைப் பதே அறிவுடைமை என்று பெரியார் சந்தேகத் திற்கு இடமின்றி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இந்தியாவுக்குத் திரும்ப வர வேண்டும் என்ற ஆசையையே அழித்து விடுங்கள் என்று சொன்னார்.
திக்குதெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த தமிழர் பலருக்கு இதுதான் வழி என்று திட்டமாகச் சுட்டிக் காட்டினார் பெரியார். இதுதான் வழியென்று தெரிந்தும் மதில்மேல் பூனையாக அமர்ந்திருந்த பலரைத் தங்கள் வழியைத் தீர்மானிக்கச் செய்தது பெரியாரின் பேச்சு. தொண்டு செய்யுந்திறனும், தலைமை ஏற்கும் தகுதியுமிருந்தும் தயங்கி ஒதுங்கி நின்றோரை அந்தத் தள்ளாத கிழவனின் உதாரணம் சிந்திக்க வைத்திருக்கிறது. தொண்டு செய்யும் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது.
- வை. திருநாவுக்கரசு
(வை.திருநாவுக்கரசு அவர்கள் விடுதலை துணை ஆசிரியராக இருந்து, தந்தை பெரியார் அறிமுக உரை - பரிந்துரை தந்து, சிங்கப்பூர் தமிழ் முரசு துணை ஆசிரியராகவும், பிறகு பல பெரிய பொறுப்புகளை சிங்கப்பூர் அரசியல் பெற்று ஆற்றி ஓய்வுபெற்று, மீண்டும் சிங்கப்பூர் தமிழ் முரசு ஆசிரியராக தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் மறைவுக்குப் பின் இவர் சிங்கப்பூர் தமிழ் முரசினை நிலைநாட்ட உதவினார்,)

புத்தர் விழாவும்- தந்தை பெரியாரும்!தந்தை பெரியார் 1954இல் தான் தமிழ் நாட்டிலேயே புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு என்று ஈரோட்டில் மாநாடு கூட்டினார்! அதன் வேகம் இந்தியா முழுவதும் பரவி இந்திய அரசினரே பல லட்சக்கணக்கில் செலவு செய்து புத்தர் விழாவை இந்தியா முழுமையும் கொண் டாடும் படிச் செய்தனர். தந்தை பெரியார் விரும் பியவாரே  புத்தர் பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக ஆக்கியது. இன்றும் புத்த பூர்ணிமா என மய்ய அரசு விடுமுறை விடுகிறது.

தந்தை பெரியார் புத்தரின் கருத்துக்களை வலியுறுத்தி வந்தது அறிவோம். அதன் தொடர்ச்சியாக பெரியார் வேண்டுகோள் ஒன்று புத்தர் விழா 1956 மே 24, 25, 26, 27 தேதிகளில் தமிழர்கள் அனைவரும் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளும் அறிவிப்பு வெளியானது. 24.05.1956ஆம் தேதி சேலம் நகரில் புத்தரின் 2500ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா
மாநாடு மற்றும் கூட்டம் சிறப்புறக் கொண் டாடப்பட்டது.

வடசென்னையில் புத்தர் விழா

சென்னையில் தந்தை பெரியார், புத்தர் பிறந்த 2500 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை நான்கு நாள்கள் விழாவாக 24.06.1956 முதல் 27.06.1056 வரை மிக சிறப்பான கொண்டாட் டமாகக் கொண்டாடினார். அதற்கு முன்னும் பின்னும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமி ழகத்தின் பல பகுதிகளிலும் புத்தரை நினைவுக் கூரச் செய்த பெருமை தந்தை பெரியாருக்கு உரியதாகும். எடுத்துக்காட்டாக 05.06.1956 சுப் பையா தலைமையில் தந்தை பெரியார் புத்தர் பிறந்த நாள் தட்சிண பிரதேசம் ஆகிய தலைப்புகளில் மதுரை, சந்தைப்பேட்டையில் பேசியது குறிப்பிடலாம். 23.05.1956ஆம் தேதி திருச்சி தேவர் மன்றத்தில் நகர திராவிடர் கழக சார்பில் புத்தர் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நகர திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா முன்மொழிய தி.பொ.வேதாசலம் விழாவிற்குத் தலைமை வகித்தார். அப்போது தந்தை பெரியார் கலந்துகொண்டு புத்தர் விழா கொண்டாடும் இன்றியமையாமை குறித்தும் புத்தர் நெறியை விளக்கியும் சொற்பொழி வாற்றினார்.

25.5.1956ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பெரியார்  சுயமரியாதைப் பிரச்சார சங்கத்தின் சார்பில் வடசென்னை இராயபுரம் காவல் நிலையத்துக்கு அருகில் மாபெரும் புத்தர் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பி.எஸ்.கேசவன் முன்மொழிந்ததை எம்.கே.டி. சுப்பிரமண்யம் வழிமொழிந்ததற்கிணங்க டி.வி. சுந்தரமூர்த்தி கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

தலைவர் முன்னுரைக்குப்பின் எஸ். குருசாமி பி.ஏ., புத்தருடைய கொள்கைகளைப் போற்றி விளக்கினார். பின்னர் பெரியாருக்கு வட சென்னை பெரியார் சுயமரியாதை சங்கத்தின் சார்பில் மாலைக்குப் பதில் ரூபாய் ஒன்றும் கீழை இறால், வேல் வெள்ளைச்சாமி பகுத்தறிவு படிப்பகத்தின் சார்பில் கருப்புத்துண்டு ஒன்றும் அன்பளிப்பாக அளித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner