எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

ஒத்துழையாமையின்போது சர்க்கார்மீது மக்களுக்கு எவ்வளவோ வெறுப்பை உண்டாக்கினோம். அதனால் சர்க்காரும் சற்று கலங்கி னார்கள். ஆனால், அதுசமயமும் ஒரு பார்ப்பான்தான் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் வைக்க யோசனை கூறி சர்க்காருக்கு உதவி செய்தார்.

அதன்பிறகு அந்தப் பலனை யார் அனுபவித்தார்களென்றால் அந்தப் பார்ப்பனர்களேயாவார்கள். உதாரணமாக, ஒத்துழையாமை ஒடுங்கின உடனே திரு.இராஜகோபலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கவும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற மந்திரிகளை நியமிக்கவும் கோவைக்கும், சென்னைக்கும் ஓடிவந்து விட்டார்; மற்றும் ஒத்துழையாமையை வைத, ஒழித்த பார்ப்பனர்கள் எல்லாம் உடனே காங்கிரசுக்காரர்களாகவும், தேசியவாதி களாகவும் ஆகி பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிக்க ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப்போட்டார்கள்.

அதுபோலவே இப்போதும் தமிழ்நாட்டில் இந்த காந்திப்போரின் பேரால் ஒரு ஆயிரம், இரண்டாயிரம் பேரையாவது நாம் ஜெயிலுக்கனுப்பி வைத்தோமேயானால் அடுத்து வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்களுக்கு அல்லது அவர்கள் அடிமைகளுக்கு ஓட்டு வாங்கிக்கொடுத்து பார்ப்பனரல்லாதார் கட்சியை அழித்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற மந்திரிகளை நியமிக்க இதே திரு. இராஜகோபாலாச்சாரியார் மறுபடியும் சென்னைக்கு ஓடிவந்து விடுவாரென்பதில் யாருக்கு என்ன சந்தேகம்? அதற்காகவே திருவாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கிட்ட ரமணய்யங்கார், சீனிவா சய்யங்கார், முத்துரங்க முதலியார், வரதராஜுலு நாயுடு, ஆதிநாராயண செட்டியார் முதலாகியவர்கள் காங்கிரசில் ராஜினாமா கொடுத்துவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் வசம் காங்கிரசையும் ஒப்புவைத்துவிட்டு தயாராய் நாக்கில் ஜலம் சொட்ட காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உதிர்ந்த மலர்கள்
02. 02. 1930 - குடிஅரசிலிருந்து...

1. நமது நாடு பார்ப்பனிய ஆதிக்கத்திலும், பணக்கார செல்வாக்கிலும் இருக்குமட்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்துதான் ஆகவேண்டும்.

2. பூரண சுயேச்சை என்பது ஒரு மனிதன் எந்த விதத்திலும் எதற்கும் அடிமைப்பட்டிராத விடுதலை என்றால் நான் அதை மனப்பூர்வமாய் வரவேற் கின்றேன்.
அப்படிக்கில்லாமல் பிரிட்டிஷார் இந்த நாட்டை விட்டுப் போவதும் (திரு.காந்தி சொல்லும்) ராமராஜ்ஜியம் ஏற்படுத்துவதும் என்றால் நான் ருஷிய அரசாங்கத்தையே கூவி அழைக்க முந்துவேன்.

3. இந்த நாட்டிற்குச் சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்டு அதை அமலில் நடத்திவைக்கும் ஆசை பொது மக்களுக்கு ஏற்பட்டதற்காக யாருக்காவது நன்றி செலுத்த வேண்டுமானால் அது முதலில் திருமதி. மேயோ அம்மையாருக்கு உரியதாகும்.

வைசிராய் சம்பளம்
16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...

இந்தியாவின் செல்வம்-ஏழைகளின் வரிப்பணம் ஆகியவை வெள்ளைக் காரர்கள் கொள்ளை அடிப்பதற்குத் தகுந்த அளவுப்படி ஏன்? அதற்கு மேலாகவும்கூட இந்திய தேசியவாதிகள் என்பவர்கள் கொள்ளை அடிப்பதில் லையா? வெள்ளைக்காரர்கள் கொள் ளைக்கும் இந்தியர்களே ஆதாரமாய் இருந்து அவர்களுக்கு உளவு சொல்லிக் கொடுத்து அவர்களிடமிருந்து பங்கு வாங்குவதில் லையா? என்பதை யோசித்துப் பாருங்கள். இதற்கு வெள்ளைக்காரன் என்ன செய்வான்.எனக்கு வேண் டாம் என்று சொல்லுவானா?

திரு. காந்திக்கு வைசிராய் சம்பளமும், கவர்னர் சம்பளமும் பார்த்து சகிக்க முடியவில்லையாம். சத்தியாக்கிரகத்திற்கு இதை ஒரு காரணமாய் எழுதி இருக்கிறார். இந்திய தேசியவாதிகளும், காங்கிர தலைவர்களுமான திருவாளர்கள் ஸின்ஹா சம்பள மும், சீனிவாச சாஸ்திரி சம்பளமும், அபி புல்லா சம்பளமும்,  சிவசாமி அய்யர் சம்பளமும், சர்.சி. பி. அய்யர் சம்பளமும், கிருஷ்ணன் நாயர் சம்பளமும் வெகு தர்மமானதும், நாணயமானதுமான சம்பளமா என்று கேட்கிறோம்? இவர்களுக்கு இந்தச் சம்ப ளத்தை ஏற்படுத்தினவர்கள் இந்த திரு. காந்தியும் அவர் கொஞ்சி விளையாடும் திரு.தேசிய காங்கிரசும் அல்லவா என்று கேட்கின்றோம்.

1920ஆம் வருஷத்திய சீர்திருத்தம் இந்த திரு. மகாத்மா காந்தியால் ஒப்புக் கொள்ளப்பட்டதும் வரவேற்கப்பட்டதும்தானா? அல்லவா? என்று கேட்கின்றோம். நாம் நான்கு திராம் சாராயம் குடித்துக்கொண்டு வெள்ளைக்காரனை ஒரு திராம் சாராயம் குடிக்கவேண்டாம் என்றால் இதில் நாணயமோ, யோக்கியமோ எப்படி இருக்கமுடியும்?

கஞ்சி வெள்ளம் சாப்பிட்டுக்கொண்டு மாதம் 2ரூ செலவில் வாழும் மக்கள் தேசத்து சர். சங்கர நாயருக்கு 6333 - 5 - 4 காசு  சம்பளம் எதற்கு? பஞ்சாங்கம் சொல்லி  பிச்சை எடுத்து வாழும் சர்மா வுக்கும் சாஸ்திரிக்கும் மாதம் 6333 - 5 - 4 காசு சம்பளம் எதற்கு? இதை ஏன் மகாத்மாவின்  தேசியமும், மனசாட்சியும், ஏழைகளிடமிருக்கும் அன்பும், தரித்திர நாராயணனும் ஆட்சேபிக்க வில்லை என்று தான் கேட்கின்றோம்.

தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 0 - 2- 8 பை வீதம் சம்பாதனை சம்பாதிக்கும் (இந்திய) தேசத் தானுக்கு மாதம் 1க்கு  6333 - 5 - 4 சம்பளம் வேண்டியிருந் தால் அதை தேசிய காங்கிரசும் அனு மதித்து  அந்த காங்கிரசின் தலைவரே அந்தப்படி வாங்கிக்கொண்டும் வந்தால் நாள் ஒன்றுக்கு ஆள் 1-க்கு 2 - 8 - 0 அணா வரும்படியுள்ள  (இங்கிலாந்து) தேசத் தானுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? மாதம் ஒன்றுக்கு 95000 தொண்ணூற்றய் யாயிரம் ரூ. அல்லவா நாம் கொடுக்க வேண்டும்! இப்போது நாம் வைசிராய்க்கு 21, 000 ரூ. தானே கொடுக்கின்றோம்.

ஆகவே, இந்த ஒருவர் சம்பளத்திலேயே ஏழை இந்தியாவுக்கு மாதம் 74,000ரூ. மீதிதானே? இதுபோலவே சர் .சி. பி. ராமசாமி அய்யர் சம்பளம் வாங்கிய 5333 - 5 - 4 வீதம் கணக்கு பார்த்தால் சென்னை கவர்னருக்கு மாதம் 80,000-ரூ. என்பது ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டாமா? இப்போது அவருக்கு 10 ஆயிரம்தானே கொடுக்கின்றோம். இதில் ஏழை இந்தியாவுக்கு மாதம் 70 ஆயிரம் மீதி இல்லையா?

இதுபோலவே நாம் உப்பு வாங்குவதில் சர்க்கா ருக்குக் கிடைக்கும் வரிப் பணத்தையும் திருப்பவும் சம்பள ரூபமாக நமது தாஸ், நேரு, போஸ், பட்டேல், சாப்ரூ, ஸின்ஹா, அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, சர்மா, சாஸ்திரி, சாயபு, நாயர், முதலியார், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், (வகுப்புவாரிப் பிரநிதித்துவப்படி) ஆகிய தேசியவாதிகளும் காங்கிரஸ் தலைவர்களும், காந்தி சிஷ்யர்களும் மாதம் ஒன்றுக்கு 2000, 3000, 5000, 6000, 7000 வீதம் பங்கு போட்டுக்கொள்கிறார்களே ஒழிய யாராவது வேண்டாமென்று சொல்லி வாபசு செய்து சம்ப ளத்தை குறைத்துக் கொண்டார்களா? குறைத்தார் களா? குறைக்கவாவது திட்டம் வைத்திருக் கிறார்களா? இந்தப்படியே மற்ற இந்திய தேசாபி மானிகள்  வாங்கும் சம்பளத்திற்கும் கொள்ளைக்கார வெள்ளைக் காரர்கள் வாங்கும் சம்பளத்திற்கும், யார் வாங்குகின்ற சம்பளம் அவர்களது தகுதிக்கும் தேவைக்கும் மேல்கொண்டது என்று கேட்கின்றோம். ஆகவே, இந்தியர்களின் வரி உயர்வுக்கும், அவ்வரி கொள்ளை அடிக்கப்படுவதற்கும் இந்திய தேசிய வாதிகளும், தேசிய காங்கிரசும் அவைகளை ஆதரித்த மகாத்மாக்களும், ஜவாப்தாரிகளா அல்லது வெள்ளைக்காரர்கள்  ஜவாப்தாரிகளா  என்று இப் போது யோசித்துப்பாருங்கள்.கல்லுச் சாமியும், அயோக்கிய
மத ஆச்சாரிகளும்
16. 03. 1930 - குடிஅரசிலிருந்து...
இந்தியப் பாமரக் குடியானவர்களும், கொடுமைப்படுத்தப்பட்ட வாயில்லாப் பூச்சிகளான கூலிகளும், தீண்டப்படாதவர்களும் பாடுபட்டும் கஷ்டப்பட்டும் சம்பாதித்த பணத்தை நமது நாட்டு கல்லுச் சாமிகளும்,, அயோக்கிய மத ஆச்சாரிகளும், அக்கிரம மடாதிபதிகளும், சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்களும், சுயநலம் படைத்தவர்களும், மூடப்பணக்காரர்களும், கொடிய முதலாளிகளும் மற்றொருபுறம் கொள்ளையடித்துக் கொண்டு நாட்டைக் கொடுமைப்படுத்திக்கொண்டு  இருப்பதைவிட உலகத்திற்கே முன்னணியில் இருந்துகொண்டு உலக முற்போக்கில்  கவலை எடுத்து உழைக்கின்ற முயற்சியும்  தகுதியுமுடைய  மக்களுக்குப் போவதில் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும் என்று கேட்கின்றோம். தகுதியுடையவனே அடைவான் என்கின்ற இயற்கை சட்டம் யார் தடுத்தாலும் செலாவணியாய்க் கொண்டுதான் இருக்கும்.
மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூச்சல் போடும்  சூழ்ச்சிக் காரர்கள் மக்களைத் தெருவில் நடக்கவிடமாட்டேன் என்கின்றார்கள். கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்னும், கசடர்களோ அக்கடவுளைக் காண மனிதனை அனுமதிக்க மாட்டேன் என்கின்றார்கள்.
மறைகளையும், கலைகளையும் காப்பாற்ற வேண்டும் என்னும் சுயநல தூர்த்தர்களோ அம்மறைகளையும், கலைகளையும் மக்கள் கற்க -  அதன் உண்மையை அறிய .இடம் கொடுக்கமாட்டேன் என்கின்றார்கள்.
இந்த மாதிரி மக்களைக் கொண்ட நாட்டில் உள்ள ஒரு அரசாங்கத்தை அல்லது வெள்ளைக்காரர்களை ஒழித்துவிடுவதால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது நமக்கு விளங்கவில்லை.
வெள்ளைக்காரர்களையோ அல்லது அரசாங்கத்தையோ ஒழித்துவிட்டு இந்தப் பாமர மக்களையும், ஏழைக்கூலிகளையும், தீண்டக்கூடாத சண்டாளர்களையும் பிறகு யாரிடம் ஒப்புவிப்பது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

-------------------------------------------

ஓரிடத்தில் ஓர் உப்புக் கிணறும் மற்றொரு நல்ல தண்ணீர்க் கிணறும் இருக்கிறது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும்; உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும்; இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமானால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனை தரும் அளவுக்கு ஜாதி முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற் கென்றும் மற்ற பலர் வேதனைப்படுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட  ஜாதி முறைகள் இந்நாட்டைவிட்டு அகலும் வரை நமக்குள்ளே கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்.
-தந்தை பெரியார் பொன்மொழிகள்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner