எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொங்கல் தமிழர் திருநாள்!

(என்.ஜி.ஓ.குரல் ஆண்டு மலர்/ சனவரி 1971/ தை 2002)

(தமிழ்த் திருநாள் பற்றிய சுவைமிக்க, பயனுள்ள சீரிய கருத்துகள் பற்றித்திறன்பட அழகு தமிழில் எழுதியுள்ள இக்கட்டுரையாசிரியர் திரு வ.வேம் பையன், கல்பாக்கம் அணுமின் திட்டத்தில் பணியாற்றியவர்).

பொங்கல் திருநாள் :

தமிழ்நாட்டில் திங்கள்தோறும் திருவிழா உண்டு. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒரு கதையும் உண்டு. கதை இல்லாத திருவிழா ஒன்றே ஒன்றுதான். அது பொங்கல் திருவிழா. அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற விழா: காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்த விழா தமிழ்ப்பண்பாடும் நாகரிகமும் தழுவிய விழா; உழவையும் உழைப்பையும் போற்றும் விழா; உழவுக்கு உறுதுணையான கால்நடையைப் பேணும் விழா; பழையன போக்கும் விழா; புதியன ஏற்கும் விழா; புத்தாண்டு விழா; புதுக்கணக்குப் போடும் விழா பொருள்களைப் புதுப்பிக்கும் விழா; அறுவடைத் திருவிழா; உழவர் பெருவிழா; அறிவாற்றலின் பயன்கொள் விழா; ஆடிப்பாடி மகிழும் பெருவிழா; முத்தமிழ் போற்றும் முதுபெரும் விழா; தமிழரின் தனிப்பெரும் விழா. தமிழர் அனைவரும் சாதி, சமய வேறுபாடு இல்லாமல் கொண்டாடும் விழா - பொங்கல் திருநாள் விழா.

பொங்கல் திருநாள் ஒன்றுதான் முற்றிலும் தமிழ்ப் பண்போடு தழுவியதாகும்; உழைப்பையும் உழவரையும் போற்றுவதாகும்; தூய்மையும் அன்பும் அருளும் நன்றி யறிதலும் நடம்புரிவதற்குரியதாகும்"

- பேராசிரியர் சி.இலக்குவனார்.

தமிழர் திருநாள்:

சாதியாலும் சமயத்தாலும் கட்சியாலும் பிறவற்றாலும் பிரிவும், பிளவும், பூசலும், பிணக்கும், பகையும், போரும், வேறுபாடும் மாறுபாடும் கொண்டுள்ள தமிழர்கள் அனைவரும் கொண்டாடும் விழா பொங்கல் விழா. அடுத்து, எல்லாம் சிதைந்த, எல்லா வேற்றுமையும் நிரம்பிய தமிழர்களை இணைக்கும் விழா, தமிழ் விழா, குறள் விழா ஆகும். பொங்கல் விழா, தமிழ் விழா, குறள் விழா ஆகிய மூன்றும் தமிழர்களை நாம் தமிழர் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தி இணைக்கும் விழா, ஒற்றுமைப்படுத்தும் விழா. எனவே, இவ்விழாக்கள் அனைத்துக்கும் பொதுப்பெயராக, தமிழர்களை பிணைக்கும் பெயராகத் தமிழர் திருநாள் என்பது வழங்கலாயிற்று.

கிழமை விழா :

இத்தமிழர் திருநாள் ஒரு கிழமை விழாவாக ஏழு நாள்கள் கொண்டாடப்பெறல் வேண்டும் என்பது நல்ல தமிழர்களின் நல்ல எண்ணம் ஆகும். தமிழகப் புலவர் குழு அமைப்பாளர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் சி. இலக்குவனார், கடலகம் கா. நமச்சிவாயனார் முதலிய தமிழ் அறிஞர்கள் பலரும் இதற்காகப் போராடியும் வாதாடியும் வருகிறார்கள். கீழ்க்குறிப்பிட்ட வண்ணம் அந்த ஏழு நாட்களையும் கொண்டாடல் வேண்டும்.

1. மார்கழி இறுதிநாள்: போகித் திருநாள்

போகி என்பது போக்கி என்பதன் இடைக்குறை ஆகும். தூய்மை குறைந்தவற்றையும் பயன்படா பழையனவற்றையும் போக்கும் நாளே போக்கி எனப்பட்டது. பின்னர்ப்போகி என வழங்கலாயிற்று, அல்லன போக்கி நல்லன கொள்ளுவதே முறையாகலின் அல்லன போக்கும் நாள் மார்கழி இறுதி நாளாக அமைந்துள்ளது - பண்டாரகர் சி. இலக்குவனார்.

மார்கழி மாதத்தில் வீடுகளில் உள்ள ஒட்டடை போக்குதல், வெள்ளையடித்தல், காவியடித்தல், வண்ணம் பூசுதல் முதலிய வேலைகள் நடைபெறுகின்றன. வீட்டில் உள்ள சாமான்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. தேவை யற்ற பொருட்களும் பழையனவும் குப்பைக் குழியில்-எருக்குழியில் சேர்க்கப்படுகின்றன; புதியன - புதிய துணிகள், பொருள்கள் முதலியவை வாங்கப்படுகின்றன. இவ்விதம் ஆண்டுக்கு ஒரு முறை பழையன போக்கி, புதியன கொள்ளல் அறிவுக்கும் அறிவியலுக்கும், நலவியலுக்கும், நாட்டியலுக்கும் பொருத்தமும் பொருளும் உடையதாகும்.

அரசினர் அலுவலகங்கள், கட்டடங்கள் முதலியவற்றுக் குரிய ஆண்டுப் பேணல் (Annual Maintenance)  பருவச் செப்பனீடு (Periodical Repairs) ஆகிய வெள்ளையடித்தல் (White Washing)
வண்ணம் பூசுதல் (Colour Washing) முதலிய வேலைகளை மார்கழியில் செய்வதன் மூலம் நிதி ஆண்டின் (Financial Year) இறுதியில் அரசுக் கொடையை (Govt. Grant) அவசர அவசரமாக செலவழிப்பதைத் தவிர்க்கலாம்.

இங்ஙணம் வீட்டையும், தெருவையும், ஊரையும், நாட்டையும், பழையன போக்கி, புதியன கொண்டு தூய்மைப்படுத்துவதுதான் போகித் திருநாள் ஆகும்.

2. தை - 1 : வீட்டுப் பொங்கல் - திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம்

"உழைப்பின் பயனால் விளைந்தனவற்றை ஊராரோடு மகிழ்ந்து துய்ப்பது பெரும் பொங்கல், திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தையெனவும் ஆண்டுத் தொடக்கம் தை முதல்நாள் எனவும் கொண்டாடி வருகின்றோம்"

- பேராசிரியர் சி. இலக்குவனார்.

வீடுதோறும் வைகறைத் துயில் எழுந்து புதுப்புனலாடி, புத்தாடை புனைந்து, புதுக்கோலம் கொண்டு பூரிப்பெய்தி, புத்தரிசி எடுத்து, புதுப்பானையிலிட்டு, புதுப்பால் வார்த்து, புத்தடுப்பில் வைத்து, புது விறகுகொண்டு எரித்து, புதுப்பொங்கலிட்டு, புது வாழை இலையில் படைத்து, உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு போற்றி, ஆடவரும் மகளிரும் குழந்தைகளும் உற்றார், உறவினர் சுற்றம், நட்பு சூழ, உழைப்பின் பலனை உவகை பெருக்கோடு உண்டு மகிழும் நன்னாள் இந்நாள்.

பால் பொங்கி வரும்போது எல்லாரும் பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் கூவும் நாள்; செந்நெல்லும் தீங்கரும்பும் மஞ்சளும் இஞ்சியும் வாழையும் தாழையும் பூவும் மாவும் பலாவும் தென்னையும் கமுகும் போன்ற மங்கலப் பொருள்கள் யாவும் மனையெலாம் நிறைந்து மகிழ்ச்சி பொங்கும் நாள்.

உழைப்பே உடைமை, உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பதை உலகுக்கு உணர்த்தும் நாள்; கடல்சூழ் உலகிற்கு மேகத்தைத் தரும் கதிருக்கு நன்றி நவிலும் நாள்; உழவனின் உழைப்பாலேயே உலகம் உயிர்ப்பித்திருக்கிறது என்னும் உண்மையை உலகோர் உணரச் செய்யும் நாள் உழவர் திருநாள்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து என்னும் குறள் நெறி கூறும் நாள்.

இது நாட்டுத் திருவிழா ஆயினும் தமிழர் ஒவ்வொருவரின் வீட்டுத் திருவிழா ஆகும். எனவே, "வீட்டுப் பொங்கல் என வழங்கலாயிற்று. இந்நாளில் தமிழரின் தொடர் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் வருவதால் பொங்கல் நாள் பொலிவு பெறுகின்றது. தமிழரின் வீட்டுப் பொங்கலும், ஆண்டுத் தொடக்கமும் இணைந்து வருவதை எண்ண எண்ண இனிக்கிறது; இதயம் பூரிக்கிறது.

3. தை - 2 : மாட்டுப் பொங்கல் - ஏர்முனை விழா

'மாட்டுப் பொங்கலும்' கன்றுப் பொங்கலும் உழைப்பைப் பாராட்டும் உழவுப் பெருநாளாகும். அக்காலத்தில், ஏன் இக்காலத்திலும், மாடுகளின்றி உழவு ஏது? உணவு ஏது? ஆகவே, அவைகளையும் போற்றிப் பேண வேண்டியது நம் பெருங் கடன் என்பதைத் தமிழர்கள் நன்கு உணர்ந் திருந்தனர் என்று தெரியலாம். இவை இரண்டும் ஏர்முனை விழாவே என்பதனை நன்கு அறியலாம்

- பேராசிரியர் சி. இலக்குவனார்

உழவே உலகில் உயர்வான ஒப்பற்ற தொழில் என்பதை உலகுக்கு உணர்த்தி உழவைப் போற்றும் பொன்னாள்; உழவுக்கு உறுதுணையான கால்நடைக்கு நன்றி தெரிவிக்கும் நாள். இன்று மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புசீவி அதில் எண்ணெய்யையோ, வண்ணமோ பூசி, கழுத்தில் மாலை, கோடித்துண்டு, கரும்பு முதலியவற்றைக் கட்டி அலங்காரம் செய்வார்கள், பொங்கல் வைத்து அதைக் கால்நடைகளுக்குக் கொடுப்பார்கள்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை என்னும் குறள்நெறியைப் பின்பற்றும் தமிழ்நாடு அரசு இந்நாளை ஏர்முனை விழா எனக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமும், பொருளும் உடையதாகும்.

இந்த நாளில் உழவுத் தொழில் பற்றிய கருத்தரங்கு, கவியரங்கு, பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியவை நடத்துவன் மூலம் வேளாண்மை வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவற்றிற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேளாண்மையில் அறிவியல் வழிகளைப் பின்பற்றுபவர்கள், புதியன கண்டுபிடிப்பவர்கள், மிகுதியான விளைச்சல் உண்டாக்குபவர்கள் முதலிய அனைவருக்கும் பரிசும் பாராட்டும் வழங்கி ஊக்குவிக்கலாம். சுருங்கக்கூறின் வேளாண்மை பெருக்கத்திற்கு உரிய முயற்சிகள் அனைத் தையும் மேற்கொள்ளலாம்.

4. தை - 3 : திருவள்ளுவர் திருநாள்

தை மாதம் 3-ஆம் நாளில் கன்றுப் பொங்கல், கன்னிப் பொங்கல், காணும் பொங்கல் ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் உள்ளன. இவை மூன்றும் இன்று ஏற்பட்டுள்ள அரசியல், பொருளியல், சமுதாயவியல் மாறுதல்களினால் மறைந்து வருகின்றன.

தை-2-ஆம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதால் தை-3-ஆம் நாள் கன்றுப் பொங்கல் தேவை இல்லை. கன்னிப் பெண்கள் ஒன்று சேர்ந்து கோவிலுக்குச் சென்று பொங்கலிட்டு இறைவழிபாடு செய்து இல்லம் திரும்புவது கன்னிப் பொங்கல் ஆகும். கன்னிப் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தபோது இது பொருத்தமும் தேவையானதாகவும் இருந்திருக்கலாம். "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்கிற நிலைமை ஏற்பட்டபிறகு கன்னிப் பொங்கலுக்கு அவசியம் இல்லை. காணும் பொங்கலன்று பற்பல இடங்களையும் சென்று காண்பார்கள். எல்லோரும் தங்களுக்குப் பெரியவர்களிடம் சென்று ஆசியும் பரிசும் பெறுவார்கள்.

மூன்றாம் நாள் பொங்கல் அடி நாட்களில் ஒருவரை ஒருவர் காணும் வெறும் காணும் பொங்கலாய் இருந்திராது. அது காணும் பொங்கல் அல்லது காணப் பொங்கலாய் இருந்திருக்க வேண்டும். காணம் என்றால் நிலம் என்று பொருள். கால அடைவில் கயவர்களின் திட்டமிட்ட சதியில் அது தன் சிறப்பை இழந்திருக்க வேண்டும் உழவு மக்களை - உயிர்களைத் தழுவும் தொழில் என்பதைப் பட்டறிந்து உணர்ந்த தமிழர் அதைக் காணப் பொங்கலாய்த்தான் கொண்டாடி இருக்க வேண்டும் மன்றம் / 25-1-70.

இக்கருத்தை ஏற்பினும் உழவு, கால்நடை ஆகிய இரண்டிற்கும் தை-2ஆம் நாள் விழாக் கொண்டாடி விடுகிறோம். எனவே, தை-3ஆம் நாள் விழாத் தேவை இல்லை. 3-5-70இல் தமிழ் அறிஞர் டாக்டர் மெ.சுந்தரம் அவர்களைத் திருக்கழுக்குன்றத்தில் கண்டு பேசிக் காணும் பொங்கல் பற்றிக் கருத்துக் கேட்டேன். அது தமிழர் பண்பாட்டுக்கு உகந்தது இல்லை என்று கூறினார். தை-3ஆம் நாளில் மாடு விடுதல், பிடித்தல், சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவையும் இக்காலத்தில் மறைந்து வருகின்றன.

மேற்கூறியவைகளால் தை-3ஆம் நாள் நிகழ்ச்சிகள் பின்பற்றத்தக்க முக்கியம் வாய்ந்தவை இல்லை என்பது நன்கு தெளிவாகும். எனவே, அன்று (தை3) திருவள்ளுவர் திருநாள் வைத்துக் கொள்வதும் அரசு விடுமுறை விடுவதும் பொருத்தமும் பொருளும் உடையதாக அமையும். இப்படிச் செய்வது தமிழர் திருநாள் ஒரு கிழமை விழாவாகக் கொண்டாட ஏதுவாகும். இப்பொழுது தை-2ஆம் நாள் திருவள்ளுவர் நாள் என்று தமிழ்நாடு அரசு ஏற்று விடுமுறை அளித்துள்ளது. அதை தை-3ஆம் நாளுக்கு மாற்றி அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தை-2ஆம் நாள் மாட்டுப் பொங்கல் விழா, ஏர்முனை விழா ஆகிய இரு நிகழ்ச்சிகள் உள்ளன. மாட்டுப் பொங்கல் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் விழா, ஏர்முனை விழா அரசு நடத்தும் விழா. இவ்விரண்டிலுந்தான் மக்களின் கவனமும், ஈடுபாடும் இருக்குமே தவிர திருவள்ளுவரைப் பற்றி நினைக்கவும் நேரம் இல்லை. மாட்டுப் பொங்கல், ஏர்முனை விழா இரண்டும் இணைந்தவை உழவையும் அதற்கு உறுதுணையான கால்நடையையும் ஒரேநாளில் போற்றிப்பேணல் பொருத்தம் ஆகும். எனவே, தை-2ஆம் நாளில் திருவள்ளுவர் திருநாளை வைத்துக்கொள்வது பொருத்தமாக இல்லை.

தை-3ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள்

திருவள்ளுவர், திருக்குறள் பற்றியகருத்தரங்கு, கவியரங்கு, பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியவை நடத்தலாம். திருவள்ளுவர் திருவுருவப் படங்களைத் திறக்கலாம்; சிலைகள் திறக்கலாம்; அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள திருக்குறள் ஆராய்ச்சித் துறையின் நூல்களை

வெளியிடலாம். திருக்குறள் பற்றித் தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்பவர்களைப் பாராட்டலாம். பரிசு வழங்கி ஊக்கப்படுத்தலாம். குறள் நெறி பரவின் குடியரசு ஓங்கும். எனவே, குறள் நெறியைக் குவலயம் எல்லாம் பரப்பும் முயற்சியில் ஈடுபடலாம்; பணியை மேற்கொள்ளலாம்.

5. தை - 4 : இயல் தமிழ்த் திருநாள்

இயல் தமிழின் வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவை பற்றிய கருத்தரங்கு, கவியரங்கு, பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியவை நடத்தலாம். தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ் வெளியீட்டுக் கழகம் ஆகியவற்றின் நூல்கள் வெளியீட்டு விழாவை இன்று வைத்துக்கொள்ளலாம். இயல் தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களை, ஆராய்ச்சியாளர்களை, அறிஞர்களைப் பாராட்டலாம்; பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத் தலாம். சிறந்த புத்தகங்களுக்குப் பரிசும் பாராட்டும் வழங்க லாம். இயல் தமிழின் முன்னேற்றத்திற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

6. தை - 5 : இசைத் தமிழ்த்திருநாள்

இசைத் தமிழின் வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவை பற்றிய கருத்தரங்கு, கவியரங்கு, பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியவை நடத்தலாம். தமிழ் இசைச் சங்கம், தமிழ்நாடு சங்கீத - நாடகச் சங்கம் ஆகியவற்றின், பரிசளிப்பு - பாராட்டு விழாவை இன்று வைத்துக் கொள்ளலாம். இசைவாணர் களையும், கவிஞர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் பாராட்டலாம்; பரிசுகள் வழங்கலாம். அவர்களுக்குப் பட்டங்கள் விருதுகள் அளிக்கலாம். சிறந்த புத்தகங்களுக்குப் பரிசுகள் கொடுக்கலாம். தமிழ் இசையின் வளர்ச்சிக்குரிய அனைத்தையும் செய்யலாம்.

7. தை - 6 : நாடகத் தமிழ்த் திருநாள்

நாடகத் தமிழின் வளர்ச்சி, முன்னேற்றம் முதலியவை பற்றிய கருத்தரங்கு, கவியரங்கு, பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியவை நடத்தலாம். சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், பாடல் ஆசிரியர், கதை ஆசிரியர், உரையாடல் ஆசிரியர், பின்னணிப் பாடகர், தொழில்நுட்ப வாணர்கள் முதலிய கலைஞர்கள் பலருக்கும் தமிழ்நாடு அரசின் பரிசளிப்பு, பாராட்டு விழாவை இன்று வைத்துக் கொள்ளலாம். நாடகம் திரைப்படத்தின் தாய். ஆகவே சிறந்த நாடகங் களுக்கும், நடிகர், நடிகையர் மற்ற கலைஞர்களுக்கும் பரிசு அளிக்கலாம், பாராட்டு வழங்கலாம். நாடகத் தமிழ், நாடகக் கலை பற்றி எழுதப்பட்டுள்ள சிறந்த நூல்களுக்குப் பரிசு கொடுக்கலாம். நாடகத்தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆக்க மும் ஊக்கமும் அளிக்கலாம். சுருங்கச் சொல்லின் நாடகத் தமிழ் வளர்ச்சிக்குரிய முயற்சிகளையும், பணிகளையும் மேற்கொள்ளலாம்.

வேண்டுகோள்:

தமிழர் திருநாள் ஒரு கிழமை விழாவாக ஏழு நாள்கள் மேற்கூறியபடி அரசினர் ஏற்றுக்கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டி ருக்கிறது. தனிப்பட்ட தமிழ்ச் செல்வந்தர்களும், தமிழ்ச் சங்கங்களும், மன்றங்களும், திருவள்ளுவர் கழகங்களும் - மன்றங்களும் பேரவைகளும் தமிழ், தமிழர், தமிழகம் ஆகியவற்றின் நலனும் வளனும் பேணும் அமைப்புகளும் நிறுவனங்களும் குழுக்களும் மேலே விளக்கியவண்ணம் தமிழர் திருநாளை ஏழு நாள்கள் கொண்டாடுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடனும் பணிவுடனும் வேண்டுகிறேன்.

தமிழே துணை:

தமிழர்க்குத் தமிழ் ஒன்றே துணை - அதை

பேணிக்காப்பதே வாழ்வுக்குப் புணை,                     - வ.வே.

தமிழ்ர்க்குத் தமிழ் ஒன்றே மீதி - அதுவும்

தாழ்வுற்று அழியவோ இது வென்ன நீதி?

- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்

 

தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்

தமிழ்க் குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்

- பாவேந்தர் பாரதிதாசன்

தமிழர்கள் தங்கள் மொழியையும் வாழ்வையும் ஒன்றாக இணைத்துக் கொண்டார்கள். மொழியைக் கருவி என்று நினைக்காமல் தங்களை வழிநடத்தும் துணைவன், வழிகாட்டும் தலைவன். பாடம் போதிக்கும் ஆசான், உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடும் நண்பன் என்று நினைக்கிறார்கள்.

- பேரறிஞர் அண்ணா

மேற்கூறிய விளக்கத்தின் சுருக்கமே கீழ்க்காணும் வாழ்த்து.

தமிழே துணை!  தமிழர் திருநாள் வாழ்த்து !!

மார்கழி இறுதிநாள் : பழையன போக்கும் போகித் திருநாளே!

தை-1 : திருவள்ளுவர் ஆண்டின் முதல்நாளே! வீட்டுப் பொங்கல் நன்னாளே!

தை-2 : மாட்டுப் பொங்கல் பொன்னாளே! ஏற்றந்தரும் ஏர்முனை எழில் நாளே!

தை-3 : திருவள்ளுவர் பெருமான் திருநாளே!

தை-4 : இயல் தமிழ்த் திருநாளே!

தை-5 இசைத் தமிழ்த் திருநாளே!

தை-6 : நாடகத் தமிழ்த் திருநாளே! தமிழர் திருநாளே! வாழ்க! வாழ்க!

தமிழே குறி குறளே நெறி !!