வரலாற்று சுவடுகள்

 

04.01.1931 - குடிஅரசிலிருந்து...

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்ததாகும்.  அந்தப்படி இவ்வருஷம் மார்ச் மாதம் கடைசியிலாவது ஏப்ரல் முதலிலாவது நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.  ராமநாதபுரம் ஜில்லாவில் மகாநாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம்.  ஏனெனில், ரயில் போக்குவரத்து சவுகரியமும், உற்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதைவீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்யஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக்கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்யபாகமாகவும் இருப்பதாகும்.

ஆகவே, இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடைபெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம்.  மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார், வி.வி. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக்கோட்டை கோபாலகிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை எஸ். ராமச்சந்திரன், முருகப்பா முதலியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகாநாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப்பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித அய்யமுமில்லை.

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டிலிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. சண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது.  இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும், அமலில் நடத்த வேண்டியதாகவும் இருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதவசியமாகும்.  தண்ணீர் சௌகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு பல மகாநாடுகளும், 3,4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப்பட்டிருப்பதாய் தெரியவருகிறது.  விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டுவிட்டால் அவர்களைப் போல எடுத்துக் கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்பவர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.  இதை உத்தேசித்தே மேற்கொண்ட காரியங்களைப் பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாக கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

திரு. சி.ராஜகோபாலாச்சாரி - ஈ.வெ.இராமசாமி சந்திப்பு

01.02.1931 - குடிஅரசிலிருந்து...

திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் 29ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் கிரான்ட் டிராங்க் எக்ஸ்பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டிருந்தார்.  பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

திரு. ஈ.வெ. இராமசாமி 29 ஆம் தேதி காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார்.  திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி  வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும்போது எதிரிலிருந்த கூட்டத்தைக் கவனிக்கும்போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண் டார்கள்.  ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டார்கள்.  அங்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்த திரு. பட்டாபி சீதாராமையாவையும் கண்டு மரியாதை செய்தார்.  அந்தச் சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமை யையும் கூட்டு வேலையையும் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தியது என்பதில் ஆட்சேபணை இல்லை.  பிறகு வண்டி புறப்பட்டதும் திருவாளர்கள் எஸ். இராமநாதன், கண்ணப்பர் ஆகியவர்களுடன் திரு. இராமநாதன் அவர்கள் ஜாகைக்குப் புறப்பட்டு விட்டார்கள்.

இந்த விஷயம் ஏன் தெரிவிக்கப்பட்டது என்றால், பத்திரிகைகளில் ஈ.வெ.இராமசாமி அங்கிருந்த விஷ யத்தைக் குறிப்பிட்டதைப் பற்றி பலர் பலவிதமாகப் பேசியதாக தெரிய வந்ததால் எழுத வேண்டியதாயிற்று. திரு. ஆச்சாரியாரைப் பார்க்கவே அங்கு சென்றிருந்ததாக வைத்துக்கொண்டாலும் திரு. ஆச்சாரியாரைப் பார்க்கக் கூடாதான விரோதம் ஒன்றும் இருவருக்குள்ளும் கிடையாது. பார்த்ததினால் இருவர் கொள்கை யிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லவும் முடியாது.

திரு. ஈ.வெ. இராமசாமியைப் பொருத்த வரையில் தனது கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. அன்றியும் இன்றைய காங்கிரசில் சேரும் உத்தேசமும் இல்லை.

மக்கள் விடுதலை அடைவதற்குச் செல்வம் ஒரே பக்கம் சேராமல் பார்ப்பதும், ஜாதியையும், அதற்காதாரமான மதத்தையும் ஒழிப்பதும் ஆகிய தத்துவங்கள் இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கொள்கையாகும் என்ற நிலைமை ஏற்படும் போது யாருடைய தயவையும் எதிர் பாராமல் காங்கிரஸ் வாதியாயிருப்பார்.  ஆதலால் இதற்காக யாரும் சந்தேகப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

காரைக்குடியில் பார்ப்பனியத் தாண்டவம்

08.03.1931 - குடிஅரசிலிருந்து....

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு எப்படியாவது இடையூறு செய்யவேண்டுமென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதிகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்து கொண்டு வரும் விஷயமாய் கொஞ்ச நாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது.

தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து கடைசியாக வேட்டைக்குத் தயாராகிவிட்டது என்ற பழமொழி போல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன்படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிக்சாக்கை வைத்து உயர்திருவாளர்கள் சொ. முருகப்பா, அ. பொன்னம்பல னார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக் குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ. பிரசங்கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்தரவு போட்டுத் தடுக்கப்பட்டிருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அறி குறியென்றே கருதவேண்டியிருக் கின்றது.  காரைக்குடி யானது உண்மையிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதிக ஆதிக்கமும் கொண்டது என்பதற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது. மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்காவது, குறைந்த எண்ணிக்கையுள்ள சமுகத்தாருக்காவது யாதொரு பிரதிநிதி ஸ்தானமும் ஒதுக்காமல் தீர்மானம் செய்த ஏதேச்சதிகார மனப்பான்மை ஒன்றே போதுமானதாகும்.  அப்படிப்பட்டவர்கள் ஆதிக் கத்தில் உள்ள அந்த நாடு சுயமரியாதையைப் பற்றியும், தீண்டாதவரின் சமத்துவத்தை பற்றியும், பெண்களின் உரிமையைப் பற்றியும் பேசுவது முனிசிபல் நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுமென்று கருதி, அதிகாரிகளின் தயவைச் சம்பாதித்து 144 போடச் செய்ததில் நமக்கு ஆச்சரிய மொன்றுமில்லை.

ஆனால், இந்த மாதிரி பணக்கார ஆதிக்க வாழ்வும், அதிகாரிகள் அவர்களுக்கு அடிமையாகி தலைவிரித்தாடும் பொறுப்பற்ற அதிகாரவர்க்க ஆட்சியும் நமது நாட்டில் தாண்டவமாட இன்னும் விட்டுக் கொண்டிருப் பதுவே நமக்கு மிக ஆச்சரியமாகத் தோன்றுகிறது.

அதோடு நமது நாட்டுப் போலீசாரின் யோக்கியதை நாம் அறிந்ததேயாகும்.  அதிலும் பார்ப்பனப் போலீசாரைப் பற்றியோ வென்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் அதிலும் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதேயில்லை.

உதாரணமாக, ஒரு குரங்கு கள்ளைக் குடித்து அதைத் தேளும் கடித்து விட்டால் எப்படி அது தலை கால் தெரி யாமல் கண்டதையெல்லாம் கடிக்குமோ அது போல வேதான் நமது பார்ப்பனப் போலீசு நிர்வாகம் இருக்க முடியும். போதா குறைக்கு இவர்களுடைய தயவை பைத்தியக்கார பணக்காரச் செட்டியார்மார்கள் எதிர் பார்த்து தூபம் போடுவதும் சேர்ந்து விட்டால் 144 உத்தரவு மாத்திரமல்லாமல் இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யப் பின் வாங்க மாட்டார்கள்.  இந்தக் காரியத்திற்குத் திருப்பத்தூர் டிவிஷனல் ஆபீசர் சம்மதித்துத் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை நாம் கண்டிக் காமல் விட முடியவில்லை.

ஆகையால் இராமநாதபுரம் ஜில்லா கலெக்டர் இதில் பிரவேசித்து உண்மையை விசாரித்து, நீதியை வழங்கவேண்டியது அவருடைய கடமையென்பதோடு, காரைக்குடியில் உள்ள பார்ப்பனியப் போலீஸ் ஆதிக் கத்தை உடனே குறைக்க வேண்டிய காரியமும் செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம்.  குட்டி குலைத்து பட்டி தலையில் விழாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமை என்பதையும் வலியுறுத்து கின்றோம்.

02.09.1928- குடிஅரசிலிருந்து...

சர்வகட்சியாரும் சேர்ந்து ஒரு சுயராஜ்யதிட்டம் போட்டுவிட்டதாகவும் அதை எல்லோரும் சேர்ந்து ஒப்புக் கொண்டதாகவும் இனி பொது ஜனங்களும் சர்க்காரும் அதை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் பாக்கியென்றும் அரசியல் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் ஊளையிடுகின்றன. இது ஒரு அன்னக் காவடி, இராஜாமகளுக்கும் எனக்கும் கல்யாணம் தீர்மானம் ஆகிவிட்டது. ஆனால் ராஜாவும் அவனது மகளும் சம்மதம் கொடுக்க வேண்டியது மாத்திரம்தான் பாக்கியாய் இருக்கின்றது என்று சொல்லிக் கொண்டது போலிருக்கிறது. சர்வ கட்சி மகாநாடு என்பது என்ன? அதில் யார் யார் இருந்து திட்டம் செய்தார்கள்? அவர்களுக்கும் நாட்டின் ஏழை மக்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? இந்தியாவில் உள்ள எந்த ஜாதியாருக்கு அல்லது எந்த மதக்காரருக்கு அல்லது எந்த தொழில் காரர்களுக்கு இவர்கள் சம்பந்தப் பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடும்?

மகமதிய சபையார்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? கிறிஸ்துவ சபையார்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? இந்து சபையார் ஒப்புக் கொள்ளுகிறார்களா? பார்ப்பன சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? பார்ப்பனரல் லாதார் சபையார் ஒப்புக்கொள்ளுகிறார்களா? ஆதி இந்துக்கள் ஆதிதிராவிடர்கள் என்கின்ற சபையார் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? எனவே இந்தியாவில் இத்திட் டத்தை யார் ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்பது விளங்க வில்லை. ஒரு சமயம் உத்தி யோகம் சம்பாதிக்கும் சபைகளாகிய காங்கிரஸ், சுயராஜிய, மிதவாத, சபைகளின் பேரால் உள்ள சிலர் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்று சொல்ல வருவார் களேயானால்,

காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனரா? அல்லது சுயராஜியக் கட்சி உபத் தலைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா? தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் ஒப்புக்கொள்ளுகின்றனரா? மற்றும் யார் ஒப்புக்கொள் ளுகின்றார்கள் என்பது விளங்கவில்லை.

மேல்கண்ட இத்தனை பேர்களும் மேற்படி சுயராஜ்ஜியத்தை ஒப்புக் கொள்ள வில்லை என்பது தெரிந்து ஒப்புக்கொள்ளாத மேற்படியார்களை ஒரு பக்கம் திட்டிக் கொண்டு மறுபக்கத்தில் சர்வ கட்சி மகாநாட்டுத் தீர்மானத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்று எழுதுபவர்களை பொது மக்கள் இப்போதாவது வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைக்காரர்கள் என்று தீர்மானிப் பதற்கு ஏதாவது ஆட்சேபணை உண்டா என்று கேட் கின்றோம்.

தவிர இதற்கு முன் திட்டங்கள் போட்ட பல கனவான் களின் சங்கதியும், அத் திட்டம் அதாவது சிறீமதி பெசண்டம்மை, திருவாளர்கள் விஜய ராகவாச்சாரியார், மதன் மோகன் மாளவியா, சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், மோதிலால் நேரு மற்றும் அநேகர்கள் போட்ட திட்டங்கள் என்ன ஆயின என்பதும் சிதம்பர இரகசியமாய் இருக்கின்றது.

நிற்க, இந்தச் சர்வ கட்சி மகாநாட்டார் என்பவர்கள் புதிதாக செய்து முடித் திருக்கும் வேலைகளிலெல்லாம் குறிப்பிடத் தக்கது ஒரே ஒருவேலைதான். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் சமத்துவத்தை ஒழிப்பதற்கு செய்துள்ள சூழ்ச்சிதான்.

இந்தச் சூழ்ச்சியைச் சர்வ கட்சி மகாநாடுதான் புதிதாக செய்திருப்பதாக அவர்களது கூலிகள் பெருமை பாராட்டிக் கொள்ளலாமானாலும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்பது ஏற்பட்டது முதலே இதே கூட்டத்தார் அதாவது இப்போது சர்வ கட்சி மகாநாடு என்பதில் ஆதிக்கம் கொண்டுள்ள கூட்டத்தாரும் அவர்களுக்கு ஆதி முதலே அடிமைகளாகவும் கூலிகளாகவும் இருந்து வரும் கூட்டத்தாரும் இந்தச் சூழ்ச்சிகள் செய்து வருவது யாவருக்கும் தெரியாது என்பதாக நினைத்து இப்போது வேறு போர்வை போர்த்துக் கொண்டு வந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதே காரணத்தினாலேயே சைமன் கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று பார்ப்பனக் கூலிகளாய் இருந்து கூவினதும் பொது ஜனங்களுக்குத் தெரியாது என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப் பதாகவும் தெரிகின்றது எது எப்படியிருந்தாலும் பகிஷ் காரக் கூச்சலில் தாங்கள் தோற்றுவிட்டதை நன்றாய் அறிந்து அதே சைமன் கமிஷனின் பாதத்தில் வைத்து விழுந்து கும்பிட ஒரு திட்டத்தையும் தயார் செய்து கொண்டு அதற்குச் சர்வ சட்சி மகாநாட்டுத் திட்டம் என்ப தாகப் பெயரையும் கொடுத்து முக்காட்டை விலக்கிக் கொண்டு வெளியில் வந்தாய் விட்டது.

எனவே இதனால் ஒவ்வொருவரும் அவரவர்கள் திட்டத்தைச் சைமன் கமிஷனுக்குத் தெரிவிப்பதற்காக விரைந்து போட்டி போட வேண்டிய அவசியம் ஒன்று புதிதாய் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு காரியமும் ஏற்பட்டு விட்டதாய்ச் சொல்வதற்கில்லை.

கடைசியாக நாம் குறிப்பிடுவது என்னவென்றால், கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற புரட்டைப் பார்ப்பனர் களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் என்றைக்கு ஆரம்பித்தார்களோ அந்த வினாடி முதல் அதைப் பற்றி நாம் என்ன என்ன எழுதியும் பேசியும் வந்தோமோ அவைகள் எல்லாம் ஒன்று விடாமல் நடந்து வருகிறதா இல்லையா என்பதை மாத்திரம் ஞாபகப்படுத்திப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகின்றோம்.

 

அரசியலும், சத்தியமும் 18.11.1928- குடிஅரசிலிருந்து...

திரு. சீனிவாசய்யங்கார் அவர்களை திரு. லாலா லஜிபதிராய் அவர்கள் பூரண சுயேச்சையே வேண்டுமென்று கேட்பவர்களான தாங்கள் ராஜ பக்திப் பிரமாணம் செய்யலாமா என்று கேட்டபொழுது அதற்கு பதில் திரு. அய்யங்கார் நான் அந்த பிரமாணத்தை மனதில் வேறு ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டு கபடமாக பிரமாணம் செய்தேனே ஒழிய உண்மையாக செய்யவில்லை என்று சொன்னாராம் இதை பச்சை தமிழில் சொல்வதானால் பொய்ச் சத்தியம் செய் தேனே ஒழிய உண்மையான சத்தியம் செய்யவில்லை என்று சொன்னாராம். உடனே திரு. லாலாஜி அப்படியானால் மற்றபடி நீர் இப்போது என்னிடம் பேசிய தாவது உண்மைதானா அல்லது இதிலும் ஏதாவது ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு, வேறு ஏதாவது வாயில் பேசுகிறீரா என்ன வென்று கேட்டராம். திரு. அய்யங்கார் வெட்கித் தலைகுனிந்து கொண்டாராம்.

நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தலைவர்களான வரிடத்தில் சத்தியத்திலேயே இரண்டு அதாவது பொய் சத்தியம் நிசமான சத்தியம் என்பதான வித்தியாசங்கள் இருந்தால் இது சாதாரணமாக அதாவது சத்தியம் என்று எண்ணாமல் பேசும் விஷயங்களில் எத்தனைவித வித்தி யாசங்கள் இருக்கும் என்பதை கண்டுபிடிக்க வல்லவர்கள் யார் என்பது நமக்கு விளங்க வில்லை. ஆனபோதிலும் இந்த பொய் சத்தியமுறை தற்காலத்தில் அநேக கனவான் களுக்கு மிகவும் யோக்கியமான முறையென்றேற்பட்டு திரு. அய்யங்காருக்கு நற்சாட்சிப் பத்திரங்கள் கொடுக்க முன் வந்திருக்கின்றார்கள்.

அதாவது திருவாளர்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜு லுவும் முறையே இந்தியாவின் அரசியலை நடத்த திரு. சீனிவாசய்யங்காரே தக்க பெரியாரென்றும் இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களும் இந்த திரு. சீனிவாசய்யங்காரையே நம்பி இருக்கின்றார்கள் என்றும் சொல்லி அய்யங்காரை குஷால் படுத்தினார்கள். போதாக் குறைக்கு திருவாளர்

சி. ராஜகோபாலாச்சாரி என்கின்ற சத்திய கீர்த்தியும்,

திரு. சீனிவாசய்யங்காரை விட்டால் சென்னை மாகாணத்தில் காங்கிரசை நிர்வகிக்க வேறு தக்க நபர் கிடையாது என்று பம்பாயில் சொன்னார். இவர்களே இப்படி சொல்லியிருக்க மற்றபடி இதே கூட்டத்தில் இருக்கும் திருவாளர்கள் குழந்தை குப்புசாமி அண்ணாமலை, கந்தசாமி அமித்கான் முதலான தலைவர்கள் சொல்லுவதைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டுமா என்று கேட்கின்றோம். எனவே அர சியல் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்பதையும் எந்த விதத்திலும் இந்த அரசியல் ஸ்தாபனங்கள் மானம் வெட்கம் ஒழுக்கம் நாணயம் முதலியவைகள் இல்லாதவர் களுக்கு சொந்தமாக இருக்கின்றது என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற்காகவே இதை எழுதுகின்றோமேயல் லாமல் மேற்கண்ட கனவான்களின் யோக்கியதையை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டு வதற்காக எழுதவில்லை.

16.09.1928 - குடிஅரசிலிருந்து....

திரு செட்டியார் அவர்களைக் குறித்து நான் விரிவாக ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரை நீங்கள் என்னைவிட நன்கறிவீர்களென்றே நினைக்கிறேன். திரு. செட்டியார் பேசியதை மறந்து அதற்கு விரோதமாக நடப்பவரல்லர் (நகைப்பு) பள்ளிக் கூடத்தில் சிறுவர்களுக்கு சூரியனை பூமி சுற்றுகிறது. அதனால் இரவும் பகலும் வருகின்றது என்று பல சாஸ்திரீயமான விஷயங்களைப் போதித்து விட்டு வீட்டுக்குச் சென்றதும் மறுநாள் ஆசிரியர் கிரகணம் என்று நூறுதரம் தலைமுழுகி தர்ப்பைப் புல்லால் தர்ப்பணம் செய்வதும் இதற்குப் பொருத்தமான உதாரணமாகும். (நகைப்பு) மகாத்மா காந்தி வந்து திரு. செட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது அவர் காந்தியிடம் நம் நாட்டிலிருந்து மதசம்பந்தமான மூடப் பழக்கங்கள் என்று ஒழிகின்றதோ அன்றுதான் விடுதலையுண்டாகுமென்று தைரியமாய்க் கூறினார்.

நம்நாட்டு மூட பழக்கவழக்கங்களைத் தைரியமாகக் கண்டித்து, மேனாட்டு மேலான கொள்கைகளைச் சிலாகித்து, நேர்மையாக எங்கு வேண்டுமானாலும் பேசுவதற்கும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர் ஒரு போதும் பின் வாங்கியதில்லை.

கும்பகோணத்தில் கூடிய நாடார் வகுப்பார் மகாநாட்டில் அவருக்கு வாணிபச் செட்டிமார்கள் வாசித்துக் கொடுத்த பத்திரத்திற்குப் பதி லளிக்கும் போது அவர் பிறர் தம்மைக் குறித்து என்ன சொல்லுவார்கள் என்பதைக் கவனியாது தைரியத்துடன் அவ் வகுப்பாரிடத்துள்ள குறைகளையும் மூட நம்பிக்கைகளையும் வெளியிட்டுத் திருத்த முயன்றது பாராட்டத் தக்கதேயாம். சமீபத்தில் திரு, செட்டியார் இந்தியா சட்டசபையில் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட வேண்டுவதையும் மற்ற வித்தியாசங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தித் தீர்மானமொன்று கொண்டு வர உத்தேசித்திருப்பதாகக் கூறினார்.

அக்கமிட்டியில் திரு. செட்டியார் அவர்களும் ஒருவராயிருக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்ட போது அவர் அதற்கு ஒப்புக் கொண்டு தம்மாலான வகையிலெல்லாம் அவ்வியக்கத்திற்கு உதவியளிப்பதாக வாக்களித்தார்.

திரு. செட்டியார் தம்மைக் குறித்து பிறர் என்ன சொல்லிக் கொள்ளு கின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாது தம் மனசாட்சியின் படி நடப்பவர் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய மாசற்ற மனத்துடன் அறிவாற்றலும் பொருந்தியவர்களுள் நம் நாட்டிலிருக்கும் பெரியார்களில் திரு. செட்டியார் முக்கியமானவர். நீங்கள் அவர் அந் நாட்டிலும் இந்நாட்டிலும் செய்துள்ள வேலைகளைப் புகழ்ந்து பாராட்டுவதைவிட அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து அதனைப் பின்பற்ற முயல்வதுதான் உசிதமாகும்.

இன்று திரு. செட்டியாரைக் குறித்து சில வார்த்தைகள் சொல்ல இக்கூட்டத்தில் எனக்கு சந்தர்ப்பமளித்ததற்கு டாக்டர் நாயர் கல்விக் கழகத்தாருக்கு என் நன்றியறிதலையும் சந்தோஷத்தையும்

தெரிவித்துக் கொள்கிறேன்.

 

19.08.1928- குடிஅரசிலிருந்து...

திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன்னதில் அவர் தமக்குத் தெரியாது என்று சொல்லி விட்டாராம்.

சமஸ்கிருதம், தேவபாஷை, பொதுபாஷை, மதபாஷை அறிவு பாஷை என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும், அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத்தனத்தை ஒழிக்கவோ கண்டிக்கவோ இதுவரை எந்தத் தேசியத் தலைவர்கள் முன் வந்தார்கள் என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்குப் பயந்து கொண்டு அவர்கள் காலுக்கு முத்தமிட்டு வரும் தேசிய வீரமுழக்கம் இப்போது எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று கேட்கின்றோம்.

வேதம்தான் சூத்திரர்கள் என்கின்ற வேசி மகனும், பார்ப்பனர் தாசி மகனுமாகிய பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்றால் வியாகரணம் என்கின்றதான பொதுவான இலக்கணமும் கூட பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாது என்று சொல்லுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. எந்தப்படிப்பைப் பார்ப்பனரல்லாதார் படிக்கக் கூடாதோ அந்தப் படிப்புக்குப் பார்ப்பனரல்லாதோர் பணத்தை உபயோகப் படுத்தலாமா என்று கேட்பதுடன் சற்றாவது மானமோ, வெட்கமோ, சுயமரி யாதையோ, சுத்த ரத்த ஓட்டமோ உள்ள கூட்டமானால் இந்தக் காரியம் செய்யமுடியுமா என்று கேட்கின்றோம்.

இனியாவது சர்க்காரோ அல்லது இந்து மத பரிபாலன போர்டாரோ அல்லது பொது ஜனங்களோ இந்தக் காரியத்தில் பிரவேசித்து இந்த மாதிரி பொது நன்மைக்கல்லாத தனிப்பட்டவர்களின் நன்மைக்கு ஏற்றதுமான காரியங் களுக்குப் பொதுமக்களின் பணத்தை உபயோகப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளக் கூடுமா என்று கேட்கின்றதுடன் சுயமரியாதை என்றால் என்ன என்று விழிப்பதுடன் தூங்கிக் கொண்டிருப்பது போன்ற விதண்டா வாதிகளுக்கு இதிலிருந் தாவது சுயமரியாதை என்பது இன்னதென்று புரியுமா என்று கேட்கின்றோம்.

 

---

சமுதாயத் தொண்டில் முதலானதும் முக்கியமானது மான ஜாதி யொழிப்பை எடுத்துக் கொண்டால் இராமனின் முதல் செய்கையும் கடைசிச் செய்கையும் ஜாதியைக் காப்பாற்றப் பிறந்து, ஜாதியைக் காப்பாற்றி விட்டுச் செத்த தேயாம். நம் நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, ஒழுக்கம் பற்றிய பிரசார வேலையோ, பகுத்தறிவுப் பிரச்சார வேலையோ ஓர் அளவுக்காவது நடக்க வேண்டுமானால் இரா மாயணம் முதலில் ஒழிக்கப்படல் வேண்டும். -

-தந்தை பெரியார்

பிரம்ம ஞான சங்கமும் பார்ப்பனரல்லாதாரும்

09.12.1928. - குடிஅரசிலிருந்து...

உலகத்திலுள்ள மக்கள் மனித சக்தியை உணராததற்கும், அறிவின் அற்புதத்தின் கரை காணாததற்கும் பல்வேறு பிரிவுகளாய் பிரிந்து ஒற்றுமையை கெடுத்திருப்பதற்கும், சுயநலம், பிறர் நல அலட்சியம், துவேஷம் முதலியவைகள் ஏற்பட்டு பரோபகாரம், இரக்கம், அன்பு முதலியவைகள் அருகிப் போனதற்கும், இயற்கை இன்பங்களும் சுதந்திர உரிமைகளும் மாறி துக்கத்தையும், நிபந்தனை அற்ற அடிமைத் தனத்தையும் இன்பமாகவும், சுதந்திரமாகவும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் நினைத்துக் கொள்ள வேண்டியதான நிர்ப்பந்தமுள்ள செயற்கை இன்பத்தையும் சுதந்திரத்தையும் அனுபவித்துக் கொண் டிருக்க வேண்டியதற்கும் முக்கிய காரணம் மதங்கள் என்பதே எமது அபிப்பிராயம்.

இந்த மதங்களேதான் மக்களுக்குக் கொடுங்கோன் மையான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் காரணமாயிருந்ததென்றுகூட சொல்ல வேண்டியிருக்கின்றது.

உலகத்தில் பல காரணங்களால் ஏற்படும் பூகம்பம், எரிமலைக்குழம்பு, பூமிப்பிளவு, மண்மாரி, மழை, வெள்ளம், புயல்காற்று, இடி, மின்னல் ஆகியவைகள் போலவும், காலரா, பிளேக்கு முதலிய ரோகங்கள் போலவும் மனித சமுக வீழ்ச்சிக்கு அடிக்கடி வேறு வேறு வேஷத்தின் பேரால் மதங்கள் என்பவைகளும் தோன்றிக் கொண்டே வரு வதுமுண்டு.

இம்மதக்கேடுகளை உணர்ந்த அநேகரும் உண்மையி லேயே அக்கெடுதல்களை ஒழிப்பதற்கென்று வேலை செய்தவர்கள் அநேகரும் அந்த மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு கொள்கைகளுக்கு வேறு வித வியாக் கியானம் செய்தும், மற்றும் அம்மதத்திற்கு வேறு கொள்கை களைப் புகுத்தியும் மற்றும் வேறு மதத்தை ஏற்படுத்தி கொள்கைகளையே வேறு ரூபத்தில் வைக்கும் பலவித மாய வேலை செய்தும் வந்து ஒரு விதத்திலும் வெற்றி பெறாமல் பழைய நிலையிலேயே இருந்திருக்கின்றார்கள்.

மற்றும் சிலர் சுயநலம் கொண்டு தங்கள் சமுக உயர் வுக்கும் வகுப்பு ஆதிக்கத்திற்கும் ஆதாரமாக சூழ்ச்சிகள் செய்து மக்களை ஏமாற்றி பல தந்திரங்கள் மூலம் பழைய கொள்கைகளையே நிலைநிறுத்தி வஞ்சித்து வருகின் றார்கள். இந்த இரண்டிற்கும் தோற்றத்தில் வித்தியாசமி ருந் தாலும் காரியத்தில் ஒரே பலனைத்தான் கொடுத்து வந்திருக் கின்றன.

இந்த நிலையிலேயே, அதாவது மக்களை அறியா மையில் ஆழ்த்தவும் சிலரின் ஆதிக்கத்தை வலுப்படுத்த வுமாக இது சமயம் நமது நாட்டில், சிறப்பாக தமிழ் நாட்டில், கற்றறிந்த கூட்டத்தார் என்னும் பார்ப்பனரது உதவி கொண்டு ஒருவாறு நாட்டில் உலவுகின்ற புதிய மத தோற்றங்களில் பிரம்ம ஞான சங்கம் அல்லது தியசாபிகல் சொசைட்டி என்பதும் ஒன்று அது தலைமைப் பேராசையும் கீர்த்தி வெறியும் கொண்ட ஒரு அய்ரோப்பிய மாதின் ஆதிக்கத்திலும் வெள்ளைக் காரர்களின் பண வலிமை யிலும் ஒருவாறு செல்வாக்குப் பெற்று உலவுவதுடன் ஏற்கனவே பல காரணங்களால் உயர்வு தாழ்வு கொள்கை யால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மூடநம்பிக்கையால் அறிவு வளர்ச்சி பெறாத மக்களுக்கும் பெரிதும் இடையூறாக தோன்றி இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இச்சபை செல்வமும் செல்வாக்கும் கொண்ட ஒரு ஸ்தாபன மாயிருப்பதால் மேல் கண்ட இரண்டிலும் ஆசையுடைய வர்களான பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக் கத்திற்கு இதை ஒரு சாதனமாய் உபயோகித்துக் கொள்ளக் கருதி ஒருவாறு அதில் போய் குவிந்து கொள்ளுகின்றார்கள் - அதனால் பலனும் அடைந்து வருகின்றார்கள்.

நிற்க, இதன் கொள்கைகள் என்ன என்று பார்ப்போ மானால், சத்தியம், சகோதரத்தன்மை ஆகியவைகள் முக்கியமானவையாகும்.

அன்றியும் கடவுள்கள், ராம, கிருஷ்ணாதி அவதா ரங்கள் தேவர்கள், மகாத்மாக்கள், தேவாத்மாக்கள், உலகத்தை ரட்சிக்க உலக குரு தோன்றப் போகிறார் என்பது, மகாத் மாக்களுடனும், தேவர்களுடனும் சம்பாஷனை நடத்துவது என்பது, புராணம், இதிகாசம் கீதை ஆகியவைகளில் சிலவற்றை முழுவதும் சிலவற்றை ஒரு அளவுக்கும் ஒப்புக் கொள்வது, முன் ஜென்மம், அதன் நடவடிக்கைகளை அறிவது மற்றும் இது போன்றவைகளில் நம்பிக்கை யுடையவர்களும் இதை நேரில் தினம் அனுபவிக்கின்றவர்கள் என்பவர்கள் இம்மதஸ்தராவார்கள் என்று சொல்லப் படுகின்றது.

ஆனால், காரியத்தில் இவர்கள் நடவடிக்கை எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டுமானால், அதை இந்த சங்கத்தில் சேர்ந்து இருக்கும் நபர்களைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதில் சேர்ந்திருப்பவர்களில் பார்ப்பனர்களே முக்கியமானவர்கள். அதிலும் வருணா சிரமக்காரரும், வேத சாஸ்திர, இதிகாச, புராண முதலி யவைகளில் நம்பிக்கையும் பக்தியும் உடையவர்களாம். அவர்கள் நடவடிக்கைகளைக் கவனிப்போமானால் பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் சிறிதும் சம்பந்த மற்றவர்கள் என்பதும் மக்களை ஏய்க்க வெளியில் ஒரு கொள்கையும் தங்கள் ஆதிக்கத்துக்கு உள்ளுக்குள் ஒரு கொள்கையும் உடையவர்கள் என்பதும் விளங்காமல் போகாது.

சுமார் இரண்டு வருஷத்திற்கு முன்பாக திருநெல் வேலியில் கூட்டப்பட்ட திருநெல்வேலி ஜில்லா சுயமரி யாதை மகாநாட்டில் கொண்டுவரப்பட்ட எல்லா இந்துக் களுக்கும் கோவில் பிரவேசம் கொடுக்க வேண்டும் என் கின்ற தீர்மானத்தை உரமாய் எதிர்த்தவர் பிரம்ம ஞானசங்கத்தில் அதிக பக்தியும் நம்பிக்கையும் பற்றுதலும் யுடையவரான நண்பர் திருவாளர் நெல்லையப்ப பிள்ளையே ஆவார்கள். அவர்கள் சொன்ன ஆட்சேபம் என்னவென்றால்,

ஆதி திராவிடர்கள் முதலியவர்கள் அசுத்தமுள்ளவர் களானதால் கடவுளின் அருகில் செல்லவோ பூஜை முதலி யவைகள் புரியவோ அருகதை அற்றவர்கள் என்றும், கடவுளின் அருகில் அவர்களைச் செல்லவிடக் கூடாது என்றும் சொன்னார்கள். அதை ஆட்சேபித்து அவ்வூர் பிரபல சைவ மக்களும், சைவ தேசிகர்களும் தக்க காரணம் காட்டி மறுத்தார்கள். முடிவில் ஓட்டு எடுக்கும் போது பிரம்ம ஞான சங்கத்தைச் சேர்ந்த பிரபலஸ்தரான திருவாளர் பென்ஷன் தாசில்தார் நெல் லையப்ப பிள்ளை அவர்கள் ஒருவர் மாத்திரமே எதிரி டையாக கைதூக்கினார். இந்த விஷயத்தில் அச்சங்கத்தின் ஏக தலைவரான ஸ்ரீமதி பெசண்டம்மாள் அவர்களும் அதே அபிப்பிராயத்தையே சொல்லி இருக் கின்றார்கள் அதாவது,

ஆதிதிராவிடர் முதலியவர்கள் பரிசுத்தமற்றவர் களாதலால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் ஆனார்கள் என்று சொன்னார். அது மாத்திரமல்லாமல் இவர்கள் சமீபத்தில் காசியில் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களின் முன்பு பேசிய காலத்தில் ஜாதிப்பிரிவுகளை அதாவது வருணா சிரமத்தை ஆதரித்து தேச நன்மையை உத்தேசித்து அது அவசியம் என்றும் பேசியிருக்கின்றார்கள்.

ஆகவே வருணாசிரம தர்மமும் தீண்டாமையும் ஆதரிக் கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தால் நாட்டுக்கு எந்த விதத்தில் சகோதரத் தன்மையும் ஒற்றுமையும் அன்பும் சத்தியமும் உண்டாக்கக் கூடும் என்பதை அறிவாளிகள் யோசித்துப் பார்க்க வேண்டுமாய் விரும்புகின்றோம். மற்றபடி இந்த ஸ்தாபனத்தில் நடை பெறும் மற்ற விஷ யங்களை நாம் இந்த வியாசத்தில் புகுத்து இஷ்டப்பட வில்லை. ஆதலில் அதைப் பற்றி நாம் எழுதவரவில்லை. அரசியல் துறையில் பார்ப்ப னரல்லாதார்களுக்கு இந்த சங்கத்திலுள்ள வருணாசிரம பார்ப்பனர்களின் தொல்லையும் வகுப்பு ஆதிக்கப் பேராசையும் தலைவலியால் பார்ப்பனரல்லா தார்களுக்கு ஏற்படும் கொடுமையும் அளவிடற்பாலதல்ல.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பிரம்ம ஞான சங்கம் என்பது ஆதிக்கம் என்பது, ஆரிய தர்மப்பிரச்சாரம், வருணாசிரம பரிபாலனம், பிராமண மகா சபை என்பன போன்ற பார்ப்பனாதிக்க பிரசாரச் சபைகளில் ஒன்றே ஒழிய வேறல்ல, அதில் மேல் கண்ட சபைகளாவது வெளிப்படை யாய் நம்முடன் போர் புரிகின்றன என்று ஒருவாறு சொல்லலாம். ஆனால் இந்த பிரம்ம ஞான சங்கம் என்பதோ சூழ்ச்சியின் மூலம் நம்மைக் கழுத்தறுத்து வருகின்றது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் பிரம்ம ஞான சங்கத்தில் சேருவது தற்கொலைத் தன்மை பொருந்தியது என்றே சொல்லுவோம்.

சமத்துவக் கொள்கையை அழித்துப் பார்ப்பனீயத்தைப் புகுத்த திருஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் உதித்து சைவத்தைக் காப்பாற்றிய கதையைப் போலவே நமது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பனீயத்தை பரப்ப பெசண்டம்மை என்னும் லோக மாதா வந்து பிரம்ம ஞான சங்கத்தால் மக்களுக்குப் பிரம்ம ஞானம் புகட்டுகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சமயம் அந்த ஸ்தாபனத்திற்கு ஏற்பட்டிருக்கிற செல்வாக்கால் தங்களது சுயநலத்திற்கு ஏதாவது வழி செய்து கொள்ளலாம் எனக்கருதி பார்ப்பனரல் லாதாரில் சிலர் அதில் சேருவதானாலும் சுயமரியாதைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுபவர்கள் அதில் கலந்து கொள்ளுவது சிறிதும் பொருந்தாததாகும். அதில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர்களின் மனப்பான்மையும் முக்கியஸ்தர்களில் தனித்தனி நபர்களின் மனப்பான்மையும் அறிந்தே நாம் இந்தப்படி எழுதுகிறோம்.

 

18.11.1928 - குடிஅரசிலிருந்து...

தென்னிந்திய சமுகச் சீர்த் திருத்தக்காரர்கள் மகாநாடு இந்த மாதம் 26, 27 தேதிகளில் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் தலைமையில் சென்னையில் கூடப் போகிறது. இம்மகாநாடானது தென்னிந்திய சமுகத் தொண்டர் சபையாரால் கூட்டப்படுவதாகும். தென் இந்தியாவில் இருந்து வரும் சமுக ஊழல்களை நினைக்கும் போது இம்மாதிரி மகாநாடுகள் தினமும் கூட்டப்பட வேண்டும் என்றும், சுயநலப் பிரியர்களாக மாத்திரம் இருந்து செத்தால் போதும் என்ற கொள் கைக்கு அடிமையாகாத மனிதர் களும் கடுகளவு உண்மையான ஜீவகாருண்ய முடைய வர்களும் தங்கள் வாழ்நாட்களை இதற்காகவே செலவிட வேண்டியது தன்மையில் முக்கியமான கடமையென்றும் சொல்லுவோம்.

நிற்க, சீர்திருத்த மகாநாடென்று, ஒன்றைக் கூட்டி சிலர் மாத்திரம் முன்னணியில் நின்று வெறும் வாய்ப்பந்தல் போட்டு வேஷத் தீர்மானங்கள் செய்து தங்கள் தங்கள் பெயரை விளம்பரஞ் செய்து தங்களை அன்னியர் பெரிய தேசாபிமானி யென்றும் சமுக சீர்திருத்தக்காரன் என்று சொல்லி பெயர் பெற்றுக் கொண்டு காரியத்தில் வரும்போது மதத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் வருணா சிரமத்தின் பேராலும் சங்கராச்சாரிகளின் பேராலும் மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்ப தான திருட்டு தேசியத்தின் பேராலும் நாணயப் பொறுப் பில்லாமலும் போக்கிரித்தன மாகவும் கிளம்பி முட்டுக் கட்டை போடுவதும், வெளிக்கி யோக்கியர் போலவும் காட்டிக் கொண்டு உள்ளுக்குப் பணச் செலவு முதலிய வைகள் செய்து தடங்கல் செய்யச் செய்வதும், லஞ்சமும் கூலியும் கொடுத்து ஆட்களைச் சேர்த்து தேசியத்தின் பேராலும் சமயத்தின் பேராலும் கூப்பாடு போடச் செய்வதுமான காரியங்கள் நடந்து வரு கின்றன. இக் கொள்கைகளுடனேதான் இதுவரை அநேக சீர்திருத்த மகாநாடுகள் கூட்டப்பட்டிருக்கின்றன.

உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் தென்னிந் தியாவில் சீர்திருத்தத் தலைவர்களுக்குள் மிகவும் சிறந்து விளங்குபவர்களில் திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, சி. ராஜ கோபாலாச்சாரி, டாக்டர் எஸ்.எஸ். ராஜன் முதலி யோர்களான இவர்கள் பெரிதும் சீர்திருத்த ஸ்தாபனத் தலைவர்களுள் சீர்திருத்த மகாநாட்டு தலைமை வகித்தவர்களும் சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுமே ஆவார்கள். இவர்களின் சீர் திருத்தக் கொள்கைகள் எல்லாம் பெரிதும் எதையும் குடித்தால் சீர்திருத்தக்காரர்கள் ஆகிவிடலாம் என்பதும், எதையும் சாப்பிட்டால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும், யாருடனும் சுகித்தால் சீர்திருத்தக்காரர் ஆகிவிடலாம் என்பதும் எங்கும் சாப்பிடுவதாக காட்டிக் கொண்டால் சீர்திருத்தக் காரர்களாகி விடலாம் என்பது மான கொள்கைகள் என்றுதான் சொல்ல வேண்டுமே யொழிய மற்றபடி உண்மையான சீர்திருத்தக் கொள்கைகள் அமுலில் வருவதானால் தங்களால் கூடியவரை முட்டுக்கட்டை போடுகின்ற வர்கள் என்றுதான் சொல்லி ஆக வேண்டும்.

உதாரணமாக சமுக சீர்திருத்த சங்கத் தலைவரும் சர், சங்கரன் நாயருடைய சிஷ்யர் என்று சொல்லிக் கொள்ப வருமான திரு. சீனிவாசய்யங்கார் பொதுப் பணத்தில் நடந்ததும் பொது ஸ்தாபனமாக இருந்ததுமான குருகுல விவகார சம்பந்தமான விஷயத்தில் பார்ப்பனனே தான் சமையல் செய்தாக வேண்டும் என்று சொன்னதும், பார்ப்பனக் குழந்தை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்க்கக் கூடாது என்பதற்கு வக்காலத்து வாங்கிப் பேசினதும், பிரபலமும் பிரக்யாதியும் பெற்ற தேசியவாதியும் சமுக சீர்திருத்தக் காரரும் சீமைசென்று வந்தவரும் மற்றும்பல சீர்திருத்தப் பெருமைகள் படைத்த வருமான திரு. சத்தியமூர்த்தி அய்யர் என்பவர் கோவிலில் சுவாமிகள் பேரால் விபசாரத்திற்கு சிறு பெண்களுக்கு முத்திரை போடக் கூடாது (பொட்டு கட்டக் கூடாது) என்பதையும் நகரத்தில் விபச்சாரிகளின் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்பதையும் முக்கியமாகக் கொண்ட தான சட்டங்களை எதிர்த்ததும், அவ்விழிதொழில் காரிகளுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு எதிர்ப் பிரச்சாரம் செய்ததுமே போதுமானசாட்சியாகும்.

மற்றும் தென்னாட்டு காந்தி என்றும் காந்தியடிகளின் சிஷ்யர்களுக்கு சட்டாம் பிள்ளை என்றும் திரு. காந்திக்கு அடுத்த வாரிசுதார் என்றும் சீர்திருத்தமே உருவாய் வந்தவர் என்றம் சொல்லப்பட்டு வந்தவரான திரு. ராஜகோபாலச்சாரி யாரும் அவரது உற்ற நண்பரும் பின்பற்றுவோருமான திரு. திருச்சி டாக்டர் ராஜனுடன் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் - தேசிய சம்பந்தப்பட்ட வரையிலாவது மக்கள் பிறவியால் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது - என்கின்ற தீர்மானம் நிறை வேற்றப்பட்டவுடன் அக் கமிட்டியிலிருந்து ராஜினாமாக் கொடுத்து விட்டதும், மற்றும் சில சமரச சன்மார்க்கிகளும் அவர்கள் போன்ற வர்களும் இதற்கு விரோதமாய் ஓட்டுக் கொடுத்ததுமான காரியங்களே நாம் முன்குறிப்பிட்டவை களுக்கு தக்க சான்றாகும். ஆனால் மேல் கண்டவர்கள் மேல் கண்ட விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிகள் தங்கள் பகுத்தறிவுக்கும் மனச் சாட்சிக்கும் சரி என்று பட்டமுறையில் அந்தப்படி நடந்து கொண்டிருப்பார்களா னால் நாம் குற்றம் சொல்ல இடமிருந்திருக்காது. ஆனால் தங்கள் தங்கள் சுயநலத்தையும் வகுப்பு நலத்தையும் முக்கியமாகக் கருதி நடந்தவர்கள் என்ன சொல்லும் பிடியாகவே இவர்கள் நடந்து கொண்டார்கள் என்று தைரியமாய் சொல்லலாம்.

எனவே சமீபத்தில் சென்னையில் கூட்டப்போகும் சீர்திருத்தக்காரர்கள் மகாநாடும் சீர்திருத்த வேஷக்காரர் மகாநாடு போலல்லாமல் உண்மை யான பலனைக் கொடுக்கும் உண்மையான மகாநாடாக இருக்கவேண்டும் என்று ஆசைபடுவதுடன் தென் இந்தியாவின் நாலா பக்கங்களிலுமுள்ள உண்மைத் தொண்டர்கள் தவறாமல் வந்து தாராளமாய் கலந்து வேண்டிய உதவி செய்யக் கோருகிறோம். அம்மகாநாட்டை நடத்தும் பொறுமையை மேற்போட்டுக் கொண்டிருக்கும் திரு. ஆரியா, திரு. எம்.கே. ரெட்டியார் மற்றும் சில நண்பர்கள் ஆகியோர்கள் தாராள நோக்க முடையவர்களும் இவ்வேலையில் உள்ளும் புறமும் ஒத்தவர்கள் என்பதும் நாம் சொல்லித் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயமல்ல. மற்றும் இம்மகாநாட்டுக்கு கொடியேற்றம் செய்யும் அம்மையார் திரு. தேவி கமலாட்சி பண்டலே அவர்கள் மிகவும் தாராள நோக்கமும் பரிசுத்த மனமும் கொண்டவர்கள். மகாநாட்டை திறந்து வைக்கும் சென்னை அரசாங்க மந்திரி கனம் திரு. எஸ். முத்தையா முதலியாரவர்களும் சமுக சீர்திருத்த விஷயத்திலும் மக்கள் எல்லோருக்கும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இருக்கவேண்டும் என்கிற விஷயத்திலும் உண்மை யான கருத்தும் உழைப்பும் கொண்டவர். மகாநாட்டுக்கு தலைமை வகிப்ப வரைப் பற்றி நாம் ஒன்றும் இங்கு எழுத வரவில்லை. அன்றியும் இவ்விஷயத்தை எழுத வேண்டிய அவசியமும் இல்லை. ஆதலால் இம்மகாநாடானது தென் இந்தியாவின் அவசியமான சீர்திருத் தத்திற்கு வழிகாட்டியாகவும் அஸ்திவாரம் போடுவதாகவும் இருப்பதோடு நமது நாட்டின் நிலையையும் தேவையையும் அறிவதற்கு கென்று அரசியலின் பேரால் சீமையிலிருந்து வரும் பார்லி மெண்ட் கமிட்டியாகிய சைமன் கமிஷனுக்கும் உண்மை யான நிலையையும் தெளிவையும் தெரிவிக்கக் கூடியதான ஒரு அறிக்கையாகவும் ஆகலாம் என்றும் நினைக் கின்றோம். நம் நாட்டுச் செல்வந்தர்களும் சீர்திருத்த அபி மானிகளும் இம்மகா நாடு விமரிசையாகவும் செவ்வை யாகவும் நடைபெற தங்கள் தங்களால் கூடிய பொருளு தவியும் செய்ய வேண்டுமென ஞாபகப்படுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.

Banner
Banner