வரலாற்று சுவடுகள்

26.07.1931 - குடியரசிலிருந்து...சு.ம. வீரையச்செட்டியார்: என்ன ஓய்! சு.ஆ.சுப் பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக்கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர் குல்லாயும், தடபுடலாயிருக் கின்றதே?

சு.ஆ.சுப்பைய்யர்: ஒன்றும் விசேஷ மில்லை. இன்றுமுதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்.

சு.ம.வீ: அதென்ன திடீரென்று சேர்த்து விட்டாய்? காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே? சு.ஆ.சு.: நான் பி.ஏ. பாஸ்செய்து எத்தனை நாள் ஆச்சுது?

சு.ம.வீ: 3 வருஷமாச்சுது.

சு.ஆ.சு.: உத்தியோகத்திற்கு எத்தனை விண் ணப்பம் போட்டேன். உனக்குத் தெரியாதா?

சு.ம.வீ: ஆம். சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது?

சு.ஆ.சு:  ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா? சொல் பார்ப்போம்?

சு.ம.வீ.: அது சரி, அதற்கு யார் என்ன செய்வார்கள்? உத்தியோகம் இருந்தால்தானே கிடைக்கும்.

சு.ஆ.சு.: உத்தியோகம் காலியாக இல் லையா? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பாசு பண்ணி அப்துல் ரஹ்மான், பறக்கருப்பன், ஜோசப், இரங்கசாமி நாய்க்கன், இராமசாமி நாடான் இவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துக்  காலமாகி ஒன்று இரண்டு பிர மோஷன்கூட ஆகிவிட்டது. நான் பி.ஏ. பிரசி டென்சி முதலாவதாக பாசு பண்ணி இருக்கின் றேன். என் விண்ணப்பத்திற்குப்  பதில் கூட இல்லை. இந்த கவர்ன்மெண்டை என்ன பண் ணுவது?

சு.ம.வீ.: அது ஏன் எப்படி? உன் விண்ணப் பங்கள் போய்ச் சேருகிறதில்லையா?

சு.ஆ,சு.: இல்லையப்பா, உங்கள் எழவுதான்.

சு.ம.வீ: என்ன சங்கதி?

சு.ஆ.சு: சுயமரியாதை என்று ஒரு கலகத்தை உண்டாக்கி அதில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று கூச்சல் போட்டுக் கடைசியாக அது எங்கள் தலையில்  வந்து விடிந்தது.

சு.ம.வீ: அடப்பாவி அதற்கு நாங்களா ஜவாப்தாரி? ஜஸ்டிஸ் கட்சிக்காரரல்லவா? அந்தப்படி கேட்டது.

சு.ஆ.சு.: அது எனக்கு தெரியும்,  ஜஸ்டிஸ் கட்சிக்காரர் முக்கி முக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் போய்க் கடைசியாக அவர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றபோது உங்கள் எழவு சுயமரியாதை கலகம்  வந்து அதற்கு உயிர்  உண்டாக்கி எங்கள் தலையில் கையை  வைத்து விட்டது.

சு.ம.வீ: சரி, அதற்கும்-கதருக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்?

சு.ஆ.சு.: அதனால்தான் காங்கிரசில் சேர்ந்தேன்.

சு.ம.வீ.: ஏன்?

சு.ஆ.சு.: இந்தக் கவர்ன்மெண்டை ஒழித்து விட்டு வேறு வேலை  பார்ப்பது என்றுதான்.

சு.ம.வீ.: உங்களால் ஒழித்து விட முடியுமா?

சு.ஆ.சு.: ஏன் முடியாது ? மாளவியாவே சொல்லி விட்டாரே. ஒரு மாதத்தில் சுயராஜ்ஜியம் வரப்போகின்றது என்று சொல்லிவிட்டாரே. ஒரு சமயம் காந்தி சொன்னாலும்  சந்தேகப்படலாம். அவர் இப்படியே 5, 6 தரம்சொல்லி சொல்லி ஏமாற்றிவிட்டார்.  மாளவியா வாக்குத் தவறாது.

சு.ம,வீ.: அப்படியே சுயராஜ்ஜியம் வந்து விட்டதாகவே வைத்துக்கொள். அப்போது மாத் திரம் உனக்கு உத்தியோகம் கிடைத்துவிடுமா?

சு.ஆ.சு.: ஏன் கிடைக்காது? இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவமெல்லாம் தவுடு பொடி யாகிவிடாதா? அதற்காகத்தானே சுயராஜ்ஜியம்  கேட்பது. இந்த வெள்ளைக்கார ஆட்சி கூட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்று சொன்னால் அதனிடம்  எங்களுக்கு என்ன சண்டை?

சு.ம.வீ.: வகுப்புகள் இருக்கும் வரை வகுப்பு வாரி உரிமை வேண்டாமா?

சு.ஆ.சு.: வகுப்புவாதம் கூடாது என்றுதானே காங்கிரஸ் சொல்லுது.

சு.ம.வீ.: வகுப்புவாதம்  கூடாது என்பது சரிதான். வகுப்புப் போக வேண்டும் என்றும் காங்கிரஸ்  சொல்ல வேண்டாமா?
சு.ஆ.சு.: அதுவும் போகத்தான் வேண்டும்.

சு.ம.வீ.: அப்படியானால் உங்கள் சுயராஜ்ஜியத்தில் மகமதியன், கிறிஸ்தவன் முதலாகிய வகுப்பெல்லாம் போய் விடுமா?
சு.ஆ.சு.: இவைகளை  எப்படி போக்க முடியும்?

சு.ம.சு.: அப்படியானால் அவரவர்களுக்குள்ள உரிமை கொடுக்கத்தானே வேண்டும்.?

சு.ஆ.சு.: ஒவ்வொருவருக்கும் தனித்தனித் உரிமை கேட்டால் அது வகுப்புவாத மில்லையா?

சு.ம.வீ.: வகுப்பு போகாத சுயராஜ்ஜியத்தில் வகுப்புரிமை வேண்டாமா?

சு.ஆ.சு.: அது எப்படியோ போகட்டும்.  இந்துக்களுக்குள் கூட வகுப்புவாதம் எதுக்கு?

சு.ம.வீ.: உங்கள் சுயராஜ்ஜியத்தில் இந்துக் களுக்குள் சூத்திரன், பஞ்சமன் என்கின்ற தாகிய வகுப்புகளாவது இல்லாமல் போய்விடுமா?

சு.ஆ.சு.: இப்படி பேசுவதுதான் வகுப்பு வாதம் என்பது?

சு.ம.வீ.: எப்படி?

சு.ஆ.சு.: வெகுகாலமாக பெரியவாள் காலம் தொட்டு  இருக்கின்ற வழக்கத்தைக் கேவலம் இந்த சுயராஜ்ஜியத்திற்காக ஒழிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமாகுமா? இதனால்தான் உங்களை தேசிய பத்திரிகைகள் வகுப்புத்து வேஷிகள் என்று கூப்பிடுகின்றார்கள். சுயராஜ்ஜியம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சூத்திரன், பஞ்சமன் ஆகிய வகுப்புகள் இல்லாமல் செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.

சு.ம.வீ.: ஏனப்பா அது என்னஅவ்வளவு கஷ்டம்?

சு.ஆ.சு.: இன்றைக்கு சூத்திரன் என்கின்ற வகுப்பு வேண்டாம். நாளைக்கு பஞ்சமன் என்கின்ற வகுப்பு வேண்டாம். நாளாண்ணைக்கு பிராமணன் என்கின்ற வகுப்பு வேண்டாம் என்பதாக வரிசையாய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.

சு.ம.வீ.: சொன்னால் என்னப்பா முழுகிப் போகும்?

சு.ஆ.சு.: குதிரையும். கழுதையும் ஒன்று என்றால் நீ ஒப்புக்கொள்வாயா? 

சு.ம.வீ.: அப்படியானால் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்கின்றவர்களில் யார் குதிரை? யார் கழுதை? அதற்கு என்ன  அடை யாளம்? சொல் பார்ப்போம் (என்று சட்டையை முழங்கைக்குமேல் ஏற்றிச் சுருட்டினார் வீரையன்.)

சு.ஆ.சு.: அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா.  சங்கராச்சாரி சுவாமிகளிடமிருந்து பிராமணாள் எல்லோரும் காங்கிரசில் சேருங்கள் என்று ஒரு ரகசிய  ஸ்ரீமுகம் வந்ததாக எங்கப்பா சொன்னார். அதனால் சேர்ந்தேன்.  எங்கப்பாவும் எங்கமாமாவும் பேசிக் கொண்டிருந்ததை நான் சொன்னேன். என்மேல் கோபித்துக் கொள்ள வேண்டாம்.  என்னமோ என் வேலையை நான் பார்க்கிறேன். உன் வேலையைப் நீ பார். நமக்குள் சண்டையெதற்கு? என் அபிப்பிராய மெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே? நான் போகிறேன், நேரமாச்சுது (என்று சொல்லிக்கொண்டே நழுவிவிட்டார்.)

நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன்படுத்த உறுதியும் துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியும்.  நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்துகொண்டு இதுதான் நபிகள் சொன்னது என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா?  நமது சொந்தக் கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்கவேண்டும்.  சாளேசரம் இருந்தால் சரியாய்த்தெரியாது.

பக்கப் பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது.  இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும்.  மஞ்சள் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான்தெரியும்.  சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாக வுந்தான் தெரியும்.  நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும்.  அதுபோலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லவேண்டும்.  அப்படிக் கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிப்பேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகிவிடும்.

நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய்கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், உங்களைப் போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார்கள்?  நினைக்கின்றார்கள் என்று பாருங்கள்.

14.08.1932 - குடிஅரசிலிருந்து...

சென்ற 04.08.1932இல் நடந்த சென்னை சர்வகலாசாலைப் பட்டமளிப்பு விழாவின்போது நமது மாகாண கல்வி மந்திரி திவான் பகதூர் எ. குமாரசாமி ரெட்டியார் அவர்கள் பட்டதாரிகளுக்கு செய்த பிரசங்கம் மிகவும் சிறந்ததொன்றாகும். அவர் தற்காலக் கல்வியில் உள்ள குற்றங்களையும், கல்வியின் லட்சியம் இன்னதென்பதையும் கல்வி எம்முறையில் போதிக்கப்பட வேண்டுமென்பதையும், எத்த கைய கல்வி அவசியமென்பதையும் கற்றவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் தெள்ளத்தெளிய விளக்கிக் காட்டியிருக்கிறார்.

கல்வியானது உலக வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாய் இருக்க வேண்டும். வெறும் வித்தையை மாத்திரம் கற்றுக் கொடுப்பதால் தேச மக்களின் துன்பத்தைப் போக்க முடியாது. ஆகையால் தொழில் கல்வியை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும், என்றும் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். அன்றியும் தற்காலத்தில் உயர்தரக் கல்விக்கு அதிகமாக செலவு செய்வதைக் காட்டிலும், ஆரம்பக் கல்வியின் பொருட்டு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரம்பக்கல்வியின் மூலம் தேசமக்கள் எல்லோரையும் அறிவுடை யராக்க முயல வேண்டும். என்றும் சிறந்த அபிப்பிராயமும் கல்வி மந்திரியின் பிரசங்கத்தில் காணப்படுகிறது. நமது நாட்டு மாணவர் களுக்குத் தற்சமயம் எல்லா விசயங்களையும் ஆங்கிலத்தின் மூலமே கற்பிக்கப்படுவதானால் விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு அதிக நாளாகிறது. ஆங்கில பாஷையைத் தவிர மற்ற விஷயங்களைத் தாய்மொழியின்மூலம் கற்பிக்கப்பட்டால் குறைந்த காலத்திலும் சுருங்கிய செலவிலும் கற்கக் கூடும். ஆகையால் இவ்வாறு கற்பிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சில காலமாகக் கல்வி துறையில் உழைத்துவருவோர் சிலர் பிரயாசைப்பட்டு வருகின்றனர்.

நமது கல்வி மந்திரியவர்கள் இவ்வபிப்பிராயத்தை வற்புறுத்தி தாய் மொழிக் கல்வியின் அவசியத்தை எடுத்துக் காட்டிப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். தற்போது தேசியவாதிகளில் பலர் ஆங்கில பாஷையின் மீதும் வெறுப்புக்கொண்டு அதற்குப் பதிலாக இந்தி பாஷையை இந்தியாவிற்குப் பொதுப்பாஷையாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். வட நாட்டார் தங்கள் பாஷையின் மேல் உள்ள அபிமானம் காரணமாக ஆரம்பித்த இம்முயற்சியைத் தென்னாட்டில் உள்ள தமிழ் மொழியின் மேல் வெறுப்புக் கொண்ட பார்ப்பனர்களும் ஒப்புக் கொண்டு இதன் பொருட்டு பெரும் முயற்சி செய்து வருகிறார்கள்கள்.

ஆனால், நாம் ஆதிமுதல் இந்தி பொது மொழியாவதற்குத் தகுதி உடையதன்று என்று சொல்லி வருகிறோம். இந்தி மொழியில் விஞ்ஞானக் கலைகள் ஒன்றேனும் இல்லையென்பதையும் இலக்கியங்கள் இல்லையென்பதையும் தமிழர்க்குக் கஷ்டமான மொழி என்பதையும் ஆங்கிலத்தை அந்நிய மொழி யென்றால் இந்தியும் அன்னிய மொழிதான் என்பதை யும் இந்தியைப் பொது மொழியாக்க வேண்டு மென்றால் முஸ்லீம்கள் உருதுவையும் பொது மொழியாக வேண்டு மென்கிறார்களாதலால் இதன் மூலம் இந்து - முஸ்லீம் கலகம் நேரும் என்பதையும் அறிந்தவர்கள் நாம் சொல்லுவதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கமாட்டார்களென்று நிச்சயம். ஆதலால் தற்காலத்தில் அதிகமாக மக்களால் பேசப்படுவதும் உலகம் முழுவதும் பரவியிருப்பதும் எல்லாக் கலைகளும் நிரம்பியிருப்பதும் ஆகிய ஆங்கிலத்தையே பொது மொழியாக வைக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். கல்வி மந்திரியவர்களும் ஆங் கிலமே பொது மொழியாக இருக்க வேண்டும் என்று தம் பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்பதை நாம் பாராட்டுகிறோம்.

கல்வியானது கற்றவர்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கக் கூடியதாகவும் பழைய குருட்டுப் பழக்கவழக்கங்களைப் போக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்றும் இதற்கேற்ற முறையில் கல்வியைத் திருத்தி அமைக்க வேண்டுமென்றும் நாம் கூறிவருகிறோம். இவ்வபிப்பிராயமும் கல்வி மந்திரியின் பிரசங்கத்தில் காணப்படுகிறது.

கற்றவர்கள் உத்தியோகத்திற்கென்று கற்காமல், அறிவுக்கென்றும், நாட்டின் நன்மைக்கென்றும் கற்று, தேசமக்களைச் சீர்திருத்த வேண்டும் என்னும் அபிப்பிராயத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். கற்றவர் களெல்லாம் கிராமப் புனருத்தாரண வேலையில் ஈடுபட்டு கிராமாந்தரங் களையும் அங்குள்ள மக்களையும் சீர்திருத்த முயல வேண்டும் என்றும் இதுவே தேசிய வேலையும் தேசிய நோக்கமும் ஆகும் என்றும் குறிப்பிட்டிருப்பது நமது நாட்டுக் கல்விமான்களால் கவனிக்கக் கூடியதொன்றாகும்.

தற்பொழுது கற்றவர்கள் கூட்டம், தேசமக்களின் முன்னேற்றத்தில் சிறிதும் கவலையில்லாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே கருதி உத்தியோகம் ஒன்றையே நாடித்திரிந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கல்விமுறை என்பதில் அய்யமில்லை. ஆகையால் இனி யாவது கல்விமுறை என்பதில் சீர்திருத்தப்பட்டு நாட்டின் முன்னேற் றத்துக்கு உபயோகத்திற்கு ஏற்ற முறையில் கற்பிக்கப்படுவதற்கு முயற்சி செய்யுமாறு வேண்டுகிறோம். இறுதியாக இத்தகையச் சிறந்த அபிப் பிராயங்களைத் தைரியத்தோடு வெளியிட்ட திரு ரெட்டியார் அவர் களைப் பாராட்டுகிறோம்.

07.08.1932 - குடிஅரசிலிருந்து...

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தி னாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும் தொழி லாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற் சாலை களிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக் கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறு கின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள்,

இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லை யென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ மற்றும் யாரா யிருந்தாலும் அனை வரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க இடமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில்லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட் களை குறைத்து வருகிறார்கள். ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப்படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப் பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர் கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர்களைக் குறைத்து தான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள் ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளி களும் கைப் பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகை யால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அர சாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலா ளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

 

24.05.1931 - குடிஅரசிலிருந்து....

இப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப் படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள்.

இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது.

பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர் களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை.

ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன்  செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம்.  பார்ப்பனரல்லாத சமுகம் ஒரு மனிதன் தன்னை  ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள்  தனது சொந்த உத்தி யோக  நலத்திற்கு ஆத்திரப்படுவது அல்லாமல் அந்தச் சமுக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது.  படித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோலவே தான் சமுக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக் கின்றது.

இந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை.  யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத் தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின்றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்து வத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய் வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடை யாது.   ஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப்புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.

மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னை, தான் நடத்துவதான் அவன் நினைப்ப தில்லை. தனது காரியத்துக்கு, தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன், தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளை யையும், கடவுள் சித்தாந்தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.

இந்து-முஸ்லீம்

19.04.1931 - குடிஅரசிலிருந்து...

இந்தியாவில் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லிம்  ஒற்றுமை அவசியமென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20, 30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும்  பாடுபடுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேலையில் முனைந்திருக்கிறார்.

இதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கும் தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையான காரியம் என்றும் தீண்டாமை  ஒழியா விட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல்லப் பட்டது.

ஆனால் இப்போது அந்தப் பிரச்சினை வெகுசுலபத்தில் தீர்ந்துபோய்விட்டது. அதாவது சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்துபோகும் என்று அவரா லேயே சொல்லப்பட்டாய் விட்டது.

ஏனெனில், சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது  என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனையாதலால் மதத்தில் தீண் டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது  மதவிரோதம் என்று ஒரு உத்தரவு போட்டுவிட்டால் தீண்டாமை விஷயம்  ஒரே பேச்சில்  தானாகவே முடிந்துவிடும்  என்று எண்ணியிருக்கலாம், ஆகையால் இப்போது தீண்டாமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

அன்றியும், திரு. காந்தியின் சுயராஜ்யம் இப்போது தீண்டாமை ஒழியாமலே வரவும் போகின்றது. ஏனெனில், தீண்டாதார் எனப்படுபவர்களில் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வர இணங்கமாட்டோம் என்று சொல்வதற்கு  அறிவும் வீரமுமுள்ள ஆசாமிகள்  இல்லை. ஆதலால் மதநடுநிலைமை சுயராஜ்யமாய் தாண்டவமாடுகின்றது.

ஆனால், இந்து முஸ்லிம்  விஷயம் அப்படியில்லை. ஏனெனில் லக்னோ ஒப்பந்தத்திற்கு பிறகும்,  வகுப்புவாரி   தனித்தொகுதி பிரதிநிதித்துவத்திற்கு பிறகும் அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒருவாறு மனிதத்தன்மை  ஏற்பட்டு விட்டது. அவர்களைச் சுலபமாய் இனி யாரும் ஏய்த்துவிட முடியாது.

இந்து முஸ்லிம் ஒற்றுமை எவ்வாறு வாயளவு பேசினாலும் காரியத்தில் இந்துக்கள் எப்படி ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமல் முஸ்லிம்களை ஏமாற்றப்பார்க் கின்றார்களோ, அதுபோலவே முஸ்லிம் களும், முஸ்லிம் இந்து ஒற்றுமையை வாயளவில் எவ்வளவு  பேசினாலும்  காரியத்தில் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வரும் தன்மையை அடைந்து விட்டார்கள்.

இந்தத் தன்மையையுடைய இருவரையும் நாம் குற்றம் சொல்ல வரவில்லை. ஏனெனில், இரு கூட்டத்தாரும்  தங்களின் இரு மதத்தின் உண்மையான தன்மைப்படியே இருவரும் நடந்து கொள்கின்றார்கள். ஆகையால் மேற்படி இருமதத்தின் பிரதானமும் தளர்த்தப்படும்  வரை இந்தியா மாத்திரமல்லாமல் இவர்களையுடைய எந்த தேசமும் இப்படித்தான் நடந்து கொள்ள முடியும். சுலபத்தில் ஒற்றுமையைக் காண முடியாது.

உதாரணமாக, கொஞ்ச காலத்திற்கு முன்பு காலஞ்சென்ற  லாலா லஜபதிராய் அவர்கள் மகமதியரல்லாதாரை  கொல்லவேண்டும் என்கிற வசனம்  குரானில் இருக்கும்வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை  சாத்தியப்படாது என்று சுயராஜ்யாவில் எழுதியிருந்தது யாருக்கும் ஞாபகமிருக்கும். மற்றும் இன்னும், அதுபோலவே இஸ்லாம் மதத்தை விர்த்தி செய்ய கத்தி, ஈட்டி, பலாத்காரம் ஆகியவைகளை உபயோகித்து யுத்தம் செய்யலாம் என்கிற  தாத்பரியங் களும் அதில் இருந்து வருவதும் யாவரும் அறிந்ததே,

அதுபோலவே ஆரியரல்லாதவர்களெல்லாம் மிலேச்சர்கள், ஆரியரல்லாதவர்கள்  பாஷை மிலேச்சபாஷை, ஆரியரல்லாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும், அவர்கள் அழிக்கப்படவேண்டும் அவர்கள் பூமிக்கு பாரம் என்று  இந்துக்கள்  வேதத்தில்  இருந்து வருவதும்  சைவனல்லாதவன் கழுவேற்றப்பட்டதாய் புராணங்களில் இருந்துவருவதும்  வேதம் என்பது என்ன, புராணம் என்பது என்ன என்பதையும், இந்து தர்மம்  என்பது என்ன என்பதையும்  அறிந்தவர்கள் எல்லாம் நன்றாய்த் தெரிந் திருப்பார்கள்.

இஸ்லாம் தர்மத்தில் இஸ்லாம் அல்லாதவன் காபர் அதாவது நாஸ்திகன், அழிக்கத் தகுந்தவன் என்று இருப்பதும் இந்து அகராதியில் மகமதியன் என்றால் ராட்சதன், அசுரன், என்றும் மிலேச்சன் என்றும் இருப்பதும்  யாவரும் அறிந்ததேயாகும், அன்றியும் இவைகளை இருதிறத்தாரும் அறிந்திருந்தும் இந்த விஷயங்களில் எவ்வித மாறுதலும் செய்யாமலும்  அது மாத்திரமல்லாமல் எவ்வித மாறுதலும்  செய்யக்கூடாது என்கிற நிபந்தனையை சுயராஜ்ய திட்டத்தில் ஒரு முக்கிய நிபந்தனையாகவும் வைத்துக்கொண்டு இந்து முஸ்லிம் ஒற்றுமை, ஒற்றுமை என்று கூப்பாடு போட்டால் அக்கூப்பாடுகள் வேஷக் கூப்பாடா அல்லது ஏய்ப்புக் கூப்பாடா? அல்லது வாஸ்தவத்திலேயே போடும் ஒரு உண்மைக் கூப்பாடா? என்பதைப் பொதுமக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய்க் கோருகின்றோம்.

நாம் இந்தப்படி எழுதுவது சில தேசியப் பிழைப்புக்காரர்களுக்கு பிடிக்காதது போல் காணப்படலாம். அவர்கள் இருகூட்டத்தாரிடையும் துவேஷ முண்டாக்கவும், வகுப்புக் கலவரமுண்டாக்கவும் பிரச்சாரம் செய்வதாக நம்மைப்பற்றி விஷம பிரச்சாரமும் செய்யலாம். ஆனாலும், அதைப்பற்றி நாம் சிறிதும் கவலைப்படப் போவதில்லை. ஆனால் நாம் எழுதுவது உண்மையா இல்லையா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென்றுதான் கவலைப்படு கின்றோம்.

இம்மாதிரியான இரண்டு  மதத்தையும்தான் இரு கூட்டத்தார்களும் வளர்க்க வேண்டுமென்றும், இரு மதத் தாரும் அவரவர்கள் மதத்திற்குக்  கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் இந்தியாவின் ஏக தலைவரான திரு.காந்தியவர்கள் கூறுகின்றார்கள். இது இந்துக்களிலும் முஸ்லிம்களிலும் உள்ள மத பக்திக்காரர்களைத் திருப்திப் படுத்தி திரு.காந்தியை மகாத்மா என்று ஒப்புக் கொள்ளவும் உதவும். ஆனால், இது இரு சமுகத்தினுடையவும் ஒற்று மைக்கு சாத்தியப்படக்கூடியதா என்று யோசித்துப் பார்க் கும்படி  பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இரு சமுகத்திலுள்ள வாலிபர்களும் ஒன்றுகூடி இரு மதங்களி லுமுள்ள வேஷத்தையும், துவேஷத்தையும் ஒன்றுக்கொன்று அடிப்படையாயுள்ள  மாறுபாட்டையும் ஒழிக்க முன்வந்து துவேஷ மும், வேஷமும், மாறுபாடும் கற்பிக்கும் பாகம் எதிலிருந்தாலும், அவை யார் சொன்னதாக இருந்தாலும் தைரியமாய் எடுத் தெறிந்துவிட்டு ஒற்றுமைக் கான திட்டங்களைப் புகுத்தி இருவரும் தங்களை மனிதத் தன்மை  மதக்காரர்கள்  (கொள்கைக்காரர்கள்) என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டால் இந்தியா மாத்திரமல்லாமல், இந்து  முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் உலகமெல்லாம் உலகத்திலுள்ள சமுகமெல்லாம்,  இந்தக் கொள்கையின் கீழ் அன்புத் தன்மையோடு சகோதர வாஞ்சையோடு ஆட்சி புரியப்படலாம். அதில்லாமல் அவரவர்கள் மதத் தைப் பலப்படுத்திக் கொண்டு அவைகளுக்குச்  சிறிதும்  பங்கமோ மாறுபாடோ இல்லாமல் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்தலாம் என்பது  சிறிதும்  பயன் படாததாகும்.  அந்தப்படி ஏதாவது ஒருசமயம் ஒற்றுமை ஏற்பட்டு விட்ட தாக யாராவது சொல்லுவதானாலும் சிலருடைய  தனிப்பட்ட நன்மைக்கு உதவுமேயல்லாமல் இந்திய மக்களின் பொது நன்மைக்குச் சிறிதும் உதவாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

 

Banner
Banner