வரலாற்று சுவடுகள்


ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாக ரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாகத் தெரியவருகிறது. அன்றியும் 3 மணி நேரம் அத் தீர்மானத்தின் மீது, பல பெண்கள் கூடி பலமான வாதப்பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்று விட்டாலும்கூட இந்தச் சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக்கின்றது. ஏனெனில் கலியாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளைக் காதினால் கேட்கவே நடுங்கி கொண்டிருக்கும் கோடிக்காணக்கான, ஆண்களுக்கு அடங்கி  அடிமையாய்க் கிடந்து வந்த பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனா னாலும், பிறர்க்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் கடவுள் போலவே பாவிக்க வேண்டுமென்றும், கணவன் குஷ்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய், அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லட்சணமென்றும். பெண்களுக்குக் கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில், கலியாண ரத்து என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்குச் சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும், அதுவும் பெண்களையே அதைப் பற்றி பலர் பேசி வாதப் பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படு வதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல. அது மாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்படி அதற்கு ஓட்டுகிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்து கூடிய சீக்கிரம் பெண்ணுலகு விடுதலை பெற்று விடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

* இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானம்.

* சமதர்மம் என்று வந்துவிட்டால் மனிதச் சமு தாயத்துக்குக்  கவலை, குறைபாடு, தொல்லை எல்லாம் அடியோடு போய்விடும். கவலை, குறைபாடுகள் நீக்கப் பட வேண்டுமானால் சமதர்மம் தான் மருந்து.

பரோடா பெண்கள் முன்னேற்றம்
04.02.1934- புரட்சியிலிருந்து...

புதிய சட்டவிபரம்

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள். விதவை களின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக்கிறதென்று சொல் லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான் கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது. இந்தச் சட்டப்படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சமபங்காளி ஆகிவிடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்பதற்குக்கூட இந்தச் சட்டத்தினால் உரிமை ஏற்பட்டிருக்கிறது.

புருஷனுடைய சொத்து அவர்தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழைய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக் கும். இந்த வாரிசுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும். இப்போது இந்தப் புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விதவை யான ஒரு மருமகளுக்கும், தாய்க்கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.

இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்குக் கஷ்டமாயிருந்தாலும்கூட அவளுடைய தகப்பன் குடும்பத்தி லிருந்து சம்ரட்சணை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருக்கிறது.
இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. எப்படியெனில் புருஷன் இறந்த பின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்குச் சம்ரட்சணை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத் தாரே அவளுடைய ஜீவனத்துக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.

கலியாணமாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட்சணையும் கலியாணச் செலவும்தான் கொடுக்கப் பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினைக் காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதரனுடைய பங்கில் நாலில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு, ஆனால் சொத்து பங்கு போட்டுக் கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது.

இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாணமாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயாதீனமும் ஏற்பட்டிருக்கிறது.

சீதன விஷயமான பாத்தியதையைப் பற்றி பழைய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக் கின்றன.

முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்-விற்பனை செய்ய முடியாது. இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறுவிதமாக வினியோகிக்கவோ மேற்படி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது. இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்.

நமது மாகாணத்தில்
பெண் வக்கீல்கள்
02.09.1934- பகுத்தறிவிலிருந்து....

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டு மிருக்கிறார்கள்.

சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக் கிறார்கள்.

நம்முடைய தேசத்து தேசியத்தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்டமான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.ஏ., எதுகிரியம்மாள் ஆகியவர் களாவார்கள்.

இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி இருக்கிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜூ தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட் சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள்.

தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு வெட்கமில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.


04.11.1928 - குடிஅரசிலிருந்து....

ஈரோட்டில் ஏற்படுத்தப் போவதாய் தெரிவித்திருந்த சுயமரி யாதைப் பிரச்சாரப் பள்ளிக்கூடம் சென்ற மாதம் 31 தேதியில் ஆரம்பிப்பதாய் தீர்மானித் திருந்ததில் அந்த ஆரம்ப விழாவை நடத்தித்தர கேட்டுக் கொள்ளப்பட்ட திருவாளர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் வேறு அவசரத்தினால் அந்த தேதிக்கு வர சவுகரியப் படவில்லை என்றும் ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டதின் பேரில் தள்ளிவைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனாலும் அந்தப்படி ஒரு வாரத்தில் வைத்துக் கொள்வதில் தீபாவளி என்கின்ற பண்டிகை ஒன்று சமீபத்தில் வரப்போவதால் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களில் சிலராவது தீபாவளிக்காக என்று மத்தியில் ஒருசமயம் ஊருக்குப்போக நேரிட்டாலும் நேரிடலாம் என்றும் அதன்மூலம் அவர்களுக்கு போக்குவரத்துச் செலவும் அசௌகரியமும் ஏற்படக் கூடும் என்றும் தோன்றியதால் தீபாவளி கழிந்த பிறகு ஏற்படுத்த தீர்மானிக்க வேண்டிய தாயிற்று.

திருவாளர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் பள்ளிக்கூட ஆரம்ப விழா நடத்துவார். எனவே அப்பள்ளிக்கூடத்திற்கு வர இஷ்டப்பட்டு முன் தெரிவித்துக் கொண்டவர்கள் கடிதம் பார்த்த வுடன் வரத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர் தூது

26.08.1928 - குடிஅரசிலிருந்து....

பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ்பகதூர், சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும், தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களைப் பேட்டி கண்டு பேச வேண்டு மென்று தெரியப் படுத்திக் கொண்டதற்கேற்ப கவர்னர் துரைய வர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.

தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக் காரர்கள் கொடுமைப் படுத்திய விஷயங் களையும் சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்கு செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரைய வர்கள் யாவற்றையும் பொறுமையாய் வெகு அனுதாபத் துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகிறது.

பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபமும் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கினதைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மனவருத்தமடைந்ததாகவும் தெரியவரு கின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரச்சார கர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுக்கவனத்தைச் செலுத்தி அவைகளுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித் திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.

போலீஸ் இலாகா மெம்பரின் நிர்ப்பந்தம் காரண மாகவே ஸ்தல போலீஸ் அதிகாரிகளின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளைப் பின்வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக் கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசர மானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரிகளின் அதிகார துஷ் பிரயோகத் தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வதாகத் தெரிய வருகிறது.

ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப்புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரி களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினா லெல்லாம் தொழிலாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமே யொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப் பற்றி மாத்திரம் நாம் திருப்தி யடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்ல வென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரைகளும் பிரிட்டிஷ் என்பதான ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வரு வார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்கமிருக்கிறதா?

தேசிய இயக்கங்கள் என்பதும் தேசியத்தலைவர்கள் என்பவர்களும் ரயில்வேக்காரர்களுடையவும், சர்க்காரு டையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர்களாகவும் இருக்கத் தக்கவர்களாகிவிட்டார்கள்.
எனவே என்றைக்காவது தொழிலாளர்களும் கூலிக்காரர் களும் இந்த நாட்டில் சுயமரியாதை யோடும், சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங் களையும் போலித்தலைவர்களையும் நம்மால் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும் படியான நிலைமை ஏற்பட வேண்டும்.

அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவிவிழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுய மரியாதையில் மாத்திரம் கவனம் இருந்து கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.

இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?

26.08.1928 - குடிஅரசிலிருந்து....

தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக் கையும் உபயோகப் படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல் களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூல மாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்ய லாமோ அவ்வளவும் செய்தார்கள். இதற்குச் சில பார்ப்பனரல் லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ் வளவு தூரம் அடிமையாய் இருந்துகொண்டு பார்ப்பனரால்லா தாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள். அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.

ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவ தற்குள்ளாகவே பார்ப்பனர்களுடையதும் அவர்களது வால் களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளியில் தலைகாட்டு வதற்குக் கூட யோக்கியதையில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல் களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரிய வில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரிய வில்லை. தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்துவதற்குக் கூட காங்கிரஸுக் காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது. இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும். நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.

இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.

இந்து மதம் என்பது ஒரு போலி மதம் என்றும், ஒரு கொள்கையும் அற்றதென்றும், பார்ப்பனர்களின் வாழ்வுக்கும் வயிற்றுப் பிழைப்புக்குமே கடவுளின் பெயராலும், முனிகள் பெயராலும், ரிஷிகள் பெயராலும் பல ஆபாசங்களையும் சுயநலக் கொள்கைக ளையும் கற்பனை செய்து அவற்றைப் பாமர மக்கள் நம்பும்படி பல மிரட்டுதலான நிபந் தனைகளை ஏற்பாடு செய்து அவைகள் நிலைப்பதற்குத் தகுந்த தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து வருகிறார்கள் என்றும் அதை அறியாமல் பல தமிழ் மக்களும் சைவம் என்றும் வைணவ மென்றும் அர்த்தமற்ற சில கடவுள்களின் பேரால் சமயங்கள் என்பதாக வகுத்துக் கொண்டு சிவன், விஷ்ணு என்னும் பெயர்கள் உடைய பல கடவுள்கள் இருப்ப தாகவும் அவர்கள் பல ரூபங்களாகவும், பல அவதாரங்களாகவும் இருப்பதாகவும், அவற்றை வணங்குவதும், துதிபாடுவதுமே சைவ, வைணவ கொள்கையென்றும் வைத்துக் கொண்டு அதன் மூலம் பார்ப்பனர்கள் சூழ்ச் சிக்கு இடம் கொடுத்து வரப்படுகின்றது என்றும் நாம் பல தடவைகளில் பேசியும் எழுதியும் வந்திருக்கின்றோம். இதுவரையில் நம் நாட்டில் இதைப்பற்றித் தக்க காரணம் காட்டி மறுத்தோ அல்லது சமாதானமோ யோக்கியமான வழி யில் சொல்லவோ எழுதவோ இல்லை.

ஆனால் குருட்டு நம்பிக்கையிலும் மூட வழக்கங்களிலும் பலமாக கட்டுப் பட்ட சிலரும், மதத்தின் பேராலும் சமயத்தின் பேராலுமே தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொண்ட சிலரும் கொஞ்சமாவது தங்கள் பகுத் தறிவை உபயோ கிக்காமலும் பொது ஜனங்க ளுக்கு என்ன சமாதானம் சொல்லுவது, எப்படி மெய்ப்பிப்பது என்பதைப் பற்றி கவலைப்படா மலும் பார்ப்பனர்கள் தங்கள் கற்பனைப் புரட்டு களை நிலைநிறுத்த ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருப்பதான நாஸ்திக மாச்சுது மதம் போச்சுது கலிகாலத்தின் கொடுமை என்கின்ற யோக்கிய மற்றதும், வஞ்சகமும், கொடுமையும் நிறைந்ததுமான ஆயுதங்களை உபயோகித்து ஏமாற்றப் பார்க்கின்றார்களே ஒழிய ஒரு வழியி லாவது சரிப்பட்டு வருகின்றதில்லை. சமீபகால மாக சில சைவர்கள் என்போர்கள் நம்மைப் பற்றி காணாத இடங்களில் சைவத்திற்கு பெரிய ஆபத்து வந்துவிட்டது எல்லோரும் உஷார் உஷார் என்பதும் ஏதாவது அர்த்தமற்றதும் பாமரர்களுள் ஏமாறத்தக்கது மான வார்த்தை களை அடுக்கித் துண்டு விளம்பரங்கள் போடு வதும் அதை சில வயிற்றுப் பிழைப்பு பத்திரி கைகளும் தனக்கென யாதொரு கொள்கையு மற்ற சமயம் போல் நடந்து உயிர் வாழ்வையே முக்கியப் பிழைப்பாய்க் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் ஆசாமிகளும் நாயக்கர் பிரச் சாரம், என்று விஷமத் தலைப்பின்கீழ் எடுத்துப் போடுவதும் மற்றும் தாங்களே தங்கள் பேரால் எழுதுவதற்குத் தைரியமற்று ஏதோ பல அனாம தேயங்களின் பேரால் நாயக்கர் மதத்தை அழிக் கப் பார்க்கின்றார், நாஸ்திகத்தை பிரசாரம் செய்கின்றார் என்கின்ற மாதிரி எழு துவதுமான காரியங்கள் நடந்து வருகின்றது.

நிற்க, சிவனைப் பற்றியும் சிவனைக் கட வுளாகக் கொண்ட சைவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் அதில் உள்ள புரட்டுகளைப் பற்றியும் அதுபோலவே விஷ் ணுவைப் பற்றியும் விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்ட வைணவ சமய ஆதாரங்களான பல புராணங்களைப் பற்றியும் நாம் குறிப்பிடும் விஷயங்களைப் பற்றி மததூஷணை தெய்வ நிந்தனை என்று பேசிவிட்டு எழுதிவிட்டு தங்கள் தங்கள் சமயத்தைப் பற்றி பேசும்போதும் அதைப் பெருமைப்படுத்தி நினைக்கும் போதும் சைவன் வைஷ்ண வத்தையும் விஷ் ணுவையும், வைணவன் சைவத்தையும் சிவ னையும் எவ்வளவு தூரம் இகழ்ந்தும், இழி வாயும் ஆபாசமாயும் வேதத்தின் பேராலும் உபநிடதத்தின் பேராலும் புராணங்களின் பேராலும் எழுதியும் பேசியும் வருகின்றார்கள் என்பதைப் பார்ப்போமானால் இதுவரை நாம் பேசியும் எழுதியும் வந்தது அவற்றில் பதினாயி ரத்தில் ஒருபங்குகூட இருக்காது என்றே சொல்லுவோம். உதாரணமாக, சிவ பராக்கிரமம் என்னும் புத்தகமும், கூரேச விஜயம் என்னும் புத்தகமும், ராமாயணம், பாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், கந்த புராணம், பெரியபுரா ணம், திருவிளையாடல் புராணம், அருணாசல புராணம், விநாயக புராணம் என்னும் சமய புராணங்களும் ஆகியவைகளை நடுநிலையில் இருந்து படித்துப்பார்ப்பவர்களுக்கு இதன் உண்மைகள் விளங்காமல் போகாது. நாம் சொல்வதும் எழுதுவதும் ஒவ்வொன்றும் மேற் கண்ட சமய ஆதாரங்களாகி பல புத்தகத்தில் சிவன் சொன்னதாகவும், விஷ்ணு சொன்னதா கவும், பிரம்மா சொன்னதாகவும், முனி சொன்ன தாகவும் ரிஷி சொன்னதாகவும் உள்ள விஷ யங்களையே குறிப்பு காட்டி எழுதியும் சொல்லி யும் வருகின்றதோடல்லாமல் நம்மை எதிர்க்கும் சில புரட்டர்கள் சொல்வதுபோல் அதற்கு இதல்ல அருத்தம் இது சையன்சுக்குப் பொருத் தம் இது படியாத முட்டாளின் கருத்து இது குண்டர் களின் வேலை ஆராய்ச்சியில்லாத வர்களின் கூற்று என்பதான அயோக்கியத் தனமும், போக்கிரித்தனமும், பேடித்தனமும், இழிதகைமையும் பொருந்தியதான சமாதானங் களை ஒருபோதும் சொல்ல முன் வருவதே இல்லை.

அன்றியும் நாம் சொல்லும் விஷயங்களைச் சமயத்தைக் காக்க வந்ததாகச் சொல்லிக் கொள் ளும் வைணவ சைவ பக்தர்கள் சொல்லுவதை யும் எடுத்து இரண்டொரு உதாரணங்கள் காட்டுவோம்.

தற்சமயம் நமது பிரசாரத்தைப் பற்றி வைணவர்களைவிட சைவர்களுக்குத் தான் அதிக ஆத்திரமாக இருக்கின்றது. அவர்களுக் குத்தான் எங்கு அவர்கள் சைவசமயம் போய் விடுமோ என்கின்ற பயம் அதிகமாய்ப் பிடித்து ஆட்டி மதம் போச்சு மதம் போச்சு என்கின்ற பொய்யழுகை அழுகின்றார்கள். அவர்கள் தான் நாம் மிகுதியும் சமய நிந்தனை செய்வதாக கூப்பாடு போடுகின்றார்கள். வைணவர்களில் பெரும்பான்மையோர் இதைப் பற்றி அதிக கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை. ஒரு சமயம் நம்மை எதிர்க்கத்தக்க ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் இப்போது வெளிப் படையாய் ஒன்றையும் காணோம்.. சமீபத்தில் வைணவன் என்கின்ற ஒரு பத்திரிகை நம்மைப் பற்றி குற்றம் சொல்லப் புறப்படுகையில் ராமா யணத்தைப் பற்றி நாம் எழுதியவைகளில் தனக் குச் சற்று மனத்தாங்கல் இருப்பதை மாத்திரம் காட்டிக் கொண்டதே ஒழிய அது சரியா தப்பா அல்லது பொய்யா என்பதைப்பற்றி ஒரு வார்த் தையும் சொல்ல முன்வர (இஷ்டமில்லையோ அல்லது தனக்குச் சக்தி இல்லையோ) வில்லை. ஆனால் கடைசியாக அப்பத்திரிகை சொன்ன சமாதானம் என்ன வென்றால் இராமாயணத் தைக் காட்டிலும், பன்மடங்கு ஆபாசமான நூல்கள் பல இருக்கின்றன என்றும், இராம னைக் காட்டிலும் ஆபாசமான நடை உடைய கடவுளர் பல இருக்கிறார்கள். அவ்வாபாசங் களைக் குறித்து இவ்வாராய்ச்சிக்காரர் ஒரு வார்த்தையேனும் கூற முன்வரவில்லை. இராமாயணம் மட்டும் இவர்கள் கண்களில் உறுத்திக் கொண்டிருக்க காரணம் என்ன என்று கேட்டு இருக்கிறாரே ஒழிய மற்றபடி ஒரு மறுப்பும் சமாதானமும் காணவில்லை. அதற்கு நாம் அவருக்குச் சொல்லும் பதில் மற்ற நூல் களுடையவும், கடவுள்களுடையவும் ஆபா சங்கள் அதனதன் முறையில் தானாக வெளி வரும்.  இதிகாசங்கள் என்கின்ற தலைப்பு இரா மாயணத்திற்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. வரி சைக் கிரமமாய் எல்லா ஆபாசங்களுக்கும் ஏற் பட்டது என்பதும் இராமா யணத்தை முதலில் எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதை பார்ப்பனர்கள் அதிகமாக நமது மக்களின் தலையில் சுமத்தி தினமும் அதற்காக அனேக நேரமும், பொருளும் செலவாவதும் அதனால் பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதும் அதிகமா யிருப்பதினால் அதை முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுந்தான்.

சைவர்களின் மதப்பிரசாரத்தைப் பற்றியும் சிலவார்த்தை சொல்லுவோம்.

நாம் நாட்டுக்கோட்டை நகரத்திற்குப் போய்வந்த பிறகு அங்குள்ள சில நேயர்கள் ஒன்றுகூடி அவர்களுடைய சைவசமயத்திற்கு நம்மால் பெரிய ஆபத்து வந்துவிட்டதாகவும் உடனே அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால் சைவ சமயமே முழுகிப் போகும் என்றும் கருதி பல ஆயிர ரூபாய்கள் ஒதுக்கி வைத்து சிவநேசன் என்பதான ஒரு பத்திரிகை ஆரம்பித் தார்கள். அப்பத்திரி கையை இந்து மதத்தைக் காப்பாற்ற புறப்பட்ட தாகச் சொல்லி மக்களிடையே பரப்பினார்கள். அதன் முதலாவது ஆண்டு பதினாலா வது மலர் அனுபந்தத்தில் கோபிசந்தனம் என்னும் தலைப்பில் ஒரு சைவ சித்தாந்த செல்வர் எழுதுவதாவது:

தேவர்கள் முதலிய யாவரும் விபூதியை தரித்து மோட்சமடைய வேண்டும் என்னும் கருத்தினாலேயே கடவுள் மனிதனின் நெற் றியை குறுக்காகவே படைத்திருப்பதை யாவ ரும் காணலாம்.

இதற்கு ஆதாரம் கூர்ம புராணத்தில் சொல் லியிருப்பதானது ஸ்ருஷ்டா ஸ்ருஷ்டி சலே ராஹர்தி புண்டசஸ்ய ரசஸ்த தாம, ஸஸர் ஜசலலாடம் ஹித்ரியக் கோர்த்துவம், நகர்த் துலம் ததாபி மாவை மூர்க்கா நகுர்வந்தித்ரி புண்டாரகம்.

அதாவது பிரம்மா சிருஷ்டி தொடங்கும் போதே விபூதி மகிமை கூறி அதனை அணிந்து உய்வதற்காகவே சர்வசனங்களின் நெற்றி களையும் குறுக்கே ஆகிர்தியாகப் படைத்தனர். நெடுமையாகவேனும் வட்டமாக வேனும் படைத் திலர், அப்படியிருக்க சிலர் அவ்விபூதி திரிபுண்டா மணியாமல் தீவினை வயப்பட்டு உழலுகிறார்கள் என்று விளங்குதலால் அறிய லாம் என்கிறார்.

இனி கோபி சந்தனத்தைப்பற்றி வாசுதேவ உபநிஷத்தில் வாசுதேவன் மகன் அதாவது கிருஷ்ணன் கூறுவதாவது.

கிருஷ்ணன் கோபிகா ஸ்தீரிகளை தழுவிக் கலந்தபோது அப்பெண்களின் ஸ்தனங்களி லிருந்தும் கிருஷ்ணன் மேனியில் ஒட்டியபின் அவர்கள் கழுவுவதால் வழிந்தோடிய சந்த னமே கோபி சந்தனமென்று கூறப்படுகிறது. அப்பெயராலேயே அவ்வுண்மை விளங்கும் என எழுதியிருக்கிறார்.

எனவே சைவர்கள் பூசும் விபூதி யாக குண்டத்தில் இருந்து வந்ததென்றும், வைண வர்கள் பூசும் கோபிசந்தனம் என்னும் நாமம் கிருஷ்ணன் கோபிகளைப் புணர்ந்த பிற்பாடு கழுவிய தண்ணீரென்றும் கருத்தை வைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இது உண்மையோ பொய்யோ என்று நாம் விசாரிக்க நாம் நேரம் செலவழிக்கவில்லை. ஏனெனில் அவர் சொல் வது இன்ன இன்ன சாஸ்திரத்தில் இருக்கின்றது என்பதாக அவரே எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆதலால் அதைப்பற்றி அதிகமாய் சந்தேகிக்க வும் வேண்டியதில்லை. ஆனால் ஒன்று நமக் குத் தெரிய வேண்டும். அதாவது:- கிருஷ்ண னும் கோபிகளும் கலந்தபின் கழுவினது தான் வைணவர் நெற்றியில் வைக்கும் கோபி நாமம் என்று இந்து மத ஆதாரங்களில் இருந்து சைவர்கள் எடுத்துக் காட்டுவது, சைவர்களுக்கு இந்துமத தூஷணையும், வைணவ சமய தூஷ ணையும் அல்லவென்று தோன்றும்போதும் ஆண்குறியும், பெண்குறியும் சேர்ந்தபோது அறுந்து விழுந்ததின் தத்துவம் தான் லிங்கமும், ஆவுடையாரும் என்றும், அதைத்தான் சைவர் கள் கடவுளாக வணங்குகிறார்கள் என்றும், வைணவர்கள் சொல்லி இந்து மத ஆதாரங் களில் இருந்தே மேற்கோள்கள் எடுத்துக்காட்டு வது இந்து மத தூஷணையும், சைவசமய தூஷ ணையும் அல்லவென்று வைணவர்களுக்குத் தோன்றும்போது நாம் இவ்விரண்டையும் திரட்டி எடுத்துக் காட்டும்போது மாத்திரம் நம் மையேன் இவர்கள் இந்துமத தூஷணை, சமய தூஷணை நாஸ்திகம் என்று சொல்லுகின் றார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை.

தவிர மதப்பித்துக் கொண்ட பெயர்களைப் பற்றியோ வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பிரச்சாரம் செய்யக் கிளம்பும் மனிதாபிமானி களைப் பற்றியோ நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை.

ஆனால், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும் பண்டிதர்களென்றும் வித்துவான்கள் என்றும் பெயர் வைத்துக் கொண்டு சமய வேஷமும் போட்டுக் கொண்டு சமய வரலாற்றுக்கும் சமய நூல்களுக்கும் தங்களையே நிபுணர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை மாத்திரம் ஒன்று கேட்கிறோம். நாம் எழுதுவதும் பேசுவ தும் நம்முடைய கற்பனையா? அல்லது இந்து மத ஆதாரங்கள் என்பவை களில் உள்ளவை களா? உள்ளவைகளானால் அதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட் கிறோம். தக்க சமாதானம் சொல்ல முன்வராமல் சூழ்ச்சிப் பிரச்சாரமும் பேடிப் பிரசாரமும் செய் யாதீர்கள். நபரைக் குறித்து ஆத்திரப்படாதீர்கள்.

உங்களைப் போல் பல கற்றறிந்த மூடர்கள் சேர்ந்துதான் பார்ப்பனர்களுக்கு உதவி செய்து நாட்டைப் பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி, மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தி அறி வற்ற மிருகங்களாக்கி விட்டார்கள். இதுவரை செய்ததே போதும். இனியாவது உங்கள் ஆராய்ச்சி என்பதையும், சமய நிபுணத்துவம் என்பதையும், புதிது புதிதாகக் கண்டுபிடித்தல் என்பதையும் மக்களின் மனிதத் தன்மைக்கும், தன்னம்பிக்கைக்கும், சுயரிமரியாதைக்கும். அறிவு வளர்ச்சிக்கும் பயன்படும்படி செய்யுங் கள். முடியாவிட்டால் சப்தத்திற்கும், எழுத்துக் கும், வார்த்தைக்கும் இலக்கணம் சொல்லும் வேலையில் உங்கள் வாழ்வை நடத்திக் கொள் ளுங்கள். சமயம் என்கிற வேலையில் புகுந்து மக்களைப் பாழ்படுத்தாதீர்கள். முட்டாள்கள் ஆக்காதீர்கள் என்றுதான் சொல்லுகிறோம்.

-  'குடிஅரசு' -  கட்டுரை - 15.04.1928


திருவாளர்கள் கா. சுப்பண்ண ஆச்சாரியார் அவர்களும், ந. நல்லய்ய ஆச்சாரியார் அவர்களும் ஈரோட்டிலிருந்து விஸ்வ நேசன் என்பதாக ஒரு புதிய வாராந்திர பத்திரிகை நடத்துவதாக ஏற்பாடு செய்து வருவதாகத் தெரிகின்றது. அது சீக்கிரத்தில் வெளியாகலாமென்றும் நினைக்கின்றோம்.

அப்பத்திரிகையானது ஏனைய சில சமுகப் பத்திரிகைகள் போலவும் அரசியல் புரட்டுப் பத்திரிகைகள் போலவும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் போலவும் அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கின்றது என்பது போல் ஒவ்வொரு விஷயத்திலும் பார்ப்பனர்களையும் அவர்களது சமய பழக்க வழக்கங்களையும் பின்பற்றிக் கொண்டு கண்மூடித்தனமாய் நடப்பதாக இல்லாமல் சுதந்திரத்துடன் தனது சொந்த அறிவுக்கு மரியாதை கொடுத்து தற்காலம் நமது மக்களுக்கு வேண்டியதான வழிகளில் செல்லும் என்பதாக உறுதிகொண்டு அதை வரவேற்கின்றோம்.

அன்றியும் அதன் அதன் பத்திராதி பராக இருக்கப் போகும் திரு. கா. சுப்பண்ண ஆச்சாரியார்வர்கள் ஒத்துழையாமை காலத்தில் ஈரோட்டில் சர்க்காரின் அக்கிரம உத்திரவை மீறி சிறை சென்றவர். இப்போதும் தொழிலாளர் விஷயமாகவும் ஈரோட்டில் சர்க்காரால் போடப்பட்ட அநியாய உத்தரவை மீறினதாக கைது செய்யப்பட்டு, திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலியவர்களுடன் விசாரணையிலிருப்பவர்.

எனவே இப்பேர்ப்பட்ட அவரது ஆதிக்கத்தில் அப்பத்திரிகை நடைபெறும் வரையில் அது பெரிதும் சுயமரியாதைக் கொள்கைகளையே ஆதாரமாய்க் கொண்டு நடைபெறும் என்பதும் நமது உறுதி. ஆதலால் இத்தகைய பத்திரிகையைப் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டுகின்றோம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

*  வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான் முடிந்த மொழி என்பதாக முடிவு செய்ய முடியுமா?

* தொழிலாளர் சங்கப் போராட்டமென்றால் முதலாளிகளை ஒழித்து முதலாளி தொழிலாளி என்ற பேதமில்லாமல் செய்வது என்றால் சரி, நியாயம். அதை விட்டுவிட்டுக் கூலி உயர்வைக் கருதியே ஒரு சங்கம் இருக்கிறது என்றால் அதற்குப் போராட்டம் எதற்கு? வேலை நிறுத்தம் எதற்கு? நாசவேலை எதற்கு?

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்
12.08.1928- குடிஅரசிலிருந்து...

பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அநேக இடங்களில், அநேக சங்கங்களும் முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம் முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சி யால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண் களுக்கு உண்மையான விடு தலையை அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளைப் பலப் படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத் தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றதோ அதுபோலவும், சமுகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமுகக் கொடுமைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும், மதத்தினாலும் நிலைபெற்று பலப்பட்டு வருகின் றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.

அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாகுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளரு வதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டு கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டா குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளி களுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள் ளைக்காரர்களால் இந்தியர்களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல் லாதாரர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலுங்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் ஆண்மை நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்க பட்டாலல்லாது பெண்மை விடுதலை யில்லையென்பது உறுதி. ஆண்மையால்தான் பெண்கள் அடிமையாக் கப்பட்டி ருக்கின்றார்கள்.

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டது, ஏன்? ஆண்மைக்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

எனவே பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளா ளேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும், இதை உண்மை என்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்கு  பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும், நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படி கடவுளாலேயே மக்களுக்கு பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசி யமோ அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடு தலை பெற்று உண்மை சுதந்திரம் பெற வேண்டுமானால் ஆண்மையும் பெண் அடிமையும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.

பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும்  பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்ற வில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் வரவின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப் பதின் அறிகுறி களாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியெனில் பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமானால், பெண் களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப் பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜூப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின் றார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய்விடுகின்றது.

எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்து விட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படா விட்டாலும் நாம் இதைச் சொல்வது பெரிதும் முட்டாள் தனமோ என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கிற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதி உடையதாய் இருக்கின்றது சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லலாம் உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வரு  கின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோத மாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால் உலகம் விர்த்தியா காது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள் உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண் களுக்கு என்ன நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்தத் தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாய் விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு  ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.


சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி சென்ற இடங்களிலெல்லாம் கலவரம் ஏற்பட்டதாகவும் சில விடங்களில் கூட்டத்தில் செருப்புகள் வந்து விழுந்ததாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. மந்திரிகளின் விஜயத்திலும் பார்ப்பனர்களின் கூலிகள் சிலருக்கு அடி விழுந்ததாகவும்  காணப்படுகின்றன. இம்மாதிரி யான காரியங்கள் மிகுதியும் வெறுக்கத் தக்கதென்றும் நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.

இதற்கு முன்னும் சிறீமான்கள் சீனிவாசய்யங்கார் முதலியோருடைய படங்களைக் கிழித்து மிதித்து எறிந்ததற்கும், சில கூட்டங்களில் செருப்புகள் பறந்ததற்கும் நாம் மிகுதியும் வருத்தப்பட்டு கண்டித்து எழுதியிருந்தோம். மறுபடியும் அம்மாதிரியான காரியங்கள் நடைபெற்றதாகத் தெரிவதற்கு நாம் மிகுதியும் வருத்தமடைகின்றோம். தமிழ்நாடு பத்திரிகையில் இச்சம்பவங்கள் சுயமரியாதைச் சங்கத்தைச் சேர்ந்ததாக பிறர் நினைக்கும்படி காணப்படுகின்ற தானாலும் நாம் அதை சிறிதும் நம்புவதில்லை. ஏனெனில் அது காட்டிக் கொடுத்து கூலி பெறுவதிலோ, அபாண்டத்தை சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதிலோ பார்ப்பனர்களை விட ஒருபடி முன்னிற்பது. ஆதலால் அதை நாம் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு சமயம் அப்படி ஏதாவது உண்மையில் நடந்திருக்குமானால் அது யாரால் நடந்திருந்தாலும் அதற்காக நாம் மிகுதியும் வெட்கப்பட வேண்டியவர் களாவோம். ஏனெனில், இத்தொழில், பார்ப்பனக் கூலிகளுக்கு உரியது. சுயமரியாதை உடையவர்களானால் இம் மாதிரி காரியங்களை மிகவும் வெறுக்க வேண்டும். பேசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கூட்டத்திற்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் பேசியதற்குச் சமாதானம் மறுநாள் கூட்டம் போட்டுச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் கூட்டத்தைக் கலைப்பது யோக்கியமானதாகாது. கூட்டத்தில் செருப்பெடுத்து எறிவது மிகுதியும், அயோக்கியத் தனமான செய்கையாகும்.

சென்னையில் ஒரு கடற்கரை கூட்டத்தில் பார்ப்பனர்கள் முதல் முதலாக ஒரு செருப்பை எடுத்து எறிந்துவிட்டு பிறகு அவர்கள் வெளியில் கூட்டம் போடுவதற்கே தகுதியற்றவர் களானதும், அவர்கள் போடும் கூட்டங்களில் பல தடவை செருப்புகள் வந்து விழுந்ததும், தேசிய வீரர்கள் ஓடி ஒளிந்ததும், தெருக்களில் ஒவ்வொருவரும் விரட்டப்பட்டதும் நாம் அறிந்த விஷயமாகும். அப்படியிருக்க மற்றவர்களும் அந்த மாதிரி செய்ய முற்படுவது அறிவீனமான காரியமென்றே சொல்லுவோம்.

சிறீ சத்தியமூர்த்தி சாஸ்திரி தனது சமுக நன்மையைக் கருதி அவர்கள் தொண்டாற்றி வருகின்றார். கூடுமானவரை அவரை ஒரு சமுகத் தொண்டர் என்றே சொல்ல வேண்டும். அதன் மூலம் ஏதாவது சுயநலம் கிடைத்தால் அதை அனுபவிக்கிறார். எந்தச் சமயத்திலும தனது பார்ப்பன சமூகத்தைக் காட்டிக் கொடுத்து ஒரு வார்த்தையாவது பேசினவரல்ல. அம் மாதிரி சமுகத் தொண்டர்களை நாம் போற்ற வேண்டும். அவருடைய தனிப்பட்ட சொந்த விஷயங்கள் பல இருக்கலாம். அவற்றை, அவர் நமக்குத் தலைவராகவோ, உபதேசிப்பவராகவோ வரும்போது நாம் பேசிக் கொள்ளலாம். கூட்டத்தில் அவரை மறித்தது சரியல்லவென்றே சொல்லுவோம். இம் மாதிரிக் காரியம் நமது கூட்டங்களிலும் செய்ய அவர்களாலும் முடியக் கூடியதுதானேயல் லாமல் ஒருவருக்கே சொந்தமல்ல என்றே சொல்லுவோம்.

யாவருக்கும் பேச்சு சுதந்திரம் கொடுக்க வேண்டும். திருச்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் காரியம் பார்ப்பனர்களுக்குள்ளாகவே சிறீமான்கள் சாஸ்திரி, டாக்டர் ராஜன் கூட்டத்தாருக்கும், சிறீமான் சேதுரத்தன மய்யர் கூட்டத்தாருக்குமே நடந்ததாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து சேதி வந்தாலும் இது யாருக்குமே கூடாது என்று சொல்லுகின்றோம்.

ஜஸ்டிஸ் கட்சியும் சிறீவரதராஜுலுவும்
29.04.1928 - குடிஅரசிலிருந்து...

சிறீ வரதராஜுலு ஏப்ரல் 27ஆம் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:- ஜஸ்டிஸ் கட்சியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்...  ஜஸ்டிஸ் கட்சியின் ராஜிய நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரத ராஜுலு 12 வருஷங்களாகப் பாடுபட்டு வருகிறார்.
நாயக்கர் பிரச்சாரம் இப்போது போலவே நடை பெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.
தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது...

கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?

பிராமணர்களை தேசியக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது...

என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார்.

இவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப் பார்கள் என்பது சிறீவரதராஜுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்ப னர்களை ஏமாற்றுவதற்காகவும் தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்துவிட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும் பேதமையானது இதையெல்லாம் எழுதச் செய்கின்றது. ஒரு ஒற்றை மனிதனின் வயிற்றுப் பிழைப்பு என்னவெல்லாம் செய்யத் துணிவு கொடுக் கின்றது என்பதை எடுத்துக் காட்டவே இவைகளை நாம் எழுதுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியாரால் தமிழ் மக்களுக்கு என்ன நோவு வந்திருக்கின்றது என்பதை முதலில் காட்டி, பிறகு அக்கட்சியில் வந்த நோவுக்கு அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பாரானால் அது ஆண்மையும் யோக்கியமும் பொருந்தின காரியமா யிருக்கும். ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இல்லாதிருக்குமானால் தமிழ் மக்களின் யோக்கியதை இது சமயம் என்னமாயிருக்கும் என்பதை யோசித்தால் ஒரு அறிவிலிக்கு ஜஸ்டிஸ் கட்சியால் தமிழ் மக்களுக்கு நோய் உண்டாயிற்றா அல்லது சிறீ வரதராஜுலு போன்றார் பார்ப்பன வால்களாயிருந்து கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்கு உள்உளவாயிருப்பதால் தமிழ் மக்களுக்கு சுயமரி யாதை இல்லாததான நோய் உண்டாகிக் கொண்டு வந்திருந்ததா என்பது விளங்காமல் போகாது.

12 வருஷகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின் நயவஞ்சகத்தை உடைத்தெறிய சிறீ நாயுடு வேலை செய்தது என்பது வாஸ்தவமே. ஆனால் அது நாட்டின் நலத்திற் காகவா தனது சுயநலத்துக்காகவா என்பதை அறிய பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால் இவர் ஜஸ்டிஸ் கட்சியை வைது அதற்காகப் பார்ப்பனரிடம் கூலி வாங்கிக் கொண்டதல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் மீது ஒட்டிய ஒரு சிறு தூசியை யாவது அசைக்க முடிந்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும் அக்கட்சி ஒன்று இல்லாதிருந்தால் சிறீ வரதராஜுலுவை பூதக் கண்ணாடி கொண்டாவது காணமுடியுமா என்று கேட்கின்றோம்.

நாயக்கர் பிரச்சாரம் இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். போன தேர்தலில் சிறீ வரதராஜு லுவும் அவர்கள் தலைவர்களும் சேர்ந்தே ஒரு கை பார்த்தார்கள். தமிழ் நாட்டில் இந்த ஒன்றரை வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு தூரம் இருந்த இடம் தெரியாமல் செய்துவிட இவர்களால் முடிந்தது என்பதையும் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். சிறீ வரதராஜுலு போன்றவர்கள் இருந்த இடம் தெரிய காங்கிரசில் சிலர் இராஜினாமா கொடுத்து விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு விண்ணப்பம் போட நேர்ந்ததும் அதை அவர்கள் தள்ளும் படி செய்ததும் பொது ஜனங் களுக்குத் தெரியுமா தெரியாதா என்று கேட்கின்றோம். தவிர நாயக்கர் பிரச்சாரத்தைக் கண்டு பயந்து ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுவது எவ்வளவு இழி தன்மை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தேசிய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி முட்டுக்கட்டையாயிருக்கின்றது என்று சொல்வது தேசியம் என்றால் என்ன? அதற்காக யார் எந்த விதமான பிரச்சாரம் செய்கிறார்கள்? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றி குடிஅரசு சுமார் ஒரு நூறு, இருநூறு தடவை சிறீவரதராஜுலு போன்ற வயிற்றுப் பிழைப்பு தேசிய வீரர்களைக் கேட்டிருக்கும். ஆனால் நாளிது வரை சிறீவரதரா ஜுலுவாவது மற்றும் எந்தப் பார்ப்பனராவது தேசியத்திற்கு வியாக்யானம் சொன்னவர்கள் அல்ல. அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி தேசியத்திற்கு முட்டுக் கட்டை என்பது ஏமாற்றுப் பிரச்சாரமா அல்லவா? என்று கேட்கின்றோம்.
ஒரு சட்ட மெம்பர் பதவிக்கு தேசத்துரோகம் செய்தது என்பது  இதைப் பற்றி இதே மாதிரி பார்ப் பனர்களும் சிறீவரதராஜுலுவும் இதற்கு முன்னால் போட்ட கூப்பாட்டிற்கு நீண்ட பதில் எழுதியிருக் கிறோம். அதற்குச் சமாதானம் சொல்லாமல் மறு படியும் அதை எழுதுவது பொது ஜனங்கள் பைத்தியக்காரர்கள் என்கின்ற எண்ணமே ஒழிய வேறு என்ன என்று கேட்கின்றோம்.

சிறீகிருஷ்ணன் நாயர் சட்ட மெம்பர் பதவி ஒப்புக்கொண்டதில் தேசத் துரோகம் என்ன என்றும் திரு. சர் சிவசாமி, சர்.சி.பி., சர் கிருஷ்ணசாமி, சர். ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீ வெங்கட்டராம சாஸ்திரி ஆகியவர்கள் ஒப்புக் கொண்டதில் உள்ள தேசபக்தி என்ன என்றும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அப்படிக்கில்லாமல் தேசத்துரோகம் என்று எழுதுவது வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் இனத்துரோக மேயல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

பிராமணர்களை விலக்க முடியாது என்பது சிறீ வரதராஜுலுவைப் பார்ப் பனர்கள் சேர்க்கா விட்டாலும் சிறீ வரதராஜுலுவின் ஆயுள் வரை வரதராஜுலு பார்ப்பனர்களை விட முடியாது என்பது பார்ப்பனர்கள் உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் அதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம்.

எனவே சிறீ வரதராஜுலுவின் இவ்வாக்கியங் களிலிருந்து அவர் எவ்வளவு தூரம் தனது சமுகத் தாரின் கேடுக்குத் தயாராயிருக்கிறார் என்பது முதலியவை களை விளக்கவே இதை எழுதுகிறோ மேயல்லாமல் மற்றபடி இவரது இம்மாதிரி பிரச் சாரத்தில் ஏதாவது விளைந்துவிடுமோ என்கின்ற பயத்தினால் நாம் இதற்கு சமாதானம் எழுதவர வில்லை என்பதையும் தெரிவிக்கின்றோம்.

துருக்கியில் மாறுதல்

08.04.1928 - குடிஅரசிலிருந்து... -    

துருக்கி ராஜாங்கத்தில் அரசாங்க விஷ யத்தில் மதசம்பந்தமே இருக்கக் கூடாது என்று பலமான மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பதாக பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இதை நாம் மனமார வரவேற்பதுடன் இது உலக விடு தலைக்கு ஒரு பெரிய அறிகுறியென்றே சொல் லுவோம். துருக்கி ராஜாங்கம் மதத்திற் காகவே இருப்பதாக சொல்லப்படுவது. கிலாபத்து இயக்கமும் அதற்காகவே ஏற்பட்டது. அப்படிப் பட்ட அரசாங்கம் மத சம்பந்தத்தை நீக்க - மனித தர்மத்தை ஆதாரமாக வைத்து - அரசாட்சி புரிய ஏற்பட்டால் இன்றைய தினமே நாம் துருக்கிப் பிரஜையாக இருக்க பதிவு செய்து கொள்ளத் தயாராகயிருக்கிறோம்.

Banner
Banner