வரலாற்று சுவடுகள்

மரகதவல்லி மணம்

7.7.1929 - குடிஅரசிலிருந்து....

திரு.முருகப்பர் அவர்கள் நாட்டின் நிலையையும் தேவையையும் நன்கறிந்தவர். அவருடைய எழுத்தும் பேச்சுமே அவருடைய தெளிவைக் காட்ட போதுமான தாகும். சென்ற பத்து பதினைந்து வருஷங்களாக இவர் சீர்திருத்தத் துறையில் உழைத்து வருபவர்.

சீர்திருத்த முறையைச் சொல்லில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டிவிட்டார். நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் திரு.முருகப்பர் - திரு. பிச்சப்பா சுப்பிர மணியம் முதலிய வர்கள் மிகுதியும் உழைத்து வந்திருக்கின்றார்கள். இப்போது அந்த சமுகம் எல்லாத் துறையிலும் முற் போக்கடைந்து நாட்டுக்கு வழிகாட்டியாய் இருப்பதற்குப் பெரிதும் இவர்கள் போன்றவர்களே பொறுப்பாளி களாவார்கள்.

பொது வாகவே நாட்டில் சீர்திருத்தத்திற்கு அதிக ஆதரவு ஏற்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நிலைமை அனுகூலப் பட்டுக் கொண்டு வருகிறது. சாதாரணமாக சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் எவ்வளவோ பெரிய மனமாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது.

சென்ற இரண்டு மாதத்திற்கு முன் நடந்த திரு.அருணகிரி திரு.சுந்தரி திருமணமும் மன மாறுதலுக்கு உதாரணமாகும்.
திரு.மரகதவல்லி அம்மாளும் மிகவும் பாராட்டற் குரியவராவார். அவர்களைப் பட்டுக் கோட்டையில் சந்தித்த போது அவ்வம்மையார் தமது அபிப் பிராயத்தை சிலரிடம் தெரிவித்தார்கள். நாம் அதை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்துக் கொள் ளும்படி சொல்லி விட்டோம்.

அதில் அவர்களுக்கு அனுகூலம் கிடைக்காத தால் தாமாகவே முயற்சி எடுத்துக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நம்நாட்டு விதவைத் தன்மையின் கொடுமையினை நன்றாய் அனுப வித்தவர் களானதாலும், குடி அரசு முதலிய பத்திரிகைகளை பார்த்து வந்ததனாலும், அவர்கள் தைரியமாய் முன்வர நேர்ந்தது.

மற்றபடி உலகத்தில் எத்தனை பெண்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பதை நினைத்தால் மனம் பதறும். திரு.காந்தி அவர் களைச் சில விதவைகள் ஒன்று கூடி தங்கள் கஷ்டத்திற்கு வழி என்ன என்று கேட்டபோது, அவர்கள் உங்கள் இஷ்டத்தை உங்கள் தாய் தகப்பன்மாரிடம் சொல்லிப் பார்த்து அவர்கள் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வில்லையானால் தைரியமாய் வெளிக்கிளம்பி உங்களுக்கு ஏற்ற மணாளனை நீங்களே தெரிந்தெடுத்துக் கொள் ளுங்கள். என்று சொன்னார்.

அந்த உபதேசத்தை முறைப்படி திரு.மரகத வல்லியே முதன் முதலாய் நிறைவேற்றி இருக்கின்றார். அதாவது, திரு.மரகதவல்லிக்கு இது இரண்டாவது மணமாகும். முதல் மணக் கணவன் காலமாய்விட்டார். மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இன்று தமது இச்சையை நிறை வேற்றிக் கொண்டார்.

இதுதான் இயற்கைத் தத்துவம். எப்படி எனில், ஒரு புருஷன் தன் மனைவி இறந்து விட்டாலோ அல்லது அது தனக்குச் சரிப்படாவிட்டாலோ உடனே மறுமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். மனைவி காயலா வாய் இருக்கும் போதே பிழைக்காது என்று தெரிந்தால் வேறு பெண்ணை மனதிலேயே தேடு கின்றான்.

மனைவி இறந்து போனவுடன் மறு கல்யாணத் திலேயே கவலையாய் இருக்கின்றான். பந்துக்களிடம் சென்று அணைந்து போன விளக்கை மறுபடியும் ஏற்றிவைக்க வேண்டியது உங்கள் கடமை, என்று சொல்லி பெண் கேட்கின்றான். வருஷத் திற்குள் மறு கல்யாணம் செய்து கொள்ளுகின்றான். அப்படியிருக்க, பெண்கள் மாத்திரம் ஏன் அந்தமாதிரி செய்து கொள்ளக் கூடாது?

ஆகவே, திரு.மரகதவல்லி மற்ற பெண்களுக்கு ஒரு வழி காட்டியாகத் துணிந்து மணம் செய்து கொண்டதற்கு நான் மிகவும் போற்றுகின்றேன். மணமக்கள் இருவரும் நல்ல கல்வியும் அறிவும் உள்ளதக்க ஜதையானதால் இன்று இவ்வைபவத்தைக் கண்டு ஆனந்திக்க முடிந்தது.

அன் றியும் இம்மண வைபவம் ஆடம்பரமின்றியும் வீண் சடங்குகளின்றியும் வெகு சிக்கனமாகவும் சுருக்கமாகவும் முடிவு பெற்றது மிகவும் போற்றத்தக்கதாகும். இம்மண மக்கள் இனியும் இவ்வித காரியங்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஒத்த இன்பத்துடன் வாழ்ந்து உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றேன்.

திருமணம்

7.7.1929 - குடிஅரசிலிருந்து....

இப்போது நம் நாட்டில் நடைபெற்றுவரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாகக் கொண்டதுமாய் நடை பெறுகின்றன.

மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப் பந்தத்தைக் காப்பாற்றுதற்குப் பலர் முன் உறுதிப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மணமுறையானது  தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டுவிட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சி யாலும் ஏற்படவேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய்விட்டது.

அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும் மாறிவிட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டியதற்குப் பதிலாக வேறு ஒருவர் தெரிந்தெடுத்து மணமக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டியதாயிருக்கின்றது..

அநேக மணங்களில் மணம் நிகழும்வரை, அதாவது தாலியைப் பெண் கழுத்தில் கட்டும் வரை ஆண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று பெண்ணுக்கும், பெண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று ஆணுக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. சில மணங்களில் தாலி கட்டி சில நாள் வரை கூட தெரிவதற்கில்லாமல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் முன்னைக் கூட்டியே தெரிய வேண்டாமா என்று யாராவது கேட்டால், அன்று பிரமன் போட்ட முடிச்சை இனி அவிழ்த்து வேறு முடிச்சு போடவா போகிறான் என்று சமாதானம் சொல்லி விடுகின்றார்கள்.

எங்கள் பக்கங்களில் கல்யாணப் பெண்கள் இரண்டு கைகளைக் கொண்டும் கண்களை நன்றாய்ப் பொத்திக் கொண்டும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் இருக்க, மற்றொரு பெண் கையைப் பிடித்து தரதரவென்று மணவறைக்கு இழுத்துக் கொண்டு வருவது வழக்கம். தாலி கட்டுவதற்குக் கூட கைகளைப் பிடித்து விலக்கித்தான் கட்ட வேண்டும். யார் தாலி கட்டினதென்று பெண்ணுக்குத் தெரியவே தெரியாது. இப்படி அழுது கொண்டும்.

கண்களை மூடிக் கொண்டும் இருக்கும் பெண்கள்தான் நல்ல உத்தமப் பெண்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்குக் கல்யாணம் என்பது தன்னை மற்றொரு வீட்டிற்கு அடிமையாய் விற்பது என்பது அர்த்தமாயிருக் கின்றதேயொழிய ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்குச் செய்யும் காரியம் என்பது இன்னமும் அநேக பெற்றோர்களுக்குத் தெரியவே தெரியாது.

கல்யாணச் சடங்கு நடந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது, பெண் வீட்டாரும், நெருங்கின சுற்றத்தாரும் அழுது கொண்டும், பெண்ணும் தேம்பித் தேம்பி அழுது கொண்டுந்தான் அனுப்பப்படுகின்றது. கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று சொல்லி, புருஷன் சொன்னபடியும், மாமி, மாமன், நாத்தி, கொழுந்தன் சொன்ன படியும் நட என்று பெண்களுக்குப் படிப்பிக்கப்படுகின்றன.

இம்மாதிரி உபதேசத்தில் கட்டுப் பட்ட பெண்கள் தங்களை மாமியின் வேலைக்காரிகள் என்று எண்ணிக் கொள்ளுவார்களே தவிர இயற்கை இன்பத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

வாழ்க்கை, மணம், இன்பம், காதல் என்பவைகள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். அன்றியும் அவை அவரவரின் தனி இஷ்டத்தைப் பொறுத்தது மாகும். இவற்றில் அன்னியருக்குச் சற்றும் இடமில்லை.

ஆனால் இப்போது இவை மற்றவர்களுடைய திருப்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி நடக்கின்றது. மணமக்களுக்குத் தங்கள் தங்கள் காதலின் மேல் ஏற்படும் மணம்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்க முடியும். ஆதலால் இன்று நடந்த மணமானது உண்மையான சீர்திருத்த மணமாகும்.


வைதிகர்களின் இறக்கம்

11.08.1929- குடிஅரசிலிருந்து....

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.

அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாக புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது.

நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேக மில்லை.

நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோ ருக்கும் தெரியும்.

சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக் கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:

1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரி களின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்துவதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.

3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே
ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.

4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள்  பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாண மாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத் துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.

குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.

தமிழ் மேகசின், இராஜவர்த்தினி போதினி, ஜன விநோதினி, தினவர்த்தமானி, ஞானபானு, சித்தாந்த சங்கிரகம், சுதேச அபிமானி, சுதேசமித்திரன், மஹாராணி, கலா தரங்கிணி, விவேக சிந்தாமணி, லோகோபகாரி, தேஜோபிமானி, யதார்த்தவசனி, ஜனாநுகூலன், தேசோ பகாரி... இவையெல்லாம் தமிழ்நாட்டில் வெளிவந்த இதழ்களின் பெயர்கள். பெயர்களே இப்படி என்றால் அந்த இதழ்களின் பயன் எப்படி இருந்திருக்கும். தமிழும், தமிழரும் மேன்மையுற, வளர்ச்சி பெற மேற்கண்ட ஏடுகள் ஏதாவது பயன்பாட்டை ஏற்படுத்தி இருக்குமா? மான உணர்ச்சி மேலோங்க, அறிவு வளர்ச்சி பீறிட்டெழ, மனிதனை மனிதனாக நடைபோடச் செய்ய, அற்றம் காக்கும் அறிவை விரிவு செய்ய, மானுட சமத்துவம் எங்கும் எதிலும் வெளிப்பட ஏடு தேவை என ஏங்கிய நேரத்தில் ... வழிகாட்ட வல்ல நற்கருத்து மிளிராதா என எதிர்பார்த்த வேளையில் நீடுதுயில் நீக்கிட பாடிவந்த நிலாவாய் பரிணமித்ததுதான் “குடி அரசு” எனும் போர்வாள்!

“தாய்த்திருநாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறுதொண்டினை ஒரு சிறு பத்திரிக்கை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென” குடி அரசு தோற்றத்தை 2.5.1925 முதல் இதழில் குறிப்பிடுகிறார் பெரியார்.

“தமிழ் மக்கள் எல்லாத்துறைகளிலும் முன்னேற்ற மடைய உழைக்கும் பத்திரிக்கை” என்று முதல் இதழின் அட்டையிலேயே பெரிய எழுத்துக்களில் பதிவு செய்தார் “குடி அரசு” பற்றி அய்யா!

“குடி அரசு” மட்டுமல்ல; ஆங்கில ஏடான ரிவோல்ட், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, ஆங்கில இதழாக தி மாடர்ன்ரேசனலிஸ்ட் என தந்தை பெரியாரால் தொடங்கி நடத்தப்பட்ட ஏடுகள் ஏற்றத்தை, எழுச்சியை, புரட்சியை பூக்கச் செய்தவைகளாகும். அவற்றில் “குடி அரசு” கொண்ட நோக்கம் பெரிது; ஏற்படுத்திய தாக்கமும் பெரிது! தமிழின விடுதலைக்கு “குடி அரசு” கொண்ட போர்க்கோலத்தை மீளாய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குடி அரசை தந்தை பெரியார் தொடங்கியபோது, அதன் நோக்கமாக இப்படித்தான் கூறுகிறார்:

“ஏனைய பத்திரிகைகள் பல இருந்தும், அவைகள் தங்களது மனச்சாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்ராயங்களைவெளியிடஅஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே நோக்கம்“ என்றும்,
“இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம், தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையே யுணர்த்துவதற்கேயாம்“ என்றும் 2.5.1925 குடி அரசு இதழில் சுட்டுகிறார்.

ஏடுகள் பல இருந்தும் உண்மையான கருத்துக்களை வெளியிட அஞ்சுகின்றன. குடி அரசோ உள்ளவற்றை உள்ளபடி துணிவோடு வெளிப்படுத்தும் என்பதோடு மக்கள் உள்ளத்தில் நாட்டு பற்றை, மொழிப்பற்றை, சண்டையற்ற, சமயப்பற்றை ஏற்படுத்துவதும் என்று இணை ஆசிரியர் வா.மு.தங்கப்பெருமாள் (பிள்ளை) எழுதுகிறார்.
பொருளியல் கோட்பாடுகளை தந்திட்ட பொரு ளாதார மேதைகளைப் போல பொருளியல் அறிஞராக நின்று அய்யா அவர்கள் குடிஅரசு மூலம் தனிமனிதன், குடும்பம், சமூகம் எனும் படிநிலை வளர்ச்சி சமுதாயம் எல்லாத்துறைகளிலும் மேன்மை அடையாமல் போனால் நாடு வளர்ச்சி அடையாது. சமுதாயத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சியாகும் என்கிறார் தந்தை பெரியார்.

“சமூகவியல், ஒழுக்கவியல், பொருளியல், கல்வியியல் போன்ற எல்லாத்துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வது அறிவு வளர்ச்சிக்காக என்று கூறுவோம். அதிகப் பொருள் செலவிட்டு கட்டிய கட்டிடம் அஸ்திவாரம் பலத்தோடு இல்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதே போல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனிமனிதன், குடும் பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புகள் ஆகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத்துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒரு நாளும் முன்னேற்றமடையாது.
ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத்துறைகளிலும் மேன்மையுற்று விளங்க வேண் டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும், தனது அறிவையும் ஆற்றலையும் பெருக்கிகொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக்குடும்பமும் நந்நிலை அடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன் னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர் பார்த்து நிற்காவண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவே விடுத்து - வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று.
அடடா..! எத்தனை உயர்ந்த சிந்தனையை - நோக் கத்தை குடிஅரசு கொண்டியங்கியது என்பதையும், ஒரு தேசம் சுதந்திரம் பெற்று குடியரசாக திகழ்ந்திட எதை இலக்கணமாக கொண்டியங்க வேண்டும் என்பதையும் தத்துவப் பேராசான் தந்தை பெரியார் வரையறை செய்துள்ளார் பாருங்கள்.

இதழ் தொடங்குவது இன்றைய நாளில் பணம் இருப்போருக்கு சாதாரணம். அப்படியே தொடங்கி வெற்றி பெற்றவர்கள் சிலரே. பலர் அந்த முயற்சியில் தோற்றே போயிருக்கிறார்கள். தேர்ந்த கொள்கையோடும், மக்கள் நல மேம்பாட்டுச்சிந்தனையோடும் ஏடு தொடங்குவதோ, மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்துவதோ பெரியாருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று. குடி அரசை தொடங்குவதற்கு முன்பு எப்படியெல்லாம் சிந்தித்து இருக்கிறார், யார் யாரிடத்தில் எல்லாம் ஆலோசித்திருக்கிறார்... அவர்களில் “தொடங்குங்கள்” என்று சொன்னவர்கள், உற்சாகம் ஊட்டியவர்கள் சிலர், “தேவையில்லை” என்று மறுதலித்து தொடக்கத்திலேயே பெரியாரின் ஆர்வத்தை ஊனப்படுத்தியவர்களும் உண்டு. சுவாரசியமான முயற்சியின் தொடக்கத்தைப் பற்றி பெரியாரே எழுதுகிறார் சுவையாக.. படியுங்கள்!

“நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கிக் “குடிஅரசு” என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் சிறீமான் தங்க பெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில், சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்.
அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட் களுக்குள் “குடிஅரசு” என்று ஒரு வாரப்பத்திரிகையும் “கொங்குநாடு” என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப் போவதாய் 19.1.1923 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

இவ்விஷயத்தை முதலில் சிறீமான் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையை கேட்டவுடன் சந்தோஷப்பட்டு “இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான். அதற்கு நீ தகுதியானவன். நீ ஆரம்பித்தால் தமிழ்நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால் அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்துவிடுவார்கள் ஆனாலும் நடந்தவரை லாபம், நடத்துங்கள்” என்றார்.

பிறகு சிறீமான் வரதராஜீலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் “சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்பு வதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டடால் அது வரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும்படியும்“ சொன்னார்.

பிறகு சிறீமான் சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர், “இந்தச்சமயம் இப் படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதை விட்டுவிட்டு நீ பத்திரிக்கை நடத்தப்போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. ஆனதால் கண்டிப்பாய் போகக்கூடாது” என்று சொல்லிவிட்டார். அதன்பேரில் அந்த எண்ணத்தை ஒத்திவைத்துவிட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன். தற்செயலாய் வைக்கம் சக்தியாக்கிரகம் ஏற்பட்டது. சிறீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும் வைக்கத்திலிருந்து, “என்னைப் பிடிக்கப் போகிறார்கள். நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன். வேறு யாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள்” என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்து விட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போது இதே எண்ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்த வேண்டும் என்கிற ஆவல் அதிக மாயிற்று. அது போலவே வெளியில் வந்ததும் பத் திரிக்கை ஆரம்பிக்கத் தீர்மானித்துவிட்டேன்”
(குடிஅரசு - 1.5.1927)குடிஅரசின் கொள்கைகள்


கொள்கையற்ற - எவ்வித லட்சியமுமற்ற ஏடுகள் குப்பைகளாய் மலிந்து விட்ட நாட்டில் தந்தை பெரியாரோ உயரிய நோக்கத்தோடும், உன்னதமான லட்சியத்தோடும் “குடி அரசு” ஏட்டினை தொடங்கி, அதற்கென சில பல கொள்கைகளை வரையறை செய்து நடத்தினார் என்பது எத்தனை பெரிய செயல். குடி அரசின் கொள்கைகள் தான் எவை எவை... இதோ அய்யா பெரியார் அருமையாக விளக்குகிறார்...

“மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோத ரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்.
மக்கள் அனைவரும் அன்பின்மயமாதல் வேண்டும்
உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்து மனிதரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்.
சமய சண்டைகள் ஒழிய வேண்டும்“.
(குடி அரசு - 2.5.1925)

“இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர், இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு - வெறுப்புகள் இன்றி.. நண்பரே ஆயினும் ஆகுக. அவர்தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்“.
(குடி அரசு - 29.4.1928)

குடிஅரசு சந்தித்த சவால்கள்...

குடி அரசு தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலை யில் இரண்டாம் ஆண்டு தொடக்க இதழில் அய்யா குடி அரசுக்கான ஆதரவும், எதிர்ப்பும், சவால்களும் எப்படியெல்லாம் இருந்தன என்பதை தலையங்கமாகத் தீட்டியுள்ளார். தேசிய பத்திரிகைகள் என்பவை பத்திரி கைக்கான தர்மத்தையும் மீறி செயல்பட்டுள்ளன என்ப தையும், மிரட்டல் கடிதங்கள், எச்சரிக்கை, கடிதங்கள் தமக்கு வந்ததையும் அதையெல்லாம் தாண்டித்தான் குடி அரசு கோலோச்சியது என்பதையும் கீழ்க்கண்டவற்றை படிப்போர் புரிந்து கொள்ளலாம்.

“குடி அரசினால் தேசிய வாழ்வுக்காரரின் பிழைப்புக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும், புராண பிழைப்புக்காரருக்கு ஆபத்து நேரிட்டிருப்பதும் அவர்கள் நம்முடன் வந்து விவரமில்லாமல் அடிக்கடி முட்டிக்கொள்வதாலேயே நாம் நன்றாய் உணருகின்றோம். ஆனாலும் அக்கூட்டத்தையும் அவர்களது கூச்சலையும் ஒரு கடுகளவும் லட்சியம் செய்யாமல் நாம் முனைந்து நிற்பதால் அவர்களால் நேரிடும் இடையூறுகள் யாவும் தூள் தூளாய் சின்னாபின்னப்பட்டு காற்றில் பறப்பதும், வாசகர்கள் நித்தமும் உணர்ந்ததேயாதலால் அதை பற்றி நாம் அதிகம் எழுத வரவில்லை.

உதாரணமாக மோட்டார் வண்டிகள் தெருக்களில் வேகமாகச் செல்லும்போது தெருப்பொறுக்கும் நாய்கள் அவ்வண்டியின் நிலையறியாது அதை வழிமறித்து தடுத்து கடித்தெறிந்து விடலாம் என்கின்ற ஆவலுடன் குரைத்துக்கொண்டு சிறிது தூரம் வண்டியைத் தொடர்ந்து வடிகாலும் வாயும் வலித்த உடன் எப்படி முணுமுணுத்துக் கொண்டு திரும்பிப் போய்விடுகின்றனவோ அதுபோல், “குடி அரசின்” வேகத்தினிடம் அநேகப் பத்திரிகைகளும் தனி நபர்களும் வெகு ஆத்திரமாக அதைத் தடுத்து நிறுத்தி விடுவது போல் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்துவிட்டு அடங்கிப்போனவைகளும், சில மறைமுகமாய் விஷமம் செய்து கொண்டிருப்பதும், சில மானம் வெட்கமில்லாமல் நின்ற நிலையில் இருந்தே குரைத்துக் கொண்டு இருப்பதுமான நிலையை தினமும் உணருகின்றவர்களுக்கு குடி அரசின் வேகத்தைப் பற்றியோ, தத்துவத்தைப் பற்றியோ அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதைப்பற்றியோ அறிவிக்க வேண்டியதில்லை!”
(குடி அரசு - 29.4.1928)

குடி அரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய், உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்து விடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது.
“குடி அரசு” தோன்றிய பிறகு அது ராஜ்ய உலகத்திலும் சமூக உலகத்திலும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்று பலர் எழுதியிருப்பதை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளுகிறோம்“ என்றும் எழுதி இருக்கிறோம்.
(குடி அரசு - 1.5.1927)

“நமது நாட்டின் உண்மை விடுதலைக்கு விரோதியாயிருப்பது பார்ப்பனியமே என்பதையும், அதன் ஆதிக்கம் வலுத்திருப்பதற்குக் காரணம் நமது மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு வளர்ச்சிக்கு இடமும் இன்மையே என்பதையும், அதற்கு முக்கிய காரணம் மூடநம்பிக்கையே என்பதையும் உணர்ந்து சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி அறிவை வளரச்செய்து மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பார்ப்பனியத்தை அடியோடு அழித்து மக்கனை அடிமைத் தனத்திலிருந்து மீட்க வேண்டும் என்கின்ற ஒரே ஆசையின் மீதே இக் “குடி அரசு” பத்திரிக்கையை ஆரம்பித்த நாம் அதற்கேற்ப இத்தமிழ்நாடு முழுவதும் இடைவிடாமல் சுற்றிச்சுற்றி அலைந்து திரிந்து சொற்பொழிவாற்றிக் கொண்டு மிருப்பவராவோம்“.

“நமது பத்திரிகை விளம்பரத்தைக்கூட எவ்வளவு பணம் கொடுத்தாலும் விளம்பரப்படுத்த சுதேசிமித்திரன், நவசக்தி போன்றவைகள் மறுத்துவிட்டன. பத்திரிகை வெளிப்படுத்தும் விஷயத்தில் தபால் ரயில் இலாகாவிலிலுங்கூட சகிக்க முடியாத தொல்லைகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று? எங்கு சென்றாலும் ஆங்காங்குள்ள ஸ்தல அதிகாரிகளின் தொல்லையும் வெகு தொல்லையாயிருந்தது”

“நமது எழுத்துக்களையும் சொற்களையும் நமது எதிரிகள் பாமரமக்களுக்குத் திரித்து எழுதியும் கூறியும் வந்த தொல்லைகள் எல்லாவற்றையும் விட அதிகமாக இருந்தன.

மலேயா முதலிய வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பி அங்கும் விஷமப்பிரச்சாரம் செய்தும், சில சந்தாதாரர்களிடம் “குடி அரசு” வரவழைப்பதை நிறுத்திவிட்டால் “தமிழ்நாடு” வை இலவசமாய் அனுப்புகின்றோம் என்று சொல்லியும் குடி அரசை நிந்தித்துத் தாங்களே கடிதம் எழுதி அதில் பாமர சந்தாதாரர்கள் கையெழுத்து வாங்கி நமக்கனுப்புவதும், குடி அரசுக்கு விளம்பரம் கொடுத்திருப்பவர்களிடமெல்லாம் சென்று “குடி அரசு”க்கு விளம்பரம் கொடுக்கக்கூடாது என்று சகல செல்வாக்கையும் செலுத்தி பலவந்தம் செய்தும் கடைசியாக குடி அரசு விளம்பரத்தை நிறுத்திக் கொண்டால் “தமிழ்நாடு”வில் இலவசமாய் விளம்பரம் போடுவதாகச் சொல்லி குடி அரசுக்கு வந்த விளம்பரங்களை நிறுத்தியும் மற்றும் ஒவ்வொரு சமூகத்தாரையும் நமக்கு விரோதமாய்க் கிளப்பிவிடக் கருதி நாம் சொல்லாதவைகளையும், எழுதாதவைகளையும் எழுதியும் தங்கள் நிருபர்களைவிட்டு உட்கலகம் செய்யும்படி செய்தும், உதாரணமாக விருதுநகர் நாடார் சமூகத்தை நமக்கு விரோதமாக கிளப்பிவிட சூழ்ச்சி செய்ததும் ஆகிய எத்தனையோ இழித்தன்மையான எதிர்ப்புகள் எல்லாம் இருந்தும் இன்று குடி அரசும் அதன் கொள்கையும் வெற்றியில் இருப்பதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? அப்படி யோசித்தால் என்ன பதில் கிடைக்கும், ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும்.

அதாவது குடி அரசோ அதன் ஆசிரியரோ ஆரம்ப காலம் முதல் மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்லும் கொள்கைகளில் சமயத்துக்குத் தகுந்தபடி சுயநலத்தையே கருதி, அடிக்கடி குட்டிக் கரணம் போடாமலிருந்ததும், வேறுயாருடைய தயவையும் கையையும் எதிர்பாராமல் தன் காலிலேயே நின்று, தன்னுடைய சொந்த செலவிலேயே இயக்கத்தை நடத்தினதுமே முக்கிய காரணமாகும் என்பதே!”

“தினப்படி வரும் தபால்களில் நூற்றுக்கணக்காய் வெறுக்கத் தக்கவண்ணம் புகழ்ந்தெழுதுபவை ஒரு புறமிருந்தாலும், வைதும் மிரட்டியும் எழுதப்பட்டுவரும் மொட்டைக் கடிதங்களுக்கும் குறைவில்லை”.
(குடி அரசு - 5.5.1929)

குடி அரசின் கண்டனங்கள்

“பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், “குடி அரசி”னாலும் நான் செய்துவந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித்தேன். அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன், மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச்சடங்கு என்பதைக் கண்டித்திருக்கிறேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். கோயில் என்பதைக் கண்டித்திருக்கிறேன்.  சாமி என்பதைக் கண்டித்திருக்கிறேன். வேதம் என்று சொல்வதைக் கண்டித்திருக்கிறேன். சாஸ்திரம் என்பதைக் கண்டித்திருக்கிறேன்.  புராணம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். ஜாதி என்பதைக் கண்டித்திருக்கிறேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். ஜனப்பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். பிரதிநிதிகள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கிறேன். கல்வி என்பதை கண்டித்திருக்கிறேன். சுயராஜ்யம் என்பதைக் கண்டித்திருக்கிறேன். சிறீமான்கள் கல்யாண சுந்தர முதலியார், வரதராஜீலுநாயுடு, சி.ராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்துவந்த நண்பர்களைக் கண்டித்திருக்கிறேன்.

சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்! நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல்லையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியுண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேசபக்தராவது உதவியுண்டா?
இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பது போல் இருக்கிறது என்பதாக நினைத்து விலகிவிடலாமா என்று யோசிப்பதுமுண்டு. ஆனால் விலகுவதில் தான் என்ன லாபம்? ஏறக்குறைய, நமது ஆயுள்காலமும் தீர்ந்து விட்டது. இனி நாலோ, அய்ந்தோ அல்லது அதிகமாயிருந்தால் பத்துவயது காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக்கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்பதாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை”.
(குடி அரசு - 1.5.1927)

குடி அரசின் வெற்றி


எதிர்ப்புகளை, ஏளனங்களை, சவால்களை, கண்டு சளைக்காது பயணித்த குடி அரசு மறுபக்கம் மக்களின் ஆதரவை பெற்று மானமும் அறிவும் உள்ள மக்களாக மாற்றும் பாதையில் வெற்றி உலா வந்தது. குடி அரசு மக்களால் தேடித்தேடி படிக்கப்பெற்றது. பெரும் சமுதாய மாற்றத்துக்கு தயார்படுத்தியது மக்களை!

குடி அரசு பிரவேசித்த துறைகளில்... பார்ப்பனர், அரசியல், மதம், கடவுள், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம் முதலிய சிறு சமயங்கள், காந்தியம், பண்டைய ஒழுக்கங்கள், முறைகள், மூடப்பழக்க வழக்கங்கள், செல்வ நிலமை - முதலாளி - தொழிலாளி முறை, ஆண் - பெண் தன்மை முதலியவற்றில் மக்களுக்குள் ஒரு பெரிய மன மாறுதலை
உண்டாக்கியது.

மானுட சமத்துவமே குடி அரசின் குறிக்கோள். அதனை நோக்கி மக்களை அணியமாக்கியது குடி அரசு.

5.5.1929 குடி அரசு தலையங்கத்தில் தந்தை பெரியார் மகிழ்ந்து எழுதுகிறார். குடி அரசின் கொள்கை வெற்றிக்கு நன்றி பாராட்டுகிறார். இதோ...

“நமது இயக்கம் ஒரு வித நன்னிலை அடைந்து மேற்செல்லுவதையும், இவைகள் நமக்குப் பேரூக்கத்தை விளைவித்து வருவதையும், ஆயிரக்கணக்கான வாலிபர்கள் நம்மைத் தாங்கி நிற்பதையும், நாம் மனமார உணருகின்றோம். முடிவாக நமது கொள்கைகளிலாவது, நமது எழுத்துகளிலாவது, சொற்களிலாவது, நமக்குச் சிறிதளவும் சந்தேகமோ, மயக்கமோ, இல்லாத அளவு தெளிவாயிருக்கின்றோம்.... சிறிதும் தன்னலமின்றி, தங்களது முழுநேரத்தையும், தங்களது உடல் - பொருள் - ஆவி ஆகியவைகளையெல்லாம் இவ்வியக்கத்திற்கே உவந்தளிக்கக் காத்திருக்கும் எமது அருமை வாலிப இளஞ்சிங்கங்களுக்கும், அவசியமான போது எவ்வித உதவியும் புரியத் தயாராயிருக்கும் செல்வமும், செல்வாக்கும், உண்மை ஆசையும் கொண்ட செல்வ நண்பர்களுக்கும் எமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொண்டு நான்காவது ஆண்டைக் கடந்து அய்ந்தாவது ஆண்டிற்குச் செல்கின்றோம்!”

குடி அரசு பரப்பிய பெரியாரியலை வெல்லச் செய்வோம்!

மணமுறையும் புரோகிதமும்

24.11.1929, குடிஅரசிலிருந்து....

ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விரு பாலர்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமுகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது, மனித சமுகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும்; மனித சமுகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்துவிட்டமையாலும் பொது சனங்கள் அறிய இவ்விருபாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று, இன்றேல், பெண்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பது திண்ணம்.

மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொதுவாதலால், குழந்தைகளைப் பொறுத்தவ ரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று. எனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடன், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமுகங்களால் கையாளப்பட்டு வருகின்றன.

ஆதித்தமிழர்கள் தங்கள் மணவினைகளை காதல் வயப்பட்டு நடத்தினார்கள். ஆண் பெண் இணக்கம் ஏற்பட்ட பின்னரேயே தாய் தந்தையர்கட்கும், ஊர்த் தலைவர்கட்கும் தெரியப்படுத்தி விழாச் செய்வது வழக்கமாய் இருந்தது. இவ்வொப்புயர்வற்ற அறிவுடைய மணமுறையைப் பற்றி நாம் நமது சங்க நூல்களில் பார்க்கக் காண்பதுடனின்றி இன்றைக்கும் பர்மா தேசத்திலும், இந்தியாவுடன் ஒரு காலத்தில் ஒன்றுபட்டிருந்த சுமத்ரா, ஜாவா, வாலி, முதலிய தீவுகளிலும் காணக்கூடும். ஆதலின் மணமுறைக்குப் புரோகிதருக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை.

எல்லா நிகழ்ச்சிகளிலும் புரோகிதத்தைப் புகுத்திய பிறந்தது முதல் இறக்கும் வரையில் பார்ப்பனரல்லாத குடும்பங்களில் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்கள் காசைப் பறிக்க சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள் மணவினையினையும் தமது மகசூலில் சேர்க்காமலாயிருப்பர் எனவும் தமிழர் மணவினையிலும் பார்ப்பனப் புரோகிதர் புகுந்து கொண்டனர். இது சொற்ப காலமாக அனுசரிக்கப்படும் ஒரு வழக்கமாகும்.

ஆனால் பார்ப்பனப் புரோகிதனோ வேறு எந்தப் புரோகிதனோ இல்லாமல் மணவினை நிகழ்த்தக் கூடுமா? அவ்வாறு நிகழ்த்தினால் அத்தகைய மணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கக் கூடுமா? என்பது கேள்வி.

இத்தகைய கேள்விக்கே நாம் வருந்துகின்றோம். இத் தகைய கேள்வி ஏற்படும் ஒரு நிலைமைக்கு நாம் மிகவும் துக்கிக்கின்றோம்.

பார்ப்பனர் அர்த்தமற்ற தனக்கே விளங்காத சிலவார்த்தைகளை மந்திரம் என்னும் பெயரால் உச்சரித்து, மணமக்கள் முகத்தை சுட்டுப் பொசுக்கி, கண் களிலிருந்து நீர்வடியச் செய்து அம்மியை மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதுமான மூடச் சடங்குகள் சிலவற்றைப் புரிவித்து, ஒவ்வொரு சடங்கிற்கும் சுவர்ண புஷ்பம் பெற்று மூட்டை கட்டிக்கொண்டு போனாற்றான் விவாகம் முடிந் ததாக அர்த்தம் என்று மதியுள்ளவர்கள் கூறுவார்களா?

இடைக்காலத்தில் சில காலம் மாறுதற்கேற்ப ஒரு குருட்டு வழக்கம் பீடித்ததனால் இவ்வழக்கத்தை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்பது ஒரு அறிவுடைய நிர்ப்பந்தமா? இந்த நிர்ப்பந்தத்தை நாம் ஏன் அங்கீகரிக்க வேண்டும். அரசாங்கச் சட்ட மூலமாக பார்ப்பனரை வைத்துத்தான் விவாகம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வரையறையை வற்புறுத்துவதால் மூடச் சடங்காகிய புரோகிதத்தை அரசாங்கமே ஆதரவு செய்வதாகும். பெரும் பான்மையான தமிழ்மக்கள் பார்ப்பனர்களையே வைத்து விவாகம் செய்து கொள்ளுவது இல்லை.

சில காலமாய் நடைபெறும் சீர்திருத்த விவாகங்களிலும் பார்ப்பனர்களும் பார்ப்பனியமும் நீக்கப் பெற்றுள்ளது. மேலும் தமிழர்களில் பிரம்மசமாஜம் போன்ற இயக்கங் களைத் தழுவி நிற்பவர்களும் புரோகித முறையை அநுட்டிப்பவர்களன்று. எந்த விதத்தாலும் புரோகிதம் என்ற ஒரு விலாசம் இருக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே விவாக முறையில் புரோகிதர்கள் குறுக்கிடுவதை தமிழ் மக்கள் சுயமரியாதை யுடன் நீக்குவார்களாயின் இம்முறையில் நிகழ்ந்த மணங்களை இவ்வரசாங்கமும் சரி, எவ்வரசாங்க மாயினும் சரி அங்கீகாரம் செய்துதான் ஆகவேண்டும்.

இதை ஒழித்து மலாய் நாட்டில் பார்ப்பனரின்றி செய்த ஒரு மணத்தை மணமாக அங்கீகரிக்க மறுத்த செயலை நாம் வன்மையாக கண்டிப்பதுடனின்றி திரு.எஸ்.வீராசாமி அவர்கள் மேற்கூறிய முறையில். தமிழரின் மனப்பான் மையை எடுத்துக் காட்டி, தமிழர் மணங்கட்கு புரோகிதன் அவசியமில்லை என்று குறிப்பிட்டதையும், நாம் பாராட்டு கின்றோம். திரு.எஸ்.வீராசாமி அவர்களைப் போன்றே நமது கூற்றை ஆதரித்து புரோகிதத்தைக் கடிந்து வெளியிட்டுள்ள திரு.எஸ்.சுப்பையா நாயுடுவின் செயலையும், நாம் மும்முறையும் போற்றுகின்றோம்.

இந்நிலையில் மலாய் நாட்டுக்குச் சென்று தமிழருடைய உதவியால் வயிறு வளர்க்கும் ஒரு அய்யங்கார் பத்திரிகை யாகிய தமிழ்நேசன் புரோகிதத்தை ஆதரிப்பதும், சுயமரி யாதைக் கொள்கைக்கு எதிராய் பிரச்சாரம் செய்வதும் வியப்பன்றே.

சுயமரியாதை இயக்கத்தின் பலன்

3.11.1929- குடிஅரசிலிருந்து...

ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனிவரும்படி எதிர்பார்க்க முடியாது என்று காணப்பட்டிருக்கின்றது.

மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாகா வருஷாந்திர ரிப்போர்ட் ஒன்றில் இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கல்யாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரார்களை நியமிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. வைதிகக் குடுக்கைகளுக்கும், புராண அழுக்கு மூட்டைகளுக்கும், வருணாச்சிரம புராணங் களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்து விட்டது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் தீண்டப்படாத வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது.

சென்னைப் பச்சையப்பன் காலேஜில் தீண்டப் படாதவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக் கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருதப் பள்ளிக் கூடத்தில் பார்ப்பன ரல்லாதார்களை சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் சர்க்கார் உத்தரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.

பெண்களுக்கு மூன்றாவது பாரம்வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப்படி அமலிலும் வந்துவிட்டது.

பெண்களுக்குப் போதனை முறைப் பாடசாலைகள் முக்கிய தாலுகாக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.

விதவைகள் ஆசிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. இவ்வள வும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக் கிணறுகளில் தீண்டப்படாதார் உட்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆட்சேபித்தால் 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலுகா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் கூடாது என்றும், பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. விதவைகள் சொத்துரிமைக்கும், பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.

சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரி களாக்கப்பட்டுவருவதை நிறுத்தச் சட்டங்கள் செய்யப்பட்டு விட்டன.

பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்கச் சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல தினத்திற்குத்தினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத் தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.


திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!

24.11.1929- குடிஅரசிலிருந்து...

திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.

தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டி ருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.

ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச் சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கிடாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?

(தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர்வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)

Banner
Banner