வரலாற்று சுவடுகள்

ஆறாவது ஆண்டு

04.05.1930 -குடிஅரசிலிருந்து...

நமது  குடிஅரசு அய்ந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது.

குடி அரசுதான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கையில் இருந்து சிறிதும் பின் வாங்கா மலும் விருப்பு, வெறுப்புக்கு கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமலும் ஏதோ தன்னால்கூடிய தொண்டை மனப் பூர்வமாய் செய்து கொண்டு வந்திருக்கின்றது. அன்றியும், குடிஅரசானது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரை மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும் பெற்று வந்ததுடன் நாளுக்கு நாள் முற்போக்கடைந்தும் வந்திருக்கின்றது.

இவ்வாறாவது ஆண்டும் அந்தப்படி முடியும் என்கின்ற விஷயத்தில் நமக்கு அதிக நம்பிக்கை இல்லை. ஏனெனில், அது இனிச் செய்யக் கருதி இருக்கும் தொண்டானது கொஞ்ச காலத்திற்கு பாமர மக்களிடம் நமக் குள்ள செல்வாக்கையும், பணக் காரர்கள், பண்டிதர்கள், பெரிய அதிகாரிகள், பதவி யாளர்கள் என்பவர்களிடம் நமக்கு உள்ள செல்வாக்கையும் இழக்க நேரிடுவதுடன் குடிஅரசை இதுவரை ஆதரித்து வந்தவர் களாக காணப்பட்டவர்களின் எதிர்ப்பையும் அனுபவிக்க வேண்டிய நிலையை கொண்டு வந்துவிடும் என்றே நினைக்கிறோம்.

அதா வது, நாம் சென்னைக்கு போகும்போது ஒரு தலையங்கத்தில் தெரிவித்ததுபோல குடிஅரசு பார்ப்பனர்களை வைது அவர்கள் செல் வாக்கை ஒழித்து பார்ப்பனர்களிடம் இருக்கும் உத்தியோகங்களைப் பிடுங்கிப் பார்ப்பனரல் லாதார் வசம் ஒப்புவிக்க மாத்திரம் ஏற்பட்ட தல்ல என்றும், பாமர மக்களை ஏய்த்துப் பிழைக்கின்றவர்கள் எல்லோரையும் வெளி யாக்கி மத இயலில் உள்ள மூட நம்பிக்கையை ஒழிக்க முயற்சிப்பது போலவே அரசியல், உத்தியோக இயல்,

பொருளாதார இயல், சமுக இயல், பத்திரிகை இயல், பண்டித இயல், வைத்திய இயல், பணக்கார இயல், பார்ப்பனரல் லாதார் இயக்க இயல் என்பன முதலாகிய வைகளில் உள்ள மூடநம்பிக்கைகளையும், புரட்டுகளையும் வெளியாக்கி, அவை களையும் ஒழிக்க வேண்டிய வேலைகளை மேற்போட்டு கொள்ளும்போது இவ்வளவு இயல்களின் எதிர்ப்பும் நமக்கு மிக்க கஷ்டத்தை கொடுத்துதான் தீரும். சிற்சில சமயங்களில் அவ்வெதிர்ப்புகளைச் சமாளிக்க நமக்கு சக்தி இல்லாமல் போனாலும் போக லாம். அதனால் பத்திரிகை முற்போக்கும் செல் வாக்கும் சற்று, ஏன்? அதிகமாகவும் குறைந் தாலும் குறையலாம்.

ஆனபோதிலும், அவைகள் இந்நாட்டிற்கு அதிலும் பார்ப்பன ஆதிக்கம் குறைந்த இந்தச் சந்தர்ப்பத்திற்கு முக்கியமாய் தேவையான தாய் இருப்பதால் நமது செல் வாக்கையும், பத்திரிகை முன்னேற்றத்தையும் பிரதானமாய் கருதாமல் மக்களின் மூடநம்பிக் கைகளையும், சுயநலக்காரர்களின் புரட்டுகளால் மக்கள் ஏமாறு வதையும் ஒழிப்பதையே பிரதான மாய்க் கருதி அதில் இறங்கித் தீர வேண்டி யவர்களாயிருக் கின்றோம்.

ஏனெனில், நாம் காங்கிரசிலிருந்து தொண் டாற்றிய காலத்தில் நம்முடன்கூட உழைத்து வந்த திருவாளர்கள் வரதராஜுலு, ராஜ கோபாலச்சாரியார், திரு. வி.கல்யாண சுந்தர முதலியார் போன்றவர்களிடம் இருந்து நாம் பிரிந்ததும் அவர்களோடு அபிப்பிராய பேதங் கொண்டு சண்டை போட்டதும் எதற்காக? மற்றும் நாம் தலைவராய் கொண்டு கண்மூடித்தனமாய் பின்பற்றி வந்த திரு.காந்தியாரையும் கண்டித்து வருவது எதற்காக?

சொந்த விரோதத்திற்காகவா? அல்லது சொந்த சுய நலத்திற்காகவா? என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மைக் காரணம் விளங்காமல் போகாது. அவர்களது கொள்கை பிடிக்க வில்லை. அவர்களது தொண்டு நாட் டிற்கு நலந்தருவதல்ல வென்கின்ற காரணங் களையே முக்கிய ஆதாரங்களாய் வைத்து அவர்களோடு போராடி அவர்களிடம் நமக்கு காணப்படும் குறைகளை வெளிப்படுத்தி வந்தோம்.

இன்றும் வருகின்றோம் அதேபோல் இப்போது சுயமரியாதை இயக்கத்தின் பேரா லோ, ஜஸ்டிஸ் கட்சியின் பேராலோ, சீர் திருத் தத்தின் பேராலோ நம்முடன் உழைத்து வந்தவர்களின் அபிப்பிராய பேதத்தையும் அவர்களது கொள்கைகளால் நாட்டின் நலத்திற்கோ, நமது தொண்டிற்கோ விபரீதம் ஏற்படும் என்கின்ற நிலை தோன்றும்போது அவர்களுடன் போராட வேண்டியது நமது கடனாகி விட்டது. ஆகையால் இந்த ஆறா வது ஆண்டு பலருக்கு இன்பத்தை கொடுக் காதானாலும் நமது உண்மை நண்பர்களுக்கு பூரண திருப்தியையே அளிக்கும் என்கின்ற நம்பிக்கையின் மீது இறங்கி விட்டோம்.

சிங்கப்பூர் டவுன் ஹாலில்
மலேயா இந்தியன் அசோசியேசன்
மகாநாட்டில் பேசியது

02.02.1930 -குடிஅரசிலிருந்து
சகோதரர்களே!

இன்று இங்கு நடந்த மகாநாட்டு நடவடிக் கையைப் பார்த்தேன். இது எங்கள் நாட்டில் காங்கிரசின் ஆரம்பகால நடவடிக்கைகளை ஒத்தி ருக்கின்றது. அதாவது இந்தியப் பொதுமக்களுடை யவும், பாமரமக்களுடையவும் நன்மைக்காக வென்றுதான் ஆதியில் காங்கிரசு ஆரம்பிக்கப் பட்டது.

ஆனால் இதை ஆரம்பித்தவர்களில் அர சாங்க உத்தியோகத்தை நம்பி ஆங்கிலம் படித்துவிட்டு உத்தியோகத்திற்கும், தங்கள் சொந்த வயிற்றுப் பிழைப்புக்கும் வகை எதிர்பார்த்த மக்களே முதன்மையா யிருந்தார்கள். அம்மகாநாடு களில் தங்கள் உத்தியோகத்திற்கேற்ற பல தீர்மா னங்கள் செய்துவிட்டு பாமர மக்களை ஏமாற்ற ரோடுகள் போடவேண்டும், வரி குறைக்கவேண்டும், காடு திருத்தவேண்டும் என்பது போன்ற சில காகிதத் தீர்மானத்தையும் செய்வார்கள்.

காரியத்தில் சீர்திருத்தம் என்னும் பேரால் கொழுத்தச் சம்பள முள்ள சில உத்தியோகங்களை அந்தப் படித்தக் கூட்டத்தினர் அனுபவிக் கவும், அதற்காக வரிகள் உயர்த்தவும் நேர்ந்ததைத் தவிர அதற்குத் தகுந்தபடி வரிகளும் உத்தியோகங்களும் அரசாங்க அதிகாரங் களும் மற்றும் தொல்லைகளும் பெருகினதைத் தவிரவும், வேறு யாதொரு பலனும் ஏற்படவில்லை.

சம்பளமும் உத்தியோகமும் பெருகினதின் காரணமாய் கட்சிகளும் உட்பிரிவுகளும் ஏற்பட வேண்டியதாய்விட்டது. ஏனென்றால், தாபனங்களில் முக்கியதர்களாயிருக்கின்றவர்கள் அதனால் ஏற் படும் உத்தியோகங்கள் எல்லாம் தாங்களே சுயமாக அனுபவிக்க ஆசைப்படுவதாலும் மற்றவர் களுக்குப் பங்கு கொடுக்காமல் ஏமாற்றச் சூழ்ச்சி செய்வதாலும் மற்றவர்கள் பிரிந்துபோய் வேறு தாபனங்கள் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் தலைவர்களாவதும் பிறகு அது போலவே அதிலிருந்து பலர் பிரிந்து போவதும், சாத்தியப் படாதவர்கள் ஜாதி மத வகுப்புகளின் பேரால் தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு பாத்தியம் கேட்பதுமாகிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

எங்கள் நாட்டில் உள்ள இவ்வளவு அரசியல், மத இயல், ஜாதி வகுப்பு இயல், சமுக இயல் ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டதான கட்சிகளும், தாபனங்களும் காங்கிரசு ஏற்பட்டதினாலும் அதி லுள்ளவர்களின் சுயநல சூழ்ச்சியாலும் அவர்களைப் பின்பற்றியும் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை.

ஆகையால், இந்த மகாநாடு எங்கள் நாட்டு காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தி யோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக் கும் பொதுமக்களின் நலனுக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப் படுத்தும்படியான மாதிரியில் நடந்துகொள்ள வேண்டும்.

அதற்கு மார்க்கம் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுயமரியாதையையும் உண்டாக்குவதே தவிர, உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டுமென்பதல்ல என்பதே எனதபிப் பிராயம் இந்தியர்களென்பவர்களாகிய நாம் ஒரு மதம், ஒரு ஜாதி, ஒரு வகுப்பு, ஒரு கொள்கை, ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்றுபடுத்திக் கொண்டாலொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது.

ஆதலால் நீங்கள் ஏதாவது எங்கள் காங்கிரசைப் பின்பற்றி, எங்கு இந்த நாட்டையும் இந்தியாவைப் போல பாழாக்கி, ஏழைகளை வதைத்து, இனி இங்கிருக்கும் ஏழைகளுக்கும் தொல்லை விளை வித்து அவர்கள் இங்கிருந்து இனி வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி விடுவீர்களோ என்று பயப்படுகிறேன்.

(மேடையில் இருந்த சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சபாஷ், சபாஷ், உண்மை, உண்மை என்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனரபிள் வீராசாமி அவர்கள் திரு. இராமசாமி யாரின் கையைப் பிடித்து தாங்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதி கூறுகின்றோம் என்பதாகச் சொன்னார்).

11-8-1929, குடிஅரசிலிருந்து...

ஆதி திராவிடர்கள் என்றால் கோயிலருகிலும் வரக் கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப் பட்டபோதிலும் அவர்களை இழிவு படுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவ தில்லை. இந்து வென்று சொல்லப்படும் திரு.முனுசாமி என்னும் ஆதிதிராவிடரும் மனிதர்தான். அவர் ஆலயத்தருகில் வந்தால் ஆலயம் தீட்டுப்பட்டு சாமி செத்துப் போகுமாம். ஆனால், பிறவியில் மிருகமாய்ப் பிறந்ததும் ஜாதியில் நாய் என்று அழைக்கப்படுவதுமான மலம் உண்ணும் கேவலமான ஜந்துவையும் தாராளமாக விட்டுவிடும்போது ஆறறிவுள்ள மனிதனாய்ப் பிறந்து இந்துவென்றும் சொல்லிக் கொள்ளும் ஆதிதிராவிடர் எனப்படும் முனிசாமியை அவர் பிறப்பின் காரணமாக ரஸ்தாவிலும்விட மறுக்கப்படுவது என்ன கொடுமை? இக்கொடுமையைத் தடுத்துக் கேட்டால் அவர்கள் இந்துக்களாய் பிறந்துவிட்டார்கள், அவர்களைக் குறித்து மனுதர்ம சாஸ்திரத்தில் இப்படிச் சொல்லுகிறது. வேதத் தின் கர்ம காண்டத்தில் அப்படிச் சொல்லுகின்றது என்று சாஸ்திரக் குப்பைகளின்மீது பழியைப் போடுவ தோடு, மதத்தையும் தங்கள் கொடுமைகளுக்கு ஆதர வாக்கிக் கொள்ளுகின்றார்கள். இவ்வாறு மதத்தின் பேராலும் சமயநூல்கள், சாஸ்திரங்கள், புராணங்களின் பேராலும் செய்யப்படும் கொடுமை களுக்கு அளவில்லை. மற்றும் பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்; கடவுளால் வேதங் களிலும் சாஸ்திரங் களிலும் எழுதி வைக்கப்பட்டு விட்டது. அதைப்பற்றி அதிகமாகக் கேட்காதீர்கள் என்று கொடுமைகளுக்குச் சாக்குச் சொல்லிக் கொண்டு, ஆயி ரக்கணக்கான வருடங்களாய் மக்களில் சில சார்பாரைப் பெரும் கொடுமைக் குள்ளாக்கப்பட்டும் வருகின்றது.

ஆயிரக்கணக்கான வருடங்களாய் மதத்தின் பெயராலும், சாஸ்திர புராணங்களின் பெயராலும் ஒரு பெரிய சமுகம் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வரு கின்றது. ஆதிதிராவிடர் களாகிய உங்களை விட சற்று உயர்ந்த ஜாதியார் எனப்படும் எங்களையும் கேவலப் படுத்தாமல் விட்டார்களா? அதுவுமில்லை. எங்களை விட உயர்ந்த ஜாதியார் என்பவர்கள் போகுமிடத்திற்கு எங்களை விடக்கூடாதென்ற ஏற்பாடில்லாமல் போக வில்லை. உங்களைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும், குளிக்க வேண்டும் என்பது போலத்தான் எங்களைத் தொட்டாலும் குளிக்க வேண்டுமென்கிறார்கள். அதோடு எங்களைச் சூத்திரர்கள், வேசி மக்கள், பார்ப்பனனுக்கு அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்று இழி பெயர்களு மிட்டழைக்கிறார்கள். இக்கேவலச் செயலுக்குக் கடவு ளால் எழுதி வைக்கப்பட்ட சாஸ்திரம் ஆதாரமென் கிறார்கள். நம் மக்களுள் அநேகர் எவர் எப்படிச் செய்தா லென்ன? நம் ஜீவனத்துக்கு வழியைத் தேடுவோமென்று இழிவையும் சகித்துக் கொண்டு உணர்ச்சியில்லா வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பதனால்தான் ஆயிரக்கணக் கான வருடங்களாய் இக்கொடுமைகள் ஒழிய வழியில்லாதிருந்து வந்திருக்கின்றது.

இதற்கு முன்னால் பல பெரியவர்கள் தோன்றி ஜாதிக் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் ஒழிக்கப் பாடுபட்டபோதிலும் அவர்களும் மதத்தின் பெயராலும் வேறு சூழ்ச்சிகளாலும் அடக்கித் துன்புறுத்தப்பட்டு மிருக் கின்றனர். ஒவ்வொரு வரும் நமக்கென்ன? நம் ஜீவனத் துக்கு வழியைப் பார்போமென்று இழிவுக்கிடங்கொடுத்துக் கொண்டு போகும்வரை சமுகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. ஜாதிக் கொடுமைகள் ஒரு போதும் ஒழிய மார்க்க மேற்படாது என்பது திண்ணம்கேளுங்கள்!

ஜாதிக் கொடுமைகளை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நாட்டும் பொருட்டுத்தான் தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை .இயக்கத்தைக் குறித்து அந்த விரோதிகள் என்ன சொல்லு கின்றார்கள் என்பதைக் குறித்து நமது நண்பர் பால குருசிவம் சிறிது நேரத்திற்குமுன் தெளிவாய் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அவர் இவ்வியக்கத்தில் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருக்கின்றதெனக் கூறியது முக்கிய மாய்க் குறிப்பிடத்தக்கது. சுயமரியாதைக்காரர்கள் கோயில் குளம், சாமி இல்லை என்கிறார்கள்; மதமில்லை என்கின்றார்கள்;  இவர்கள் நாஸ்திகர்கள்; இவர்களால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற கட்டுப்பாடு போய்விடும் போலிருக்கிறது, சுவாமி போய்விடும் போலிருக்கிறது என்று பலவாறு நம் விரோதிகள் அலறிக் கூக்குரலிடு கின்றார்கள். பலர் கிளம்பி கூலிகளுக்கும் காலி களுக்கும் பணம் கொடுத்தும் நமக்கு விரோதமாய் விஷமப் பிரச்சாரம் செய்வதற்காகத் தூண்டிவிட்டு மிருக்கிறார்கள். அவர்கள் சூழ்ச்சிகளையும் கூலிப் பிரச்சார மோசத்தை யுமுணராது அவர்கள் பிதற்றல் களை நம்பி நமது பாமர மக்கள் ஏமாறி அவர்கள் சொல்லுவது போல சிலர் சுயமரியாதை இயக்கம் கடவுள் இல்லை என்னும் இயக்கமெனவும் சொல்லு கிறார்கள். சுயமரியாதை இயக்கம் நாஸ்திகர்கள் இயக்கமென்று சொல்வது அற்பத்தனமான செய்கை என்பதை அறிவுறுத்துகின்றேன். உண்மையில் ஆஸ்தீக நாஸ்தீகம் என்பவைகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. உலகத்தில் அவன் உயர்ந் தவன், இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு ஜாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமுக முன்னேற்றத்திற்கும் விடுதலைக்கும் தடையாயி ருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்கச் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராயிருக் கிறோம், மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால் அது எந்த மதமாய் இருந் தாலும் அதனை ஒழித்துத்தானாகவேண்டும் (கேளுங்கள்) கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார்; சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார்? அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார் என்று கடவுள் மேல் பழிபோட்டுக் கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிர மங்களுக்கு அனுகூலமாயுமிருக்கும் கடவுளைத்தான் ஒழிக்க வேண்டுமென்கிறோம். சும்மா கிடக்கும் கடவு ளையும் மதத்தையும், சாஸ்திரத்தையும் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.

கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கடவுளையும் ஒழிப்பதற்கு பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்த வனாயும் பல கொடுமை களுக்குட்பட்டுக் கேவலமாகத் தானிருந்தாக வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும் மதமும் போகவேண்டியதுதான்.

21-7-1929, குடிஅரசிலிருந்து மதமும் சீர்திருத்தமும்

இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர்முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும் தேக தத்துவ சாஸ்திரத்தின் முறைப்படியும் வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினுடையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும் குற்றங்களை மக்கள் அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும் குழந்தைகள் விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண் பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்த வரை நமது நாட்டு பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும் பொறுப்பற்றவர் களுமாய் இருக்க வேண்டியவர்களாய் விட்டதால் அவர்கள் இவ்விஷயத்தில் மனிதத் தன்மையுடன் நடந்து சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும்படி செய்யாமல் பொறுப் பற்ற தன்மையில் இவ் விஷயங்களில் பொதுஜன அபிப் பிராயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் போல வேடம் போட்டு இதற்காக ஒரு கமிட்டியை நியமித்து அக்கமிட்டியை பொது ஜனங்களை விசாரித்து அறிக்கைச் செய்யும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள். அக்கமிட்டியும் மாதக் கணக்காக பல ஆயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து பொதுஜனங்கள் என்பவர்களை விசாரணைச் செய்து ஏகோபித்து ஒரு முடிவுக்கு வந்து கல்யாணம் செய்ய பெண்களுக்கு 14 வயதாக வேண்டு மென்றும், உடல் சேர்க்கை வைத்துக் கொள்ள கலியாணமான பெண்களுக்கு 15 வயதாக வேண்டுமென்றும், கல்யாணமாகாத பெண்கள் விஷயத்தில் உடல்சேர்க்கைக்கு 18 வயதாக வேண்டு மென்றும் அறிக்கைச் செய்திருக்கின்றார்கள். இவ்வறிக்கையில் உடல் சேர்க்கை விஷயமாய் செய்திருக்கும் வயதுக் கிரமமானது கலியாணமான பெண்ணுக்கு ஒருவிதமாகவும், கலியாணமாகாத பெண்ணுக்கு ஒரு விதமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறிது விவாதத்திற்கிடமான தாயிருந்தாலும், கலியாண வயது 14 என்று குறிப்பிட்டி ருப்பதும் அவ்வளவு போதுமானதாக இல்லாததாய் இருந்தாலும், ஒரு அளவுக்கு நாம் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம்.

முதலாவதாக, கலியாணமான பெண்ணுக்கும் ஆகாத பெண்ணுக்கும் உடல் சேர்க்கை விஷயத்தில் வித்தியாசம் கற்பிக்கப்பட வேண்டிய அவசிய மில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் கமிட்டி முன் சாட்சியம் கொடுத்ததில் அநேகர் தங்கள் சமுகப் பெண்கள் பக்குவமாய் விட்டால் பரிசுத்தமாய் இருக்க முடியாதென்றும், அவர் களுக்குக் கலவி உணர்ச்சி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகின்றதென்றும், அவர் களைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமென்றம், ஏதாவது சிறிதள வாவது பேர் கெட்டுவிட்டால் பிறகு அதன் வாழ்க்கை கஷ்டமாகி விடுமென்றும் சொல்லியிருப்பதால் அவர்களின் குறைகளைத் திருப்தி செய்ய வேண்டி கலியாணமாகாத பெண்களை 18 வயதுக்கு முன் யாராவது கூடினால் கூடின ஆண் களுக்குத் தண்டனை விதிப்பதற்காக இம்மாதிரி விதித்திருக் கின்றதாக நாம் கருதுகின்றோம்.

ஆனால் இம்மாதிரி நடவடிக் கைக்குக் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தண்டனை ஒன்றுமில்லை. தவிரவும், பெண்கள் மீது வேறு எவ்வித அபவாதமும் ஏற்படாம லிருக்கவும் இந்த விதி உபயோகப்படலாமென்று கருதியிருக்கக் கூடுமென்றும் நினைக்கின்றோம். தவிர 14-ல் கலியாணம் செய்து கொண்டு 15 வயது வரையில் அதாவது ஒரு வருடம் வரை காத்திருக்க முடியுமா? என்றும், ஏன் கலியாண வயதையே 15-ஆக தீர்மானித்திருக்கக் கூடாதென்றும் சிலர் கேட்கலாம். ஏகோபித்த அபிப் பிராயமாக இந்த அறிக்கை இருக்க வேண்டு மென்பதை உத்தேசித்து ஒரு கட்சியார் இதில் ஒரு வருடம் விட்டு கொடுத்திருக் கின்றார்கள் என்பதாகக் கருதுகின்றோம்.

அதாவது கலியாண வயதை பிரவிடையாவதற்கு முன்னாக வே கலியாணம் செய்யத்தக்கதாய் இருக்கும்படி செய்ய மெஜாரிட்டிகள் விரும்பியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அம்மாதிரி செய்துவிடும் பட்சத்தில் சேர்க்கை வயது இன்னும் குறைந்தாலுங் குறையும். ஆனால் தங்கள் முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல் ஒரு ஏகோபித்த அறிக்கை அனுப்ப இடங்கிடைத்தால் தனிக்குறிப்பெழுத வேண்டிய அவசியம் வேண்டி யதில்லை என்பதை உத்தேசித்தே மெஜாரிட்டியாரும் இதற்குச் சம்மதித்திருக்கின்றார்கள் போல் காணப்படுகின்றது. அதாவது நமக்கு முக்கியமானது கலியாண வயதேயொழிய சேர்க்கை வயதல்ல. ஏனெனில் 8 வயதிலும் 10 வயதிலும் கலியாணம் செய்து கொள்ள அனுமதித்து விட்டு ஒருவருக் கொருவர் சேரக் கூடாது என்று சட்டம் செய்து ஒருவரை யொருவர் சேராமல் காவல் பார்த்துக் கொண்டிருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பதும், சாத்தியப்படாதது என்பதும், இயற்கைக்கு விரோதமென்பதுமே நமது அபிப்பிராயம். ஆதலால் நமக்குக் கலியாண வயதே பிரதானம் என்கிறோம்.

அதில் கமிட்டியார் 14 வயது என்று தீர்மானித்தது ஒரு சமயம் சிலர் போதாது என்று கருதினாலும் நாம் அதுவே போதுமென்று சொல்லுவோம், ஏனெனில் கலியாண வயது 10 என்றாலும், 13 என்றாலும் ஒன்றே தான் என்பதுபோல், 14 என்றாலும 18 என்றாலும் ஒன்றுதான் என்பது நமத பிப்பிராயம். எனவே இங்குள்ள முக்கிய விஷயமென்ன வென்றால், பெண்கள் பிரவிடையாகும் முன்புதான் கலியாணம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மதத்திற்கு விரோதம், பாவம், நரகம் சம்பவிக்கும் என்கின்ற பூச்சாண்டிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆதலால் இந்தக் கமிட்டி அறிக்கையில் மதச் சம்பந்தமான நிர்ப்பந்தமும் கட்டுப்பாடும் ஒழிக்கப் பட்டிருப்பது பெருத்த அனுகூலமாகும். பக்குவமான பின் கலியாணம் செய்வதாயிருந்தால் பெண் விஷயத்தில் யாரும் அவசரப்பட்டுக் கொண்டு கலியாணம் செய்துவிட மாட்டார்கள். சௌகரியப்படி எதிர்பார்ப் பார்கள் பெண்களும் தாராளமாய் படிக்கவும், உல கத்தைத் தெரிந்து கொள்ளவும் சந்தர்ப்பமேற்படும். பிறகு தகப்பன் சொன்ன புருஷ னைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தமு மிருக்காது. தனக்கும் புருஷனைத் தேர்ந்தெடுக்கத்தக்க யோக் கியதை உண்டாய் விடும். பிறகு நாள் போகப் போக சுயம்வரமும் காதல் மணமும் ஏற்பட இடமேற் பட்டுவிடும். எனவே 14 வயதுக்கு மேற்பட்டுத்தான் கலியாணம் செய்யப்பட வேண்டுமென்று செய்த அறிக்கையைப் பெண்கள் விஷயத்தில் கவலையுள்ளவர் களும், சீர் திருத்தத்தில் கவலையுள்ளவர்களும் வரவேற்பார்கள் என்றே எண்ணு கின்றோம். தவிரவும், இந்த ஒரு விஷயத்தில் மத நிர்ப்பந்தம் நீங்கினால் மற்ற விஷயங்களிலும் மனித சமுகத்தின் இயற்கைக்கும் அறிவிற்கும் விரோதமான காரியங் களிலுமுள்ள மத நிர்ப்பந்தங்கள் விலகவும் சற்று அனுகூல

மாயிருக்குமாதலால் அந்த அளவுக்கு நாம் இதை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றோம்.

06-10-1929 குடிஅரசிலிருந்து....

திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின் பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப் போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையையாவது பின் பற்றுகின்றவர் களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம்.

அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜெயந்தி கொண்டாடுவது எதற்குச் சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை நாஸ்திகர் என்று பழி சுமத்தி அவர் கொள்கையை அடியோடு அழித்து நாட்டில் செல்வாக்கில்லாமல் செய்துவிட்டு புத்தர் மகா விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று புராணங்களை எழுதிவைத்து வணங்கி வந்ததைத் தான் சமானமாகச் சொல்லலாம். இந்தத் தமிழ் நாட்டில் ஒரு பார்ப்பனராவது திரு.காந்தி அபிப் பிராயத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். உதாரணமாக சாரதா மசோதாவுக்கு ஆதரவளித்ததில் பெண்களுக்கு 18 வயதும் ஆண்களுக்கு 24 வயதும் கல்யாண வயதாயிருக்க வேண்டும் என்று சொன்னதை எந்தப் பார்ப்பனர் ஒப்புக் கொண்டார் என்று கேட்கின்றோம். தீண்டாமை ஒழிந் தாலல்லாது நமக்கு சுயராஜ்யம் கிடைக்காதென்றும், தீண்டாமையை அடியோடு அழிக்காவிட்டால் நாம் சுயராஜ்யத்திற்கு அருகரல்லவென்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க முயற்சித்தாரா? முயற்சிக்கிறாரா? முயற்சிக்கப் போகிறாரா? என்று கேட்கின்றோம். கோவில்களில் தீண்டப்படாதாரை விடாவிட்டால் அது மிகவும் அக்கிரமம் என்று சொன்னாரே. அதை எந்தப் பார்ப்பனராவது ஒப்புக் கொண்டு கோயி லுக்குள் விட்டார்களா என்று கேட்கின்றோம். விதவை களுக்கு மறுமணம் செய்யுங்கள் என்றும் மறுமணம் செய்யப்படாத விதவைகள் வீட்டைவிட்டு ஓடிப்போய் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னதை எந்தப் பார்ப்பனராவது கேட்டார்களா என்று கேட்கின்றோம்.

மற்றும் காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம் என்றும், பூரண சுயேச்சை என்பது பையித்தியக்காரத் தனமென்றும் சொன்னதை யாராவது எந்தப் பார்ப்பனராவது மதித்தார்களா? அன்றியும் கோயில்களில் கடவுள்கள் இல்லை என்றும், கோயில்கள் விபசார விடுதிகள் என்றும் சொன்னதை யாராவது மதித்து எந்தக் கோயில்களை யாராவது இடித்தார்களா அல்லது அடைத்தார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் லாகூர் காங்கிரசில் ஒரு காரியமும் ஆகப்போவதில்லை; காங்கிரசியக்கமும் ஒழுங்காயில்லை. ஆதலால் நான் காங்கிரஸ் தலைமை ஒப்புக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதற்கு யாராவது பதில் சொல்லவோ அல்லது காங்கிரசை விட்டு வெளிவரவோ அல்லது காங்கிரசின் கொள்கைகளைத் திருத்தவோ ஒப்புக் கொண்டார்களா என்று கேட்கின்றோம். கடைசியாக திரு.காந்தி இன்னமும் தனக்கு ஒத்துழையாமையில் தான் நம்பிக்கை இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லி வருகின்றாரே! இதை யாவது எந்தப் பார்ப்பனராவது கேட்டு உத்தியோகத்தை விடவோ சட்ட சபையை விடவோ, பட்டத்தை விடவோ, பள்ளியை விடவோ, வக்கீல் வேலையை விடவோ, சம்மதித்தார்களா என்றும் கேட்கின்றோம். திரு.காந்தி சொல்வதில் ஒன்றைக் கூட கேட்காமல் அவரைப் பைத்தியக்கார ரென்றும், முட்டாள் என்றும், மூளை இல்லை என்றும், அரசியலுக்கு லாயக்கில்லை என்றும், அராஜகன் என்றும், சட்டவிரோதி என்றும் மற்றும் அயோக்கியன், மடையன், போக்கிரி (கும்பகோணம் பம்பாய் முதலிய இடங்களில்) என்றும் சொல்லிவிட்டு அதுவும் சென்ற வாரத்தில் சொல்லிவிட்டு இந்த வாரத்தில் அதே பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் சேர்ந்து காந்தி ஜெயந்தி கொண்டாடுவதென்றால், இதைப் போன்ற வஞ்சகமும் சூழ்ச்சியும் வேறு உண்டா என்றுதான் கேட்கின்றோம்.

ஒரு காரியத்திற்காகக் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட் டது என்றால், அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியது தான். அதாவது தென்னிந்தியாவில் வருணாச்சிரமப் பிரச்சாரம் செய்ததற்கும் இந்த ஜென்மத்தில் சூத்திரன் தனது வருண தர்மத்தைச் செய்தால் அடுத்த ஜென்மத்தில் வைசியனாக அடுத்த ஜன்மத்தில் சத்திரியனாக, அடுத்த ஜன்மத்தில் பிராமணராகலாம் என்று சொன்னதற்கும் மற்றும் ராமாயண, பாரத பிரச்சாரம் செய்ததற்கும் கதரின் பேரால் லட்சக்கணக்காக பணம் பிடுங்கி பார்ப்பனாதிக் கத்திற்கு செலவு செய்ய பார்ப்பனர்கட்கு இடம் கொடுத்து விட்டு போனதற்கும் வேண்டுமானால் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தி கொண்டாடலாம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆனால் சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லா தார்கள் அதில் கலந்து கொண்டதற்கு நாம் வெட்கப்படா மலிருக்க முடியவில்லை. இன்றைய தினம் நமது நாட்டில் நடக்கும் அனேக ஜெயந்திகளும் பண்டிகைகளும் திரு. நட்சத்திரங்களும் உற்சவங்களும் பார்ப்பனாதிக்கத்திற்கும் பார்ப்பனரல்லாதார் இழிவுக்கும் அறிகுறியாக நடத்தப் படுகின்றது என்பதைப் பலர் அறிந்தும் அவ்வித பண்டிகை களையும் உற்சவங்களையும் இன்னமும் அறிவும் உணர்ச் சியுமற்ற பார்ப்பனரல்லாதார்கள் செய்து கொண்டுதான் வருகின்றார்கள். அதுபோலவே காந்தி ஜயந்தியும் கொண் டாடப்பட்டது என்றுதான் நாம் வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கின்றது. எனவே இனியாவது பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் இம்மாதிரியான பார்ப்பன சூழ்ச்சியிலும் வஞ்சகத்திலும் விழாமலிருக்க எச்சரிக்கை செய்கின்றோம்.

Banner
Banner