வரலாற்று சுவடுகள்

தமிழனுக்கு கடவுள் உண்டா?

29.6.2016-குடிஅரசிலிருந்து....

நாம் ஒரு தமிழர் என்கின்ற முறையில் கடவுள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோமானால் கடவுள் என்கின்ற பதமே கட + உள்  என்பதான இரண்டு சொற்கள் சேர்ந்த பகுபதமாக இருக்கின்றதே தவிர வடமொழியிலும், ஆங்கில மொழியிலும் இருப்பதுபோன்ற பகவான் (ழுடின) காட், அல்லா என்பது போன்ற தனிவார்த்தையோ அல்லது அந்த விதங்களான வாக்கியமோ தமிழில் இல்லை என்பதை உணரவேண்டும்.

தமிழர்களுக்கு பாஷை தோன்றிய காலத்தில் கடவுள் உணர்ச்சி இருந்து இருக்குமானால் அதற்கு ஒரு தனி வார்த்தை இருந்திருக்கும். அது மாத்திரமில்லாமல் ஆங்கிலம் முதலிய பாஷைகளில் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதை உணர்த்துவதற்கு எப்படி எத்தீசம் - எத்தீட்டு, நாதிகம் - நாதிகன், என்கின்ற வார்த்தைகள் இருக்கின்றனவோ அவைபோலவே தமிழிலும் கடவுள் இல்லை என்று சொல்லுவதை உணர்த்துவதற்கு கடவுள் இல்லை என்று சொல்லுபவனைக் குறிப்பிடுவதற்கும் அப்பொருள்கள் கொண்ட ஏதாவது ஒரு வார்த்தை இருந்திருக்கும்.

ஆகவே, அவைகளிலிருந்தே தமிழர்களுக்கும் (அதாவது தமிழ் நாட்டாருக்கு) கடவுளுக்கும் ஆதியில் எவ்வித சம்பந்தமும் இருந்ததில்லை என்பது ஒருவாறு புலப்படும்.

இறைவன் என்ற பதத்தைக் கடவுளுக்குள்ள தமிழ்ப்பதம் என்று பண்டிதர்கள் சொல்லக்கூடுமானாலும் அது அரசனுக்கும் தலைவனுக்கும் ஏற்பட்டதே தவிர கடவுளுக்காக ஏற்பட்ட தனிப்பொருள் அமைந்த சொல் அல்ல வென்றே சொல்லுவோம். ஆனால் கடவுள் என்பது எப்பொருளுக்கும் தலைவன் என்கின்ற முறையில் வேண்டுமானால் இறைவன் பெரியவன் எனினும் பொருந்தும் என்று அப்புக்கட்டலாமே யொழிய அது அதற்கே ஏற்பட்ட  தனிவார்த்தை ஆகாது.

நிற்க, தமிழ் நாட்டில் பலர் காலஞ்சென்ற பிதுர்க்களையும், செல்வாக்குள்ள பெரியார்களையும் அன்பினாலும், வீரர்களைக் கீர்த்தியாலும், வழிபட நினைத்து அவர்களை உருவகப்படுத்த என்று ஒரு கல் நட்டு அக்கல்லை வணங்கி வந்ததாக மாத்திரம் சொல்லப்படுவதை நான் கேட்டிருக் கிறேன்.

மற்றப்படி, இப்போதைய கடவுள்களான சிவன், விஷ்ணு, பிர்மா, பிள்ளையார், சுப்ரமணியன் முதலிய கடவுள்களையோ, மற்றும் அது சம்பந்தமான குட்டிக் கடவுள்களையோ தமிழ் மக்கள் வணங்கி வந்தார்கள் அல்லது நம்பி இருந்தார்கள் என்றாவது சொல்லுவதற்குக் கூட  இடமில்லை என்று கருதுகிறேன். இதற்கெனக்கு தோன்றும் ஆதாரம் என்னவென்றால் இப்பொழுது உள்ள கருப்பன், காத்தான் முதலிய பேர்கள் கொண்ட நீச்சக் கடவுள்கள் தவிர மற்ற கடவுள்கள் பெயர்கள் எல்லாம் வடமொழியிலேயே இருக்கின்றதென்பதே போதுமான தாகும்.

ஆனால், வடமொழி பெயருள்ள சில கடவுள்களின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்து அந்த கடவுள் களைத் தமிழில் அழைப்பதை பார்க்கின்றோம் என்றாலும் இவை தமிழர்களுக்குள்ளும் ஆதியில் இருந்தது என்பதற்குத் தக்க சமாதானம் சொல்ல யாரும் முன் வருவதை நான் பார்க்கவில்லை.

இது மாத்திரமல்லாமல், சைவம், வைணவம் என்று சொல்லப்படும் சமயங்களாகிய தமிழ் மக்களைப் பிடித்த நோய்களான சைவ, வைணவ மதக் கடவுள்கள் எல்லாம் வடமொழிப் பெயர்களை உடையதாகவும், அவைகளின் ஆதாரங்கள் முழுவதும் வடமொழி வேதசாதிரப் புராண இதிகாசங்களாகவும்தானே இருக்கின்றதே அல்லாமல் தமிழ் ஆதாரத்தால் ஏற்பட்ட தாகச் சொல்லக்கூடிய கடவுள் ஒன்றையுமே நான் கண்டதும், கேட்டதும் இல்லை.

இவைகளுக்குச் செய்யப்படும் பூசை முதலியவை களும், வடமொழி நூல்கள் ஆதாரப்படி வடமொழி பெயர்கள் கொண்ட வதுகளும், செய்கைகளுமாகவே இருப்பதையும் காணலாம். அதாவது அர்ச்சனை, அபிஷே கம், பலி, கற்பூரம், சாம்பிராணி, காணிக்கை முதலியவை களாகும்.

தவிரவும், மேற்கண்ட இரண்டு சமயங்களின் பேரால் சொல்லப்படும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய சமயாச்சாரியார்களும், பக்தர்மார்களும் கும்பிட் டதும், தேவாரம், திருவாசகம், திருத்தாண் டகம், பிரபந்தம் முதலாகியவைகள் பாடினதும் மற்ற மக்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்துவதும் ஆகிய எல்லாம் வடமொழிப் பெயர்கொண்ட கடவுள்களை பற்றியும்,

அவர்களது செய்கைகளைப் பற்றிச் சொல்லப் பட்ட வடமொழி புராண இதிகாசங்களிலுள்ள கதைகளைப் பற்றியுமே இருக்கின்றன வே அல்லாமல் மற்றபடி, அவைகள் தமிழர்களோ அல்லது தமிழ்ப் பண்டிதர்களோ தமிழர்களுக்கு ஆதியில் இருந்தது என்று சொல்லத் தக்கதாக ஒன்றையுமே, ஒருவர் வாக் கையுமே நான் பார்த்ததும் இல்லை. பிறர் சொல்லக் கேட்டதும் இல்லை.

மற்றும், சமயக்குறிகள் என்று சொல்லப்படும் விபூதி, நாமம் முதலிய சின்னங்களின் பெயர்கள்கூட வடமொழியில் உள்ளதே தவிர, தமிழில் உள்ளவையல்ல என்பதே எனது அபிப்பிராயம், வேண்டுமானால் அதைத் தமிழில் விபூதியை திருநீறு என்றும், திருமண் என்றும் சொல்லிக் கொள்ளுகிறோம்.

ஆனாலும், அது சரியான மொழி பெயர்ப்பல்ல வென்று சொல்வதோடு விபூதி, நாமம் என்கின்ற பெயர்கள் எந்தக் கருத்துடன் சொல்லப்படு கின்றனவோ அந்தக் கருத்தும், பொருளும் அவற்றில் இல்லை என்றே சொல்லுவேன்.  விபூதி என்றும், நாமம் என்றும் சொல்லப்படும் வஸ்துகள் சாம்பலும், மண்ணுமாய் இருப்பதால் அந்தப் பெயரையே அதாவது, சாம்பலுக்குள்ள மறுபெயராகிய நீறு என்றும், மண்ணை மண் என்றும் திரு என்பதை முன்னால் வைத்து திருநீறு, திருநாமம் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய வேறில்லை என்றே தோன்றுகின்றது.

ஆகவே தமிழில் காட், அல்லா, பகவான் என்ப வைகளைக் குறிப் பதற்கு ஒரே வார்த்தையாக ஒன்றுமே இல்லை என்பதும், அதன் சின்னங்களையும் குறிப்பிடுவ தற்குத் தமிழில் வார்த்தைகள் இல்லை என்பதும், அனுபவத் திலுள்ள கடவுள்களும் பெயர்களும் அவற்றின் நட வடிக்கைகளும் கூட தமிழில் இல்லை என்பதும், மற்றபடி இப்போது இருப் பவைகள் எல்லாம் வடமொழியிலிருந்து தமிழர்கள் எடுத்துக்கொண்டு தங்களுடையனவாக்கிக் கொண்ட மயக்கமே என்றும் எனக்குப்பட்டதை உங்களுக்குச் சொன்னேன்.

எல்லா மதக் கடவுளும்...

29.6.1930 - குடிஅரசிலிருந்து....

உலக சிருஷ்டிக்கு கடவுளைப் பொறுப்பாக்கி அதனோடு கடவுளைப் பொருத்துகிறபோது எல்லாக் கடவுள்களின் யோக்கியதைகளும் ஒரே மாதிரியாகத்தானிருக்கின்றன.

உதாரணமாக, இந்துமதத்தில் உலக சிருஷ்டிக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் சொல்லுகிறபோது கடவுள் முதலில் தண்ணீரை உண்டாக்கி, அதன்மீது இருந்துகொண்டு அதில் ஒரு விதையைப் போட்டு, அந்த வித்திலிருந்து உலகத்தை உண்டாக்கி, அவ்வுலகத்திலிருந்து பிர்மாவைச் சிருஷ்டித்து,

அந்தப் பிர்மா அந்த  உலகத்தை இரண்டாக்கி ஒன்றை சுவர்க்கமாகவும், மற்றொன்றை பூலோகமாகவும் செய்து, அந்த பூலோகத்தில் பஞ்சபூதங்களையுண்டாக்கி பிறகு மனிதர், மிருகம், பட்சி முதலிய ஜாதிகளைச் சிருஷ்டித்து என்று ஆரம்பித்து மற்றும் இவைபோல அடுக் கடுக்காக எப்படி சொல்லிக்கொண்டே போகின்றதோ, அதுபோலவேதான் கிறிஸ்து முதலிய இதர மதங்களிலும், கடவுள் முதலில் ஒன்றை சிருஷ்டித்தார், இரண்டாவது நாள் மற்றொன்றை சிருஷ்டித்தார், மூன்றாவது நாள் வேறொன்றைச் சிருஷ்டித்தார் என்பது போலவே சொல்லிக் கொண்டு போகப்படுகின்றன.

ஆகவே, அஸ்திவாரத்தில் கடவுள் சிருஷ்டியைப் பற்றி சொல்லுகிற விஷயம் எல்லா மதத்திலும் ஒன்றுபோலவே தானிருக்கின்றன. இவை ஏன் இப்படியிருக்கின்றன என்று பார்ப்போமேயானால் கடவுள் உண்டு என்பதற்குச் சமாதானம் சொல்லும்போது உலக உற்பத்திக்கு ஒரு ஆதாரம் வேண்டாமா? என்று கேட்டுவிட்டு அதற்காகக் கடவுள் உலகத்தை உண்டாக்கினார் என்று ஆரம்பித்து, அந்த உண்டாக்கப்பட்டவை களென்பதை முதலில் இன்னதை உண்டாக்கினார்.

இன்னார் என்பதாக சில மதமும், முதல் நாள் இன்னதை உண்டாக்கினார்; இரண்டாவது நாள் இன்னதை உண்டாக்கினார் என்பதாக சில மதமும் சொல்லுகின்றன. ஆகவே, இந்த இடம் மாத்திரம் எல்லாம் ஒன்று போலாகவேதானிருக் கின்றன. இதில் ஏதாவது தகராறு ஏற்படுமானால் எல்லா மதக் கடவுளுக்கும் ஒரே கதிதான் நேரும்.

கடவுள் ஸ்தாபனத்திற்கு ஒரே மாதிரி அஸ்திவாரம் ஏற்படு வதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், முதல்முதலாக ஆரிய மதத்திலிருந்தே சீர்திருத்தமாக கிறிஸ்துவ மதம் ஏற்பட்டதும், அதிலிருந்து சீர்திருத்தமாக மகமதிய மதம் ஏற்பட்டதும் நமக்குக் காணப்படுகிறபடியால் எல்லா மதமும் அதையே பின்பற்றிக் கொண்டு வருவதாயிற்றே தவிர வேறில்லை என்றே தோன்றுகிறது.


ஓரிடத்தில் ஓர் உப்புக் கிணறும் மற்றொரு நல்ல தண்ணீர்க் கிணறும் இருக்கிறது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி மக்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும்; உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும்;

 

இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமானால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனை தரும் அளவுக்கு ஜாதி முறைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற் கென்றும் மற்ற பலர் வேதனைப்படுவதற் கென்றுமே அமைக்கப்பட்ட  ஜாதி முறைகள் இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ளே கொடுமைகள் நீங்கா தென்பது திண்ணம்.

நமது நாட்டில் உயர்ந்த ஜாதி என்கிற கொள்கை ஒழிந்து, தாழ்ந்த ஜாதி என்கிற கொள்கை அழிந்துபட்ட பின்தான் சுயமரி யாதையை நினைப்பதற்கு யோக்கியதை யுண்டு.

- தந்தை பெரியார்


உதிர்ந்த மலர்கள்

16. 02.1930- குடிஅரசிலிருந்து...

1.  எவனொருவன் கடவுளிடத்திலும் அதைப்பற்றிச் சொல்லும் மதக்கொள்கைகளிடத்திலும் பூரண நம்பிக்கை வைத்து எல்லாக் காரியங்களும் அவைகளுடைய செயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றானோ அவன் பூரண சுயேச்சை என்னும் பதம் வாயினால் உச்சரிக்கக்கூட யோக்கியதை அற்றவனாவான்.

2. புராணங்களின் ஆபாசங்களை நன்றாய் உணர்ந்தவர்கள் எல்லாம் அவற்றை வெளியில் சொல்லு வதற்குப் பயப்பட்டுக் கொண்டிருந்ததற்குக் காரணம் என்னவென்றால் பார்ப்பனர்கள் தனக்கு நாத்திகன் என்று பட்டம் கட்டி ஒழித்து விடுவார்கள் என்கின்ற பயம்தான்.

ஜாதி மத வித்தியாசங்களும், அவற்றின் உயர்வு தாழ்வு நிலைகளும், சிறிதும் அழியாமல் அப்படியே இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றவர்கள் ஜாதிகளின் பேராலும், மதங்களின் பேராலும் கேட்கப்படும் விகிதாச்சார உரிமைகளை ஏன் ஆட்சேபிக்கின்றார்கள் என்றும் அப்படி ஆட்சேபிப்பதில் ஏதாவது நல்ல எண்ணமோ, நாணயமோ, நியாயமோ இருக்க முடியுமா என்றும்தான் கேட்கின்றேன்.

சுசீந்திரத்தில் சுயமரியாதைப் போர்

01.06.1930- குடிஅரசிலிருந்து...

சுசீந்திரம் என்பது திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த ஒரு சேத்திர தலமாகும். அது திருநெல்வேலிக்கு 40ஆவது மைலில் உள்ள நாகர்கோவிலுக்கு 2, 3, மைல் தூரத்தில் உள்ள கிராமம். நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில் இருக்கின்றது. அந்த ஊரில் உள்ள ஒரு கோவிலைச் சுற்றியுள்ள ரோடுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் செல்லக் கூடாது என்ற நிர்ப்பந்தம் இப்பொ ழுதும் இருந்து வருகின்றது.

அந்த ரோடுகள் திருவாங்கூர் சர்க்காரால் பொதுஜனங்களின் வரிப்பணத்திலிருந்து பாது காக்கப்பட்டு வருவதாகும். அந்த ரோடுகளுள்ள திருவாங் கூர் ராஜியமானது, ஒரு இந்து அரசரால் அதுவும் ஒரு இந்து கடவுளாகிய பத்மநாபவாமி என்பதின் (தாசரால்) பிரதிநிதி யால் அரசாட்சி செய்யப்பட்டு வருகின்றது. அந்த ரோடில் நடக்கக் கூடாது என்று சொல்லப் படும் ஜனங்கள் யாரென்றால் இந்துக்கள் என்று சொல்லப் படுபவர்களும், அந்த பத்மநாப சாமியின் பக்தர்களுமே யாவார்கள்.

மற்றபடி, அந்த சாமியின் பக்தர்களல்லாதவர்களும், இந்துக்கள் அல்லாதவர் களுமான கிருத்தவருக்கோ, மகமதியர் களுக்கோ, அவ் வழியில் நடப்பதற்கு யாதொரு ஆட்சேபணை யும், தடங்கலும் சிறிதுகூட கிடையாது. இதுதவிர, மேற்கண்டபடி இந்துக்கள் என்பவர்களில் பெரும்பான்மையான மக்களாகிய சில சமூகத்தாரைத் தவிர, மற்றபடி மனிதர்கள் அல்லாத எந்த ஜந்தும், மலம் முதலிய எந்த வஸ்துவும் அந்த தெருவில் மேள வாத்தியங்களுடனும் பல்லக்குச் சவாரியுடனும் கூடப் போகலாம். அப்படிப் போவதில் யாருக்கும் ஆட்சேபணை யும் கிடையாது.

ஆனால் அந்த சுவாமியின் பக்தர்களான சில மனிதர்களுக்கு மாத்திரம்தான், அதுவும் இந்து என்று சொல்லிக் கொள்பவனுக்கு மாத்திரம்தான் ஒரு இந்து ராஜா ஆளும் ராஜ்யத்தில் உள்ள ஒரு தெருவில் நடப்பது மதவிரோதம் என்று இந்த 20ஆவது நூற்றாண்டில் மறுக் கப்பட்டு வருகின்றது.

இந்தக் காரியத்திற்காகவே, அதாவது அது போன்ற ஒரு தெரு வழி நடை பாத்தியத்திற்காகவே சென்ற 1923ஆம் வருஷத்தில் அதே திருவாங்கூர் ராஜியத்தைச் சேர்ந்த வைக்கம் என்னும் ஊரில் ஒரு தடவை சத்தியாக்கிரகம் செய்யவேண்டி ஏற்பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக் கலாம். அந்தச் சத்தியாக்கிரகம் சுமார் 5, 6 மாத காலம் நடைபெற்று பலர் பல தடவை சிறை சென்றும் வேறு பல கஷ்டங்களும் அனுபவித்த பிறகு அந்த வழி நடைப் பாதை எல்லோருக்கும் பொது உரிமையுடைய தாக ஆக்கப்பட்டது.

இப்போதும் அது போலவே இந்தச் சுசீந்திரம் வழிநடைப் பாதையும் வைக்கத் தைப் போலவே சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியதாகி ஏற்பட்டு இப்போது சிறிது நாளாக சத்தியாக்கிரகமும் செய்யப் பட்டு வருகின்றது.

இந்த சத்தியாக்கிரகத்தின் பயனால் இதுவரை சுமார் 10, 15 பேர்கள் வரை சிறை சென்று இருப்பதாகவும், இனியும் 10, 12 பேர்கள் மீது கேசு நடப்பதாகவும் சர்க்கார் மிகவும் கடுமையான அடக்கு முறையைக் கொண்டு சத்தியாக் கிரகத்தை அடக்கி விடத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. அதற் கேற்றாப்போல் அந்த ராஜ்ஜியம் இதுசமயம் ஒரு வருணாசிரம பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்தில் வெறிபிடித்த வருமான ஒரு திவானின் ஆட்சியிலும் அந்தக் குறிப்பிட்ட இடமானது ஒரு பார்ப்பன ஜில்லா மேஜிட்ரேட் ஆட்சியிலும், ஒரு பார்ப்பன ஜில்லா போலிசு சூப்ரண்டு ஆட்சியிலும் இருந்து வருகின்றது.

இந்த பார்ப்பன போலீசு சூப்பிரண்டு யார் என்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போது அரசாங்கம் திகைத்த காலத்தில் தனக்குப் பூரண அதிகாரம் கொடுத்தால் 5 நிமிஷத்தில் வைக்கம் சத்தியாக்கிரகத்தை அடக்கிவிடுவ தாகச் சொல்லி அரசாங்கத் தினிடம் பூரா அதிகாரம் பெற்று வந்து ஆட்சி செய்தவர்.

இவர் காலத்தில்தான் தொண் டர்களை அடித்தல், குத்துதல், கண்ணில் சுண்ணாம்பு பூசுதல், இராட்டி னங்களையெல்லாம் ஒடித்து நொறுக்குதல், காலிகளை ஏவிவிட்டு சத்தியாக்கிரகிகளுடன் கலகம் செய்வித்தல், சத்தியாக்கிரகம் செய்யும் பெண்களிடம் மிக்க நீசத்தனமாக நடந்து கொள்ளுதல், எதிர்பிரசாரம், எதிர் பத்திரிகைகள் முதலியவைகள் செய்தல் முதலாகிய காரியங்கள் எல்லாம் நடைபெற்றதோடு திருவிதாங்கூர் ராஜ்யத்தின் இந்த மாதிரியான பெருமையை உலகத்திற் கெல்லாம் வெளிப் படுத்தினவர்.

அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போதும் திருவிதாங்கூர் அரசாங்கத்தார், அவரையே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும் போட்டு இருப்பதாய் தெரிகின்றது. திருவிதாங்கூர் ராஜ்யத்தின் பெருமை மற்றொருதரம் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் இந்த மகானாலேயே ஏற்பட நேர்ந்தது பற்றி நமக்கு மிக்க மகிழ்ச்சியேயாகும்.

நிற்க, எது எப்படி ஆனபோதிலும் சத்தியாக்கிரகம் வெற்றி யான போதிலும், தோல்வியான போதிலும் இந்திய மன்னர்கள் அரசாங்கத்தில் பொதுத்தெருவில் மக்கள் நடக்க அனுமதிக்கப் படுவதில்லை என்கின்ற சேதி உலகத்திற்கு எட்டினால் போதும் என்பதே நமது ஆசை. ஆதலால் பொது மக்கள் கண்டிப்பாக அந்த சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்.

தவிரவும், ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் சம உரிமைக்காக இவ்வருடம் சத்தியாக்கிரகம் ஆங்காங்கு துவக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் செய்து, அதற்காக ஒரு கமிட்டியையும் நியமித்து இருப்பது யாவரும் அறிந்த விஷயமாகும்.

அக்கமிட்டியும் அதேசமயத்தில் ஈரோட்டில் கூடி தமிழ் நாட்டிலாவது, கேரள நாட்டிலாவது சத்தியாக்கிரகம் தொடங்க வேண்டுமென்றும், அதுவும் முதலில் தெரு, குளம், பள்ளிக்கூடம் முதலியவைகளிலேயே தொடங்க வேண்டு மென்றும் தீர்மானித்திருப்பதையும் ஏற்கனவே பத்திரிகை களில் பார்த்திருக்கலாம்.

ஏனெனில் தெரு, குளம், பள்ளிக் கூடம் முதலியவைகளைவிட கோயில் அவ்வளவு அவசர மானது அல்லவென்றும், கோயில் நுழைவு சத்தியாக் கிரகமானது உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாச எண் ணத்தை நீக்குவதற்குத்தான் செய்யக் கூடியதே தவிர, மற்றபடி கோயிலுக்குள் போவதினால் வேறு எவ்வித பயனும் இல்லை என்றும், எல்லோரும் கோயிலுக்குப் போகலாம் என்றும் ஏற்பட்டுவிட்டால் கோயில் பிரவேசத் தைத் தடுக்க மறியல்கூட செய்ய வேண்டிவருமென்றெல்லாம் பேசி நன்றாய் யோசனை செய்தேதான் முதலில் தெருப் பிரவேச சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று தீர்மானிக் கப்பட்டிருக்கிறது.

அதை அனுசரித்து நமது முயற்சி இல்லாமலே நமக்கு வலிய கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உபயோகப் படுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். இதிலும் வெள்ளைக் கார சர்க்காரிடம் செய்யும் சத்தியாக் கிரகத்தைவிட ஒரு இந்து அரசாங்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ய சந்தர்ப்பம் கிடைப்பதற்கு நாம் நம்மையே மிகவும் பாராட்டிக் கொள்ள வேண்டும்.

ஏனெனில், நமது நாட்டு முன்னேற்றத்திற்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், மக்களின் சம உரிமைக்கும் இன்றைய தினம் நமது எதிரிகள் வெள்ளைக் காரர்களா? அல்லது பார்ப்பனர்களும் அவர்களைப் பின் பற்றும் நமது மூடமக்களுமா? என்பது ஒருவாறு விளங்கி விடுவதுடன் அரசியல் மூடநம்பிக்கைக்கும் இதிலேயே நமக்கு ஆதாரம் விளங்கிவிடும். ஆகையால் இதைச் சத்தியாக்கிரக கமிட்டியார் தயவுசெய்து ஆதரித்து அதை மேல்போட்டுக் கொண்டு நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இன்றைய தினம் சுசீந்திரத்தில் தெருவில் நடக்கத் தடைப் படுத்தப்படும் மக்கள் முன் தெரிவித்தபடி இந்துக்கள் என்பதோடு, அந்த நாட்டில் பெரும் ஜனத் தொகையைக் கொண்டவர்களும் கல்வி, நாகரிகம் முதலியவைகளில் முன் னணியில் நிற்கின்றவர்களுமான ஈழவ சமுதாய மக்களு மாவார்கள்.

அவர்களோடு ஆசாரிகள், நாடார்கள் முதலிய பலவகைத் தொழில் வியாபார மக்களுமாவார்கள். இப்படிப் பட்ட ஒரு பெரும் செல்வாக்கும், நாகரிகமும் படைத்த ஒரு கூட்டத்தாரைப் பொதுத்தெருவில் நடக்க விடுவதில்லை என்று இன்னொரு கூட்டம் ஆட்சேபணை செய்ய அதைச் சுயமரி யாதையுள்ள எந்த மனிதன்தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?

இதை, இந்த இழிவை நிவர்த்தித்து இந்தக் கொடுமையிலிருந்து இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் விடுதலை செய்ய முடியாதவர்கள் வெள்ளைக்காரர்களின் சட்டத்தை மீறி அவர்களைத் தோற்கடிப்ப தென்பது திரு. காந்தி சொன்னபடி விளையாட்டு பிள்ளைகள் பேச்சேயொழிய சிறிதும் கவலையும், கருத்துமுள்ள பேச்சாகாது.

ஆகையால், சுயமரியாதை இயக்க சத்தியாக்கிரகக் கமிட்டியார் சீக்கிரத்தில் அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே சத்தியாக்கிரக கமிட்டி கூட்டத்தை நாகர் கோவிலிலாவது, திருநெல்வேலியிலாவது கூட்டி சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தை ஏற்று நடத்துவதோ அல்லது அதற்கு வேண்டிய உதவி செய்வதோ ஆன காரியத்தை நிச்சயித்து அதை நடத்துவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றால் நமக்கு இரண்டுவித லாபமுண்டு. அதென்னவென்றால், வழி நடை சுதந்திரம் ஒன்று, பார்ப்பன ஆதிக்க அரசாங்கத்தின் கொடுமையை அடக்கிய பலன் ஒன்று ஆகிய இரண்டு காரியங்களில் நாம் வெற்றி பெற்றவர்களாவோம். இந்த சத்தியாக்கிரகமானது 1925ஆவது வருஷத்தில் ஒரு தடவை ஆரம்பித்து நடத்தி திருவாங்கூர் அரசாங்கத்தாரால் சில வாக்குறுதிகளும் செய்யப்பட்டு அதனால் நிறுத்தப்பட்ட தாகும்.

அவ்வாக் குறுதி ஏமாற்றப் பட்டதின் பயனாக இப் போது ஆரம்பிக்கப்படு கின்றதாதலால் இதற்கு முன்னைய விட இரட்டிப்பு பலம் இருக்க நியாய மிருக்கின்றது. அன்றியும், பொதுஜன ஆதரவும், அபிமானமும் அதிகமாக ஏற்படவும் இடமுண்டு. திருவாங்கூர் சட்ட சபையிலும், திருவாங்கூரிலுள்ள எல்லா பொது ரதாக்களிலும், பொது சத்திரங்களிலும் பொது நீர்த்துறைகளிலும் சமதா னத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பாருக்கும் சம பிரவேசமளிக்க வேண் டும் என்கின்ற தீர்மானமுமாயிருக்கின்றது. ஆதலால் இவை களுக்கு விரோதமாக திருவாங்கூர் சர்க்கார் நடப்பார் களேயானால் முதலில் ஒழிய வேண்டிய ஆட்சி இந்திய ஆட்சியா? பிரிட்டிஷ் ஆட்சியா? என்பதும் விளங்கிவிடும்.

ஆகையால் சுயமரியாதைத் தொண்டர்களே! சமதர்ம தேசியவாதிகளே! சத்தியாக்கிரகக் கமிட்டியின் முடிவைத் தயவுசெய்து எதிர்பாருங்கள் எதிர்பாருங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

உதிர்ந்த மலர்கள்

04.05.1930- குடிஅரசிலிருந்து...

1. பரம் ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும், சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.
ராஜ வாழ்த்தும், கடவுள் வாழ்த்தும், மனிதனின் அடிமைத் தனத்திற்கு அஸ்தி வாரக்கல் நடுவதாகும்.

2. திரு. காந்தியவர்கள் தனது சத்தியாக்கிரகம் தோல்வி யுற்றால் இந்தியா விடுதலை பெற கடவுளுக்கு விருப்ப மில்லைபோல் இருக்கின்றது என்று ஒரு வார்த்தையில் ஜனங்களுக்கு சமாதானம் சொல்லிவிடுவார் அல்லது உண்மையில் அப்படியே அவர் நினைத்தாலும் நினைப்பார்.

3. தொட்டதெற்கெல்லாம் கடவுள் செயல், கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள், தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள் அல்லது தங்கள் தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்.

4. எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாய் விட்டது. அவைகள் ஒவ்வொன்றி லும் மக்களை அடிமைபடுத்தியாய் விட்டது. குரங்குப்பிடியாய் இவற்றைப் பிடித்துக் கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண் வேலையாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குபோய் கொண்டேயிருக்கிறார்கள்.
மண்ணையும் சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாய் விட்டது. பார்ப்பனுக்கும் பாளாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

கூடாஒழுக்கங்களும், அண்டப்புரட்டுகளும், ஆகாயப் புரட்டுகளும் நிறைந்த புராணக் குப்பைகளைத் திருப்பித் திருப்பிப் படிப்பதே காலட்சேபமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக் குள்ள கவலையே அடியோடு போய்விட்டது.
வலிவுள்ளவன் வலிவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சி யாய் விட்டது.

பணக்காரன் ஏழைகளை அடிமைப்படுத்துவதே முறையாய் விட்டது.

தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே வழக்கமாய் விட்டது.

அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரவப்படுத்துவதே நீதியாகி விட்டது.

வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திர சாலியாகவோ, அயோக் கினாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய் விட்டது.

இவைகளை சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

இதனால் கலகம் உண்டாகுமானால் அதற்காகப் பின் வாங்க வேண்டுமா?

திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலேயே இறங்கி இருக்கின்றோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை.
6. அறிவுக்குப் பொருத்தமற்ற கதை


வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவலியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன் றும் தீபாவலியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

(ஆசிரியர்: டாக்டர் மா. இராசமாணிக்கனார், நூல்: “தமிழர் நாகரிகமும், பண்பாடும்“ பக்கம் 33-34).

7. அசுரர் கொலைக்கு விழாவா?

தீபாவளியின் உண்மை அறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார். அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்கவேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டது அன்று.
(ஆசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார், நூல்: “வாரியார் விரிவுரை விருந்து” பக்கம்: 95)

Banner
Banner