இது ஓர் அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும்
- சித்திரபுத்திரன் -
03-02-1929 - குடிஅரசலிருந்து...
மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்ம்மா, சில்லறை தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும்.
உதாரணமாக, மேல் நாட்டில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ஒவ்வொருவனும் தன்தன் பகுத் தறிவைக் கொண்டு ஒவ் வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக் கூடாது என்று உப தேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து இந்தப் பிஷப் நாதிகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கு லாயக்கில்லை? என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ஏன், எதனால் இப்படிச் சொல்லு கின்றீர்கள்? என்று கேட்டதற்கு, குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லி விட்டால். அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிதவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உப யோகித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அதிவாரமே ஆடிப் போகாதா? ஆதலால் மதமோ கடவுளோ வேதமோ இருக்கவேண்டு மானால் நம்பிக்கை இருக்க வேண்டும். பகுத்தறிவால் வாதம் செய்யக் கூடாது. ஆதலால், ஒருவன் குருட்டு நம்பிக்கையை விட்டு பகுத் தறிவின் ஆராய்ச்சிக்குப் புகும்படி மக்களுக்கு எடுத்துச் சொல்லுவது நாதிகத்தை உபயோகிப்பதேயாகும் என்று சொன்னாராம். உடனே அந்தக் கூட்டத்தில் உள்ள குட்டிப் பாதிரிகளும் மற்ற ஜனங்களும் இதை ஒப்புக் கொண்டு பிஷப் சொன்னதை பின் வாங்கிக் கொள்ள வேண்டும், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்களாம்! பிஷப், தாம் சொன்ன அக்கிரமமான வாக்கியங்களைப் பின் வாங்கிக் கொண்டு நாம் சொன்ன மகாபாதகமான வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.
எனவே 100க்கு 75 பேர்களுக்கு மேல் எழுதப்படிக்கத் தெரிந்த மேல் நாட்டுக் கடவுள்களும், மதமும் வேதமுமே இவ்வளவு பலமான நிபந்தனை மேல் நிற்கும்போது 100க்கு 7ஆண்களும் 1000க்கு 1 பெண்களும் படித்திருக்கும் நம் நாட்டின் சாமிகளுக்கும் சமயங் களுக்கும் வேதங்களுக்கும் எவ்வளவு பலமான நிபந்தனை வேண்டியிருக்குமென்பதையும் பார்ப்பன அகராதியில் வேத புராணங்களை யுக்தியால் வாதம் செய்கின்றவன் நாதிகன் என்று எழுதிவைத்திருப்ப தையும் யோசித்தால் அறிவும், ஆராய்ச்சிக் கவலையும் உள்ள மக்களுக்கெல்லாம் நாதிகப் பட்டம் கிடைப்பது ஒரு அதிசயமா?
இராமனுக்கு சீதை தங்கை இராவணனுக்கு சீதை மகள் இராமனுக்கு பல பெண்டாட்டிகள்
03.03.1929 - குடிஅரசிலிருந்து...
இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமா யணம் என்னும் பெயரால் பல நூற்றுக் கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்த தாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டனவென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததா அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தான் எழுதிய இந்துமதம் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் இராமா யண விலாசம் என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுரகர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப் பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப் படுத்தியிருக்கும் இதர இராமாயணங்கள் என்னும் புதகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. (அப்புகத்தின் விலை ரூ.1) அவையாவன :- ஜைன ராமா யணம், பவுத்த ராமாயணம், யவன ராமா யணம், கிறைஸ்தராமாயணம் என்பவை களாகும்.
இவற்றுள் யவன ராமாயணம், கிறைஸ் தராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பவுத்த ராமாய ணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர் களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் உண்மைகள் மாத்திரம் மாறுபட்டிருக்கின்றன. அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாறு புத்தக சாலையில் வைக்கப் பட்டிருப்பதாகப் பதிப்பாசிரியரே எழுதியிருக்கின்றார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலிய வைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும் மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும் அவர்களின் பெயர்கள் 1. அபராஜிதை, 2. சுமத்தரை, 3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும் சுமத்திரைக்கு லட்சுமணன் பிறந்ததாகவும் கைகேயிக்கு பரதன் பிறந்த தாகவும் சுப்ரபைக்குச் சத்துருக்னன் பிறந்த தாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதுபோலவே சீதையை ஜனகராஜ்னுடைய மகள் என்றும், வில்லை வளைப்ப வனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தான் என்றும், ஆகவே வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லட்சுமணனுக்கு 18 பெண் சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனக னுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப் பட்டா ளென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறுசிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப்பட்டதும் குறிக்கப்பட்டி ருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும் அவர்களின் பெயர்! சீதை, 2. பிரபாவதி, 3. ரதினிபா, 4. ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது.
பவுத்த ராமாயணத்திலும், தசரதராஜ னுக்குப் பதினாயிரம் மனைவிகள் என்றும் அவர்களில் மூத்தவளுக்கு ராமன், லட்சு மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும், அடுத்த மனைவிக்குப் பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்கு பட்டம் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன் அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான் என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்துவிட்டு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளைப் பரதன் கொன்றுவிடுவான் எனப் பயந்து காட்டுக் கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடி காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தாம் நாட்டுக்குத் திரும்பிவர முடியுமென்றும், அதுவரை தனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி கேட்டு வாங்கி அழைத்து வந்ததாகவும் பன்னிரண்டு வருடமானபின் தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர் ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவ ளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டம் கட்டினதாகவும் எழுதப் பட்டிருக்கின்றது.
இவைகளை மெய்ப்பிக்க திரு. அய் யங்கார், அந்தக் காலத்தில் அண்ணனும், தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும் எகிப்து தேச ராஜ தர்மமே சகோதரியை மணப்பதுதான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10,12 -சுலோகங்களில் சகோ தரியை மணப்பது கண்டிக்கப்பட்டிருக்கின் தென்றும், அதற்கு முன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கு மேலும் ஆதார மாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதி யிருக்கின்றார். திரு.சி.ஆர்.சீனிவா சய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின்பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், சீதை தசரதனுடைய மகள் என்றும், அவளைத் தசரதன் ஜனக னுக்குத் தானம் கொடுத்தார் என்றும் அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக் கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் சீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்துபோய் விட்டாள் என்றும், பிறகு கொஞ்சகாலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது சீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டு ஜனகனால் எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜன கனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லையென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுவிட்டு இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும் கண் டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே திரு.சீனிவாசய்யங்கார், எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்தி ருந்ததாகவும் அந்தச் சாபத்தின் பலனாய் ராவணன் ராமன் தன் தங்கையாகிய சீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் சீதையைத் தூக்கிக் கொண்டு போவதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவண னுக்கு உண்மையில் ராமன் தன்தங்கையைக் கட்டிக் கொண்டது தெரியாதென்றும் தெரிந்தி ருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட் டிருக்கின்றார்.
மற்றும் இதே திரு. சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவர்கள் பிறந்த கால தோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும், அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய சீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டு போய் எறிந்துவிட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக் கொண்டு வரப்பட்டதாகவும் அதை ஜனகன் கண் டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாக வும், ராமனும் சீதையும் வனத்திலிருக்கும் போது ராவணன் சீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து விட்ட தாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுக்தி காரணமும் சொல் லுகின்றார். அதாவது, சீதையின் பிறப்பைப் பற்றியோ அவளுடைய பழைய சங்கதியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒருவரி கூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுகள் உண்மையாக இருக்கலாம் என்கின்றார். எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும் ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4,5 - ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என் பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக் கின்றன. இன்னமும் மற்ற ராமா யணங்களில் என்னென்ன பந்துத்வங்களும் இருக்கு மென்பது ஊகிக்கக் கூடவில்லை.