வரலாற்று சுவடுகள்


16.01.1938 குடி அரசிலிருந்து... 

மராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கிரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப் படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கிரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன.

ஆனால் ஹரிஜனங்களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர் மட்டும் மவுனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கிரஸ் பத்திரிகையும் இந்த அக்கிராமத்தை இதுவரைக் கண்டித்து எழுதவில்லை.

காங்கிரஸ் போரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக் கும் ஹரிஜன மெம்பர்களோ, ஹரிஜன மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரிய வில்லை. ஹரிஜன மந்திரி கனம் முனிசாமிப் பிள் ளையும் ஹரிஜன மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம் பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன் சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை ஹரிஜன மந்திரியுடையவும் ஹரிஜன மேயருடையவும் சமூகத்துக்கில்லையா? தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக் கொள்ளு வதுதான் நீதியாகுமா? சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போது மென்பதே அவர்களது கருத்தா? பார்ப்பனக் கூத்துக் குத் தாளம் போடுவதற்குக் கைக் கூலியாகத்தான் ஹரிஜன மந்திரிக்கும் ஹரிஜன மேயருக்கும் சமபந்தி போஜன மரியாதை காட்டப் படுகிறதா?

தென் தஞ்சை காங்கிரஸ் மகாநாட்டு அநீதி ஆதிதிராவிட சமூக முழுமைக்கும் மனக் கொதிப்பை யுண்டு பண்ணி யிருக்கும் போது கனம் முனுசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் சும்மாயிருப்பது சரியே அல்ல. இந்த மானக்கேட்டுக்கு பரிகாரம் தேட அவர்களால் முடியா விட்டால் அவர் களது பதவிகளை ராஜிநாமாச் செய்ய வேண்டியதே நியாயம்.
கனம் முனிசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் என்ன செய்யப் போகிறார்கள்?

ஈரோட்டில் ஆலயப் பிரவேசமும் அதிகாரிகள் பிரவேசமும்

21.04.1929- குடிஅரசிலிருந்து...

ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத் திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசைவுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசாரமாகவும் ஆலயத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம்.

இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 299, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈவரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரடு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமினில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும்

மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசா ரணை தொடங்குவதாய் மாஜிஸ்ட்ரேட் சொன்ன தாகவும், எதிரிகள் தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக் கூட முடியாதபடி விசாரிப்பதின் இரகசியம் தெரியவில்லை ஆகையால் வாய்தா கொடுத்தாலொழிய விசாரணையில் கலந்து கொள்ள மாட்டோம் என்று சொன்னார்களாம்.

அதற்கு மாஜிஸ்ட்ரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும் நாளையே விசாரணை செய்து கே முடிக்கப்படும் என்றும் சொன்னாராம். எதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கெனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்ற தாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம்.

உடனே மேஜிஸ்ட்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்தி ருப்பதாக தாமே உத்திரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட் டார்களாம். திங்கட் கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட் டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது!

ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய் கைக்கும், அனுகூலமாகவும் குதூகலமாகவும் இருக் கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாகிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும் எதிர் வழக்காடுவதின் மூலம் உரிமை உண்டா? இல்லையா? என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டி ருப்பதாகத் தெரிய வருகின்றது.

எதற்கும் திரு. ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங் களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்ட படியும் போக வேண்டியிருந்ததால் இக் காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும்.

எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன்ஜாக்கிரதையாயி ருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சமயம் தாராள மாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியாமல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகலப் பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும், மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரசாரம் செய்வதும், பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மை யாகும். ஆலயபிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன.

அதாவது சமயசம்பந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும், அரசியல் சம்பந்தமாக காங்கிரகள் சுயராஜிய கட்சி, சுதந்திர தேசிய கட்சி, பூரண சுயேச்சை கட்சி, ஹோம்ரூல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென் னிந்திய நல உரிமைக் கட்சி மற்றும் சமூக சம்பந்தமான எல்லா இயக்கங்கள் மகாநாடுகள் இந்து மகாசபை மார்வாடி சபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக் கட்சியும் மகாநாடு என்பதும் நேரு திட்டம் என்பதும் மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப் பிக்கப்பட்ட யாதாஸ்துக்களும் மற்றும்  எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர மற்றபடி எல்லாப் பத்திரி கைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப்பட்ட தேவதான கமிட்டியும் அனுகூல மாக இருப்பதோடு அல்லாமல் தேவதான இலாகா மந்திரியினுடையவும் என்டோமெண்ட்போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப் பிராயமும் கடைசியாக கவர்மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது.

இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வரு கின்றது. எனவே இம்மாதிரியான முயற்சிக்கு இனி இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால் தேர்தலைவிட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன்றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், மக்களுக்கு இருக்க வேண்டிய மானம், அவமானமற்ற தன்மை, கண் ணியம், நேர்மை முதலிய சாதாரணக் குணங்களை நமது சுதந்திரம் எரித்துச் சாம்பலாக்கி வருகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால் இந்தச் சுதந்திரம் உள்ளவரை மக்க ளில் நேர்மையுள்ள யோக்கியன் இருக்க மாட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தச் சுதந் திரம் ஏற்பட்டதே பித்தலாட்டக்காரர்கள், நாணயமற்றவர்கள், மக்களை ஏமாற்றி -வஞ்சித்துப் பழக்கப்பட்டுத் தேறினவர்கள், பொறுப்பற்ற காலிகள் முதலியவர்களது முயற்சியினால், தந் திரத்தினால் என்றால், இதில் யோக்கியம், நேர்மை, உண்மை எப்படி இருக்க முடியும்? ---தந்தை பெரியார்

07.08.1932 - குடிஅரசிலிருந்து...

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக் கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களேயாவார்கள். அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற் சாலைகளிலும் வேலை யாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை யற்ற வர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அநேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், வாரச்சம்பளம் பெறுகின்றவர்களா யிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந் தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அநேகர் குடியி ருக்கவும் சொந்த குடிசைஇல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள், இத்தகைய நிலையில் உள்ளவர் களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான்தார்களோ, முதலாளி களோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப் பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க இடமில் லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில் லாமலும், பெண்டு பிள்ளை களுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன். இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனி களிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப் பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலை களிலும் தனிப் பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்தி லுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வரு கிறார்கள். ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகஸ்த் தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன. தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டி லும், தொழில் நேரத்தைக் குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண் டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக் கலாமென்று தொழிலாளர்களின் தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும். இந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் களும் சம்மதிப்ப தாகவும் அறிகின்றோம். இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழி லாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத் திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங் கமும், முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒரு வாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூற லாம். ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட் கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபி மானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம். அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழி லாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தாக முடியு மென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய அரசாங்கமும், தொழிலா ளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

12-05-1929 குடிஅரசிலிருந்து...

தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசியலிலாவது மத இயலிலா வது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரசாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாகத் தனித்து வெளியில் புறப்பட்டு பிரச்சாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடைமேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமாயிருந்த காலம் வரையில்தான் செல்லு படியாய்க் கொண்டு வந்தது.

இப்போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செலவாணி ஆவதற்கில்லாமல் செல்லு மிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து என் ராமன் வேறே; என் வருணாசிரமம் வேறே என்று சொல்லி கொண்டு தப்பித்துப் போகப்பட்டபாடு வெகு பாடாய்ப் போய்விட்டதும்; பிறகு திரு பஜாஜ் அவர்களை தருவித்து அவர்களுடன் திரிந்ததில் உள்ள யோக்கியதையும் போய் அவர் தலையில் கைவைத்துக் கொண்டு திரும்பியதும் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் தாங்கள் தனித்து போக முடியாமல் திருவாளர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்தரம், முத்துரங்கம், ஓ.கந்தசாமி, பாவலர், ஜயவேலு, ஷாபிமுகமது; பஷீர் அகம்மது முதலிய நபர்களை கூட்டிக் கொண்டு வெளியில் போவதும், அங்கும் இப்போது எந்த ஊருக்குப் போனாலும் எவ் வளவு பயந்து ஒடுங்கி அடக்கமாகப் பேசினாலும் இவர்களைப் பேசஒட்டாமல் திருப்பி அனுப்பிக்கப்படுவதும் பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிப் பத்திரிகைகளும் எவ்வளவுதான் மறைத்தாலும் தாராளமாய் வெளிப்பட்டுக் கொண்டு வருகின்றது. இந்த இரண்டு மூன்று வாரமாய் திரு.சீனிவாசய்யங்கார் கம்பெனி செல்லுமிடங்கள் பலவற்றில் கூட்டம்போட முடியாமல் திரும்புவதும், கூட்டம் கலைக்கப்பட்டுவருவதும் அவர்கூடச் செல்பவர்களுக்கு நடக்கும் மரியாதைகளும் சேலம், திருச்சி, கோயமுத்தூர் முதலிய ஊர்களில் நடந்த சம்பவங்களே போதுமானது.

இவ்வளவும் போதாமால் இந்த வருஷத்திற்கு திரு பண்டிட் மாளவியா அவர்களைத் தருவித்து கடவுளுக்கும் கோயிலுக்கும் மதத்திற்கும் ராமாயணத்திற்கும் ஆபத்து வந்துவிட்டதென்று சொல்லி பிரச்சாரம் செய்யச் செய்ததில் அவர் சென்றவிடங் களிலெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டுத் திணறவைத்து கடைசியாகக் கூட்டம் கலைந்து வீட்டுக்குத் திரும்பும் படியாகி விட்டது.  பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் பண்டிதரைப் பிடித்து அவர் தலையில் வருணா சிரமத்தையும் கோவிலையும் மதத்தையும் இராமனையும் இராமா யணத்தையும் தூக்கி வைத்து எவ்வளவோ விளம்பரம் செய்தும் ஒரு காசுக்குக் கூட விற்க முடியாமல் போனதோடு திரு.மாளவி யாவுக்கும் கொஞ்ச நஞ்சம் இருந்த யோக்கியதையும் அடியோடு கவிழ்ந்து விட்டதென்றே சொல்லலாம்.

உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் தலைமைவகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம் ஆனால் அந்த விஷயங் களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது. அதாவது 11ஆம் தேதி இந்து பத்திரிகை வேண்டுமென்றே அயோக்கியதனமாய் அடியோடு மறைத்துவிட்டு உணர்ச்சியுள்ள வாதங்கள் நடந்தன என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

10ஆம் தேதி சுயராஜ்ஜியாவில் மாளவியாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆட் சேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களி லிருந்து புறப்பட்டன என்றும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டா யிற்று என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது. 12ஆம் தேதி மித்திரனில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர்மானம் செய்திருப்பதாகவும் பிரீபிரஸ்சின் பேரால் போடப்பட்டிருக்கின்றது.

ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்ன வையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும் திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம். திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்; எனக்கு சாஸ்திரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிறிஸ்தவனையோ மகமதியனையோ இந்து வாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்குச் சாஸ்திரம் பார்த்துதான் சொல்ல வேண்டு மென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜி நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவியாஜியை மூர்ச்சை யடையச் செய்துவிட்டது.  எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக் கூடும்.

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப் போகின்றீர்களா?  என்பதுதான் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி யின்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களே யல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே அல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்துவரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடங்கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப் பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே அல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கச் சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டு மானாலும் விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார் களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞான மற்று, மானமற்று, கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக் கிறீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லா ருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளறுகின்றீர்கள். இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனி தர்கள் புராணப் புரட்டை உணர்ந்த வர்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!

இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள். எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய் தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்த வர்களாவீர்களா? வீணாய் கோவிப்பதில் என்ன பிர யோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப் பனரல்லாத மக்களில் 1000-க்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொது வாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண் டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்துகொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ் வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்கு வதும் ஆறு; இந்தச் செலவுக்காகக் கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவா கின்றது என்பதும், அதற்காகக் கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங் களொருபுறமிருந்தாலும், மற்றும் இவைகளுக்கெல் லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும், தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண் டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்லமுடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்தி வாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத் தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்கமுடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங் கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ் விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக் கொண்டாய்விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ் வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்திய பாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை யிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதா வது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண் டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும், கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப் பிர சண்டமாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளைமாடு கண்ணு (கன்றுக்குட்டி) போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டடத்தில் கட்டிப் பால் கறந்து வா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமேயொழிய காளை மாடு எப்படி கண்ணு போடும் என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரி யான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட,  பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும். பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்தரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும். மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண் டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக. ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர் களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூடபக்தி யாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண் மூடி வழக் கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில், இன் றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலட்சேபங்களும், பெரிய புராணக் காலட்சேபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதாகாலட்சேபங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள் ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் கவுரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் ஆரியர் வேறு தமிழ் வேறு என்பாரும், புராணங்களுக் கும் திராவிடர்களுக்கும் சம்பந்தமில்லை என்பாரும், பார்ப்பனர் சம்பந்தம் கூடாது என்பாரும், பார்ப்பன ரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள்தான் பிரதிநிதிகள் என்பாரும், மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே, இம்மாதிரியான விஷயங்களில் படித்தவர்கள், பணக்காரர்கள் உத்தி யோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற கூட்டத் தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்பந்தமான காரியங்கள் எதிர்பார்ப்பதைவிட, பிரச்சாரம் செய்வதைவிட உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரச்சாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.

எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திரா விடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின் றோம்.

'குடிஅரசு' - கட்டுரை - 16-10-1938

 

21.08.1932 - குடிஅரசிலிருந்து...

இப்பொழுது இந்துக்களுக்குள்ளேயே, வடநாட்டிலும் தென்னாட்டிலும், சாதி வேற்றுமையையும், பெண்ண டிமையையும் ஒழிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி தோன்றியிருப்பதைக் கண்டு நமது இயக்கத்தின் நோக் கமும், வேலையும் வீண்போக வில்லை யென்று களிப்படை கிறோம். இதற்கு உதாரணமாகச் சென்ற 08.08.1932இல் புதிய டில்லியில் இந்து சீர்திருத்த மகாநாடு என்னும் பெயருடன் இந்துக்களால் ஓர் மகாநாடு நடத்தப் பட்டதையும், அம்மகா நாட்டின் தலைவர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களின் பேச்சுக்களையும், அம்மகா நாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களையும் கூறலாம்.

அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திரு. ராமலால் வர்மா என்பவர் மூட நம்பிக்கைகளாலும், இழிவான வைதி கங்களாலும், பலவிதமான சாதி பேதங்களும் பிரிவுகளும் ஏற்பட்டக் காரணத்தால் இந்து சமுகம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது. இந்து சமயம் தீண்டாமை என்னும் கறையினால் தாழ்வையடைந் திருக்கிறது. ஆகையால் இந்தச் சாதி வேற்றுமைகளையும், தீண்டா மையையும் அடியோடு ஒழிக்க வேண்டியது அவசியமாகும். என்று பேசியிருக்கிறார்.

அம் மகாநாட்டின் தலைவர் சுவாமி சத்திய தேவ பாரி பிரஜாத் என்பவர், இந்துக்கள் வீண்பெருமையையும் துவேஷத்தையும் விடு வார்களானால் அவர்கள் ஆதிக்கம் மிகுந்தவர்களாவார்கள். இந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்படு வதற்கு முன் சுயராஜ்யம் கிடைப்பதென்பது முயற் கொம்புதான். இந்தியாவின் மக்களாகிய இந்துக்கள் அனை வரும் தமக்குள் உள்ள சமுகத் துவேஷங்களை விட்டொ ழித்தும், சமுகக் கொடுமைகளை ஒழித்தும், சுயநலத்தை விட்டு கொடுத்தும் இந்தியாவுக்குத் தொண்டு புரிய வேண் டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன் என்று பேசியிருக் கிறார். இன்னும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சிறந்த தீர்மானங்களாகும், அவைகள் வருமாறு:-

1. இம்மகாநாடு இந்து சமுகத்தில் பிறப்பினாலேயே சாதி வேற் றுமை பாராட்டும் காரணத்தால் ஆயிரக் கணக்கான சமுக வேற்றுமைகளும், தீண்டாமையும் வளர்வதாகக் கருதுவதால் சாதி வித்தியாசம் பாராட்டுவதை இந்துக்கள் அதிவிரைவில் விட்டொழிக்க வேண்டுமென்றும் இதன் பொருட்டு இந்துக்களின் பல விரிவான சாதியினரும் தங்களுக்குள் சமபந்தி போஜனமும், கலப்பு மணமும் செய்ய வேண்டுமென்றும் யோசனை கூறுகிறது.

2. இம்மகாநாடு தீண்டப்படாதவர்களுக்கும் தாழ்த்தப் பட்ட வகுப்பாருக்கும் பொது இடங்கள், பொதுக்கிணறுகள், பொதுப் பாதைகள் முதலியவற்றை மற்ற இந்துக்களைப் போல் சம உரிமை யோடு அனுபவிக்க உரிமை உண்டு என்று கருதுவதுடன், பொதுப் பள்ளிக் கூடங்களில் மேற் கண்ட வகுப்புப் பிள்ளைகளைத் தடையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்கோயில் களிலும், மற்ற பொது இடங்களிலும் தடையின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறது.

3. இம்மகாநாடு இளம்பருவத்தில் பெண்களுக்கு மணம்புரியும் காரணத்தாலேயே விதவைகள் பெருகு வதனால் இந்துக்கள் அனை வரும் இளம்பருவ மணத்தை ஒழித்துச் சாரதாசட்டத்தின்படி மணம் செய்யுமாறும், சமுக ஒற்றுமையுடன் அச்சட்டத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.

மேற்கண்ட மூன்று தீர்மானங்களிற்கண்ட விஷயங்கள் நமது சுயமரியாதை இயக்கத்திற்குப் புறம்பானவையல்ல. அத்தீர்மான விஷயங்கள் இந்துக்களால் அனுஷ்டானத் துக்குக் கொண்டு வரப்படுமானால் நமது விருப்பத்தின் படி இந்துக் களின் சமுகம் வளர்சியடைவதுடன், அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இந்து மதமும் அழிந்துதான் தீரும்.

ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் கோயில்களிலும், பள்ளிக் கூடங்களிலும் பொதுக்கிணறு, பொதுப்பாதை களிலும், தாழ்த்தப் பட்டோருக்கு உரிமை இல்லாதிருப்பதும், இளமை மணமும் இந்து மதத்திற்கு அடிப்படையானவைகள்; ஆகையால் இவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கும்பகோணம் பார்ப்பனர்கள் பேசிக் கொண்டு வரு வதையும் மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்தவர்கள் டில்லி இந்து சீர்திருத்த மகாநாட்டுத் தீர்மானங்கள் இந்து மதத்திற்கு மாறுபட்ட தென்பதையும் இந்து மதத்திற்கு அழிவைத் தேடுவது என்பதையும் ஒப்புக் கொள் ளாதிருக்க முடியுமா? என்றுதான் கேட்கின்றோம். ஆகவே இந்து மதத்திற்குப் புறம்பான தாயிருந்தாலும் இருக்கட்டும், இதனால் இந்து மதம் அழிந்தாலும் அழியட்டும் என்ற தைரியத் துடன் இந்து சமுக வளர்ச்சி ஒன்றையே கருதி மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிய டில்லி இந்து சீர்திருத்த மகா நாட்டாரை நாம் பாராட்டுகிறோம். இச்சமயத்தில் சுய மரியாதை இயக்கத்தைக் கண்டு முணுமுணுக்கும் பண்டிதர் களும், தென் னாட்டுக் கும்பகோணம் மடி சஞ்சிகளும் திரு. எம்.கே.ஆச்சாரியார் கூட்டத்தாரும், வடநாட்டில் இந்துக்கள் கூடி இவ்வாறு தீர்மானம் பண்ணியிருக் கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்.

இதனால் தான் நமது இயக்கத்தின் ஆக்க வேலை களாகக் கலப்பு மணங்களையும், விதவா விவாகங்களையும், சமபந்தி போசனங்களையும், தீண்டாமை ஒழித்தலையும் செய்து வருகிறோம் இக்காரியங்களின் மூலம் சடங்குகளும், சாதிகளும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இக்கொள்கை இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுமாயின் இந்துக் களைப் பிடித்த கஷ்டம் விரைவில் அழிந்து ஒழிவது நிச்சயமென்பதில் அய்யமில்லை.

இன்று சாதிகள் ஒழிய வேண்டும், பெண்களுக்குச் சமத் துவம் கொடுக்க வேண்டும். இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும், மூட நம்பிக் கைக்கான சடங்குகளைஒழிக்க வேண்டும். இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும் என்னும் கொள்கைகளைப் பழுத்த இந்து மத பக்தர்கள் கூட ஒப்புக்கொண்டு பிரசாரம் பண்ண முன் வந்திருப்பதை நோக்கும் போது, இன்னுஞ் சில நாட்களில் இவர்களே, இந்து மதத்தினர் வரவர தரித்திர திசையை அடைவதற்கு காரணம் எனன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார் களாயின் அதற்குக் காரணம் கோயில்களும், சாமிகளும், சடங்கு களும், பண்டிகைகளும் என்பதையுணர்ந்து இவை களையும் ஒழிக்க முன்வருவார்களென்றே நம்பலாம்.

ஆகையால் எப்பொழுதாவது இன்றில்லாவிட்டாலும் இன்னுஞ் சில தினங்கள் கழித்தாவது மக்களின் முன்னேற் றத்திற்குத் தடை யாயிருக்கின்ற இந்து மதம் வைதிக மதம் தெய்வீக மதம் புராதன மதம் என்று சொல்லப்படுகின்ற பாழும் மதம் அழிந்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆதலால் இனியாவது சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்ற விஷயங் களில் உண்மையை உணர்ந்து மக்களின் முன்னேற்றத் திற்கான முயற்சியைப் புரியுமாறு பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.


விதவையிலும் பணக்காரனியமா?
04.02.1934- புரட்சியிலிருந்து..

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ் அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செல வுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிரா மணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர் களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்க வேண்டும். இதற்குக் காரணம் விதவைகள் விடுதியில் தலைமை உத்தி யோகம் ஒரு பிராமண விதவை அம் மாளிடமும், விதவை விடுதி யில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள் களாலேயே நிரப்பப்பட்டிருக்கிற தென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது. கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராம ணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறுகிறோம்.

நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்
02.09.1934 - பகுத்தறிவு - கட்டுரையிலிருந்து..

நமது நாட்டில் பெண்கள் சமையலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக் கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதிகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பலப் பெண்களும் அப்படியே நினைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல்  ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள்.

சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்பந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய தேசத்து தேசியத் தலைவர்களும், மகாத்மாக்கள் என்போர்களுக்கும், பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினி போலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்ட மான நிலையில் நம் தென்இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை நாம் எழுதிக் காட்ட வேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ. கிருஷ்ணம்மாள் எம்.எ., எது கிரியம்மாள் ஆகியவர்களாவார்கள். இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்ச காலத்துக்கு முன்புதான் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி இருக்கிறார்கள். சில வருஷங்களுக்கு முன் மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும் வக்கீல் பரிட்சையில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள். தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்க மில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்திவருமா? என்று நினைக்கின்றோம்.

Banner
Banner