வரலாற்று சுவடுகள்

என்னைப் போன்றோர் சட்டசபைக்கு போக முடியுமா?

21.9.1930 - குடிஅரசிலிருந்து...

இன்றைய தினம் பூரண விடுதலையுள்ள அரசாங்கம் வந்து அதில் தேர்தல் நடைபெறுமானால் நானாவது என்னைப் போன்ற நண்பர்களாவது சட்டசபைக்குப் போகமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

10,000, 20,000, 30,000 ரூபாய் செலவு செய்து தான் உங்கள் பிரதிநிதியாக வேண்டும். அதுவும் ஜாதியைக் காப்பாற்றுகின்றேன், மனுதர்மத்தைக் காப்பாற்றுகின்றேன், கோவிலைக் காப்பாற்றுகின்றேன், சாமியின் பெண்டு பிள்ளைகள், தாசிகள் ஆகிய வற்றைக் காப்பாற்றுகின்றேன்,

மோட்சத்திற்கு கூட்டி விடும் தரகர்களைக் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்தான் அப்படிப்பட்டவருக்கும் ஓட்டுக் கிடைக்குமே அல்லாமல் எந்த யோக்கியனுக்காவது அறிவாளிக் காவது, சுயமரியாதைக்காரனுக்காவது ஓட்டுக் கிடைக்குமா என்று யோசித்துப் பாருங்கள். இதற்கு வெள்ளைக்காரர்கள் முட்டுக்கட்டை போடு கின்றார்களா? அல்லது நமது மக்களுக்கு அறிவில்லையா என்று யோசித்துப் பாருங்கள்.

9 ஆம் தேதி எங்கள் மாகாணத்தில் சட்டசபை எலக்ஷன் நடந்தது. அதில் வெற்றி பெறப்போகும் பிரதிநிதிகள் யார் என்று கருதுகிறீர்கள்? ஊர் மக்களிடம் 100க்கு 3, 4 வரையில் வட்டி வாங்கி பணம் சம்பாதித்து பார்ப்பானுக்கும், பாழும் கல்லுக்கும் அழும் கூட்டத் தார்களும், விளைந்தாலும், விளையா விட்டாலும் உதைத்து வரி வசூலிக்கும் ஜமீன்தார்களும் 1000, 2000, 5000,

10000க்கணக்கான ஏக்கர் பூமிகளை உடைய பெரிய மிராசுதாரர்களும் முனிசிபாலிடிகளும் ஜில்லா தாலுகா போர்டுகளைத் தங்கள் வியாபார தொழிலாய் உபயோகிக்கும் தல ஸ்தாபன வியாபாரி களும், மக்கள் ஒழுக்கங்களையும் குடும்பங்களைப் பாழாக்கிக் கொள்ளையடிக்கும் வக்கீல்களும் மற்றும் இவர்கள் போன்ற ஏழை மக்களைக் கொடுமை செய் பவர்களும், அவர்களது நன்மை, தீமையில் சிறிதும் கவலையில்லா தவர்களும் தவிர ஒரு சுயமரியாதை யுடையவராவது, யோக்கியராவது அங்கு இருக்கின் றார்கள் அல்லது வரப்போகிறார்கள் என்று கருத முடியுமா? என்று உங்களைக் கேட்கின்றேன்.

நான் சட்டசபைத் தவிர எல்லா ஸ்தாபனங்களிலும் இருந்திருக்கின்றேன். அவைகளின் அனுபவங்கள் எனக்கு நன்றாகத் தெரியும், ஈரோடு கோவில் பிரவேச முயற்சி என்ன ஆச்சுது? என்பது உங்களுக்குத் தெரியாதா? இன்னும் தெருப்பிரவேச முயற்சிக்குக் கூட தைரியமாய் யாரும் வெளிவர முடியாமல் ஆளுக் காள் பழி சுமத்தி பொறுப்பை நழுவ விட்டு விடுவதில் தான் இருக்கின்றது.

சுயமரியாதை இயக்கத்தில் கலந்து இருந்த பல பெரியார்களுக்குக் கூட சுயமரியாதை இயக்கத்திலிருந்து ராஜினாமா கொடுத்த பிறகுதான் வெற்றி கிடைத்திருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தில் கலந்திருக்கின்ற பல பெரியார்களுக்கு அதற்காகவே போட்டிகள் உண்டாயிற்று.

இவர்கள் எல்லோரும் சட்டசபைக்குப் போய் நமது பிரதிநிதிகளாக என்ன செய்யப்போகின்றார்கன் அல்லது என்ன செய்யக் கூடும் என்று கருதுகிறீர்கள்? நமது வரிப் பணத்தை எப்படி வெள்ளைக்காரனைப் போலவே கூட்டுக் கொள்ளை அடிக்கிறது? அதில் இன்னும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுப்பது என்பது போன்று திருட்டு சொத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் திருடர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதுபோல் இன்று சண்டைபோட்டு நாளைக்குக் கொள்ளை அடித்துப் புதுப்புது ஜமீன்தார்களாகவும் பாகம் பிரித்துக் கொள்ளவும்,

விற்கவும் முடியாத பிரபுக்கள் குடும்பக்காரர்களாகப் போவதைத் தவிர வேறு என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்கின்றீர்கள் மற்றும் நமக்கு ஏதாவது பாமர மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது என்று நினைத்தால் நம்மை பெரியா ரென்றும், தலைவர் என்றும், சுயமரியாதை இயக்கமே மேலானதென்றும் கூறித்திரிவார்கள்.

நமக்குச் செல்வாக்கு இல்லையென்று தெரிந்தால் சுயமரியாதை என்கின்ற பேரே எனக்குப் பிடிக்க வில்லை. மதத்தில் பிரவேசிப்பது தப்பு சாமிகளைச் குறை கூறுவது நன்றாய் இல்லை என்றும் நமது பெரியார் அரசியலில் பிரவேசித்து விட்டார் என்றும் நிரம்பவும் அவருக்குத் தலை கிறுகிறுத்து போய்விட்டது என்பது போன்ற எதையாவது சொல்லி விட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்து தான் சுயமரியாதைக்காரருடன் சேர்ந்தவரல்ல என்றும் சொல்லி விடுவார்கள்.

உதாரணமாக ஒரு  கனவான் உண்மையாக சுயமரி யாதைக் கொள்கைகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை யுடையவர்களாயிருந்ததோடு, விக்கிரக ஆராதனை யை மிகவும் வெறுப்பவராயிருந்தார். விக்கிரகங்களை உதைத்தால் (இன்னும் பலமான வார்த்தையில்) என்ன செய்யும்? என்று கூட ஒரு கூட்டத்தில் சொன் னவர்கள், அப்படிப்பட்ட கனவான்கள் விக்கிரகங் களைக் குற்றம் சொல்லாதீர்கள் என்று எனக்குப் புத்திமதி சொல்ல வேண்டியவரானார்.

காரணம் என்ன வென்று கருதுகின்றீர்கள்? இப்படிச் சொன்ன காரணத்திற்காக அவரைச் சில பிரதிநிதி ஸ்தானங்களில் தோற்கடிக்க அவரது எதிரிகள் முயற்சி செய்தார்கள். உடனே இப்படி ஒரு கரணம் அடித்து அந்த ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவராய் விட்டார். இந்தமாதிரி நிலையில் சிக்கிக் கொள்ள முடியாத பிரதிநிதிகள் இன்று நமக்கு இல்லவே இல்லை. இதை நம்புங்கள்! நம்புங்கள்!! யாராவது இருந்தால் அவர் நமக்குப் பிரதிநிதியாய் வர முடியாது.

எங்கள் ஜில்லாவில் பார்ப்பனராதிக்கத்தை ஒருவாறு ஒழித்தோமானாலும் அதற்குப் பதிலாக அவர்களைப் போன்ற வர்ணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடைய ஒருவரைத்தான் பிரதிநிதியாகக் கொண்டு வரமுடிந்தது. அதுவும் வேண்டா மென்றால் இன்னமும் மோசமானவர்கள் தான் வருவார்கள்.

ஆகவே இந்தக் கூட்டம்தான் இன்றைய நிலையில் உங்கள் சுயராஜ்யத்திலும், பூர்ண சுயேச்சையிலும் குடியேற்ற நாட்டந் ததிலும் இந்திய மக்களுக்குப் பிரதிநிதியாக வரமுடியும். ஒரு சமயம் காங்கிரசுகாரர்களே சட்டசபைகளைக் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் யார்? ஆகாயத் திலிருந்து குதித்து வரக்கூடியவர்களா? அநேகமாய் இதே ஆட்கள் தான் காங்கிரசின் பேரால் வருவார்கள் அல்லது இது போன்ற வேறு இரண்டொரு ஆட்களும் வரக்கூடும்.


தந்தை பெரியார் பொன்மொழிகள்

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும்.  மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி, - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத் தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

தேர்தல் முடிவு

21.9.1930 - குடிஅரசிலிருந்து...

பார்ப்பனரல்லாதார்களில் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கொடுமை செய்யப்பட்ட மக்கள், தொழிலாளிகள், கூலிக்காரர்கள், சாதாரண குடியானவர்கள் ஆகிய 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனசமுகத்திற்கு இத் தேர்தல் முடிவானது சரியான கூற்றுவன்- அதாவது அவர்களது உயிரை வாட்டத் தகுந்த தன்மையது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இந்தக் குற்றம் பிரதிநிதித்துவ அமைப்பைப் பற்றியதே ஒழிய வோட்டர்களைப் பற்றியது என்று நாம் சொல்ல வரவில்லை.

வோட்டர்களுக்கு புத்தியும், நன்மை தீமை அறியும் சக்தியும், வோட்டுச் செய்யும் தன்மையின் நாணயமும் உண்டாக்கும் வேலைக்கு இதுவரை எந்த சீர்திருத்தத்திலும் இடமில்லை. எந்தத் தலைவரும் அதற்கு முயற்சி செய்யவும் இல்லை. ஆகையால் அது விஷயத்தில் நாம் வோட்டர்களைப் பயிற்றும் முயற்சியில் இருக்க வேண்டுமே ஒழிய அவர்களைக் குற்றம் சொல்வது மூடத்தனமேயாகும்.

தவிர உண்மையான ஒரு யோக்கியன் என்பவன் அதாவது சமதர்மத்தில் லட்சியமுள்ள ஒருவன் இன்றைய தினம் ஒரு கிராமப் பஞ்சாயத்து சபைக்கு நின்றால்கூட வெற்றிபெற முடியாத நிலையில்தான் இன்று இந்திய வோட்டர்களின் அறிவும், சமதர்ம பிரதிநிதியின் நிலைமையும் இருக்கின்றது.

தவிரவும், சட்டசபையின் மூலம், ஒருவனுக்குத் தனது சுய நலப் பயன் பெற ஆசையில்லையானால் அங்கு வேலையும் இல்லை; வெற்றியும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலுக்கும் 10, 20, 30, ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியிருக்கின்றன. செலவு செய்யாமல் வோட்டர் களுக்குப் பெரிதும் பணம் கொடுக்காமல் வோட்டுபெற முடிவதில்லை.

பொதுக் காரியத்திற்கு உண்மையாய் உழைப்பவன் எதற்காகக் கையில் இருந்து பதினாயிரக்கணக்காகச் செலவு செய்யமுன் வருவான்?  அன்றியும் பணக்காரனுக்குத்தான் இப்படிச் செலவு செய்யமுடியும். பொது நலத்தில் ஈடுபடும் பணக்காரன் கிடைப்பதும் அருமை. ஏழைகள் ஈடுபட்டாலோ அவர்களுக்குப் பணமில்லாததால் அவர்கள் வர முடிவதில்லை.

ஆகையால் இந்த சட்டசபைகளை நாட்டுக்கு பெரும்பான்மை மக்களின் பிரதிநிதித்துவம் என்று யாராலும் சொல்லவே முடியாது. உதாரண மாக இப்போது வெற்றி பெற்று வந்திருக்கும் கனவான்களைப் பார்ப்போமா னால் கூட உண்மை நன்றாய் விளங்கிவிடும்.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஏற்பட்டுள்ள 30, 35 பொது ஸ்தானங் களுக்கு வெற்றி பெற்றிருக்கும் கனவான்கள் யாரென்றால் ஜமீன்தார்கள், லேவா தேவிக்காரர்கள், பார்ப்பனர்கள், வக்கீல்கள், 500, 1000, 10000 ஏக்கர் நிலங்கள் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய மிராசுதார்கள் ஆகிய வியாபாரிகள் இவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை.

இந்தக் கூட்டத்தார் ஏழை மக்களுக்கு பிரதிநிதிகள் என்றால் இவர்களை விட வெள்ளைக்காரர்களே அரசாட்சியில் இருப்பதில் என்ன கெடுதி என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில், மேற்கண்ட அத்தனை பேரும் ஏழைகளைப் பாமர மக்களைத் தாழ்த்திக் கொடுமைப் படுத்தி இம்சித்து வயிற்றிற்கில்லாமல் அடித்துத் துரத்தி அந்த நிலை பெற்றவர்கள் ஆவார்கள் என்பதோடு இனியும் அதே நிலையில் மேலும் முற்போக்கடையக் கருதிக் கொண்டிருப்பவர்களும் ஆவார்கள்.

ஆகையால் இவர்களது ஆட்சியைவிட மோசமான ஆட்சி உலகத்தில் வேறு எந்த ஆட்சியும் இருக்காதென்றுதான் சொல்லுவோம். ஆதலால் தேர்தல் முடிவைப் பற்றி பொதுவாக நாம் சிறிதும் சந்தோஷப்படுவதற்கில்லை. ஆனாலும் இவர்களுள் ஏதாவது தனிப்பட்ட நபர்களைப் பிடித்துக் கெஞ்சிக் கூத்தாடி ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கொடுமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் ஏதாவது நன்மை செய்து கொள்ள முடியுமா என்பதுதான் நாம் இனிச் செய்யவேண்டிய வேலையாகும்.

இப்பொழுது வெற்றி பெற்றவர் களெல்லாம் பெரிதும் தேர்தல்களில் தாங்கள் செலவழித்த பணத்தை எடுப்பதற்குக் கூடிக் கூடி யோசனையும் முயற்சியும் செய்துகொண்டி ருக்கும் வேலையில் முனைந்திருக்கின்றார்கள் ஆனதால் அவர்கள் யோசனை முடிந்து ஆய்ந்து ஓய்ந்த பிறகு நமது லட்சியத்திற்கு ஏதாவது வகை உண்டா என்று முயலுவோம்.

 

கூழுக்குப் போட உப்பு இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்! பாலுக்குச் சர்க்கரை இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! காலுக்குச் (நடப்பதற்கு) செருப்பு இல்லையே என்பதும் ஒரு கவலைதான்! குறைதான்! பல்லக்குக்கு (உட்காரு வதற்கு) பட்டு மெத்தை இல்லையே என்பது ஒரு கவலைதான்! குறைதான்!

கூழுக்கு உப்பு, பாலுக்குச் சர்க்கரை இரண்டும் நாக்கு ருசிக்காகத்தான்! காலுக்குச் செருப்பு, பல்லக்குக்குப் பட்டு மெத்தை இரண்டும் அங்கங்களின் நலத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்! ஆனால், கூழுக்கு உப்பு, காலுக்குச் செருப்பு வேண்டுமென்கிற கவலை வேறு! பாலுக்குச் சர்க்கரை, பல்லக்குக்குப் பட்டுமெத்தை வேண்டுமென்கிற கவலை வேறு!

முந்தியது, குறைந்த பட்சமான கூழைக்குடித்தாவது உயிர் வாழவேண்டுமே என்கிற முயற்சி; இறக்கும் வரையிலும் இடையறாதுழைக்க எவ்வித இடையூறும் வந்து விடக்கூடாதே என்கிற முன்னெச்சரிக்கை!

பிந்தியது, உயர்ந்தபட்சமாய், உணவுக்கு மேற்பட்டதாய், மேனி மினுமினுப்பை வேண்டி மேலான நறுமணத்தோடு தீஞ்சுவையையுடைய பாலுக்கு, மற்றொரு சுவையையும் ஊட்டி மகிழ்ச்சியோடு பருகவேண்டும் என்கிற முயற்சி; தனக்காக நாலு பேர் நடந்து சுமக்க, தான் நடக்காமலே ஏறிச் சவாரி செய்தாலும், உட்கார்ந்து செல்லும்போது உடலுக்கு வாட்டம் வந்து விடுமே என்கிற முன்னெச்சரிக்கை!  கவலை, எச்சரிக்கை என்கிற பெயரளவில், இரண்டும் ஒன்றாகச் சொல்லப்படுவதாக இருந்தாலும், இந்த இரண்டு வகையாரின் கவலையும், எச்சரிக்கையும் வெவ்வேறு நிலையில் பிறந்தவை! வேறு வேறான போக்கில் வளர்பவை! முந்தியது, ஏமாறியதால். பிந்தியது, ஏமாற்றியதால், அந்த வகை யில் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடை யவை! இந்த இருவகையான நிலையும் இப்போதைய நிலைமைகள் அல்ல. பழங்காலத் தமிழ் நாட்டில் நெடுங்காலமாகப் பரிகாரஞ் செய்யப்படாமல் வளர்ந்து வந்த நிலைமைகள்! பின்பு இவ்விரண்டு போக்கும், அதனதன் வழியிலே, போதிய வளர்ச்சியடைந்து விட்ட நிலைமைகள்!  அதாவது கூழுக்கு உப்பு இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து கூழே இல்லையே என்கிற நிலைமை! பாலுக்கு சர்க்கரை இல்லையே என்கிற நிலைமை வளர்ந்து, வளர்ந்து பல சுவை சேர்த்துப் பருகிய பாலுக்குப்பின், அது ஜீரணிக்க முடியவில்லையே என்கிற நிலைமை! ஒரு வகையில் இறக்கம்! மற்றொரு வகையில் ஏற்றம்!

இந்த இறக்கமும் ஏற்றமும் ஏன்? இவ்விரண்டையும் சமநிலைப்படுத்தும் வழி என்ன? என்கிற சிந்தனையில், இந்த ஏற்ற இறக்கத்தை அரசியல் துறையில் உத்தியோக விஷயங்களில் சமனிலைப்படுத்த முயன்ற முயற்சிதான் அந்த நாள் ஜஸ்டிஸ் கட்சி!

பல ஜாதிகள், பல வகுப்புகள் உள்ள இந்த நாட்டில், ஏகபோகமாய் ஒரு வகுப்பாரே உத்தியோகங்களில் ஆதிக்கஞ்செலுத்துவது உதவாது, ஒழிக்கப்பட வேண்டியது - எல்லா வகுப்பினரும் இடம்பெறவேண்டும் என்று இதமாக, நீதியைக் காட்டிக் கேட்டபோது புளியேப்பக்காரர்கள் செய்த புன்முறுவலினால் - பொச்சாப்புரைகளால் - திமிர்வாதத்தினால் விளைந்த வளர்ச்சி தான் இன்றையத் திராவிடர் கழகம்!

அறிவுத் துறையின் அதிபதிகள் என்று கூறிக் கொண்டு, அரசியல் உத்தியோக விஷயங்களில் நூற்றுக்கு நூறு தாங்களே இருப்பது சரியல்ல என்பதை, அந்த நாளில் நம் பார்ப்பனத் தோழர்கள் உணர்ந்து, ஏதோ மற்றவர்களும் இடம் பெறட்டுமே என்றெண்ணி இருப்பார்களே ஆனால், மற்றவர்களின் உரிமையை நாம் வஞ்சித்தாலும் வஞ்சனையில் ஒரு நேர்மையைக் காட்டுவோம் என்று கருதியிருப்பார்களே ஆனால், நிச்சயமான முடிவு நீதிக்கட்சியே தோன்றியிருக்காது! அந்த வஞ்சனையில் வளர்ச்சியில்லா விட்டால், உத்தியோகங்களில் ஏதோ ஒரு பங்கு என்று கேட்ட நீதிக்கட்சி ஒழிந்து, உத்தியோகத்தில் மட்டுமல்ல, உலக வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் - ஊராட்சியின் முழுப்பகுதியிலும், எங்களுக்குப் பங்கு அல்ல, உரிமையுண்டு என்று முழங்கும் திராவிடர் கழகம் ஆகியிருக்க முடியாது! இவ்வுண்மையை நமது பார்ப்பனத் தோழர்கள் எண்ணிப் பார்க்கத் தவறுவது - வஞ்சனையை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவது நன்மையைத் தரக்கூடியதுதானா? இதை எண்ண வேண்டியவர்கள் அவர்கள்!

அடுத்துக் கெடுப்பது! அணைத்துக் கொல்லுவது! காட்டிக் கொடுப்பது! கழுத்தை அறுப்பது! இதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைப் போர் முறை என்பதைச் சுயமரியாதை உணர்ச்சியுடைய ஒவ்வொரு திராவி டரும், ஏன்? வரலாறு அறிந்த ஒவ்வொருவரும் நன்கு அறிவர். இப்போக்கைப் பார்ப்பனியம் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றோம். இந்த நயவஞ்சக நடத்தை இனியும் வேண்டியதுதானா? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்! திராவிடர் கழகம் வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பது; திராவிடர் கழகத்தைத் தீர்த்துக்கட்டுக!! இது! ஒருபுறம் மத்திய ஏகாதிபத்திய யூனியனுக்குப் பார்ப்பனர்கள் செய்யும் வேண்டுகோள்! மற்றொருபுறம் மாகாணப் பார்ப்பன அடிமை சர்க்காருக்குச் செய்யும் கட்டளை! எங்கள் மீதுள்ள குறைகளைப் பற்றியே கூறிக்கொண்டிராதீர்கள்! உங்களுடைய பல திட்டங்களும் நாங்கள் உவந்து ஏற்றுக்கொள்ளக் கூடியன! அப்படியிருக்க, நீங்கள் கூறும் நாட்டு நலனுக்கு நாமெல்லோரும் சேர்ந்து ஏன் பாடுபடக் கூடாது!  யோசியுங்கள்! இது, நம் கழகத்திற்கு, கழக தந்தை பெரியாருக்கு பார்ப்பனர்களால் செய்யப்படும் வேண்டுகோள்! இந்த இருவேறு முயற்சி, பார்ப்பனர்களின் நல்லெண்ணத்தை - நன்னடத்தையைக் காட்டுவதா? நயவஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டுவதா? சிந்திக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்! தோளோடு தோளிணைத்து நாட்டுக்குத் தொண்டாற்றுவோம் என்று நமக்குக் கூறும் நம் அருமைப் பார்ப்பனர்கள், இந்த மாதம் 19ஆம் தேதிதான் சேலத்தில் பார்ப்பன மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள். அப்போது பல தீர்மானங்களையும் செய்திருக்கிறார்கள். செய்யப்பட்டிருப்பதாய்ப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறும் தீர்மானங்களிலிருந்து, பரம்பரை நரிக்குணத்தை எப்படிப் பாதுகாப்பது என்கிற ஒரு வழியில் தான் அந்தமாநாடு கவலைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமே தவிர, நமக்கு அவர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கு ஒத்ததாய் - மனிதப் பண்பைக் காட்டுவதாய் - நீதியையோ நேர்மையையோ விரும்புவதாய் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. நாட்டு மக்களை இழிவு செய்வதாய், நாலாஞ் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்று கூறி மனித உரிமையைச் சூறையாடும் வேதம், வளர்ந்து தழைத்தோங்க வேண்டும்! இது ஒரு தீர்மானம். மற்ற வகுப்பு மாணவர்கள் எக்கேடுகெட்டாலும் எங்களுக்கு கவலையில்லை; எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே உயர்ந்த படிப்புப் படித்தாக வேண்டும். இதற்குத் தடையாய் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கூறுவது ஒரு தீர்மானம். இப்படி நாங்கள் ஒரு பட்சமாய், எங்கள் நலனுக்கே அஸ்திவாரம் போட்டு வேலை செய்தாலும், எங்களைப் பற்றி யாரும் துவேஷங் கொள்ளக்கூடாது. எங்கள் மீது நாட்டோர் நல்லெண்ணங் கொள்ளச் செய்யவேண்டியது இன்றைய மாகாண சர்க்காரின் முதல் வேலை என்கிற மற்றொரு தீர்மானம்.

இன்றைய மாகாண சர்க்காரில் பெரும்பாலோர் சூத்திரர்களாய் இருப்பதினால்தான், பார்ப்பனர்களின் தனி வளர்ச்சிக்குப் பாதகமாய் இருக்கிறது. மாகாண சர்க்காரை ஆட்டிவைத்து அவர்களைக் கொண்டே முதலில் நம் எதிரிகளை அழித்தொழித்து, பிறகு அவர்களையும் ஒழித்துக்கட்டி, நமது நலத்தை நாம் பேணுவதென்றால், மத்திய சர்க்காரைப் பலப்படுத்துவதும், மத்திய சர்க்கார் செயலை விளம்பரப்படுத்துவதும், மத்திய சர்க்கார் பிடிப்பில் இந்நாட்டை நிலை நிறுத்துவதும் தான் நாம் செய்யவேண்டிய திருப்பணி என்று கூறுவது இன்னொரு தீர்மானம்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பார்ப்பனோத்தமர்களின் பேச்சுக்கள் என்று, பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கும் பேச்சுகளைப் பார்த்தாலும், தாங்கள் வேறானவர்கள், உயர்ந்தவர்கள் என்கிற திமிரையும், யார் எதனால், எப்படி அழிந்தாலும் இனநலம் செழித்து வளர வேண்டும் என்கிற சுயஜாதி வெறியையும், எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் எங்கள் மீது துவேஷம் கொள்ளாதீர்கள் என்கிற இதோபதேசத்தையும், எங்கள் இன நன்மைக்காக இந்த நாட்டை எவனுக்கும் காட்டிக் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்கிற கயமைக் குணத்தையும்தான் கண்டுகொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மாநாட்டுக்குப் பிறகு, அடுத்தபடியாக, மாகாணத் திற்கு வந்திருக்கும் ஏகாதிபத்தியப் பட்டேலிடம் இவர்கள் காவடி தூக்கி இருக்கிறார்கள் என்பதைப் பட்டேல் பிரபு அவர்கள் பேச்சுகளிலிருந்து தெரி கிறது. பார்ப்பனியத்தின் அழிவு வேலைகளைப் பகிரங்கப்படுத்தி, நச்சுக் கிருமிகளால் நாசமாகாதீர் என்று நாட்டோரை எச்சரிக்கும் ஒரே ஒரு விடுதலையை ஒழித்து விட வேண்டுமென்கிற ரூபத்தில், நம்மை அண்டவரும் பார்ப்பனர்களின் காவடி ஆட்டம் நடந் திருக்கிறது. சென்னை சத்தியமூர்த்திக்குப் போட்டியாகப் பாம்பே சத்தியமூர்த்தி என்பதாகக் காங்கிரஸ்காரர்களால் புகழப்படுபவர் நம் பட்டேல் பெருமான் அவர்கள். இந்தப் பெருமான்தான், சுரண்டும் கூட்டத்திற்குப் பாதுகாப்பாக, சுரண்டும் கும்பலின் பிரதிநிதியாக பவநகரை நமக்கு அருளியவர். இவரின் இப்போதையக் குணாதிசயங்கள் வேறு என்று கூறப்பட்டாலும், ஒரு ஏகாதிபத்திய வெறியைக் காட்டத் தவறவில்லை இவரின் சென்னைப் பேச்சுக்கள்! இத் தகைய குணாளர் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டு, நியாயத்தை உதறித்தள்ளி, நீதியைக் குழிதோண்டிப் புதைப்பீர்! என்பதாக பார்ப்பனிய அடிமை சர்க்காரான, மாகாண மந்திரி சபையினருக்கு உபதேசம் புரிவாரானால் அது ஆச்சரியப்பட வேண்டியதல்ல. விடிந்தால் தெரிகிறது, வெள்ளை முட்டையா? கருப்பு முட்டையா என்கிற சங்கதி!

ஆனால், பார்ப்பனர்கள் பரம்பரையாகவே நாம் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்று துணிந்து திட்டம் போட்டுச் செயல் செய்கிறார்களே, இதைக் கண்டு நாம் உண்மை யாகவே பச்சாதாபப்படுகிறோம்! பார்ப்பனர்களின் திட்டத்தால் - சூழ்ச்சியால் இன்று அவர்களின் எண்ணம் - திராவிடர் கழகம் ஒழிய வேண்டுமென்கிற விருப்பம் நிறைவேறலாம்; நிறை வேற்றியும் விடலாம்.

ஆனால், பின் விளைவு என்ன? அரசாங்க உத்தியோகத்தில் பங்கு கேட்ட நீதிக்கட்சியை, அய்ம் பதாயிரம் அடிகீழ் புதைக்கப்பட்டதாக அகமகிழ்ந்தனர் முன்பு! அந்தப் புதைகுழியிலிருந்து பெரும்பூதம் தோன்றிவிட்டதே; பங்கல்ல, உரிமை என்கிறதே! உத்தியோகத்திலல்ல, ஊராளும் ஆட்சியில் என்கிறதே! என்று இப்போது ஓலமிடுகின்றனர்! இதை ஒழித்துக் கட்டுவது எப்படி? இதற்குச் சமாதி எழுப்புவது எப்படி? என்று சதித் திட்டமிடுகின்றனர் இன்று! திட்டத்தின் வெற்றிக்குப் பின் சிந்தை பூரிக்கலாம், உண்மைதான்! ஆனால் சமாதியிலிருந்து மற்றொன்று தோன்றுமே; அது அன்பை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் கழகத்தைப்போல அகிம்சை வழியில் நில்லாதிருக்குமானால், அதைத்தாங்கி நிற்கும் பார்ப்பனர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதை எண்ண வேண்டியவர்களும் அவர்கள்தான்!

‘குடிஅரசு' - தலையங்கம், 26.02.194924.8.1930 - குடிஅரசிலிருந்து...
சங்கராச்சாரி மதம் பவுத்த மடங்களில் நெருப்பு வைத்ததும், சைவ மதம் சமணர் களைக் கழுவேற்றினதும், வைணவ மதம் புத்த விக்கிரகங்களை உடைத்து உருக்கினதுமான காரியங்கள் எல்லாம் நினைத்துப் பார்ப் போமானால் அந்த காலத்தில் மகமதியர்கள் செய்ததாகச் சொல்லப்படுபவைகள் எதற் கும் இக்காரியங்கள் இளைத்ததல்ல. என்று தோன் றும். ஆனாலும் மகமதிய மதம் வாள் கொண்டு பிரசாரம் செய்யப்பட்டதா இல்லையா என்பதில் இன்னமும் தகரார் இருக்கின்றது, மகமதியர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. மற்றபடி அதைத் தங்கள் எதிரிகளால் தங்கள் மீது கற்பிக்கப்பட்ட ஒரு பழி என்று சொல்லுகின்றார்கள்.

ஆனால் சமணர்களைச் சைவர்கள் கழு வேற்றியதை சைவர்களே ஒப்புக் கொண்டு தங்களாலேயே எழுதி வைத்து புண்ணிய சரித்திரமாக இன்றும் பிரச்சாரம் செய்வதுடன் அதன் பெருமையைக் காட்டிக் கொள்ள வருஷந் தோறும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் பல இடங்களில் உற்சவங்கள் நடத்திக் காட்டப்படுகின்றன. அக்கோயில்களில் இன்றும் கழுவேற்றிய காட்சிகள் சித்திர ரூபமாய் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன. அது போலவே வைணவர்களும் புத்த மத விக்கிரகத்தை அழித்ததற்கு ஆதாரமாய் சிறீரங்கம் கோயில் இருப்பதுடன், அவ்விக்கிரகத்தைத் திருடி உடைத்த திருமங்கையாழ்வாரின் சரித்திரத்தில் இதையொரு பெருமையாகவும் எழுதி புண்ணிய சரித்திரமாகப் பாவித்து தினமும் படிக்கப்பட்டும் வருகின்றன. இவைகள் ஒரு புறமிருக்க இன்றைய தினமும் எனக்கு வரும் சில கடிதங்களையும், என்னைப் பற்றி பேசும் பல பேச்சுகளையும் பார்த்தாலும் எனது கொள்கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் சைவ வைணவர்களின் வார்த் தைகளைப் பார்த்தாலும் அவைகளும் மகமதியர் செய்ததாய்ச் சொல்லப்படும் வாள் பிரச்சாரத்திற்குச் சிறிதும் இளைத்ததல்ல வென்றே தோன்றும்.

கிறிஸ்துநாதர் ஏன் சிலுவையில் அறையப் பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷமருந்தச் செய்யப் பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒழியப்பட்டார்,? என்பவைகளை எல்லாம் கவனித்தால் ஆரம்பகாலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரச்சாரங்களின் கதி இப்படித்தான் இருந்து வந் திருக்கின்றன. என்பது விளங்கும் இவைதவிர இன்றைய தினமும் இந்து மத தர்மத்தில் இருக்கும் தர்மங்கள் அதாவது நாஸ்திகர்களை நாக்கறுக்க வேண்டும், கண்ணைக் குத்த வேண்டும், சித்திரவதை செய்ய வேண்டும். நாட்டை விட்டுத்துரத்த வேண்டும் என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கேட்கின்றேன்?
மற்றும் இந்து வேத சாஸ்திரங்களைப் படித் தால் நாக்கறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும், பார்த்தால் கண்ணைக் குத்த வேண்டும் மனதில் ஏறிவிட் டால் நெஞ்சைப் பிளக்க வேண்டும், என்பன வெல்லாம் எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது? என்று கேட்கிறேன்.

மற்றும் பெரியோர் வாக்கைப் புராண இதி காசங்களை எவன் தர்க்க புத்தியால் விவகாரம் பண்ணுகின்றானோ அவன் நாஸ்திகனாவான். அப்படிபட்டவனை அரசன் தண்டிக்க வேண்டும் என்பனவாகிய வெல்லாம் எந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?

மற்றும் நந்தன் நெருப்பில் பொசுக்கப்பட்டது போன்ற கதைகள் எந்தத் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டது.

ஆகவே உலகில் மதப் பிரச்சாரம் என்பதே மூர்க்கத்தனத்தையும் பலாத்காரத்தையும் கொண்டதே யொழிய அனுபவத்தில் அன்பு மயமான மதம் உலகில் ஒன்றுமே இல்லை என்றே சொல்லுவேன்.

இந்து வேதத்தை எடுத்துக் கொண்டாலும் அந்த காலத்திய வேத மதக்காரர்களுக்குத் தங்கள் எதிர் மார்க்கக்காரர்களை அடிக்கவும், கொல்லவும் செய்வதும், அப்படிச் செய்ய சக்தி இல்லாவிட்டால் அவர்களைக் கொல்ல வேண்டும் அழிக்க வேண்டும் என்று தங்களது கடவுள்களைத் தோத்திரம் பண்ணுவதுமான காரியங்கள் நிறையப் பார்க்கலாம்.

ஆகவே எப்பொழுதும் மத விஷயத்தில் கையிலானவர்கள் எல்லாம் பலாத்காரத்திலும் கையிலாகாதவர்கள் எல்லாம் கடவுளை வேண்டியும் சாபம் கொடுத்தும்தான் இருக் கிறார்கள்.


24.8.1930 - குடிஅரசிலிருந்து...
இன்றைய நிலைமையில் நாம் இந்து முசுலீம் ஒற்று மைக்குப் பாடுபட ஆசை கொண்டிருக்கின்றோம் என் றாலும் இந்தியாவை இந்தியர்களே ஆளுவது என்று ஏதாவது ஒரு காலத்தில் நடக்கக் கூடியதானாலும் ஆகலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்து முசுலீம் ஒற்றுமை ஏற்படுவதென்பது சுலபத்தில் முடியா தென்பதே எனது அபிப்பிராயம். நான் இப்படிச் சொல்லுவது பற்றி உங்களில் சிலர் திடுக்கிடலாம்.

இரு சமூக ஒற்றுமைக்கும், என்றைக்கும் மதக் கொள்கைகள் என்பது முட்டுக் கட்டையாகவேதான் இருக்கிறது. மதத்தைவிட மோட்சத்தைவிட மக்கள் ஒற்றுமை முக்கியமும் அவசியமுமானதாகும் என்று பட்டால்தான் இரு சமூகமும் ஒற்றுமையடைய முடி யும். அப்படிக்கில்லாதவரை இப்படியே வெறும் வாய்ப்பேச்சு ஒற்றுமையாகவே இருக்க வேண்டியது தான். மற்ற நாட்டின் மக்கள் நடந்து கொள்வதைப் பார்த்தாவது நாம் நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை. நமக்கு மதமெல்லாம் நடை, உடை, பாவனை முதலிய வேஷத்தில் இருக்கின்றதே தவிர மதம் எதற்காக என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றதோ அதற்காக உபயோகப்படக் கூடியதாயில்லை. இன்றையதினமும் மதமும், சமயமும் ஒருவனுக்கு அவன் அணியும் வேஷம் என்றுதான் மதத்தில் பட்டவர்களில் 100க்கு 99 பேர்கள் நினைத்துக் கொண்டு அதன்படி நடந்து வருகிறார்கள். பொதுவாக அந்த உணர்ச்சியும் வேஷ மும் ஒழிந்தாலொழிய உலக மக்களுக்கு ஒற்றுமையும் சாந்தமும் கண்டிப்பாய் கிடையவே கிடையாது.
நிற்க, சென்னையிலிருந்து வந்திருக்கும் ஜனாப் பஷீர் அகமது சையீது சாயபு அவர்கள் இப்போது சென்னை சட்டசபைக்கும் அபேட்சகராக இருக்கிறார். ஆதலால் அவர் இந்தப் பிராந்தியத்திற்கு வந்து தனது மகமதிய சகோதரர்களிடத்தில் பேசிப் போக வந்திருக்கிறார். ஆகவே அவர்கள் முதலில் சில விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். அவர்கள் பேசியபிறகு முடிவுரையாக கடைசியில் நான் பேசுகிறேன் என்று சொல்லி ஜனாப் பஷீர் அகமது சையீது சாயபு அவர்களைப் பேசும்படிக் கேட்டுக்கொண்டார்.

சகோதரர்களே! பெரியோர்களே!  நிகழ்ச்சிக் குறிப் பில் மற்றொரு கனவான் பேசுவார் என்றிருந்தது. ஆனால் அது நிறுத்தப் பட்டு விட்டது. முதலாவதாக ஜனாப் பஷீர் அகமது அவர்கள் இன்றைய விசேடத் தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் எம்.ஏ.பி.எல். படித்து பட்டம் பெற்ற வர்கள். அவர்கள் பேசியதிலிருந்து மதத்தில் எவ்வளவு ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்பது  தெரிகிறது. அவர்கள் இதுவரை சொன்னதை விட வேறு  விசேட மாகச் சொல்ல எப்படித்தான் முடியும். அவர்கள் பொது வாழ்வு முக்கியமானது. நான் எதிர்பாராமலே இங்கு வந்து நண்பர் எடுத்துச் சொன்னார்கள். அது மிகவும் சிலாகிக்கத் தக்கதேயாகும்.  ஆகையால் நான் இலாம் சமுகம் இந்து சமூகமாகிய இருவருக்குமாக சில சொல்லுகிறேன். அதைப் பற்றிச் சொல்லுவது மிகையாகாது. இசுலாம் மத தத்துவம் அநேக மாய் உலக மக்கள் எல்லோருக்குமே பொருத்தமானது. ஏனெனில் அது சமீபத்தில் ஏற்பட்ட மதமானதினால் மிகவும் திருந்திய மதமென்றே சொல்லுதல் வேண்டும்.
உலகமெல்லாம் ஒரு காலத்தில் காட்டுமிராண்டித் தனமா யிருந்த பிறகு நாளாக நாளாக பல வழிகளிலும் சீர்திருத்தமடைந்து வந்திருக்கின்றது. இந்து மதத்திற் கும் இசுலாம் மதத்திற்கும் சரியான பெயர் சொல்ல வேண்டுமானால் பழையமதம் புதியமதம் என்றுதான் சொல்லவேண்டும். பழைய மதக்காரரும் புது மதக் காரரும் சுலபத்தில் ஒற்றுமையாக முடியாது. இருவரும் மக்கள் நன்மைக்கு மதம் ஏற்படுத்தப்பட்டது என்று கருத வேண்டுமே ஒழிய மதத்திற்காக மக்கள் ஏற்பட் டார்கள் என்று கருதக்கூடாது. மதத்தைக் காப்பது என்கின்ற உணர்ச்சியே தப்பான உணர்ச்சியாகும். மக்கள் நன்மையையும் அவர்களது சேமத்தையும் சாந்தியையும் காப்பாற்றுவது தான் பொது நலவாதிகள் கடமை என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டும். இந்துக் களும் முகமதியர்களும் ஒரே நாட்டிலே ஒரே மாதிரி சுதந்திரத்துடன் வாழ வேண்டியவர்களேயாவார்கள். இதற்கு முட்டுக்கட்டையாக மதக் கொள்கைகளைப் போட்டுக் கொண்டிருந்தால் ஒரு நாளும் ஒற்றுமையாய் வாழ முடியாது. ஆகையால் இருவரும் வேஷத்தை விட்டு உண்மை மனித தர்மத்தையும் அன்பையும் அடிப்படையாய் வைத்து சகோதரர்களாக வேண்டியது மிக்க அவசியமானது. முகமதியர்களைவிட இந்துக்களே ஒற்றுமைக்கு அதிக இடையூறாக இருக்கின்றார்கள். இந்துக் கொள்கை  மிக்க மூடக் கொள்கையும், அன்புக் கும் ஒற்றுமைக்கும் இடந்தராததுமாய் இருக்கின்றது. மகமதியர்களும் வேஷ வித்தியாசத்தை விட்டு அவர் மத முக்கிய தத்துவங்களைக் கடைபிடித்தால் யாருடனும் கூடி வாழ சவுகரியம் உண்டு. ஆகவே இருவரும் சீர்திருந்தி மக்களைச் சீர்படுத்தி ஒற்றுமை யாக வாழவேண்டும்.

Banner
Banner