வரலாற்று சுவடுகள்

10.01.1948 - குடிஅரசிலிருந்து...

பிச்சைக்காரன் என்பவன் யார்?

பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்.

செல்வவான்கள் என்பவர்கள் யார்?

தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

தரித்திரர்கள் என்பவர்கள் யார்?

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் - நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். தங்கள் வரவுக்கும், தகுதிக்கும் மேல் வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.

 

10.01.1948  - குடிஅரசிலிருந்து....

சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ் வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போக வேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும் படியான காரியமல்ல.

அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காம லிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது நன்றாய்த் துளிர்த்து தழைத்துக் கொண்டுதான் இருக்கும். எனவே உற்பத்தி தானமாகிய பார்ப்பனர்களிடமிருந்து அதை ஒழிக்க வேண்டும். அவர்களால்தான் இவ்வித்தியாசங்கள் பரவுகின்றன.

உதாரணமாக எங்கள் வீட்டிற்கு முன் ஒரு குழாய் இருக்கிறது. அதில் தண்ணீர் பிடிக்க ஒரு பார்ப்பனச் சகோதரி வரும்போது ஒரு சுண் டைக்காய் பிரமாணம் புளியும், பஞ்சபாத்திரத்தில் தண்ணீரும் கொண்டு வந்து குழாயைப் புளியால் விளக்கிக் கழுவி, பின்பு தண்ணீர் பிடித்துக்கொண்டு போக ஆரம்பித்தாள். இதைப் பார்த்த நம் சகோதரிகள் நெல்லிக்காய் அளவு புளியும், ஒரு தோண்டி தண்ணீரும் கொண்டு வந்து புளியால் விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள்.

இதைக் கண்ணுற்ற நம் முகமதிய சகோதரிகளும் கொளுமிச்சங்காய் அளவு புளியும், முக்கால் குடம் தண்ணீரும் கொண்டு வந்து புளியால் குழாயை விளக்கிக் கழுவித் தண்ணீர் பிடித்து எடுத்துக் கொண்டு போகப் பழகினார்கள்.

அந்த முகமதிய சகோதரியை தடுத்து உங்கள் மதத்திற்கு வித்தியாச மில்லையே; நீங்கள் கூட ஏன் இப்படிக் கழுவித் தண்ணீர் பிடிக்கிறீர்கள்? என்றால், எனக்கு என்ன தெரியும்? இப்படித்தான் தண்ணீர் பிடிப்பது வழக்கமோ என்னமோ என்று கருதி நான் செய்து வருகிறேன் என்கிறாள்.

இவ்வளவுக்கும் காரண மாயிருந்தவர்கள் யார் என்று பாருங்கள். பார்ப்பனர்கள் இப்படிச் செய்யாதிருந்தால் இவ்வித வழக்கங்கள் பரவ வழியில்லை.

04.12.1948 - குடிஅரசிலிருந்து....

இந்திய யூனியனின் மத்திய சர்க்கார் நேரடி நிர்வாகப் பொறுப்பிலுள்ள ரயில்வே இலா காவில் நமது நாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் அடியெடுத்து வைத்தவுடன் சீர்திருத்த வேலையைச் செய்யத் தொடங்கி இருக் கிறார்கள்! இவர்களின் இந்தச் சீர்திருத்தத்தைப் பார்க்கும் போது இந்தத் தொடக்கமே முடிவாகவும் இருந்து விடட்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இப்படி நாம் ஆசைப்படுவதற்கு காரணம், இவர்களின் சீர்திருத்தப்பணியை நோக்கும்போது, அய்யர் பார்ப்பனர்கள் என்பவர்கள், அய்யங்கார் பார்ப்பனர்களைப் பற்றிக் கூறும் கிண்டல்தான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அய்யர், அய்யங்கார் ஆகிய இருவகைப் பார்ப்பனர் களும், பார்ப்பன சமுதாயம் பற்றிய பொதுக் காரியங்களில்தான் ஒருவருக்கொருவர் எவ்வளவு பகையாய் இருந்தாலும் - எவ்வளவு கருத்து மாறுபாடுடைய கொள்கைக்காரர்களாய் இருந்தாலும் - அவைகளை எல்லாம் அப் போது மறந்துவிட்டு ஒன்றுகூடிக் கொள்வார் களேத் தவிர, மற்றபடி அவர்களுக்குள்ளேயே ஏதாவது தகராறு என்றால் அது மிக மிக பிரபலமாகவும் ருசியுள்ளதாகவும் இருக்கும். காலதேச வர்த்தமானங்களை அனுசரித்து இந்த இரண்டு வகைப் பார்ப்பனர்களும் கோவில் முறையில் சண்டையிட்டுக்கொண்டு, கோர்ட்டுக்கு போய் திராவிடன் பணத்தைப் பங்குபோடும் பழக்கம் இப்போது சில கால மாகக் குறிப்பிடத்தகுந்த முறையில் இல்லை என்றாலும் சுமார்த்தப் பார்ப்பனர்களும், வடகலை அய்யங்கார்களும் சாதாரண வாழ் விலேயே சண்டை பிடித்துக் கொள்வதை சர்வ சாதாரணமாகக் காணலாம். ஆனால் அவர் களோடு சற்று நெருங்கிப் பழக வேண்டும். அய்யங்கார் பாப்பனர்களைப் பற்றி குறை சொல்ல வேண்டும், என்றெண்ணுகிற அய்யர் பார்ப்பனர்கள் போடாப்போ! எல்லாம் ஒங்க வைஷ்ணவாள் செம்புதான்! என்று வேடிக் கையாகவும் அதே சமயத்தில் மானமுள்ள நெஞ்சை ஈட்டியால் குத்துவதைப் போலவும் நறுக்கென்று கூறுவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இதற்கு அவர்களும் வேடிக்கையாக ஏதாவது திருப்பிக் கூறுவார் களே தவிர மானரோஷத்துடன் நம்மைப்போல் கைகலந்துவிடமாட்டார்கள். இந்த வைஷ்ண வாள் செம்பின் ரகசியம் தெரியாதவர்களுக்கு, இதை அனுபவிக்க முடியாது. ஆகவே அந்த ரகசியத்தை கூறிவிடுகிறோம். இது பித்தளையினாலோ தாமிரத்தினாலோ, அல்லது இரண்டும் கலந்தோ செய்யப்படுகிற செம்பு. அடிப்பாகம் (வயிறு) பெருத்திருக்கும், வாயின் விரிவுக்கேற்றபடி கழுத்தும் இல்லாமல் கையே நுழைய முடியாதபடி கழுத்து மிகமிக சிறுத் திருக்கும். இந்த செம்பு துலக்கியவுடன் நல்ல பளபளப்பாக, முகம் காட்டும் கண்ணாடி போல காட்சி அளிக்கும். ஆனால் உள்ளேயோ...! அது தான் கையே நுழைய முடியாதே. அதற்குள் புகுந்திருக்கும் பாசியை -அழுக்கை எப்படி போக்குவது! உள்ளே அழுக்கும் வெளியே மினுமினுப்பும் உடையதுதான் அய்யங் கார்கள் செயல்கள் என்பது இதன் ரகசியம்.

நம் நாட்டு ரயில்களில் சமீப காலத்தில் யாரேனும் பிரயாணம் செய்து, ரயில்வே ஜங்ஷன்களில் செய்யப்பட்டிருக்கும் பெயர் மாறுதல்களை உற்றுப் பார்த்திருந்தால், இந்த சீர்திருத்தம் என்ன என்பது தெரியும். ஜங்ஷன் களில் உள்ள உணவுக் கடைகளின் பெயர்கள் எல்லாம், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே மாற்றி எழுதப்பட்டிருக்கின்றன. அய்ரோப் பியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்பது அய்ரோப் பியன் டையில் ரெவ்ரமெண்ட் ரூம் என்ப தாகவும், இந்தியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்பது வெஜிடேரியன் (சைவ) ரெவ்ரமெண்ட் ரூம் என்பதாகவும், முஸ்லிம் டீடால் என்பது ஜெனரல் டீ ஸ்டால் என்பதாகவும் புகுத்தியும் மாற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.

இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கோபால்சாமி அய்யங்கார் ஒருவர் மட்டும்தான் பொறுப்பா? அல்லது சந்தானம் அய்யங்காரும் சேர்ந்தா? என்பது எப்படி இருந்தாலும், இந்தப் பெயர் மாற்றம் வைஷ்ணவாள் செம்பைத்தான் நினைப்பூட்டுகிறது.

மதம், சாதி, இனம், ஆண் அல்லது பெண் ணாயிருந்தால் பிறந்த இடம் ஆகியவற்றின் ஒன்றில் அல்லது பலவற்றின் காரணமாக எந்த பிரஜைக்கும் எதிராகச் சர்க்கார் பாரபட்சமாக நடக்கக் கூடாது என்று 4 நாளைக்கு முன் அரசியல் நிர்ணய நாடக சபாவில் நிறைவேற்றப் பட்டிருக்கிற, அடிப்படை உரிமை என்கிற தீர்மானம் இருக்கிறதே அதை முன்னறிந்து பிரதிபலித்ததுதான் இந்த ரயில்வே கடைகளின் பெயர் திருத்தம் என்றாலும் சரி. தீர்மானம் எப்படி பிற நாட்டவர்களின் கண்களில் மண் ணைத் தூவிவிட்டு, உள்நாட்டில் வருணாசிரம பாகுபாடும் அதன் வக்கிரமப் போக்கும் தலைவிரித்தாட இடங்கொடுக்க உதவுகிறதோ, அதைப் போலவேதான் பெயர் திருத்தமும் வெளித் தோற்றத்தில் மிகவும் உயர்ந்த சமத்துவ முறையிலும் நடைமுறையில் வருணாசிரம முறையிலும் அமைந்திருக்கிறது. நமது நகைச் சுவையரசு என்.எ.கே. அவர்கள் கூறுவது போல், திராவிட நாட்டிலேயே தீண்டாமை இல்லாத இடம் ரயில்களும் ரயில்வேக்களும் தான். தீண்டாமையைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாத இந்த திராவிட நாட்டு ரயில்வே நிலையங்களில் மட்டும் எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? இந்து - முஸ்லிம் வித்தியாசத்தை நீக்குவதற்காக என்றால் அது நம் திராவிட நாட்டைப் பொறுத்தவரையிலும், இல்லாத ஒன்றை உண்டென்று பெயர் பண்ணி, அதை ஒழித்துக்கட்ட முயலும் முயற்சியாகும். இந்து-முஸ்லிம் சாயாக்களுக்கு இடமும், அதையொட்டி மதவெறிக்கு இடமுமாக இல்லாத திராவிட நாட்டில், தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் ஏன் இந்தத் திருத்தத் திருப்பணியில் இறங்க வேண்டும்?

பழைய, இண்டியன் ரெவ்ரமெண்ட் ரூமை எடுத்துக் கொண்டால் சமைப்பதும், அதைச் சப்ளை பண்ணுவதும், அதை ஏற்று நடத்தும் மானேஜிங் பொறுப்பும் பார்ப்பன சமுகத்துக்கே ஏகபோகமாயிருந்து வந்திருக்கிறது. இப்போது இண்டியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்பது வெஜிட்டேரியன் ரெவ்ரமெண்ட் ரூம் என்று மாற்றப்பட்டிருப்பதால் சமைப்பவர்கள் மாறிவிடுவார்களா? சப்ளையர்கள் மாறிவிடு வார்களா? மானேஜர்கள் மாறிவிடுவார்களா? அதாவது சைவ உணவு தயாரிக்கும் மற்ற திராவிடர்களும், வெஜிட்டேரியன் ரெவ்ர மெண்ட்டை ஏற்று நடத்த அய்யங்காரர்களின் இந்தத் திருத்தம் பயன்படுமா? அப்படியில்லாத வரையிலும் ஏன் இந்தக் கண் துடைப்பு வேலை?

- தொடரும்

28.02.1948 - குடிஅரசிலிருந்து...

மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும், நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும், மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்?

இன்றைய கடவுள் ஒரு ஒத்தைக் காசுக்குக்கூடப் பிரயோஜனம் இல்லை. இன்றைய மதம் ஒரு கடுகளவுக்குக்கூட நமக்குப் பிரயோஜனமில்லை. நமக்கு வேறு மதம், வேறு கடவுள், வேறு கட்டளை வேண்டும்.

- பெரியார்

06.03.1948 - குடிஅரசிலிருந்து....

நம் இயக்கத்தில், திராவிடர் கழகத்தில் உள் ளோருக்கு கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விட்டதானது, திராவிட சமுதாயத்துக்கு இருந்து வரும் சமுதாய இழிவு நீக்கிக் கொள்ளும் உணர்ச்சியை ஞாபகப்படுத்த வேண்டும் என்பதற்காகும். இதைக் கழக அங்கத்தினர் பலரும் மற்றும் சில திராவிடர்களும், ஆணும் பெண்ணும் ஆதரித்து அணிந்து வருகிறார்கள்.

இந்தப்படியாக கருஞ்சட்டை அணிபவர்களுக்கு எந்தவித நிபந்தனையோ, எந்தவித ரிஜிடரோ, சேனை போன்ற உடையோ, யூனிபாரமோ, அணிவகுப்போ, ஆயுதமோ மற்றும் இவை போன்ற ஒரு சேனைக்கோ படைக்கோ உள்ள பயிற்சிகளோ மேற்கொண்டது கிடையாது.

இருப்பினும், சென்னை அரசாங்கம் இதை ஒரு அமைப்பாகக் கருதி சட்ட விரோதமாக்கி இருக்கிறது என்ற போதிலும், நான் திராவிடப் பொது மக்களுக்கு அடிக்கடி தெரிவித்து வருவதுபோல், இது விஷயத்தில் நம் கழக அங்கத்தினரும், திராவிடப் பொதுமக்களும் பொறுமையைக் கையாண்டு சாந்தமும் சமாதானமுமாய் நடந்து வரவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மாறாக எங்காவது பயிற்சி அணிவகுப்பு இருக்குமானால், அதைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும் என்பதைத் தவிர, இந்த உத்தரவினால் நமக்குள் எந்தவித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாக கருதவேண்டாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Banner
Banner