
புதுடெல்லி, ஆக.22- உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி நடைபெற்றபோது, பதவி உயர்வில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உ.பி. அரசின் அந்த முடிவை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்துவிட்டது.
அதைத்தொடர்ந்து பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரும்படி பகுஜன் சமாஜ் கட்சி வற்புறுத்தியது. மற்ற கட்சி தலைவர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதாவை இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வகுப்பினருக்கு வழங்கப்படும் சலுகை தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு அடிப்படையில், பல்வேறு மாநில நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அனைத்து வழி முறைகளையும் அரசு ஆராயும் என்றும் உறுதி அளித்தார்.
கூட்டத்தில் பேசிய பாரதீய ஜனதா மற்றும் சில கட்சிகளின் தலைவர்கள், இது அரசியல் சாசன திருத்த மசோதா என்பதால் அது சட்டப்படி செல்லத்தக்கதாக இருக்க வேண்டும் என்றும், எனவே இந்த பிரச்சினையில் உள்ள சாதக பாதகங்களை கவனமாக ஆராய வேண்டும் என்றும், அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள்.
இதனால் இன்று தாக்கல் செய்வதாக இருந்த மசோதாவை தள்ளி வைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய மத்திய மந்திரி நாராயணசாமி கூறியதாவது :
பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சில மாநிலங்கள் கொண்டு வந்த சட்டத்தை கோர்ட்டுகள் ரத்து செய்து இருப்பதால் இந்த பிரச்சினையில் கவனமாக செயல்பட வேண்டும் என்றும், சட்ட ரீதியாக செல்லுபடியாகும் சட்ட திருத்தத்தை கொண்டு வரவேண்டியது அவசியம் என்றும் கூறினார். அப்படிப்பட்ட சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வரும் என்றும் அவர் கூறினார்.