
புதுடெல்லி, ஆக. 20- இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நடந்த மோதலில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்போரின் போது இலங்கை அரசுக்கு இந்தியா நவீன ஆயுதங்கள், வழங்கியது. சிங்கள ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. இதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் அய்.நா. சபையில் இலங்கை அரசு மீது அமெரிக்கா போர்க் குற்ற தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது இந்தியாவிடம் இலங்கை அரசு, போர்க்குற்ற தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட சீனா, இலங்கையில் மெல்ல மெல்ல ஊடுருவ தொடங்கி உள்ளது. கொழும்பின் மத்திய பகுதியில் தனியார் ஏஜென்சி நிறுவனத்திற்கு ரூ.100 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தை தற்போது இலங்கை அரசு சீனாவை சேர்ந்த விமான நிறுவனமான கேடிக்குக்கு தாரை வார்த்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. கேடிக் விமான நிறுவனத்திற்கு இலங்கை அரசு மிகப்பெரிய நிலத்தை விற்றதை அறிந்ததும் இந்திய அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந்திய அதிகாரிகள் இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். சீன விமான நிறுவனம் கொழும்பில் தாங்கள் வாங்கியுள்ள நிலத்தில் அய்ந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்டவும் திட்டமிட்டுள்ளது.
கொழும்பின் முக்கிய பகுதியில் சீன விமான நிறுவனத்திற்கு இலங்கை நிலத்தை தாரை வார்த்திருப்பது இந்தியாவை கவலை அடையச் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களை இலங்கையில் அனுமதிப்பது இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று மத்திய வெளியுறவு அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இந்தியாவின் வடபகுதியை சீனா மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகிறது. தற்போது தென் பகுதியிலும் தனது கால் தடத்தை பதிக்கத் தொடங்கி உள்ளது.