
சென்னை, ஆக. 20- கோடியக்கரை அருகே கடந்த சனிக்கிழமை இரவு மீன்பிடித்து கொண்டிருந்த 9 'தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி' விரட்டியடித்தது. நடுக்கடலில் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களையும் சிங்களர்கள் தாக்கி விரட்டியடித்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அப்பாவி தமிழக மீனவர்கள் மீது கடந்த 18 ஆம் தேதி இலங்கை கடற்படை வீரர்கள் கொடூர தாக்குதல் நடத்தி இருக்கும் கவலைக்குரிய சம்பவம் பற்றி உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள வானவன் மகாதேவி மற்றும் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனி பகுதியை சேர்ந்த 18 பேர் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கண்ணாடி இழையால் செய்யப்பட்ட 5 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்கள் வெள்ளப்பள்ளம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது டி-146 என்ற எண் பொறிக்கப்பட்ட படகில் வந்த சிங்கள கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினார்கள். தாக்குதல் நடத்தியதோடு நிற்காமல் தமிழக மீனவர்களின் 5 படகுகளில் இருந்த அய்ஸ் பெட்டிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மீன்பிடி கருவிகளை அள்ளி கடலுக்குள் வீசி அட்டூழியம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் தமிழக மீனவர்கள் கடலுக்குள் விரித்திருந்த வலைகளையும் அறுத்து நாசப்படுத்தியுள்ளனர்.
சிங்கள வீரர்களின் தாக்குதலில் ராமையா என்பவரது மகன் மீனவர் குப்புசாமி படுகாயம் அடைந்துள்ளார். ரப்பர் கட்டைகளால் தாக்கப்பட்ட மேலும் 7 மீனவர்கள் சிறுகாயம் அடைந்துள்ளனர்.
19 ஆம் தேதி காலை கரை திரும்பிய காயம் அடைந்த 8 மீனவர்களும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை வீரர்கள் அத்துமீறி நடந்து வருவதற்கு இந்த சம்பவம் மேலும் ஒரு உதாரணமாகும்.
மீன்பிடி தொழில் மூலம் வாழ்வை நடத்தி வரும் ஏழை, அப்பாவி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை இலங்கை கடற்படை அழிக்க தொடர்ந்து குறி வைத்து முயல்கிறது. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குவது மிகச் சாதாரணமாக தொடர்வது மிகவும் கவலை தருகிறது.
நான் ஏற்கனவே கடந்த 23.7.2012 அன்று உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனே தலையிடாதவரை, இத்தகைய சம்பவங்கள் அடுத்து வரும் மாதங்களிலும் தொடரத்தான் செய்யும்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு மிகவும் மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை துணிச்சலாக ஈவு இரக்கமின்றி தாக்கி துன்புறுத்தி வருகிறது.
இரு நாடுகளிடையே தூதரக அளவிலான பேச்சுவார்த்தையின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், மீனவர்கள் தாக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் பேப்பரிலேயே உள்ளது.
மேலும் இலங்கை கடற்படை விதிகளை மீறி செயல்படுகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து மிக கடுமையான நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுடன் இந்தியா பேசவேண்டும். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது கண்டிப்புடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் பாதுகாப்புடன் மீன்பிடிக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் இருக்கவும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ளார்.