
சென்னை, ஆக. 19- அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து செல்போன் மூலமாக பரவிய எம்.எம்.எஸ். தகவல்களால், நாடு முழுவதிலும் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.
சென்னையில் இருந்தும் கடந்த 3 நாட்களாக ரெயில் மூலமாக ஆயிரக்கணக்கானோர் சென்றுள்ளனர். சென்னையில் எந்த பிரச்சினையும் இல்லை. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இங்கிருந்து புறப்பட்டு செல்லவேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில், வடகிழக்கு மாநிலத்தவர்களின் வசதிக்காக சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டது. 98402 95100, 96770 66100, 97890 88100 ஆகிய 3 செல்போன்களில் எந்த நேரத்திலும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் பேசலாம். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 நாட்களாக இந்த எண்களில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பலர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். தினமும் 100 அழைப்புகள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த வண்ணம் உள்ளது.
சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் போனில் பேசி, எப்போது எங்கள் ஊருக்கு ரெயில் புறப்படுகிறது என்று கேட்கிறார்கள். இவர்களிடம் காவல்துறையினர் நீங்கள் இங்கேயே தங்கியிருந்து வேலை செய்யுங்கள். ஏதாவது பிரச்சினை என்றால் உடனே காவல்துறையினரை அழையுங்கள் என்று கூறி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விசாரிக்கிறார்கள்.
சென்னையில் படிக்கும் தங்களது மகன்கள் பற்றி, பெற்றோர்கள் நலம் விசாரிக்கிறார்கள். காவல்துறை அவர்களிடம், சென்னையில் பிரச்சினை ஒன்றும் இல்லை நீங்கள் பயப்படவேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.
இன்று 9 மணிக்கு புறப்பட்ட சாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு, அதில் 400 பேர் புறப்பட்டு சென்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 18 ஆயிரம் வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.