Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, ஆக. 19-வங்காள தேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் மாநி லங்களில் ஊடுருவி வசித்து வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் இந்த ஊடுருவல் பிரச்சினை பல வருடங்களாக நீடித்து வருகிறது. இந்த மாநிலங்களில் வசிக்கும் பூர்வீக மலைவாழ் மக்களுக்கும் அவர்களுக்கும் அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

கடந்த 23-ஆம்  தேதி அசாம் மாநிலத்தில் போடோ இன மலைவாழ் மக்களுக்கும் வங்காள தேசத்தில் இருந்து குடியேறிய சிறுபான்மை மக்களுக்கும் மோதல் ஏற் பட்டது. இது இன கலவரமாக உருவெடுத்து பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் இருதரப்பிலும் 77 பேர் கொல்லப்பட்டனர்.

கலவர பீதியால் 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அசாம் மாநில அரசால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் தொடர்ந்து கலவரம் நீடிக்கிறது. அசாம், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் வசிக்கிறார்கள்.

குறிப்பாக மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் அதிக அளவில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும் குடும்பத்தைப் பிரிந்து பல மாநிலங்களில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அசாம் கலவரம் பற்றி 4 நாட்களுக்கு முன் செல்போன்களில் எஸ்.எம்.எஸ். தகவல்களும், எம்.எம்.எஸ். மூலம் காட்சிகளும் பரவியது. எஸ்.எம்.எஸ். தகவலில் 20-ஆம் தேதி அல்லது 21-ஆம்  தேதி நீங்கள் தாக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.

எம்.எம்.எஸ். காட்சிகளில் ஏராளமானோர் பலியாகி இருப்பதாக படங்கள் இடம் பெற்று இருந்தது. இந்த எஸ்.எம்.எஸ். தகவலும், எம்.எம்.எஸ். காட்சிகளும் வடகிழக்கு மாநில மக்கள் பயன்படுத்தும் செல்போன்களில் வேகமாக பரவியதால் அவர்கள் மத்தியில் பெரும்பீதி நிலவியது. சில இணைய தளங்களிலும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் வெளியானது.

இதையடுத்து தென் மாநிலங்களில் தங்கியுள்ளவர்களை உடனே சொந்த ஊருக்கு புறப்பட்டு வாருங்கள் என்று குடும்பத்தினர் செல்போனில் அழைப்பு விடுத்தனர். இதனால் மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் வெளியேறி ரெயில்களில் சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றனர். இதுவரை 1 லட்சம் மக்கள் வெளியேறி சொந்த ஊர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் இருந்து மட்டும் 30 ஆயிரம் பேர் வெளியேறினர். தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். சென்னை வழியாக 12 ஆயிரம் பேர் கவுகாத்தி ரெயிலில் பயணம் செய்ததாக ரெயில்வே வட்டார தகவல் கூறுகிறது. மத்திய-மாநில அரசுகள் உறுதியளித்த பின்பும் தொடர்ந்து வடகிழக்கு மாநில மக்கள் வெளியேறிய வண்ணம் இருக்கிறார்கள். இதற்கிடையே அசாம் கலவரம் பற்றியும், பீதியை பரப்புபவர்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்காக 2 டி.அய் .ஜி.க்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை முழுவீச்சில் நடந்து வருகிறது.

அவர்கள் கலவரம் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் முக்கிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் கலவரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரகவனம் செலுத்தி வருகிறது. பீதியை நம்ப வேண்டாம் என்று தொடர்ந்து உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் வதந்தி எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். தகவல்களை தடுக்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனங்கள் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்.எம்.எஸ். பரப்புவோர் யார் என்பதை கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் புலனாய்வு ஏஜென்சிகள் இறங்கின. இதில் பாகிஸ்தான் சதியே இதற்கு காரணம் என்றும், பாகிஸ்தானில் இருந்து தான் இந்தியாவுக்குள் வதந்தி எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். காட்சிகள் பரவ விடப்பட்டது என உறுதி செய்யப்பட்டது.

மேலும் எம்.எம்.எஸ். காட்சிகளை உளவுத்துறை ஆய்வு செய்தபோது அது போலியாக சித்தரிக்கப்பட்டவை, கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இரண்டு விதமான காட்சிகள் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று சமீபத்தில் அசாமில் புயல் மழையில் பலியானவர்கள் உடல்கள். மற்றொன்று மியான்மரில் ஒரு மாதத்துக்கு முன் பூகம்பத்தில் பலியானவர்கள் உடல்கள். இவை இரண்டையும் கிராபிக்ஸ் மூலம் ஒன்றாக இணைத்து அசாம் கலவரத்தில் கொல் லப்பட்ட சிறுபான்மை மக்கள் என வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்த காட்சிகள் உருவாக்கப்பட்டு அங்கிருந்தபடியே மொத்தமாக இந்தியாவுக்குள் செல்போன்கள் மூலம் ஊடுருவ செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இணைய தளங்களும் பதிவு செய்து பரவ விட்டுள்ளன. அந்த இணைய தளங்கள் எவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்த இணைய தளங்கள் இந்தியாவில் செயல்படுவது உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இதில் பாகிஸ்தானின் உளவு துறையும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று இந்தியா சந்தேகிக்கிறது. இந்தியாவில் வன்முறையை தூண்டி விட்டு அமைதியின்மை ஏற்படுத்த நீண்ட காலமாக பாகிஸ்தான் சதி செய்து வருகிறது. அதன் ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியே தற்போதைய வதந்தி எஸ்.எம்.எஸ்.., எம்.எம்.எஸ். காட்சிகள் என்றும் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

இந்த எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். காட்சிகள் பற்றி கம்ப்யூட்டர் நிபுணர்கள் மூலம் விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் பாகிஸ்தானிடம் தனது எதிர்ப்பை மத்திய அரசு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்