
புதுடெல்லி, ஆக. 17- நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் லாபம் அடைந்த நிறுவனங்கள் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் இன்று மத்திய கணக்கு தணிக்கை குழு (சி.ஏ.ஜி.) அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் 2004ஆம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் சுரங்க உரிமங்கள் பெற்றதாகவும், இதற்கு சரியான ஏல நடைமுறைகள் கடைப்பிடிக்காததால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு 116 மில்லியன் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனமான சாசன் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு கூடுதலாக 3 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ரிலையன்ஸ் நிறுவனம் 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கை சரியான வழிமுறைகளை கொண்டு உருவாக்கப்படவில்லை என்றும், அந்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு எதுவும் நடக்கவில்லை என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் தெரிவித்தார்.