
புதுடெல்லி, ஆக 9-நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. மத்திய அரசு, வருகிற 2014 நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு புதிய இலவச திட்டம் ஒன்றை அறிவிக்க தயாராகி வருகிறது. அது, மனநோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டம் ஆகும். இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மருத்துவமனை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொது மருத்துவமனை இவற்றில் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த சிகிச்சைக்காக ஒரு நோயாளிக்கு ஒரு தடவை ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இந்த உதவி தொகை ரூ.1.5 லட்சத்தை தாண்டுமானால் வல்லுனர் குழுவின் பரிசீல னைக்கு பிறகே முடிவு செய்யப்படும். இலவச மருத்துவ திட்டத்துக்காக, சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரீய ஆரோக்கிய நிதியில் இருந்து செலவிடப்படும். இந்த நிதியில் இருந்து இதுவரை கேன்சர் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களுக்கு மட்டுமே நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இனி இது விரிவுபடுத்தப்பட உள்ளது.
நீரிழிவு, மன அழுத்தம், மனக்கவலை, மனக்குழப்பம், விரக்தி உள்ளிட்ட மன நோய்களுக்கும் இந்த நிதியில் இருந்து உதவி செய்யப்படும். ஏழை நோயாளிகளின் உடனடி நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக, அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளரிடம் முன் தொகையாக ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கையிருப்பாக கொடுத்து வைக்கப்படும். குறிப்பாக, எய்ம்ஸ், ஆர்.எம்.எல். ஆஸ்பத்திரி, சப்தர்ஜங் ஆஸ்பத்திரி, லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி (டெல்லி), பி.ஜி.ஐ. எம்.இ.ஆர். (சண்டிகார்), ஜிப்மர் (புதுச்சேரி), நிம்ஹான்ஸ் (பெங்களூர்), சி.என்.சி.ஐ. (கொல்கத்தா), எஸ்.ஜி.பி.ஜி.ஐ.எம்.எஸ். (லக்னோ), காந்தி மெமோரியல் அண்டு சார்பு மருத்துவ மனைகள் (லக்னோ), ஆர்.ஐ.எம்.எஸ். (இம்பால்), என்.இ.ஐ.ஜி.ஆர். எச்.எம்.எஸ். (ஷில்லாங்) ஆகிய ஆஸ்பத்திரிகளின் மருத்தவ கண்காணிப்பாளர்களிடம், மருத்துவ மனைகளின் தரத்தை பொருத்து ரூ.10 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை முன் தொகையாக (அட்வான்ஸ்) கொடுத்து வைக்கப்படும். இதுபற்றி, மத்திய சுகாதார துறை மந்திரி குலாம்நபி ஆசாத் கூறியதாவது:-
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 7 சதவிகிதம் பேர் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 13 கோடி பேர், மன அழுத்தம், விரக்தி, மனக் கவலை, அமைதியின்மை போன்ற மன நோய்க்கு ஆளாகி உள்ளனர். இவர் களில் 90 சதவீகிதம் பேருக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார வசதி இல்லாததாலும், மன நல மருத்துவர்களின் பற்றாக் குறையும் ஆகும். நாட்டில் மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் 10 லட்சம் பேருக்கு ஒரு மன நல மருத்துவர்கள் என்ற விகிதாச்சாரத்திலும், நோயாளிகள் அடிப்படை யில் பார்த்தால் 4 லட்சம் நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற அளவிலும் உள்ளனர்.
சராசரியாக நான்கில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மன நோய் உள்ளது. எனவே, அதிகமான மன நல மருத்துவர்கள் தேவைப்படு கின்றனர். அதேபோல், நர்ஸ், மன நலம் சார்ந்த சமூக சேவகர்கள், பற்றாக்குறையும் அதிகளவில் உள்ளன. நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மன நோய் சிகிச்கைக்கு என, 30 ஆயிரம் படுக்கைகள் இருக்க வேண்டும். ஆனால், 200 படுக்கைகள் மட்டுமே உள்ளன. மன நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிதாக 11 மையங்களை அரசு தொடங்கி வருகிறது. மேலும் 99 அரசு மன நல ஆஸ்பத்திரிகளின் தரம் உயர்த்தப்படும். அதே போல், அரசு மருத் துவக்கல்லூரிகளில் உள்ள மன நலம் தொடர்பான படிப்புகள் விஸ்தரிக்கவும், நவீனப்படுத்தவும், நட வடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.30 கோடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டில் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். முன்பு 40 வயதுக்கு மேற்பட்டவர்களை தான் இந்த நோய் பாதித்தது. இப்போது சிறு குழந்தைகளுக்கு கூட நீரிழிவு நோய் ஏற்படுகிறது. பணக்கார நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கு, பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்தும் விதமாக, ஏழைகள் முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வகையில், இலவச மருத்துவ திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. நீரிழிவு நோய்க்கும் ராஷ்ட்ரீய ஆரோக்கிய நிதியில் இருந்து உதவிகள் செய்யப்பட உள்ளது.