
சென்னை, ஆக. 9- மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது, மிகப்பெரிய கிரேன் நடு அச்சு முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; ஆறு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லூரி அருகே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. சாலையில் பள்ளம் தோண்டி, இரும்பு கம்பிகளை மிகப்பெரிய கிரேன் மூலம் பள்ளத்துக்குள் இறக்கி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நேற்றிரவு 8.30 மணிக்கு பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இரும்பு கம்பிகளை மொத்தமாக கட்டி 25 மீட்டர் பள்ளத்தில் இறக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது விபத்து நடந்தது.
இதை 70 டன் எடையைத் தாங்கும் 50 அடி உயர கிரேன் இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது கிரேனின் நடு அச்சு முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.இதில் பணியில் இருந்த எட்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிந்து சம்பவ இடத்திலே நசுங்கி உயிரிழந்தார். ஏழு பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.