Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.6- மறுதிருமணம் செய்தாலும் விபத்தில் இறந்த முதல் கணவரின் வாரிசு என்ற முறையில் இழப்பீடு பெறுவதற்கு மனைவிக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் நெல்போனா. இவரது, கணவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வேகமாக வந்த கார் மோதியதில் பலியானார். இதையடுத்து அந்த காருக்கு காப்பீடு செய்திருந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ரூ.7 லட்சம் இழப்பீடு கேட்டு நாகர்கோவில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் நெல்போனாவும், விபத்தில் பலியானவரின் தந்தை சீனிவாஸ் டைட்டசும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், நெல்போனாவுக்கு ரூ. 4 லட்சமும், சீனிவாஸ் டைட்டசுக்கு ரூ 1.28 லட்சமும் இழப்பீடு வழங்க, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டு மதுரை கிளையில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் அப்பீல் செய்தது. அதில், ``நெல்போனா வழக்கு விசாரணை நடக்கும்போதே மறுதிருமணம் செய்து கொண்டார். எனவே அவர் விபத்தில் இறந்தவரின் மனைவி என்ற அந்தஸ்தை இழந்து விட்டார். அவருக்கு இழப்பீடு வழங்கத்தேவை இல்லை. எனவே தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறி இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். விமலா பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்போனா மறுதிருமணம் செய்து கொண்டதால், அவர் முதல் கணவரின் மனைவி என்ற அந்தஸ்தை இழந்து விட்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது.

இதுபோன்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், மறுதிருமணம் செய்துக் கொண்டதால் ஒரு பெண் தன் முதல் கணவனின் இறப்புக்கான இழப்பீட்டை பெற தகுதி கிடையாது என்று கூறமுடியாது என்று கூறியுள்ளது.

அதேபோல ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், `விதவை வாழ்க்கை என்பது சமூகத்தில் மிக கொடுமையான வாழ்க்கை, விதவை பெண் பிறரின் கருணையில் வாழவேண்டியதுள்ளது.

அதனால், மறுதிருமணம் செய்து கொண்டதால் ஒரு பெண், இறந்துபோன தன் முதல் கணவரின் சட்டப்பூர்வமான வாரிசு இல்லை என்று எந்த சட்டமும் கூறவில்லை' என்று கூறியுள்ளது.

விதவை திருமணம் என்பது தவிர்க்க முடியாத சமூக மாற்றமாகும். இந்த சமூக மாற்றம் சட்டத்தின் மூலமாகவோ அல்லது நீதித்துறையின் விவாதத்தினாலோ உருவானாலும், இந்த மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல ஒரு மாற்றமாகும். இந்த மாற்றம் சமூத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற சமூக மாற்றத்துக்கு சட்டம் ஒரு உத்வேகத்தை வழங்கவேண்டும். சமூக மாற்றத்துக்கு சட்டம் ஒரு கருவியாக இருக்கவேண்டும். கணவர் சிறு வயத்தில் இறக்கவில்லை என்றால் மறுதிருமணம் என்பதை அந்த பெண் சிந்தித்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.

விதவை மறுதிருமணத்தில் உளவியல் ரீதியான தடைகளும் உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். விதவை திருமணத்தை ஊக்குவித்தால்தான், அந்த பெண்ணுக்கு விதவை என்ற சமூக களங்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

எனவே நெல்போனாவுக்கு தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பின்படி, இழப்பீடாக ரூ.4 லட்சத்தை, வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும். விபத்தில் இறந்தவரின் தந்தை சீனிவாஸ் டைட்டஸ் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டதால் அவருக்கு வழங்கவேண்டிய ரூ. 1.28 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும்.

அவரது வாரிசுகள் தீர்ப்பாயத்தில் மனு செய்து, அந்த தொகையை பெற்றுக் கொள்ளலாம். இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்