
பெரம்பூர், ஆக. 5- சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் கனால் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களது மகன் வினோத். புரசைவாக்கத்தில் உள்ள மெய்யப்பசெட்டியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வான். நேற்று ஆட்டோ வராததால் பேருந்தில் பள்ளிக்கூடம் சென்றான். மாலையில் பள்ளி முடிந்து 7பி பஸ்சில் சென்றான். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் இரண்டு படிக்கட்டுகளிலும் மாணவர்கள் தொங்கியபடி வந்தனர்.
பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் இருந்து ஓட்டேரி செல்லும் சாலையில் பேருந்து திரும்பிய போது படிக்கட்டில் இருந்து வினோத் தடுமாறி கீழே விழுந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பஸ்சின் பின் சக்கரம் வினோத் தலையில் ஏறியது. தலை நசுங்கி மூளை சிதறி அதே இடத்தில் வினோத் துடிதுடித்து இறந்தான்.
அதைப் பார்த்ததும் பயணிகள் அலறினார்கள். உடனே பேருந்து ஓட்டுனர் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகர் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.
புளியந்தோப்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த தாய் வரலட்சுமியும், உறவினர்களும் வினோத்தின் உடலை பார்த்து கதறி அழுத்தது பரிதாபமாக இருந்தது.
எல்லா முக்கிய இடங்களிலும் காவலர்கள் நிற்கிறார்கள். பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்பவர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்தால் உயிர்ப் பலிகளை தடுக்கலாம் என்று பயணிகள் கூறினார்கள்.