Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.1-சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மெமோரியல் ஹால் அருகே தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை, தென்சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-

சென்னையில் பரவி வரும் காலரா, வாந்தி பேதியை கட்டுப்படுத்தவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதை தடுத்து நிறுத்தவும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்த நான் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கி இருக்கிறேன்.

நான் மேயராக இருந்த போது மக்களின் சேவகனாக பணியாற்றினேன். மா.சுப்பிரமணியன் மேயராக இருந்த போதும் போனில் தகவல் கிடைத்தாலே சம்பவ இடத்துக்கு உடனே சென்று பார்ப்போம். ஆனால் இப்போதைய மேயரோ பாதி நேரம் கோட்டையில் இருக்கிறார். மீதி நேரங்களில் எங்கே வலம் வருகிறார் என்று தெரியவில்லை.

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக சொன்னால் குடிநீருக்கும் மாநகராட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். தி.மு.க. ஆட்சியில் நாங்கள் இப்படி சொல்ல மாட்டோம். சென்னையில் வாந்தி- பேதி, காலரா பரவுகிறது என்று சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்காமல் மறுப்பு சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். காலராவை வைத்து அரசியல் நடத்தும் கட்சி தி.மு.க. கிடையாது.

காலரா பாதிப்பு இருப்பதாக அதிகாரிகளே சொல்கிறார்கள். காலரா இல்லை என சவால் விட்டு மேயர் பேசுவதற்கு நாங்களும் பதில் சவால் விட்டு எங்கள் மதிப்பை குறைத்துக்கொள்ள விரும்ப வில்லை. மக்கள் நலனில் அக்கறை எடுத்து தான் கேட்கிறோம். எங்கள் சவாலை ஏற்க தயாரா?

நாளையே ஒரு குழு அமையுங்கள். அதில் ஒரு கட்சிக்கு ஒரு பிரதிநிதி மற்றும் பத்திரிகையாளர் பிரதிநிதிகளையும் இடம் பெற செய்து குழு அமையுங்கள். நீங்கள் சொல்லும் பகுதிக்கு குழு வந்து பார்வையிட தயார். காலரா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வரும். இல்லை என்றால் நாங்கள் சொல்லும் பகுதிக்கு நீங்கள் வாருங்கள். காலரா இருப்பதை நிரூபித்து காட்டுகிறோம்.

எனவே காலரா பிரச்சினையில் வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளாட்சித்துறை அமைச்சர் தயாரா? நாங்கள் போராட்டத்துக்கான வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருக்க மாட்டோம். வரும் போராட்டங்களை விட்டு விடவும் மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வாந்தி-பேதியை தடுக்க தவறிய மாநகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். சென்னை மாநகராட்சி ஈக்கள், கொசுக்களின் இருப்பிடம், காலரா நோயின் பிறப்பிடம் என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

நடிகை குஷ்பு உள்பட அனைவரும் கண்டன கோஷங்களை ஆவேசத்துடன் கூறினார்கள். ஆர்ப்பாட்ட மேடையில் கழிவு நீர் கலந்த குடிநீர் பாட்டில்களில் கொண்டு வரப்பட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. இதே போல் கொசுவலை அணிந்தும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 2 மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்