
அகமதாபாத், ஜூலை. 29-குஜராத் மாநிலத்தில் மோடி அமைச்சரவையில் மீன்வளத்துறை இணை மந்திரியாக இருப்பவர் புருஷோத்தம் சோலங்கி. இந்த துறை சார்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் மீன் பிடிக்க ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்த முடிவுக்கு அப்போதைய தலைமைச் செயலாளர் டி.ராஜகோபாலன் எதிர்ப்பு தெரிவித்தார். இதை பொருட்படுத்தாமல் மீன்பிடி ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்த விவகாரத்தில் ரூ.400 கேடி ஊழல் நடந்துள்ளது. எனவே, மந்திரி சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இஷாக் மராடியா என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் கெடு முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, ஜூன் 30-ஆம் தேதி மந்திரிசபை கூட்டப்பட்டது. பின்னர் நீதிமன்றத்திற்கு அளித்த பதிலில், சோலங்கிக்கு எதிராக வழக்கு எதுவும் இல்லை மீன் பிடி காண்டிராக்ட் விடப்பட்டதில் ஊழல் நடைபெறவில்லை என்று கூறியது.
இதையடுத்து இஷாக் சின்ஹா மூலம், நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இதன்மீது முடிவு எடுத்து அறிவிக்குமாறு கவர்னர் கம்லா பெனிவாலை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
முந்தைய தலைமை செயலாளர் ராஜகோபலனின் குறிப்பை கவர்னர் ஆராய்ந்தார். அதில், அரசின் கொள்கைக்கு விரோதமாக, நீர்த்தேக்கம் மற்றும் அணைகளில் மீன்பிடிக்க மந்திரி சோலங்கி அனுமதி வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் மந்திரி சோலங்கி மீது வழக்கு தொடரலாம் என்று அவர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தார்.
மந்திரி சபை முடிவுக்கு மாறாக ஆளுநர் இந்த அனுமதியை வழங்கி உள்ளார். இதுபற்றி சட்ட வல்லுனர்கள் கூறியதாவது:-
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மந்திரிக்கு எதிராக ஒரு மாதத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மந்திரி பதவியில் இருந்து விலகுமாறு அவரை வற்புறுத்த முடியும். மேலும் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்க முடியும். அந்த குறிக்கோளுடன் தான், கவர்னர் அனுமதி கொடுத்திருப்பதாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குஜராத்தில் ஆளுநர் கம்லா பெனிவால், முதல் - மந்திரி நரேந்திரமோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசுக்கு நரேந்திரமோடி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மந்திரிக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.