Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாணியம்பாடி, ஜூலை 28- பள்ளிக்கூட பேருந்தில் இருந்து இறங்கிய மாணவி, அதே பேருந்து மோதி உயிர் இழந்தாள். வாணியம்பாடி அருகே நடந்த இந்த சோக சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாள்களுக்கு முன் சென்னை சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் பள்ளி சிறுமி  ஸ்ருதி பேருந்தில் உள்ள ஓட்டையிலிருந்து விழுந்து அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் நடந்து சில நாள்களில் வாணியம்பாடியிலும், சிதம்பரத்திலும் பள்ளி மாணவிகள் விபத்தில் சிக்கி இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய செய்தி வருமாறு:

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மாராப்பட்டு என்ற இடத்தில் எம்போசோ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் ஈச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார் மெக்கானிக் குமார் என்பவரது மூத்த மகள் சுவேதா (வயது 5) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். 2 ஆவது மகள் சுஜிதா (3) எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும், பள்ளியின் பேருந்தில் அக்கா, தங்கை இருவரும் வீடு திரும்பினார்கள். மாலை 4.30 மணி அளவில் அந்த பேருந்து, ஈச்சம்பட்டு முருகன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நின்று குழந்தைகளை இறக்கி விட்டது.

அதில் இருந்து சுவேதாவும், சுஜிதாவும் முன்வாசல் வழியாக இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஓட்டுநர் பேருந்தை வேகமாக எடுத்தார்.

திடீரென அந்தப் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் சிறுமி சுஜிதா மீது மோதியது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவள்  இறந்தாள். தன் கண் முன்பே தங்கை உடல் நசுங்கி இறந்ததைப் பார்த்து சுவேதா கதறி அழுதாள். இந்த விபத்தைப் பார்த்து பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சிறுமி சக்கரத்தில் சிக்கி இறந்தது தெரிந்ததும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்தப் பேருந்தை விரட்டிச் சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் சென்று பேருந்தை மடக்கி, அதில் இருந்த ஓட்டுநர் கிருஷ்ணன் (50) மற்றும் கிளீனரை பிடித்தனர்.

இதற்கிடையே, சிறுமி சுஜிதா பலியான தகவல் கிடைத்து வந்த அவளது தந்தை குமார், தாய் மீனா மற்றும் உறவினர்கள் சிறுமியின் உடலைப் பார்த்து கதறி துடித்தனர்.

பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும், தகவல் அறிந்து வந்த கிராம மக்களும், சுற்றுப்பகுதியினரும் சம்பவ இடத்தில் முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியின் பிணத்தை எடுக்கவிடாமல் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேருந்து ஓட்டுநர், கிளீனர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். உடனடியாக, ஓட்டுநர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டு, பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இரவு 7 மணி அளவில் சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக  ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிதம்பரத்தில்...


சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த 6 ஆம் வகுப்பு மாணவி மீது பேருந்து சக்கரம் ஏறியதால் இறந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நற்கரவந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் தீபிகா (வயது 11). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவி தீபிகா மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சிதம்பரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது நற்கரவந்தன்குடி வழியாக நஞ்சமகத்து வாழ்க்கை செல்லும் அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பேருந்தை நிற்பதற்குள் பேருந்தை பார்த்ததும் தீபிகா உள்பட சக மாணவ-மாணவிகள் ஓடிச்சென்று பேருந்தின் முன் படிக்கட்டு வழியாக உள்ளே முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர்.

அப்போது தீபிகா திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் பேருந்தின் பின்சக்கரம் தீபிகா மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த தீபிகாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்  உயிர் இழந்தார். இதுபற்றி சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவர்கள் எப்போது வருவார்கள் என்று காத்திருக்கும் பெற்றோர்களுக்கு குழந்தையின் மரணச் செய்தி வந்தால் அவர்களின் மனம் என்ன பாடுபடும் என்பதை பள்ளி நிருவாகத்தினரும், பேருந்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உணர்ந்தால் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாது என்பது திண்ணம்.

தடுப்பது எப்படி?

கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றினாலே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்.

- பள்ளிப் பேருந்துகள், வேன்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்

- வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் -பள்ளி வாகனம்- என எழுத வேண்டும். தனியார் வாகனம் என்றால் -பள்ளி பயன்பாட்டுக்காக- என எழுத வேண்டும்

- பேருந்தில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்

- பேருந்தில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும்

- ஜன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள், அதாவது இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்

- விபத்தின்போது பேருந்திலிருந்து எளிதாக வெளியேறும் வகையில் -அவசர வழி- ஒன்று பொருத்தப்பட வேண்டும்

- பேருந்தின் மீ்து பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட வேண்டும்

- பேருந்தின் கதவுகளில் முறையான பூட்டுகள் இருக்க வேண்டும்

- பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகள் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைக்கும் வகையில் இருக்கைகளுக்கு அடியில் கேரியர்கள் வைக்க வேண்டும்

- பேருந்தில் குழந்தைகளுக்கு உதவ உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்

- பேருந்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருப்பதை பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உறுதி செய்யவேண்டும். அல்லது, ஆசிரியர் ஒருவர் அந்தப் பேருந்தில் பயணிப்பது சிறந்தது

- பேருந்தின் ஓட்டுநராக நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்

- ஓர் ஆண்டில் சிக்னலை மதிக்காதது, சாலையில் பேருந்து வழித் தடத்தில் செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் இரண்டு முறை சிக்கிய டிரைவரை பணிக்கு வைக்கக் கூடாது

- இதுபோல் அதிகவேகமாக வாகனத்தை ஓட்டியது, குடித்துவிட்டு பேருந்தை ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை சிக்கிய டிரைவரை பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது.

- பேருந்து, ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம்.

மேற்கண்ட விதிமுறைகளை பள்ளி நிருவாகம் கடைபிடிப்பது என்பது மிக எளிதானதே!



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்