
சென்னை, ஜூலை 13- தமிழ்நாடு முழுவதும் உள்ள 504 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
தொழிற்கல்வி மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி முடிவடைந்தது.
விளையாட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் பொது கலந்தாய்வு (அகாடமிக்) இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகியது.
இந்தக் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி முடிவடைகிறது. பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து, உடனடியாக சிறப்புத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு பிறகு நடைபெறுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கவிருக்கும் மாணவ, மாணவிகள் இன்று விடியற்காலை முதலே தங்களது பெற்றோருடன் அண்ணா பல்கலைக் கழகத்தில் குவியத் தொடங்கினர்.