
சென்னை, ஜூலை 12- திருவண்ணாமலையைச் சேர்ந்த ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
1991 இல் பிளஸ்-2 படித்த நான் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன். அப்போது அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் என்னால் தேர்வு எழுத முடியவில்லை. 2002 இல் தமிழக அரசு அதை ஒழுங்குமுறைப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்ததால் நான் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன்.
2004 இல் பயிற்சி முடித்தேன். அதே ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த எனக்கு பதிவு மூப்பு அடிப்படையில் இன்னும் வேலை அழைப்பு வரவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு புதிதாக ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது.
அதில் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதும் முறையை கொண்டு வந்தது. ஏற்கெனவே ஆசிரியர்களாக உள்ளவர்களும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரானது. எனவே தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.பால்வசந்தகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுபற்றி மத்திய- மாநில அரசுகள் நான்கு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.